ஆனந்த விகடனில் தமிழ்மகன் எழுதிய சயின்ஸ் ஃபிக்ஷன் தொடர் 'ஆபரேஷன் நோவா’. அதில், எரிமலை வெடிப்புக் காரணமாக பூமியில் மனிதர்களின் இருப்புக்கே ஆபத்து என்ற நிலையில், உலகம் முழுக்க பலதரப்பட்ட மனிதர்களைத் தேர்ந்தெடுத்து 'ஜி-581’ என்ற கிரகத்துக்கு அனுப்புவார்கள். அங்கு அவர்கள் குடியிருப்புகள் கட்டி, விவசாயம் செய்து, மனிதர்கள் வசிப்பதற்கான சூழலை உருவாக்குவார்கள். அப்போது நடக்கும் கலவர களேபரங்கள் என சுவாரஸ்யமாகப் பயணிக்கும் கதை. அந்தக் கற்பனை... இப்போதே நிஜத்தில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஒரே வித்தியாசம்... 'ஜி-581’ கிரகத்துக்குப் பதில் செவ்வாய் கிரகம்!
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் பாஸ் லேன்ஸ்டார்ப் அறிவித்த கனவுத் திட்டம்தான் 'மார்ஸ் ஒன்’. மனிதர்களை பூமியில் இருந்து செவ்வாய்க்கு அனுப்பி, அங்கு நிரந்தரமாகத் தங்கச்செய்வதே திட்டத்தின் நோக்கம். அதாவது, செவ்வாய் கிரகத்துக்கான ஒருவழிப் பயணம். செவ்வாய்க்குச் சென்ற பின், எப்போதும் பூமிக்குத் திரும்பி வரவே முடியாது. 'சும்மா உடான்ஸு’ என ஆரம்பத்தில் பலரும் நினைக்க, உலகம் முழுக்கவிருந்து குவிந்த
இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து பலகட்டத் தேர்வுகளுக்குப் பிறகு 100 பேரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அந்த 100 பேரில் இடம்பிடித்திருக்கும் 50 பெண்கள் மற்றும் 50 ஆண்களிலும் பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு, இறுதியாக 24 பேர்தான் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படுவார்கள்.
செவ்வாயில் நிலவும் தட்பவெப்ப நிலை, ஈர்ப்பு விசை போன்றவற்றைச் சமாளிக்க அவர்கள் தயாராக வேண்டும் என்பதற்காக, தேர்வாகி இருக்கும் 100 பேருக்கும் ஏழு ஆண்டுகள் பயிற்சிகள் அளிக்கப்படுமாம். செவ்வாயில் இவர்கள் தங்குவதற்காக ஒரு காலனி அமைக்கப்படும். காலனி என்பது, நான்கு பெரிய சைஸ் கேப்சூல்கள் என வைத்துக்கொள்ளலாம். அதுதான் அவர்கள் தங்கும் குடியிருப்பு. 24 பேரையும் ஒரே பயணத்தில் அனுப்பாமல், நான்கு பேர்கொண்ட குழுவாகப் பிரித்து இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஒரு குழுவை அனுப்புவார்கள். அதன்படி 2024-ல் நான்கு பேர்கொண்ட முதல் குழு செவ்வாய்க்குச் செல்லவிருக்கிறதாம். இவர்கள் விண்கலத்தில் ஏறிய பின்பு, ஆயுள் முடியும் வரை குடும்பத்தினரைச் சந்திக்க சாத்தியமே இல்லை. பூமியைக் கடந்ததும் குடும்பத்தினருடன் வீடியோ சாட் செய்யலாம். ஆனால், அது பூமியை வந்தடைய ஏழு நிமிடங்கள் ஆகும். குடும்பத்தினரின் பதிலும் ஏழு நிமிட தாமதத்துக்குப் பின்புதான் அவர்களுக்குக் கிடைக்கும். கிட்டத்தட்ட 'இன்டர்ஸ்டெல்லர்’ படம்போல!
செவ்வாய்க்கு எப்படிச் செல்வது?
செவ்வாய்க்குச் செல்லும் பயணம் ஏழு மாதங்களுக்குமேல் நீடிக்கும். இந்த ஏழு மாதங்களும் ஓர் அறைக்குள்ளேயே அடைந்துகிடந்தால், மனிதன் என்ன ஆவான்? அதனால் முதற்கட்டமாக இறுதி செய்யப்பட்டிருக்கும் 100 பேருக்கும் கடுமையான பயிற்சி காத்திருக்கிறது. அதாவது பயணக் காலமான ஏழு மாதங்களும் இவர்கள் வெளியுலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் சின்ன அறைக்குள்ளேயே அடைந்து இருக்கவேண்டும். அதற்கான பயிற்சிதான் ஏழு வருடங்கள். பயணத்தின்போது உலர்ந்த உணவு வகைகள்தான் சாப்பிட வேண்டும். எனவே, பயிற்சிக் காலம் முழுக்க அதைத்தான் சாப்பிடவேண்டியிருக்கும். பயணத்தின்போது விண்கலத்தின் இரைச்சல் எப்போதும் இருக்கும். அதே போன்ற இரைச்சல் அவர்கள் அறைகளில் எப்போதும் ஒலிக்கவிடப்படும். சும்மாவே இருக்கவேண்டிய பயணத்தின்போது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க, தினமும் மூன்று மணி நேரம் உடற்பயிற்சி, யோகா செய்ய வேண்டும். இதற்கு இடையே, எதிர்பாராத சூழல், இக்கட்டுக்களைச் சமாளிக்கவும் பல பயிற்சிகள் அளிக்கப்படும். அத்தனை பயிற்சிகளிலும் தாக்குப்பிடித்துத் தப்பிக்கும் '24 காரட் தங்கங்கள்’தான் செவ்வாய் கிரகப் பயணத்துக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள்!
செவ்வாயில் இறங்கி என்ன செய்வார்கள்?
அவரவர்க்கு என ஒதுக்கப்பட்ட கேப்சூல் போன்ற அறைகளில் தங்கிக்கொள்வார்கள். அறை முழுவதும் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டிருக்கும்.அறையில் இருந்து வெளியே செல்லும்போது விண்வெளி உடை அணிந்துகொண்டுதான் செல்லவேண்டும். இது தவிர, அவர்கள் அங்கு செல்வதற்கான பிரதானக் காரணம், செவ்வாயில் மனிதன் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சியே.
பூமியைப்போல செவ்வாயிலும் பயிர்களை விளைவித்து விவசாயம் செய்ய முடியுமா என்றும் ஆராய்வார்கள். விவசாயம் செய்ய நிலத்தை உழுவதுபோல செவ்வாயில் பண்ண முடியுமா, வாய்க்கால் வரப்பு வெட்டி நீர்ப் பாய்ச்ச முடியுமா என்றெல்லாம் யூகிக்கக்கூட முடியாது. பிறகு எப்படிப் பயிர்களை விளைவிப்பது? அவர்கள் தங்கும் கேப்சூல் போன்ற குடியிருப்பு இருக்கிறதே, அதற்குள்தான் அந்த விவசாயம் நடக்கும். ஒவ்வொரு வகை தானியத்துக்கும் ஒவ்வொரு ட்ரே. அதுபோக, அவ்வப்போது வெளியே சென்று நிலத்தில் மரம், செடி போன்றவற்றை வளர்க்க முடியுமா என்றும் முயற்சிப்பார்கள். அப்படி வளர்ந்தால் அதன் மூலம் அந்தச் சூழலை மனிதர்கள் வாழத் தகுதியானதாக மாற்றும் அடுத்தகட்ட முயற்சிகள் தொடங்கும்.
செவ்வாயில் நடப்பது எப்படி இருக்கிறது, செவ்வாயின் புவி ஈர்ப்பு விசையில் வாழ்வது எப்படி இருக்கிறது, செவ்வாயில் சூரிய உதயம் எப்படி இருக்கிறது... என அவர்களின் ஒவ்வோர் அனுபவங்களையும் பூமியில் இருக்கும் விஞ்ஞானிகளோடு பகிர்ந்துகொள்வார்கள். இரண்டு ஆண்டுகள் கழித்து அடுத்த நான்கு பேர் வருவார்களே, அப்படி அவர்கள் வந்தவுடன் அவர்களின் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும், அதற்கு என்ன முன்னேற்பாடுகளுடன் இருக்க வேண்டும் என்றெல்லாம் முதலில் சென்ற நால்வர் குழு விவரிக்கும். பிறகு, எட்டு பேராகச் சேர்ந்து அடுத்த நான்கு நபர்களுக்கு உதவுவார்கள், இப்படியாக 24 பேரும் மீதமுள்ள வாழ்நாட்களை செவ்வாயில் கழிக்க வேண்டும்.
செவ்வாயில் எப்படி சுவாசிப்பது?
விண்வெளி வீரர்கள் உயிர்வாழ்வதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் கேப்சூல்களில் இருக்கும் ஆக்ஸிஜன் தீர்ந்துபோகாது. எப்படி..? செவ்வாயில் ஏற்கெனவே நைட்ரஜன் வாயு இருக்கிறது. அந்த நைட்ரஜனில் மனித சுவாசத்துக்கு உதவும் 80 சதவிகிதக் காரணிகள் இருக்கின்றன. கேப்சூல்களில் இருக்கும் ஆக்ஸிஜன் உருவாக்கும் இயந்திரங்கள் வெளியில் இருக்கும் நைட்ரஜனை ஆக்ஸிஜனாக மாற்றி உள்ளே செலுத்தும். இதற்குத் தேவையான மின்சார சக்தி, சூரிய ஒளி மூலம் கிடைக்கும்.
பயணத்தின் ஆபத்துகள்!
முன்பு சொன்னதுபோல, இது கண்டிப்பாக ஒருவழிப் பயணம் மட்டுமே. ஒருமுறை செவ்வாய்க்குச் சென்றுவிட்டால், மீண்டும் பூமிக்குத் திரும்ப வாய்ப்பே இல்லை. இறக்கும்வரை அங்கேயேதான் இருக்க வேண்டும். பூமியில் இருந்து செவ்வாய்க்குப் பயணிக்கும்போது விண்கலம் வெடித்தாலோ, செவ்வாயில் தரை இறங்கும்போது விபத்து ஏற்பட்டாலோ இறக்கும் வாய்ப்பு அதிகம். அதனால்தான் மொத்தமாக 24 பேரும் அனுப்பப்படாமல், நான்கு... நான்கு பேராக அனுப்பப்படுகிறார்கள். அப்படியான விபத்து மூலம் ஏற்படும் மரணங்களுக்கு மார்ஸ் ஒன் பொறுப்பு ஏற்காது!
'சரி, இது ஏன் ஒருவழிப் பயணம்... திருப்பி அழைத்து வரவேண்டியதுதானே!’ எனத் தோன்றலாம். பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு 24 பேரை அனுப்பத் தேவையான வசதிகளுக்கு மட்டுமே கோடி கோடியாகச் செலவாகும். பணம் ஒரு பிரச்னையே அல்ல என வைத்துக்கொள்வோம். விண்கலத்தை விண்ணில் செலுத்த ஏவுதளம் வேண்டுமே. அதை பல ஆயிரக்கணக்கான மனிதர்களும் பிரமாண்ட இயந்திரங்களும் இணைந்துதானே நிர்மாணிக்க முடியும். அது செவ்வாயில் சாத்தியமா? செவ்வாயில் ஏவுதளத்தை நிறுவ, எத்தனை மனித மூளையின் உழைப்பு தேவை? தவிர, இது திரும்பி வருவதற்கான பயணமும் அல்ல. அங்கு வாழ முடியுமா என ஆராய்ச்சி செய்வதற்கான பயணம். அதனால், திரும்பி வருவதற்கான சாத்தியங்களைப் பற்றி அவர்கள் இப்போதைக்கு யோசிக்கவே இல்லை.
சரி... அங்கு காலனி அமைக்கப்பட்டு எல்லோரும் 'பால் காய்ச்சி’குடிபுகுந்து விட்டார்கள். திடீரென புழுதிப் புயலோ, இயற்கைச் சீற்றமோ நிகழ்ந்து குடியிருப்பே சிதைந்து மொத்தக் கூட்டமும் உயிர் இழந்துவிட்டால்..?
'பூமியில் இருந்தால் மட்டும் சாவே கிடையாதா என்ன? இங்கே கல் தடுக்கி விழுந்து செத்துப்போறவங்களும் இருக்காங்களே! அப்படி நாங்க சாதாரணமா இறக்க விரும்பலை. இந்த முயற்சியில் நாங்க செத்துப்போனா, அதுவும் வரலாறுதானே!’ என உற்சாகக் கோரஸ் கொடுக்கிறார்கள் செவ்வாய் கிரகப் பயணத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரும். அந்த 100 பேரில் ஒரே ஒருவர் மட்டுமே பக்கா இந்தியர். பாலக்காட்டைச் சேர்ந்த சாரதா பிரசாத் (19) கோவை அமிர்தா பல்கலைக்கழக மாணவி.
உலகம் முழுக்க குபீர் எதிர்பார்ப்பு கிளப்பியிருக்கும் இப்படியொரு சாகசத்தை காசாக்காமல் இருப்பார்களா? பிக் பாஸ், சூப்பர் சிங்கர் ரேஞ்சுக்கு, இந்தச் செவ்வாய் கிரகப் பயண முஸ்தீபுகளையும் 'ரியாலிட்டி ஷோ’வாக ஒளிபரப்பவிருக்கிறார்கள். பயணிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் தொடங்கி அவர்கள் செவ்வாய் கிரகம் சென்றுசேர்வது வரையிலான அனைத்து நடைமுறைகளும் வருடத்தின் 365 நாளும் ஒளிபரப்பப்பட இருக்கிறதாம். அந்த ஒளிபரப்பு மூலம் வரும் வசூலும் இந்தச் செவ்வாய் கிரகப் பயண ஆராய்ச்சிக்கே பயன்படுத்தப்படுமாம்.
'இவ்வளவு ஆபத்தான பயணத்தை அரசாங்கம் அனுமதிக்குமா? திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடந்து செவ்வாய் கிரகம் சென்றுசேர்வார்களா? அங்கே வாழ்வதற்குத் தேவையான தண்ணீருக்கு என்ன செய்வார்கள்?’ எனப் பல சர்ச்சைகளும் களைகட்டியிருக்கின்றன.
பயணத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரில் ஒருவரான பிரிட்டிஷ் பெண் மேகி லியூ, 'நான் செவ்வாய் கிரகத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். முதன்முதலில் செவ்வாயில் குழந்தைக்குத் தாயாவது நானாக இருக்க வேண்டும்’ என விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
ஆக, 'பூமிக்கு மிக அருகில்... செவ்வாயில் வீட்டு மனை’ - விளம்பரங்கள் வெளியாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை!
No comments:
Post a Comment