சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Dec 2015

உலகின் பர்மா பஜார்!

யீவு...  இந்தப் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டீர்கள். ஆனால், இந்த நகரில் இருந்து வரும் ஒரு டஜன் பொருட்களாவது இப்போது உங்கள் வீட்டில் இருக்கும். உங்கள் வாழ்நாளில் சில ஆயிரம் ரூபாயை இந்த ஊர்ப் பொருட்களுக்காகச் செலவழித்திருப்பீர்கள். கொசு பேட்டில் ஆரம்பித்து மொபைல், ரிமோட் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான சீனப் பொருட்களின் தாயகம், சீனாவில் இருக்கும் `யீவு' என்ற இந்த நகரம்தான்.
சீனாவின் ஷுஜியாங் மாகாணத்தில் இருக்கிறது யீவு. மற்ற சீன நகரங்களை ஒப்பிட்டால், இது பரப்பளவில் சிறியது. ஆனால், யீவுவின் வர்த்தகச் சந்தை மிகப் பெரியது. 
17 முக்கியத் தொழில் துறைகளில் 4,20,000-க்கும் அதிகமான பொருட்கள் இங்கே கிடைக்கின்றன. தினமும் ஒரு லட்சம் வியாபாரிகள் தங்கள் நாடுகளுக்கு பொருட்களை வாங்க வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் யீவு-வில் இருந்து 1,500 கன்டெய்னர்கள் உலகின் பல மூலைகளுக்கும் புறப்படுகின்றன. வாரத்தின் ஏழு நாட்களும், வருடம் முழுவதும் கடைகள் திறந்திருக்கும். சீனப் புத்தாண்டு மட்டுமே யீவு-வுக்கு விடுமுறை நாள்.
சிறிய கிராமமாக இருந்த யீவு, இப்போது சிறுபொருட்களின் உலகளாவிய தலைநகரம். சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு யீவு மிகச் சிறந்த சான்று. இன்று யீவு சீனாவுக்கு மட்டும் அல்ல, உலகத்துக்கே சொந்தமானது. மற்ற நாடுகளின் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்ற பொருட்களைத் தயாரிப்பதில் யீவு மக்கள் கில்லாடிகள். அதற்கு பல நூற்றாண்டுகள் விரியும் அவர்களின் வரலாறும் ஒரு முக்கியக் காரணம்.
யீவு நகரம் முழுவதும் மலைப்பிரதேசம். அந்த நிலங்கள் விவசாயத்துக்கும் ஏற்றது அல்ல. எனவே, அந்தப் பகுதி மக்கள் வாழ்வாதாரத்துக்காக வணிகத்தை நம்பவேண்டி இருந்தது. அவர்கள் வசம் இருந்த ஒரே விஷயம், பழுப்பு சர்க்கரை. எனவே பழுப்பு சர்க்கரையைக் கொடுத்து, அதற்குப் பதிலாக கோழி இறகுகளைப் பண்ட மாற்றம் செய்தார்கள். கோழி இறகில் இருந்து உருவாகும் உரம் அவர்களின் நிலங்களைச் செழுமைப்படுத்தியது. அந்த இறகுகளைக் கொண்டு பலவிதமான கைவினைப்பொருட் களைச் செய்ய ஆரம்பித்தார்கள். அவற்றை விற்பனை செய்ய மற்ற ஊர்களுக்குச் செல்லும் போது, மக்களின் தேவை என்ன என்பதை அறிந்துகொண்டார்கள். உடனே அந்தப் பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள். இன்று யீவு நகரத் தயாரிப்புகளின் சிறப்பே இதுதான். `யீவுக்குப் போனால் நம் பிரச்னையைத் தீர்க்கும் பொருளை வாங்கிவிட முடியும்' என்ற நம்பிக்கைதான் இந்த நகரத்தின் அடிப்படை.
நீண்ட நெடுங்காலமாக சீனா ஒரு கம்யூனிஸ நாடு. அனைத்தும் பொதுவுடைமை என்ற நிலை இருந்ததால், அங்கு வணிக சுதந்திரம் (free trade) தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் வணிகத் தைப் பிரதானமாகக்கொண்ட யீவு மக்களை மற்றவர்கள் முதலாளித்துவப் பிரதிநிதிகளாகப் பார்த்தனர். ஆனால், யீவுவுக்கு வணிகத்தை விட்டால் வேறு வாழ்வாதாரம் கிடையாது. எனவே, ரகசியமாகத் தங்கள் வணிகத்தைத் தொடர்ந்தார்கள். காவல் துறையிடம் சிக்கினால் பொருள் நஷ்டத்துடன் சிறைவாசமும் கிடைக்கும். 1982-ம் ஆண்டு வரை தொடர்ந்த இந்தக் கண்ணா மூச்சி ஆட்டம் ஒரு துணிச்சல்மிக்க பெண்ணால் முடிவுக்கு வந்தது.
ஐந்து குழந்தைகளின் தாயான அந்தப் பெண்ணின் பெயர் ஃபெங் ஐ கியான். தன் குடும்பத்தைக் காப்பாற்ற வியாபாரம் மட்டுமே வழி என்பதை உணர்ந்த கியான், யீவு நகர மேயரைச் சென்று பார்த்து, `உங்கள் நகர மக்களைப் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லையா? பிறகு என்ன மேயர் நீங்கள்?’ எனக் கோபமாக பேசி விட்டு, அறைக்கதவைப் படாரெனச் சாத்திவிட்டு வெளியேறினார். கதவு மூடிய சத்தம் மேயரின் மூளைக்குள் பல நாட்கள் எதிரொலித்தது. பதவி பறிபோகும் அபாயம் இருந்தாலும், மக்கள்தான் முக்கியம் என முடிவெடுத்த மேயர், யீவு நகர மக்களை வணிகம் செய்ய அனுமதித்தார். முதல்முறையாக யீவு நகரின் ஹ்யூகிங்மென் தெருவில், 700 கடைகள் அமைக்கப்பட்டன. சீனாவின் முதல் சந்தை அதுதான். 
 
அதன் பின் யீவு நகரத்தின் வளர்ச்சி அசுரத்தன மாக உயர்ந்தது. தமிழ் சினிமாவில் ஒரே பாடலில் வளரும் நாயகர்களைவிடவும் வேகமாக வளர்ந்தார்கள் யீவுவாசிகள். இன்று யீவு நகரில் 70,000-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. ஓர் ஆண்டுக்கு 6 பில்லியன் டாலர் யீவு நகரில் கைமாறுகிறது. இந்திய மதிப்பில் ஏறத்தாழ 40,000 கோடி ரூபாய். இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் தகவல்படி சமீபத்தில் பதிவுசெய்யப்பட்ட பொருட்களில் 60 சதவிகிதம் சீனாவில் தயாரிக்கப் படுகின்றன. தாயம், பல்லாங்குழி போன்ற இந்தியக் கலாசார விளையாட்டுப் பொருட்களைக் கூட தயாரித்து ஏற்றுமதி செய்கிறார்கள். நம்புவீர்களா? லட்டு, பாதுஷா போன்ற நம் ஊர் ஸ்பெஷல் ஸ்வீட் வகைகளும் சீனாவில் கிடைக்கின்றன. ஆன்லைனில் ஆர்டர் செய்தால், நமது வீடுகளுக்கே டெலிவரி செய்கிறார்கள்.
உலகின் மிகச் சிறந்த பிராண்ட் பொருட்கள் அனைத்துக்கும் டூப்ளிகேட் யீவுவில் கிடைக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை அடிடாஸ் காலணி முதல் Gucci கண்ணாடி வரை எல்லா பிராண்டட் பொருட்களின் ஷோ ரூம்களும் யீவுவில் இருந்தன. ஆனால், இன்று அந்த ஒரிஜினல்கள் அனைவரும் கடையை மூடி விட்டார்கள். அவர்களின் இடத்தை அச்சு அசலான போலிப் பொருட்கள் ஆக்கிரமித்திருக் கின்றன. எந்த ஒரு புதுப்பொருளும் சந்தைக்கு வந்த பத்தாவது நாளில் யீவுவில் அதன் போலியை வாங்கலாம். ஆனால் `இது இட்லி இல்லை என சட்னியே வந்து சத்தியம் செய்தாலும்' நம்ப முடியாத அளவுக்கு ஒரிஜினாலிட்டியுடன் இருக்கும்.
இப்படி எல்லாம் செய்வதால் சீனப் பொருட்கள் பற்றிய நம்பிக்கை உலக அளவில் உடைந்தாலும் இவர்களுக்குக் கவலை இல்லை. இதற்கு அவர்கள் சொல்லும் பதில்... `இது வியாபாரம். இங்கு நம்பிக்கைகளுக்கு இடம் இல்லை!'
ஐரோப்பிய நாடுகள் முழுவதுமே யீவு நகரை நம்பித்தான் இருக்கின்றன. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத் துக்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பொருட்களில் 60 சதவிகிதம் யீவு நகரில் வாங்கப்படுகின்றன. பொருட்களை விரைவாக தங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்ல, யீவு நகரில் இருந்து ஸ்பெயின் நாட்டுக்கு ஒரு ரயில் விடப்பட்டது. மொத்தம் 13,052 கி.மீ பயணம் செய்த இதுதான் உலகில் அதிக தூரம் பயணம் செய்த ரயில். 40 பெட்டிகள், 1,400 டன் எடையுள்ள பொருட்களுடன் பயணித்த இந்த ரயில் மொத்தம் 30 நாடுகளைக் கடந்து ஸ்பெயினைச் சென்று சேர்ந்தது!
போலிகளும் சீனப் பொருட்களும்!
சீனாவில்தான் தரத்துக்கு பெயர் போன ஆப்பிள் மொபைல்களும் தயாரிக்கப்படுகின்றன; விலை குறைந்த மொபைல்களும் தயாரிக்கப்படுகின்றன. வேண்டிய பொருட்களை வேண்டிய விலையில், வேண்டிய தரத்தில் செய்து தரக்கூடிய திறன் சீனாவுக்கு உண்டு. ஆனால், வளர்ந்து வரும் போலிகள் காரணமாக சீனாவின் பெயர் உலக அளவில் மதிப்பிழந்து வருகிறது. எந்த ஒரு பொருளையும் ‘காப்பி’ அடிக்க சீன நிறுவனங்களால் முடியும். சமீபத்திய ஆய்வுகளின்படி சீனாவில் கிடைக்கும் 40 சதவிகிதம் பொருட்கள் போலியானவை; தரம் குறைந்தவை. அது மட்டுமின்றி ஏற்றுமதியிலும் ஏமாற்றுகிறார்கள். `வியாபாரி ஒருவர் சீனாவுக்கு சென்று, ஆயிரம் கொசு பேட்டுகளுக்கு ஆர்டர் தந்தால், இறக்குமதியாவதில் 200 கொசு பேட்கள் வேலை செய்யாது. சீனாவுக்கு திரும்பச் சென்று கேட்பது கூடுதல் செலவு என்பதால், இறக்குமதி செய்பவர் அதற்கும் சேர்த்து விலையைக் கூட்டி விற்றுவிடுகிறார். இதுபோன்ற செயல்களால் சீனா என்றாலே டூப்ளிகேட் என்ற பிம்பம் அழுத்தமாக பதிந்து வருகிறது’ என்கிறார்கள்.
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொம்மைகள் பலவற்றை, `குழந்தைகளுக்கு உகந்தது அல்ல' எனச் சொல்லி, நம் நாட்டு அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவங்கள் உண்டு. இந்த பொம்மைகளில் காரீயம் என்ற ரசாயனம் கலந்த பெயின்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை வைத்து குழந்தைகள் விளையாடினால் பல்வேறு நோய்கள் உருவாகும் ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதுபோன்ற பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தரும் தர சான்றிதழ்களுக்கும் பொருட்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கும். பொம்மைகள் மட்டுமல்லாமல் சோப்பு, ஷாம்பு, காஸ்மெட்டிக்ஸ் என சீனப்பொருட்களில் கலப்படம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக `இந்தியாவில் இறக்குமதி ஆகும் சீனப்பொருட்களின் தரம் எப்போதும் பாஸ்மார்க்குக்கும் குறைவுதான்' என்கிறார்கள் அதிகாரிகள்.
அதேநேரம் சீனாவின் இந்த `போலி கிங்' இமேஜுக்குப் பின்னால் ‘பிக் பாஸ்’ அமெரிக்காவின் கை இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. `பொருளாதார ரீதியாக சீனாவின் வளர்ச்சியை அமெரிக்காவால் தடுக்க இயலவில்லை. எனவே, சீனப் பொருட்கள் குறித்த மதிப்பை சீர்குலைக்கும் உள்ளடி வேலைகளைச் செய்கிறது. சீனாவில் போலி பொருட்கள் தயாரிப்பு இருப்பது உண்மைதான் என்றாலும், இவர்கள் மிகைப்படுத்தும் அளவுக்கு இல்லை. அப்படியானால் ஆப்பிள் உள்பட பல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள், தங்களது உதிரிபாக தயாரிப்புப் பணியை சீனாவிடம் வழங்குவது ஏன்? உண்மையில், இன்று அமெரிக்கா தனது உள்நாட்டு தேவைகளுக்கு சீனப் பொருட்களையே நம்பி இருக்கிறது. அமெரிக்கர்கள் தலையில் போடும் தொப்பியில் இருந்து காலில் போடும் ஷூ வரை சீனபொருட்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்’ என்கிறார்கள். 

No comments:

Post a Comment