சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Dec 2015

மூன்று மாதமாக சக்கை போடு போட்ட போலி மதுபான விற்பனை!

மதுவிற்கு எதிராக அரசியல்கட்சிகள் போர்க்கொடி பிடித்துக்கொண்டிருக்க, போலி மதுவிற்கு எதிராக குடிமகன்கள் போர்க்கொடி பிடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது தமிழகம்.

கடந்த 18-ம் தேதி ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஒருவர் போன் செய்திருக்கிறார். 'சித்தோடு பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிலிருந்து பிராந்தி பாட்டில்கள் கடத்துகிறார்கள்' எனக் கூறியிருக்கிறார் அவர். உடனே உஷாரான காவல்துறை சரியாக எட்டு மணிக்கு போன் செய்தவர் சொன்ன இடத்திற்கு விரைந்திருக்கிறது. சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்தும் அந்த வீட்டிலிருந்து யாரும் வெளியேயும் வரவில்லை. உள்ளேயும் போகவில்லை. இனியும் காத்திருப்பதில் அர்த்தமில்லை என நினைத்த காவல்துறை வீட்டிற்குள் நுழைந்திருக்கிறது.
உள்ளே இரண்டு நபர்கள் பிராந்தி பாட்டில்களுக்கு லேபிள் ஒட்டிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அவர்களை பிடித்து விசாரித்ததில் ஆறு பேர் இங்கு இருப்பதாகவும், கேரளாவை சேர்ந்த ஒருவர் தான் இதற்கு உரிமையாளர் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அவர்களை விட்டே உரிமையாளருக்கு போன் செய்ய சொல்லிவிட்டு அந்த நம்பரை டவர் லொக்கேஷன் பார்த்திருக்கிறது காவல்துறை. திருச்செங்கோடு பகுதியில் இருந்து பேசியிருக்கிறார் அந்த நபர். இதற்குள் பேசிய நபர்களின் தடுமாற்றத்தை பார்த்து சுதாரித்த உரிமையாளர் பேச்சுக்கொடுத்துக்கொண்டே போலீஸுக்கு தண்ணிக்காட்டிவிட்டு எஸ்கேப்பாகியிருக்கிறான்.

அங்கிருந்த பாண்டிச்சேரி அசோக்நகரை சேர்ந்த சதீஸ் மற்றும் கோவை போத்தனூரை சேர்ந்த வாசுதேவன் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறை அங்கிருந்த 10 ஆயிரம் குவார்ட்டர் பாட்டில்கள், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 114 கேன்கள், 30 ஆயிரம் மூடிகள், கலரிங்க் 6 லிட்டர், மூடிபோடும் மெஷின் ஒன்று, டே அன்ட் நைட், பென்னிஸ், ஜெட் ஆகிய மூன்று கம்பெனிகள் பெயரிட்ட 15 ஆயிரம் லேபிள்கள், எக்ஸைஸ் டிபார்ட்மெண்ட் ஸ்டிக்கர் இரண்டு ரோல்கள், மில்க்வேன் என பெயரிடப்பட்ட ஒரு ஸ்வராஜ் மஸ்தா வேன், ஒரு டெம்போ ட்ராக்ஸ் வண்டி என மொத்தத்தையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது. அதோடு பிடிபட்ட அவர்களிடம் விசாரிக்க அவர்கள் சொன்ன பதிலால் கிர்றடித்திருக்கிறது காவல்துறை. காரணம் அத்தனையும் பகீர் ரக தகவல்கள்.
''கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் இந்த இடத்திற்கு வேலைக்கு வந்தோம். இங்கு மொத்தம் 6 பேர் வேலை செய்கிறோம். ஒருவர் செய்யும் வேலை மற்றவருக்கு தெரியக்கூடாது என்பது எங்களுக்கு இடப்பட்ட கட்டளை. ஒருவர் ஸ்பிரிட் கொண்டு வருவதோடு சரி, இன்னொருவர் ஒன்றுக்கு இரண்டு என்கிற விகிதத்தில் கலவை போடுவார், இன்னொருவர் பாட்டிலில் சரக்கை ஊற்றி மூடி போடுவார், இன்னொருவர் கம்பெனி சீல் பேப்பர் ஒட்டுவார். இதோடு எங்கள் வேலை முடிந்துவிடும். அடுத்து இங்கிருந்து சரக்கை எடுத்துச்செல்வது வேறு குரூப்.

கடந்த மூன்று மாதங்களில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் விற்பனை செய்திருக்கிறோம். ஒரு குவார்ட்டர் தயாரிக்க பத்து ரூபாய் செலவாகிறது. ஆனால், ஒரு குவார்ட்டரை 88 ரூபாய்க்கு விற்பதாக சொல்கிறார்கள். தமிழகத்தில் வேலூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும்தான் இப்போது எங்களது சரக்கை விற்று வருகிறார்கள். கடை மூடிய பிறகு பெரும்பாலான பார்களில் எங்கள் சரக்கை சப்ளை செய்வதாக சொல்வார்கள்'' என அதிரடித்திருக்கிறார்கள். இந்த டூப்ளிகேட் சரக்குகளை பால் வண்டியில் கொண்டுபோவதால் யாருக்கும் இதுவரை சந்தேகம் வரவில்லை.
இவர்களின் கணக்குப்படி பார்த்தால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டரையும் தயாரித்து விற்றதில் செலவுபோக இவர்கள் லாபமாக பார்த்த தொகை மட்டும் ரூ.5 கோடிகளை தாண்டும்.

இந்த ஸ்பிரிட் சரக்குகள் பிடிபட்டதுமே ஈரோடு மாவட்டம் முழுவதுமிருக்கும் பார்களில், எட்டு ஸ்பெஷல் டீம்களை போட்டு ஆய்வு நடத்தியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் பிரபாகர். ஆனால், எங்குமே டூப்ளிகேட் சரக்குகள் மாட்டவில்லை. தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க ஈரோடு காவல்துறை இரண்டு ஸ்பெஷல் டீம்களை போட்டிருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், ''டாஸ்மாக் விற்பனையில் கூட இலக்கை நிர்ணயம் செய்து அந்த வருமானத்திற்காக காத்திருக்கிறது அரசு. தற்போது ஈரோட்டில் பிடிபட்டிருக்கும் டூப்ளிகேட் மதுபான தொழிற்கூடம் போல், இன்னும் தமிழகத்தில் எத்தனை இடங்களில் இருக்கிறதோ. மொத்தத்தில் டாஸ்மாக் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானத்தை விட கூடுதலாக இந்த கும்பல் சம்பாதிக்கிறது என்பதும், இதற்கு அதிகாரப்புள்ளிகளின் ஒத்துழைப்பும் நிச்சயம் இருக்கும் என்பதும் தான் உண்மை. இதையெல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டியது அரசுதான்'' என்றனர்.
இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக மாவட்ட ஆட்சியர் பிரபாகரை தொடர்புகொண்டோம். அவர் ஆயத்தீர்வை உதவி ஆணையரை கைகாட்டினார். அவரோ டாஸ்மாக் மாவட்ட மேலாளரை கைகாட்டினார். அவர், ''எங்கள் மாவட்டத்தில் போலி மதுபானங்கள் எங்குமே இல்லை'' என்றார். வேலூர் மாவட்ட மேலாளரான ரவிச்சந்திரனை தொடர்புகொண்டோம். ''எங்கள் மாவட்டத்தில் தினமும் ரெய்டு போய்க்கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் குறிப்பிடுவதுபோல் எங்குமே போலி மது இல்லை'' என்றார். திருச்சி மாவட்ட மேலாளரை தொடர்பு கொண்டு கேட்டோம். ''சமீபகாலமாக ஒரு சில இடங்களில் ரெய்டு செய்து வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது'' என்றார். அடுத்து தஞ்சாவூர் மாவட்ட மேலாளர் மோகன்ராஜிடம் பேசினோம். ''இப்போது தான் எங்களுக்கு தகவல் வந்தது. அதை வைத்து இன்று ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது'' என்றார்.
மேலும் விளக்கம் கேட்க டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை தொடர்பு கொண்டோம். இருவரது எண்ணும் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கிஷோர் கேரளாவிற்கு தப்பியோடியதை அறிந்த தனிப்படை அவனையும் கைது செய்திருக்கிறது. அவனை விசாரித்ததில் 15-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை அவன் பயன்படுத்தியதும், அவனுடைய இரண்டு கார்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் நம்பர் பிளேட்களை மாற்றி பயன்படுத்தியதும் தெரியவந்திருக்கிறது. இப்போது அவனை கைது செய்திருக்கிறார்கள்.


No comments:

Post a Comment