சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Dec 2015

ரொம்ப டஃப் எஸ்யுவி! டெஸ்ட் ரிப்போர்ட் / மஹிந்திரா TUV 3OO

மும்பையில் டிஸைன் செய்து, சென்னையில் இன்ஜினீயரிங் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது, மஹிந்திரா TUV 300. இன்னும் சில மாதங்களுக்குள் இந்திய கார் மார்க்கெட்டில் மினி எஸ்யுவிகளின் மார்க்கெட் ஷேர், 30 சதவிகிதமாக உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட், ரெனோ டஸ்ட்டர், நிஸான் டெரானோ, மாருதி S-க்ராஸ், ஹூண்டாய் க்ரெட்டா என மினி எஸ்யுவிகளின் படையெடுப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. இதில், ஃபோர்டு எக்கோஸ்போர்ட் மட்டுமே 4 மீட்டருக்குள் அடங்கும் மினி எஸ்யுவி.
4 மீட்டருக்குள்ளான கார்களுக்கு இந்தியாவில் வரிச்சலுகை இருப்பதால், 4 மீட்டருக்குள்ளான முதல் எஸ்யுவி காரை அறிமுகப் படுத்தியது மஹிந்திரா. குவான்ட்டோ என்ற பெயரில் வெளிவந்த இந்த 4 மீட்டர் எஸ்யுவி செம ஃப்ளாப்! அதனால், கிட்டத்தட்ட 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், புத்தம் புதிய பிளாட்ஃபார்மில் TUV 300 என்ற பெயரில் புதிய மினி எஸ்யுவி காரை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது. இதை ‘டி.யு.வி த்ரீ டபுள் ஓ’ என்றுதான் உச்சரிக்க வேண்டும். புதிய காரை புனேவில் உள்ள மஹிந்திராவின் தொழிற்சாலையில் டெஸ்ட் செய்தோம்!
டிஸைன்
புதிய கார் என்றாலும் ஸ்கார்ப்பியோவின் அடிப்படை ஆர்க்கிடெக்ச்சரில்தான் TUV 300 உருவாக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோஃபார்ம் லேடர் ஃப்ரேம், முன்பக்கம் டபுள் விஷ்போன் இண்டிபெண்டன்ட் சஸ்பென்ஷன், பின்பக்கம் மல்ட்டி லிங்க் நான்-இண்டிபெண்டன்ட் சஸ்பென்ஷன் மற்றும் காயில் ஸ்ப்ரிங் செட் அப், 2,680 மிமீ வீல்பேஸ் ஆகியவை TUV 300 காரிலும் தொடர்கிறது. ஆனால், இதைத் தாண்டி ஸ்கார்ப்பியோவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட காராக இருக்கிறது TUV 300. ஸ்கார்ப்பியோவைவிட 10 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகம். ஸ்கார்ப்பியோவைவிட எடை குறைவு. ஆனால், ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட்டுடன் ஒப்பிடும்போது,  TUV 300 காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 10 மிமீ குறைவு என்பதோடு, 300 கிலோ எடை அதிகம்.
 உள்ளே...
வெளிப்பக்க டிஸைன் ஸ்கார்ப்பியோ, பொலேரோ போன்று அதே பழைய பாக்ஸ் வடிவத்தில் இருந்தாலும், உள்ளே முற்றிலும் புதிய டிஸைனுடன் இருக்கிறது TUV 300. ஸ்கார்ப்பியோவைவிட 10 மிமீ உயரம் அதிகமாக இருந்தாலும், சீட்டுகளின் உயரம் குறைவாக வைக்கப்பட்டுள்ளதால், ஸ்கார்ப்பியோவைவிடவும் சீட்டிங் பொசிஷன் வசதியாக இருக்கிறது. சீட் உயரம் குறைவாக இருப்பதால், காருக்குள் ஏறுவதும் இறங்குவதும் ஈஸியாக இருக்கிறது. டோர் பேடுகள் ஸ்கார்ப்பியோவில் இருப்பதுபோலவே கையைக் குத்திக் காயப்படுத்தாது. சென்டர் கன்ஸோல் பட்டன்கள் புதிதாக இருக்கின்றன. புதிய ஸ்டீயரிங் டிஸைன் பார்ப்பதற்கு அழகாகவும், வசதியாகவும் இருக்கிறது. டிஜிட்டல் இன்ஃபோ டிஸ்ப்ளே செம ஸ்மார்ட்.
புதிய சிறப்பம்சங்கள் பல இருந்தாலும், ஏற்கெனவே செய்த தவறையே TUV 300 காரிலும் செய்திருக்கிறது மஹிந்திரா. பவர் விண்டோஸ் சுவிட்ச்சுகள் கதவில் இல்லாமல் ஹேண்ட் பிரேக்குக்கு அடியில் வைக்கப்பட்டுள்ளன. ஸ்கார்ப்பியோவில், டோர் பாக்கெட்டில் இருந்து எதையாவது எடுக்க வேண்டும் என்றால், கதவைத் திறந்துதான் எடுக்க வேண்டும். இதில், முன்பக்க கதவுகளில் இந்தப் பிரச்னை இல்லையே தவிர, பின்பக்கக் கதவு பாக்கெட்டில் வைக்கும் பொருட்களை எடுக்க, ரொம்ப சிரமப்பட வேண்டும்.
இடவசதியில் மஹிந்திரா எந்த இடத்திலும் காம்ப்ரமைஸ் செய்யவில்லை. காருக்குள் கால்களை நீட்டி, மடக்கி உட்கார ஏராளமான இடவசதி உள்ளது. பின் வரிசை இருக்கைகளில் மூன்று பேர் வசதியாக உட்காரலாம். 7 சீட்டர் கார் என்று விளம்பரப்படுத்துவதற்காக, இதில் டிக்கியின் பக்கவாட்டில் உட்காரும் வகையில் ஜம்ப் சீட்டுகளைப் பொருத்தியிருக்கிறது மஹிந்திரா. நகருக்குள் சின்ன தூரப் பயணங்களுக்கு இதில் உட்கார்ந்து பயணிக்கலாமே தவிர, நீண்ட தூரப் பயணங்கள் மயக்கத்தை வரவைக்கும். ஜம்ப் சீட்டுகளை மடக்கிவிட்டால், டிக்கியில் பொருட்கள் வைக்க 400 லிட்டர் இடவசதி உள்ளது.
ஸ்கார்ப்பியோவில் உள்ள டச் ஸ்கிரீன் இதிலும் உண்டு. சிடி ப்ளேயர் இல்லை. ஆனால் யுஎஸ்பி, ப்ளூடூத் வசதிகள் உள்ளன. விலை உயர்ந்த வேரியன்ட்டில் இரண்டு காற்றுப் பைகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக் வசதிகள் உள்ளன.
இன்ஜின்
‘எம்ஹாக்-80’ என இந்த இன்ஜினுக்குப் பெயரிட்டிருக்கிறது மஹிந்திரா. 1.5 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின்தான் என்றாலும், ஜெர்மன் இன்ஜின்களுக்கு இணையாக தொழில்நுட்பத்தில் கில்லியாக இருக்கிறது. டூயல் ஸ்டேஜ் டர்போ சார்ஜர் மற்றும் டூயல் மாஸ் ஃப்ளை வீலைக் கொண்டிருக்கிறது இந்த இன்ஜின். இது 82.85 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. உச்சபட்ச டார்க்கான 23.4kgm டார்க்கை 1,500ஆர்பிஎம்லேயே தொட்டுவிடுகிறது TUV 300. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு ஆப்ஷனுமே உண்டு.
குவான்ட்டோவின் இன்ஜினைவிட இது இன்னும் டெக்னிக்கலாக மெருகேறிய இன்ஜினாக இருந்தாலும், அதிர்வுகளை உணர முடிகிறது. டர்போ லேக் அதிகமாக இல்லை. ஆனால், 3,800
ஆர்பிஎம்-ஐத் தாண்டியதும் பவர் இல்லை. இதனால், நெடுஞ்சாலையில் ஓவர்டேக் செய்வதற்குக் கொஞ்சம் அதிகமாகவே மெனக்கெட வேண்டியிருக்கும். TUV 300 காரிலும் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டமான மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது மஹிந்திரா. இதன்படி 2 விநாடிகளுக்கு மேல் கார் ஒரே இடத்தில் நின்றால், இன்ஜின் ஆஃப் ஆகிவிடும். மீண்டும் கிளட்ச் மீது கால் வைத்ததும் இன்ஜின் ஆன் ஆகிவிடும். ‘அராய் சான்றிதழ்படி இது, லிட்டருக்கு 18.49 கி.மீ மைலேஜ் தரும்’ என்கிறது மஹிந்திரா.
இதன் ஓட்டுதல் தரம் கிட்டத்தட்ட ஸ்கார்ப்பியோ போலவே இருக்கிறது. சின்ன பள்ளங்களில் ஓகே. ஆனால், பெரிய மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, கார் அதிகமாகவே குலுங்குகிறது.
வெல்லுமா  TUV 3OO?
வெரிட்டோவையும், e2o காரையும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், மஹிந்திரா ஒரு எஸ்யுவி கார் தயாரிப்பு நிறுவனம். ஸ்கார்ப்பியோ, பொலேரோ, ஸைலோ, XUV 500 என மஹிந்திராவின் எல்லா எஸ்யுவிகளுமே மாஸ் செல்லர்கள். எஸ்யுவி மார்க்கெட்டுக்குள் எவ்வளவு புது செக்மென்ட்டுகளை உருவாக்க முடியுமோ, அங்கெல்லாம் புது கார்களைக் களம் இறக்க வேண்டும் என்பதுதான் மஹிந்திராவின் திட்டம். ஃபோர்டு எக்கோஸ்போர்ட், ரெனோ டஸ்ட்டர், டெரானோ, S-க்ராஸ், க்ரெட்டா கார்களின் மார்க்கெட்டைப் பிடிப்பதே மஹிந்திராவின் லட்சியம்.
மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட விலை உயர்ந்த TUV 300 காரின் சென்னை ஆன் ரோடு விலை, 9.82 லட்சம் ரூபாய்.  ரெனோ டஸ்ட்டரின் 85bhp சக்திகொண்ட மாடலின் சென்னை ஆன் ரோடு விலை, 12.61 லட்சம் ரூபாய். கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் விலை குறைவு. டஸ்ட்டரின் தரம் இல்லை என்றாலும் இடவசதியிலும், சிறப்பம்சங்களிலும் முன் நிற்கிறது மஹிந்திரா. உள்பக்கத் தரத்தைப் பொறுத்தவரை, இதுவரை வந்த மஹிந்திரா கார்களில் TUV 300 கார்தான் பெஸ்ட். கரடுமுரடான தோற்றம் கொண்ட விலை குறைவான டஃப் எஸ்யுவி வேண்டும் என்றால், TUV 300 நல்ல சாய்ஸ்!


No comments:

Post a Comment