சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Dec 2015

பீகாரில் மதுவிலக்கு... தமிழ்நாட்டில் சாத்தியமா?

`முதல் நாள் முதல் கையெழுத்து... மதுவிலக்கு' என்று தமிழ் நாட்டில் அன்புமணி சொன்னதை பீகாரில் நிதிஷ் குமார் செய்துவிட்டார். அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பீகாரில் மதுவிலக்கு அமலுக்கு வரப்போகிறது.
‘குடித்துவிட்டுத் தகராறு செய்யும் கணவர்களால் பெண்கள் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. இந்த இரண்டையும் மனத்தில் கொண்டே மதுவிலக்கு கொண்டுவரப்படுகிறது’ என்கிறார் நிதிஷ் குமார். அப்படியானால் மது மூலம் பீகாருக்குக் கிடைத்துவந்த வருவாய்க்கு என்ன மாற்று? நிதிஷின் பதில் இதுதான்... ‘மது விற்பனை மூலம்  நிதித்துறைக்கு ஆண்டுதோறும் 4,000 கோடி ரூபாய் வருவாய் வருவது உண்மைதான். இருந்தாலும் இந்த வருவாயைவிட பொதுமக்களின் நலன் பிரதானம். இதன்மூலம் மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், இனி பணத்தை மிச்சப்படுத்தி தங்கள் குழந்தைகளின் கல்விக்கும் ஆரோக்கியத்துக்கும் அவற்றைச் செலவிடும் என்று நம்புகிறேன்.’
ஆர்ப்பாட்டமான வரவேற்பையும் அவநம்பிக்கையுடன் கூடிய நிராகரிப்பையும் ஒரே சமயத்தில் பெற்றிருக்கிறது இந்த அறிவிப்பு. `மது இல்லாத பீகார் ஒரு புதிய பாய்ச்சலுடன் முன்னேறும்' என்கிறது ஒரு தரப்பு. `இந்த அறிவிப்பால் ஒரு பலனும் இல்லை; மதுவை ஒழிப்பது சாத்தியமே இல்லை' என்கிறது இன்னொரு தரப்பு. எது உண்மை?
மதுவிலக்கும் மாநிலங்களும்
`ஒவ்வோர் அரசும் மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும்' என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 47-வது ஷரத்து. `மருத்துவக் காரணங்கள் தவிர வேறு எதற்காகவும் போதையூட்டும் விஷயங்கள் அனுமதிக்கப்படக் கூடாது’ என்கிறது இந்த ஷரத்து. ஆனால், இந்த நெறிமுறைக் கொள்கையை மாநில அரசுகள் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை.
1950-ம் ஆண்டு, ஏப்ரலில் அன்றைய பம்பாய் முதல்வராக இருந்த மொரார்ஜி தேசாய் முதல்முறையாக மதுவிலக்கை அமல்படுத்தினார். மிகவும் கறாராக மது நடமாட்டம் கண்காணிக்கப் பட்டு, தடைசெய்யப்பட்டது. இருமலுக்கான டானிக்கிலும், வாசனைத் திரவியங்களிலும் ஆல்கஹால் இருக்கும் என்பதால், அவை தடை செய்யப்பட்டன. பிறகு உச்ச நீதிமன்றம் தலையிட்டு இந்த அளவுக்குத் தீவிரத்தன்மை வேண்டாம் எனச் சொல்லி, மது தவிர பிறவற்றில் உள்ள ஆல்கஹாலுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
1954-ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு மதுவிலக்கு குறித்து ஆராய்வதற்கும், நாடு முழுவதும்அதனை அமல்படுத்துவதற்கும் ஒரு கமிட்டியை உருவாக்கினார். நான்கே ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து மதுவை ஒழித்துவிடலாம் என நினைத்தார்கள். ஆனால், சட்டப்படி மது ஒழிக்கப்பட்டாலும், சட்டத்தின் அனைத்து ஓட்டைகளில் இருந்தும் பீறிட்டுக் கொட்டத் தொடங்கியது. பிற மாநிலங்களில் இருந்து மதுப் புட்டிகளைக் கடத்தி வருவதற்கும் அந்த மதுவை விற்பனை செய்வதற்கும் ஒரு கிரிமினல் நெட்வொர்க் உருவானது.
1960-ம் ஆண்டில் மும்பை மாகாணம் மகாராஷ்டிரா, குஜராத் என்று பிரிக்கப்பட்ட போது, மதுவிலக்குக் கொள்கை குஜராத்துடன் சேர்ந்து ஒட்டிக்கொண்டது. மகாராஷ்டிராவில் மதுவிலக்கு தொடர்பான சட்டம் மெள்ள மெள்ள நீர்த்துப்போக ஆரம்பித்தது. 1972-ம் ஆண்டில் பெர்மிட் முறை அறிமுகப் படுத்தப்பட்டது. `உடல் ஆரோக்கியத்துக்காகவும் மருத்துவக் காரணங்களுக்காகவும் மதுவைச் சிறிய அளவில் அருந்தலாம்’ என அறிவித்தார்கள். காந்தியின் ஆசிரமம் அமைந்துள்ள வார்தா மாவட்டத்தில் மட்டும் மதுவிலக்கு கடைப்பிடிக்கப்பட்டது. இது பிற பகுதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டு இந்த நிமிடம் வரை சட்டப்படி மதுவிலக்கு நீடிக்கிறது. ஆனால், தங்களுக்குப் பிடிக்காதவர்களைக் கைது செய்வதற்கே இந்தச் சட்டத்தை காவல் துறை அதிகமும் பயன்படுத்துகிறது.
கள்ளச்சாராய சாவுகளுக்கும் குஜராத்தில் குறைவு இல்லை. 1989-ம் ஆண்டு மட்டும் பரோடாவில் 257 பேர் கள்ளச்சாராயத்துக்குப் பலியானார்கள். சமீபத்திய புள்ளிவிவரங்களை எடுத்துக்கொண்டால், 2009-ம் ஆண்டில் அகமதாபாத்தில் 175 பேர் கலப்பட சாராயம் அருந்தி உயிரிழந்தார்கள். இந்தியாவில் அதிகாரபூர்வமாக மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்கள் குஜராத், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் (சில பகுதிகளில்). யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவுகள் மட்டும். 
மணிப்பூரில் 1991-ம் ஆண்டில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. பெண்கள் அமைப்பு களும் ஆயுதம் தாங்கிய குழுக்களும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இது சாத்தியமானது. ஆனால், இந்த ஆண்டு தொடங்கி ஐந்து மலைப் பகுதிகளில் மது மீண்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மிசோரமில் தேவாலயங்களின் தலையீட்டால் 1995-ம் ஆண்டு மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், 2007-ம் ஆண்டில் `ஒயின் மட்டும் தயாரிக்கலாம்’ என்று சொல்லப்பட்டது. இன்று மது விற்பனைக்கு அங்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
1996-ம் ஆண்டில் ஹரியானாவில் ஹரியானா விகாஸ் கட்சி மதுவிலக்கைக் கொண்டுவந்தது. இரண்டே ஆண்டுகளில் இது விலக்கிக்கொள்ளப் பட்டது. ஆந்திராவில் என்.டி.ராமாராவ் 1994-ம் ஆண்டில் மதுவிலக்கைக் கொண்டுவந்தார். மூன்று ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த சந்திரபாபு நாயுடு, `சட்டப்படி மதுவைத் தடை செய்வது சாத்தியம் இல்லை' எனச் சொல்லி தடையை நீக்கினார்.
கேரளாவில் 2014-ம் ஆண்டு  காந்தியின் 146-வது பிறந்த நாளை ஒட்டி மதுவிலக்கு  கொண்டு வரப்பட்டது. இது படிப்படியாக அமலுக்கு வரும். ஒவ்வோர் ஆண்டும் மதுக்கடைகள் தங்கள் உரிமங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றொரு சட்டம் இங்கே இருக்கிறது. கடைசியாக மார்ச் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு எந்தவொரு உரிமமும் நீட்டிக்கப்படவில்லை. கேரள அரசு நடத்திவரும் பெவ்கோ (கேரளா ஸ்டேட் பீவரேஜஸ் கார்பரேஷன்) என்னும் கடைகள் 338 தற்போது இயங்கிவருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் இதில் 10 சதவிகிதம் மூடப்படும்.
1978-ம் ஆண்டு பஞ்சாபில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் மது அருந்துவது சட்டப்படி தவறானது. மதக் குழுக்கள் சிலவற்றைச் சமாதானப்படுத்துவதற்காகப் பெயரளவில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடு அது. இன்று பஞ்சாப், விஸ்கியின் தலைநகரமாகத் திகழ்கிறது.
இந்த உதாரணங்களைப் பார்க்கும்போது சில உண்மைகள் பளிச்சென்று வெளிப்படுகின்றன. மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களிலும் மது சட்டவிரோதமாகக் கிடைக்கவே செய்கிறது. இன்று மது தொடர்பாக அமலில் உள்ள சட்டங்கள் அனைத்தும் போலி சாராயத்தையும் அது தொடர்பான பிரச்னைகளையும் தடுத்து நிறுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன. பூரண மதுவிலக்கை நோக்கமாகக்கொண்டு செயல்படும் மாநிலம் என்று எதுவொன்றையும் இன்று சுட்டிக்காட்ட முடியாது.
நிதிஷ் குமாரின் மதுவிலக்கு அறிவிப்பை இந்த விரிவான பின்னணியில் பொருத்திப் பார்க்கும்போது மலைப்பும் ஏமாற்றமும் ஏற்படுவது இயல்பே. ஆனால், அதற்காக பீகார் பரிசோதனை தொடங்குவதற்கு முன்பே அதற்கு முடிவுரை எழுதவேண்டிய அவசியம் இல்லை. மாறாக, கூடுதல் எச்சரிக்கை யுடன் தகுந்த முன்னேற்பாடுகளுடன் செயல்படத் தொடங்கினால் மதுவிலக்கை ஒரு வெற்றிகரமான பரிசோதனையாக பீகாரால் மாற்றிக்காட்ட முடியும்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு
நிதிஷ் குமார் மீதான விமர்சனங்களைத் தற்காலிகமாக ஒதுக்கிவைத்துவிட்டு மோடிக்கு எதிரான அவரது கூட்டணியின் வெற்றியை வகுப்புவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எதிரான வெற்றியாகப் பாவித்து வரவேற்ற தமிழ்நாடு, அவருடைய மதுவிலக்கு அறிவிப்பையும் அதேபோல் ஆரவாரமாக வரவேற்றுள்ளது. எதிர்வரும் தேர்தலில் மதுவிலக்கு ஒரு முக்கியமான கோரிக்கையாக இருக்கும் என்னும் எதிர்பார்ப்பு கட்சிகளிடையே அதிகரித்திருக்கிறது. தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், பா.ஜ.க., சி.பி.ஐ., சி.பி.எம் என பெரும்பாலான கட்சிகள் ஒரே குரலில் மதுவிலக்குக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றன. சசிபெருமாள் மரணம், கோவன் கைது என கொந்தளிப்பான சூழலில் நிதிஷின் அறிவிப்பு மிகுந்த நம்பிக்கையைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.
எனினும், இப்போதைக்கு பீகார் நமக்கு அளித்திருப்பது ஒரு எளிமையான வெளிச்சக் கீற்றுதான். அதைப்பற்றிக்கொண்டு பெருவெளிச்சமாக மாற்றுவது சாத்தியமா என்றால், சாத்தியம்தான்.  அது, நம் கோரிக்கையின் மீது நாம் கொண்டுள்ள உறுதியைப் பொறுத்தது. கோரிக்கையை நோக்கிய செயல்பாட்டின் வீரியத்தைப் பொருத்தது. மது ஒரு பெரும் சமூகத் தீங்காக உருவெடுத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சிதைத்து உருக்குலைத்து வரும் நிலையில் பீகாரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இதுவே.
** மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் எப்படியாவது கள்ளச்சாராயமும் அதை விற்பனை செய்வதற்கு ஒரு நிழலுலகமும் உருவாகிவிடுகிறது என்பது உண்மை. ஆனால் அதற்கு மாற்று, கள்ளச்சாராயத்தையும் அதைச் சார்ந்து இயங்கும் கிரிமினல் நெட்வொர்க்கையும் முடக்குவதுதானே தவிர, மீண்டும் பழையபடி மதுவை மாநிலமெங்கும் ஓடவிடுவது அல்ல.
** மதுவிலக்கை முயன்று பார்த்துவிட்டு வாபஸ் பெற்ற மாநிலங்கள் அனைத்தும் தங்கள் செயலை நியாயப்படுத்த முன்வைத்த காரணம், பொருளாதார இழப்பு. மதுவிலக்குச் சாத்தியம் இல்லை என இன்றும் வாதிடும் பெரும்பாலான மாநிலங்கள் தற்போது உயர்த்திப் பிடிக்கும் காரணமும் இதுவேதான். இதற்கான உண்மையான தீர்வு, நிதிஷ் குமார் குறிப்பிட்டுள்ளதைப் போல் பிற மாற்று வழிமுறைகளைக் கண்டறிவதுதான்; மது விற்பனையை அங்கீகரிப்பது அல்ல. பொருளாதார இழப்பை மாற்றுத் திட்டங்கள்மூலம் சரிகட்டிவிடலாம். சமூக இழப்பை ஈடுசெய்ய முடியாது.
**  நிதி இழப்பைச் சமாளிப்பது எப்படி? இதற்கு பீகாரிடம் கைவசம் ஒரு திட்டம் இருக்கிறது. எத்தனால் வாகன எரிபொருள் உற்பத்தி. 2007-ம் ஆண்டிலேயே எத்தனால் உற்பத்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கான அனுமதியை நிதிஷ் அரசு வழங்கிவிட்டது. `இனி வரும் காலங்களில் இத்திட்டத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து முடுக்கிவிடப்படும்’ என்கிறார்கள்.

No comments:

Post a Comment