சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Dec 2015

மது கொள்கை : கேரளாவிடம் இருந்து பாடம் கற்குமா தமிழகம்?

கேரள அரசாங்கம் அமல்படுத்திய மதுவிலக்கை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மதுவிலக்கை மாற்ற இயலாது என்பதை அடிப்படையாகக் கொண்ட அந்தத் தீர்ப்பு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை நன்கு விளக்குவதாக அமைந்துள்ளது.
கேரள அரசாங்கத்தின் மதுவிலக்கு, தங்கள் வணிகச் சுதந்திரத்தைத் தடை செய்வதாக அமைந்துள்ளது என்று, பார் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கை இன்று தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தீர்ப்பின் தன்மை குறித்து விளக்கியது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் 
 
*இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19 (1)(ஜி) யின் கீழ், மது விற்பனை செய்யும் எந்த வணிக 
நிறுவனத்திற்கும், பாதுகாப்புப் பிரிவுகள் இல்லை.

*காரணமில்லாதத் தடை’ என்பது மதுபான விற்பனைக்குப் பொருந்தாது.

*மது அருந்துவதற்கான ‘பார் வசதிகள்’ கொண்ட நிறுவனங்கள் அந்த மதுவகத்தைச் சுத்தமும் 

சுகாதாரமும் கொண்டதாக அமைத்திருந்த போதிலும், தடை செய்யும் உரிமை அரசாங்கத்திற்கு உண்டு.

* மதுக்கடைகளின் சுகாதாரம் நல்ல முறையில் அமைக்கப்பெற்ற போதிலும், மது அருந்துவது மக்களின் நலக் கேடு என்பதால், அதைத் தடை செய்ய, வேறொரு காரணம் தேவையில்லை.

*இதனால் சுற்றுலாத்துறை பாதிப்படையும் என்ற வாதத்திற்கு பதிலளிக்கும் வகையில் நீதிபதி விக்ரமஜித் சென் தெரிவித்தது :-‘”இந்த நாட்டின் சுற்றுலாத் துறை மது விற்பனையை நம்பி இயங்கவில்லை; மது அருந்த வேண்டும் என்பதை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டு யாரும் கேரளச் சுற்றுலாத்துறைக்கு வருவதில்லை; இதன் மூலம் சுற்றுலாத்துறை சுத்தமடையுமே அன்றி பாதிப்படையாது.
சின்னச் சின்ன வயதுடையப் பள்ளி மாணவர்களெல்லாம் மதுக்கடை வாசலில் காத்துக்கிடக்கும் அவல நிலையை ஒப்பிடும் போது சுற்றுலாத்துறையின் மாற்றம் பெரிதல்ல.”பீகாரில் நிதீஷ், கேரளாவில் சாண்டி என முதல்வர்கள், மதுவிலக்கு விவகாரத்தில் அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்றார். அதை உச்ச நீதிமன்றமும் ஆதரிக்கிறது;

இதிலிருந்து, தமிழகம் பாடம் கற்குமா? இல்லையேல் இன்னும் எத்தனை சசிபெருமாள்கள் சாகக் காத்திருக்கிறார்கள் என்பது காலம் பதில் சொல்ல வேண்டியக் கேள்வி. 


சொத்து உரிமை மாற்றம்... எந்த வழி உங்கள் வழி..?


ஐ.டி. வேலை நிமித்தமாக அமெரிக்காவில் பத்தாண்டுகள் குடும்பத்துடன் இருந்துவிட்டு அண்மையில் சொந்த ஊருக்குத் திரும்பிய அகிலனுக்கு பயங்கர அதிர்ச்சி. அவரது அப்பாவின் சொத்தை அண்ணன்கள் மூன்றுபேரும் சமபாகப் பங்குப்போட்டு பத்திரமும் பதிவு செய்துவைத்திருந்தார்கள். ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதுக்கு, ''நீதான் அமெரிக்காவில் வசதியாக இருக்கியே! உனக்கு தனியாக சொத்து தரமுடியாது'' என்றார்கள்.
அப்செட் ஆகிப்போன அகிலனோ அவரது நண்பரான வக்கீலைப் பார்த்து பேச, 'நீங்கள் உங்கள் அண்ணன்கள் மீது வழக்குத் தொடர்ந்து, உங்களுக்குரிய பங்கை பெறலாம்’ என்றபோதுதான் நிம்மதியானார்.
பொதுவாக, நம் நாட்டில் சொத்து பாகப்பிரிவினை என்பது பல நேரங் களில் சுமுகமாக நடப்பதில்லை. வாரிசு களுக்குள் எழும் முரண்பாடுகளால் சிக்கலானதாகவே மாறிவிடுகிறது. சொத்து பாகப்பிரிவினை மற்றும் இதர சொத்து பரிமாற்றங்களை சிக்கல் இல்லாமல் எப்படி நிறைவேற்றுவது? சொத்தில் யாருக்கு என்ன உரிமை இருக்கிறது? என விளக்கிச் சொன்னார் சென்னையின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான அழகுராமன்.
பாகப்பிரிவினை..!
''தந்தை வழி சொத்தில் வாரிசுகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமைதான் பாகப்பிரிவினை. அதாவது, குடும்பச் சொத்து உடன்படிக்கை பத்திரம். குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் சமமாகவோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகப் பிரித்துக்கொள்ள முடியும். பூர்வீகச் சொத்துக்களை வாரிசுகளுக்கு சமமாகப் பிரிக்கப்படாதபட்சத்தில் அல்லது அவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஆட்சேபனை இருந்தால் பாகப்பிரிவினையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.
ஒருவருக்கு நான்கு வாரிசுகள் இருந்து, அதில் மூன்று வாரிசுகளுக்கு மட்டும் பாகம் பிரிக்கப்பட்டு, ஒரு வாரிசுக்கு மட்டும் பாகம் கிடைக்கபெறாமல் இருந்தால், அந்தப் பாகப்பிரிவினை செல்லாது என அவர் நீதிமன்றத்தை நாடலாம்.
தான பத்திரம்..!
சொத்து உரிமை மாற்றம் செய்து தருவதில் உள்ள ஒருமுறை, தான பத்திரம் மூலம் வழங்குவது. குறிப்பாக, நெருங்கிய குடும்ப உறவுகளுக்குள் சொத்து உரிமை மாற்றம் செய்துகொள்ளும்போது இந்த முறையைக் கையாளலாம்.
ஒருவர் மற்றொருவரிடமிருந்து பண பலன்களை பெற்றுக்கொண்டு சொத்து உரிமை மாற்றம் செய்கிறபோது, அதை சொத்து விற்பனை என்று குறிப்பிடுகிறோம். இதுவே, தான பத்திரம் மூலம் மாற்றும்போது விற்பனை என்று ஆகாது. அதாவது, சகோதரர் தனது சகோதரிக்கு சொத்தை தானமாக வழங்கலாம். சொத்தை தானமாக வாங்கியவர் அதை தனது கணவருக்கு தானமாகக் கொடுக்கலாம். இப்படி செய்வதன் மூலம் முத்திரைத்தாள் கட்டணம் இல்லாமல் உரிமை மாற்றம் செய்துகொள்ளலாம்.
ஆனால், தான பத்திரம் பதிவதற்கான கட்டணம் சொத்து வழிகாட்டி மதிப்பில் 1 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய். இதுதவிர, பதிவு கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டும்.  
உயில்..!
இது விருப்ப ஆவணம்; சொத்தை தனிப்பட்ட முறையில், தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதித்தரும் முறைதான் உயில் எனப்படும். ஒருவர், தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத்துக்களை தனது இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபருக்கு சிக்கல் இல்லாமல் போய்சேர வேண்டும் என்பதற்காக தனது சுயநினைவோடு எழுதித் தருவது. ஆனால், பூர்வீகச் சொத்தை உயிலாக எழுத முடியாது.
தனிப்பட்ட சொத்தை தனது வாரிசுகளுக்குத் தான் உயில் எழுதவேண்டும் என்கிற கட்டாய மில்லை. ரத்த உறவு அல்லாத மூன்றாம் நபர்களுக்கோ, அறக்கட்டளைகளுக்கோ உயிலாக எழுதித் தரமுடியும். அதேநேரத்தில், உயில் எழுதி வைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு சொத்து சேர்ந்துவிடும்.
மனநிலை சரியில்லாத நிலையில் அல்லது குடிபோதையில் எழுதப்பட்ட உயில் செல்லாது. மேலும், மைனர் மீது உயில் எழுதப்படு மாயின் அதற்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.  
பெண்களுக்கான சொத்துரிமை!
பெற்றோர்கள் வழிவரும் பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உள்ளது. ஒருவேளை பெண் வாரிசுகள் தங்களுக்கு சொத்தில் பங்கு தேவையில்லை என்கிறபட்சத்தில், அதை இதர வாரிசுகள் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், திருமணமான பெண்களுக்கான சொத்து உரிமையில் சில கட்டுப்பாடுகள் உள்ளன.
2005-ம் ஆண்டு சட்ட திருத்தத்தின்படி, பெண்கள் தனது தந்தையின் காலத்திற்குப் பிறகு அவரது பூர்வீகச் சொத்தில் உரிமை கோரமுடியும். மேலும், 25.3.1989-க்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஓர் இந்துப் பெண் பூர்வீகச் சொத்தில் உரிமை கோர முடியாது. ஆனால், அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் உரிமை கோரமுடியும். அதேவேளையில், சொத்து 25.3.89-க்கு முன்னர் பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால், பாகப்பிரிவினை கோர முடியாது. ஒருவேளை அந்த சொத்து விற்கப்படாமல் அல்லது பாகம் பிரிக்கப்படாமல் இருந்தால் உரிமை கோர முடியும்.
வாரிசுச் சான்றிதழ்..!
வங்கி வைப்புநிதி, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்திருந்து எதிர்பாராமல் இறக்கும் பட்சத்தில் நாமினிகளிடத்தில் இந்த சொத்துக்கள் ஒப்படைக்கப்படும். ஆனால், நாமினி இல்லாதபட்சத்திலோ அல்லது நாமினி மீது வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கும்பட்சத்திலோ வாரிசுச் சான்றிதழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெறலாம். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் நீதிமன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் அடிப்படையில் சொத்துக்கள் ஒப்படைக்கப்படும்.
பொதுவாக, சொத்து பாகம் பிரிக்கும்போது குடும்பத்தின் அனைத்து வாரிசுகளிடமும் சம்மதம் பெறவேண்டும். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு பிரிக்கப்படும் பாகப்பிரிவினை செல்லாது. நீதிமன்றத்தில் இதை மறைத்து தீர்வு பெறப்பட்டிருந்தால், பின்னாட்களில் இது தெரியவரும்போது அந்த தீர்வு ரத்து செய்யப்படும்.
முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணத்தை இந்து திருமணச் சட்டம் அங்கீகரிக்கவில்லை. இதனால் இரண்டாவது மனைவிக்கு கணவனது சொத்தில் உரிமையில்லை. ஆனால், அவர் வசமிருக்கும் தனிப்பட்ட சொத்தில் உரிமை கோரமுடியும்'' என்றார் அழகுராமன்.
பொதுவாக, சொத்து பாகப்பிரிவினையில் இதுபோன்று பல அடிப்படை விஷயங்களை கவனித்தாலே சிக்கலில்லாமல் உறவுகளை கையாள முடியும். வழக்கு நீதிமன்றம் என இழுத்தடிப்புகள் இல்லாமல் சொத்துக்களை பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.


ஐ.எஸ். தீவிரவாதிகளை நடுங்க வைக்கும் நாடு எது? வெளியான ஆச்சரிய தகவல்

ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக கூட்டுப்படைகள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தி வந்தாலும், ஐ.எஸ். பயத்துடன் நோக்கும் நாடு குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
 
ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து ஐ.எஸ்.தீவிரவாதிகளை வான் தாக்குதலால் சிதறடித்து வருகின்றன. இதனால் சிறப்பு படையினர் தரையில் முன்னேறிச் சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தவும் கூட்டுப்படையினர் உதவி வருகின்றனர்.

இதனிடையே, சிரியாவில் தங்கியிருந்து ஐ.எஸ். ஆதரவாளர்களுடன் சில காலம் இருந்த ஊடகவியலாளர் ஒருவர் உலக நாடுகள் ஆச்சரியமடையும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் தரைப்படையினரை தங்களால் வெல்ல முடியும் என நம்பிக்கை தெரிவித்திருக்கும் ஐ.எஸ்.தீவிரவாதிகள், இந்த படையினருக்கு கொரில்லா தாக்குதல் மற்றும் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் குறித்து போதிய பயிற்சி இல்லை எனவும் கூறியுள்ளனர்.
 
is
ஆனால் இஸ்ரேல் படையினருடன் நேருக்கு நேர் போரிடுவது மிகவும் கடினம் எனவும், அவர்களுக்கு கொரில்லா மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடுவதில் தனித்திறமை இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீப காலத்தில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கடும் இழப்பினை சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஈராக்கில் அவர்கள் வசமிருந்த 30 சதவிகித பகுதிகளை அந்த நாடு கைப்பற்றியுள்ளதையும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதுபோன்ற நெருக்கடியான சூழலை சமாளிக்கவே ஐ.எஸ்.தலைமை தனது ஆதரவாளர்களை நம்பிக்கையுடன் இருக்க வலியுறுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


தாவூத் இப்ராஹிமை டிரெஸ்சிங் அறையை விட்டு வெளியேற சொன்ன கபில்தேவ்!

டந்த 1986ஆம் ஆண்டு ஷார்ஜாவில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தியா - பாகிஸ்தான் மோதல் அது. இறுதி ஆட்டத்திற்கு முன்னதாக மும்பை நிழலுக தாதா தாவூத் இப்ராஹிம் இந்திய வீரர்களின் டிரெஸ்சிங் அறைக்குள் வந்தார். அப்போது இவர்தான் தாவூத் இப்ராஹிம் என்று இந்திய அணியின் கேப்டன் கபில்தேவுக்கு தெரியவில்லை.
அந்த சமயத்தில் டிரெஸ்சிங் அறைக்குள் தாவூத்தை பார்த்த கபில்தேவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வர, உடனடியாக வீரர்கள் அறையை விட்டு வெளியேறுங்கள் என்று கூறியுள்ளார். கபில்தேவை பார்த்து சிரித்துக் கொண்டே தாவூத் வீரர்கள் அறையை விட்டு வெளியேறி விட்டார்.
இந்த சம்பவம் குறித்து பின்னாளில், கபில்தேவ் ஒரு பேட்டியின் போது, ''தாவூத்தை பார்த்து இவ்வாறு நான் கூறியதும், அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அமைதியாக வெளியேறி விட்டார். அவர் போன பிறகுதான், யாரோ என்னிடம் இவர்தான் தாவூத் இப்ராஹிம் என்று கூறினர்'' என தெரிவித்துள்ளார். 

அது மட்டுமல்ல இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா தோற்கடித்தால், அணி வீரர்கள் அனைவருக்கும் ஒரு டொயாட்டோ காரை பரிசளிக்கப் போவதாகவும் தாவூத் அறிவித்திருந்தார். ஆனால் அவரது அறிவிப்பை இந்திய வீரர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். இதனை அப்போதைய இந்திய அணியின் முன்னணி வீரரான திலீப் வெங்சர்காரே ஒரு விழாவில் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து, பி.சி.சி.ஐ முன்னாள் செயலாளர் ஜெயந்த் லெலே எழுதிய புத்தகமான 'கிரிக்கெட் நிர்வாகியாக நான் இருந்த காலம்' என்ற புத்தகத்தில், இவ்வாறு குறிப்பிடுகிறார்...'' இந்திய இந்த போட்டியில் வெற்றி பெற்றால், இந்திய வீரர்கள், அணி நிர்வாகிகள், அலுவலர்கள் அனைவருக்கும் டொயாட்டோ கார் பரிசளிப்பதாகவும், அதனை அவர்கள் வீட்டுக்கே சென்று வழங்குவேன்'' என்று தாவூத் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


சிசேரியன் அதிகமாவது ஏன்?

ன் மகளுக்குச் சுகப்பிரசவம்’ என்று யாராவது சொன்னால், அது அதிசயம் போலாகிவிட்டது. இறுதிக்கட்ட நெருக்கடியில் மட்டுமே ‘சிசேரியன்’ என்ற காலம் மாறிப் போய், இன்று பெரும்பாலானோருக்குப் பிரசவமே சிசேரியன் மூலமாகத்தான் நிகழ்கிறது. நான்கில் ஒருவருக்கு சிசேரியன் என்றாகிவிட்டது. சுகப்பிரசவம் குறைந்ததற்கு வாழ்வியல் பழக்கங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும், சில பிரசவங்களில் சிசேரியனைத் தவிர்த்திருக்கலாமோ எனத் தோணும். சிசேரியன் எப்போது அவசியம், சிசேரியனை எப்படித் தவிர்ப்பது?
“சிசேரியன் ஏன் அதிகரித்துள்ளது?”
“தாமதமான திருமணம்,  நான்கு ஆண்டுகளுக்கு மேல் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடுதல்,30 வயதுக்கு மேல் கருவுறுதல், முதல் குழந்தை சிசேரியனால் பிறந்திருந்தால், இரண்டாவது குழந்தையும் சிசேரியன் மூலமாகவே பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்தல், இறுதிக்கட்ட நெருக்கடியில் மருத்துவமனைக்கு வருதல், உடலுழைப்பு இல்லாத வாழ்வியல் முறை, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கர்ப்பகால சர்க்கரை நோய் போன்றவை சிசேரியனுக்கான காரணங்கள்.”
“எப்போது சிசேரியன் அவசியம்?”
“பிரசவத்தின்போது சிரமங்கள் ஏற்படுத்தும் வகையில், வலுவான காரணங்கள் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யவேண்டும். பிரசவம் மிக மெதுவாகவும் சிக்கலாகவும் இருந்
தால், குழந்தைக்கு இதயத் துடிப்பு குறைந்திருந்தால், தொப்புள்கொடியால் குழந்தைக்கு ஆபத்து நேர்ந்திருந்தால், குழந்தை பெரியதாக இருந்தால், பிரசவ நேரத்தில் சரியான நிலையில் குழந்தை (Position) இல்லாதிருந்தால், கர்ப்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், தாய்க்குப் பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால், கர்ப்பப்பையில் வெடிப்பு அல்லது பிளவு (Uterine rupture) ஏற்பட்டிருந்தால், சிசேரியன் செய்யப்படும்.”

“எப்போது கவனமாக இருக்க வேண்டும்?”
“கர்ப்ப காலங்களில் வலி தொடர்ந்து இருந்தாலும், பனிக்குடம் உடைந்து, குழந்தை மூச்சுத் திணறலால் அவதிப்பட்டாலும், தாய்க்கு கால் வீக்கம், ரத்தப்போக்கு இருந்தாலும், குழந்தை அசையும் திறன் குறைந்திருந்தாலும், இடுப்பு எலும்பு பலவீனமாக இருந்தாலும், குழந்தையின் தாய்க்குப் பார்வைக் குறைபாடு இருந்தாலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.”

“சிசேரியனைத் தவிர்த்திட கர்ப்பிணிகள் செய்ய வேண்டியது என்ன?”
“கர்ப்ப காலங்களில் ஐந்து முறையேனும் மருத்துவமனைக்குச் சென்று, பரிசோதித்து கொள்தல் அவசியம் என்கிறது, உலக சுகாதார நிறுவனம். எனவே, ஒவ்வொரு மூன்று மாத கால (Trimester) இடைவெளியில் மருத்துவரை அணுகுவது அவசியம். முதல், இரண்டு, மூன்று என மூன்று மாத காலத்திலும் ஒவ்வொரு முறையும், பின்னர் மருத்துவர் அறிவுறுத்தும்போதெல்லாம் மருத்துவமனைக்குச் செல்தல் அவசியம்.
     1. 36-வது வாரத்துக்கு மேல் ஒவ்வொரு வாரமும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
     2.இரும்புச் சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்து மாத்திரைகளை, மருத்துவரின்   ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
    3. குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறிய, டாக்டர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனும் செய்துகொள்ளலாம்.
எந்த ஒரு சந்தேகத்தையும் மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. எளிய உடற்பயிற்சிகள மேற்கொள்ளலாம். மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே, கர்ப்ப கால யோகாசனங்களைச் செய்ய வேண்டும். நடப்பதும் நல்லது.
சரிவிகித உணவைப் பின்பற்ற வேண்டும். புரதமும், நார்சத்துக்களும் உணவில் கட்டாயம் இடம் பெற வேண்டும். பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் முக்கியத்துவம் தருவது அவசியம். மீன் சாப்பிடுவது, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும். வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உணவை நான்கைந்து வேளையாகப் பிரித்து, சிறிது சிறிதாகச் சாப்பிடலாம். 
இயற்கைக்கு எதிராக நாள், நேரம், நட்சத்திரம் பார்த்துக் குழந்தை பிறக்க வேண்டும் என்று முடிவு செய்து, குழந்தை பெற்றுக்கொள்வது ஆபத்தானது. பெரும்பாலான சமயங்களில் இந்த முயற்சி தோல்வியையே தழுவும் என்
பதால், இதை காரணமாகக்கொண்டு சிசேரியன் செய்துகொள்ளக் கூடாது.”


ஜுனியர் விகடன் இதழ்களைக் கைப்பற்றும் அ.தி.மு.கவினர்..!

இதுதான் செய்வாரா ஓ.பன்னீர் செல்வம்?

    
இந்த இதழ் ஜுனியர் விகடன் இதழில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தொகுதியான போடி சட்டமன்ற தொகுதியில் அமைச்சரின் செயல்பாடுகள் குறித்து ‘என்ன செய்தார் உங்கள் ஊர் எம்.எல்.ஏ.?’ என்ற  கட்டுரை வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் அ.தி.மு.கவினர் ஜூனியர் விகடன் இதழ்களை மொத்தமாகக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


போடியில் (அமைச்சரின் தொகுதியில்) இன்று காலை ஐந்து மணிக்கே அ.தி.மு.க தொண்டர்கள் பேருந்து நிலையங்களில் வலம்வரத்தொடங்கினர். பஸ்ஸிலிருந்து புத்தக பண்டல் இறங்கியவுடன், 350 புத்தகங்களுக்கான பணத்தை  மொத்தமாக  ஏஜெண்டிடம் கொடுத்து  புத்தகங்களை அள்ளிச்சென்றுள்ளனர். 

கம்பத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் அ.தி.மு.க-வினர் பார்சலில் வரும் பண்டல்களை மொத்தமாக பணம் கொடுத்து வாங்கினார்கள். சந்தா செலுத்துபவர்களுக்கும் , மற்ற கடைகளுக்கும் புத்தகங்கள் போகாத அளவிற்கு அனைத்து புத்தகங்களையும் கைப்பற்றிக் கொண்டுள்ளனர். 

தேனி பகுதியில் குறைந்த அளவில் புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருக்கும் கடைகளில் மொத்தமாக வாங்கி வருகின்றனர்.


புத்தகங்கள் வாங்கியபின் மீண்டும் ஜுனியர் விகடன் இதழ் வந்தாலும் அதனையும் மொத்தமாக தங்களுக்கே தர வேண்டும் என்று சொல்லிச் சென்றிருக்கிறார்கள். என்ன, ஏது என்று விசாரிப்பவர்களிடம் அ.தி.மு.கவினர் அமைச்சர் தரப்பினர் தான் புத்தகங்களை வாங்கச் சொன்னார் எனச் சொல்கிறார்களாம். 

தேனி மாவட்டத்தில் கூடுதல் இதழ்களை அனுப்பும் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறோம். வாசகர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அசெளகரியத்துக்கு வருந்துகிறோம்!


திரு 'த்தூ' விஜயகாந்த் அவர்களுக்கு சில கேள்விகள்!

’த்தூ..!’ என்று செய்தியாளர்களை விஜயகாந்த் இகழ்ந்ததற்கு பெருமளவு ஆதரவு கருத்துக்கள் வெளிப்படுவது என்னவிதமான மனநிலை என்று தெரியவில்லை. அது பற்றிய விவாதம் இப்போதைக்கு தேவையில்லை. விஜயகாந்த் செய்தது சரியா என்பதை மட்டும் இப்போதைக்கு பேசுவோம்! 
‘2016-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வென்று, ஆட்சியமைக்க அ.தி.மு.க.விற்கு வாய்ப்புள்ளதா?’ என்பது செய்தியாளர்களின் கேள்வி. ‘நிச்சயம் வாய்ப்பில்லை’ என்பது வலுவான எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தின் பதில். கேள்வியில் எந்தத் தவறும் இல்லை. அது கேட்கப்பட வேண்டிய கேள்விதான். அதற்கு விஜயகாந்த் சொன்ன பதிலும் தொடக்கத்தில் தவறாக வெளிப்படவில்லை. ஆனால், பதிலின் நீட்சியாக தொடர்ந்த வார்த்தைகள், ‘இதே கேள்வியை ஜெயலலிதாவிடம் போய்க் கேட்பீர்களா? செய்தியாளர்களா நீங்கள்? த்தூ..' என்று தெரித்தது, வழக்கம்போல தன்னிலை மறந்தவராக அன்று விஜயகாந்த் இல்லை. ஆனாலும்கூட, செய்தியாளர்களின் கேள்விக்கான பதிலில் வார்த்தைகள் வன்மத்துடன் தெரித்தன. அதில் உடைந்து நொறுங்கியது விஜயகாந்தின் ‘தராதரம்’ மட்டுமல்ல, அது ஏற்கனவே பலமுறை சட்டமன்றத்தில், பொதுக்கூட்ட மேடையில், தேர்தல் பிரசாரத்தில், ஊடகங்களில் உடைந்து சிதறி நொறுங்கிப்போய் இருக்கிறது. விஜயகாந்தின் அநாகரீக வார்த்தைகள் இப்போது கலைத்துப்போட்டது, தமிழக அரசாங்கத்தில் நிலவும் அசாதாரண சூழல், அதை அம்பலப்படுத்தி கேள்விக்குட்படுத்தாத பெரும்பான்மை ஊடகங்களின் நிலைப்பாட்டைதான். ஊடகத்தினரை விஜயகாந்த் இவ்வளவு கிள்ளுக்கீரையாகக் கருதக் காரணம் என்ன?  
விஜயகாந்தை ஊடகங்கள் கடுமையாக விமர்சிக்கவில்லை!  

மதுரையில் பிரம்மாண்ட மேடை அமைத்து, நல்ல நேரம் பார்த்து, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தைத் நீங்கள் தொடங்கியபோது, உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்று ஒன்றைச் சொல்லவில்லை. அப்போது செய்தியாளர்கள் உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டனர். அதற்கு, மழுப்பலாக, ‘மக்கள் நலன்தான் என் கட்சியின் கொள்கை’ என்று சொல்லிச் சமாளித்தீர்கள். அந்தக் கேள்விக்கு அதற்கு மேல் உங்களால் பதில் சொல்லமுடியவில்லை. இப்போதும் அந்தக் கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது. அப்படியிருக்கும்பட்சத்தில், நீங்கள் சொல்லிய அந்த ஒற்றை வார்த்தையைச் சொல்லியே, ‘விஜயகாந்த் கொள்கை இல்லாத ஒரு கட்சியின் தலைவன்’ என்று ஊடகங்கள் விமர்சித்திருக்க வேண்டும்.  

2006 சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. விருத்தாச்சலம் தொகுதியில் நீங்கள் மட்டும் வெற்றி பெற்றீர்கள். ஆனால், மொத்தமாக உங்கள் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தது. சில இடங்களில், 20 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைக் கூட உங்கள் வேட்பாளர்கள் பெற்றிருந்தனர். எதிர்காலத்தில் வலுவான கட்சியாக வரும் என்று ஊடகங்கள் தே.மு.தி.கவை அடையாளப்படுத்தின. அந்தச் சூழலில், நீங்கள் முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்தீர்கள். அப்போது தி.மு.க ஆளும்கட்சி. கருணாநிதி முதலமைச்சராக இருந்த அந்த சட்டமன்றத்தில், சர்வாதிகாரப்போக்கு, இன்று இருப்பதுபோல் நிச்சயம் இருக்கவில்லை. ஆனால், அப்போதுகூட உங்கள் தொகுதிக்காக, நீங்கள் உருப்படியாக எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. வந்தீர்கள். கையெழுத்துப்போட்டுச் சென்றீர்கள். சட்டமன்றத்தில்தான் எதுவும் சாதிக்கவில்லை என்றால், உங்களை நம்பி வாக்களித்த விருத்தாச்சலம் தொகுதி மக்களையாவது எட்டிப் பார்த்தீர்களா? அதுவும் இல்லை. அதனால்தான், அடுத்த தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிடாமல்,  ரிஷிவந்தியம் சென்றீர்கள். உங்களின் அந்த பொறுப்பற்ற செயல்பாட்டை ஊடகங்கள் அன்றைக்கு நீங்கள் சொல்லி அந்த ஒற்றை வார்த்தையைக் கொண்டு விமர்சிக்கவில்லை!  

கட்சி தொடங்கிய நாள் முதல், ‘மக்களோடும் தெய்வத்தோடும் மட்டும்தான் கூட்டணி’ என்று தொடர்ந்து லாவணி பாடிக் கொண்டிந்தீர்கள். இடையில் வந்த இடைத்தேர்தல்களில் எல்லாம் தனித்தே போட்டியிட்டு உங்களின் ஓட்டு சதவீதத்தை நிரூபித்துக் கொண்டே வந்தீர்கள். அந்த நேரத்தில், 2011 சட்டமன்றத் தேர்தல் வந்தது. உங்களுக்கு எல்லா பக்கமும் இருந்து அழைப்பு வந்தது. அதனால் தெய்வத்தை அம்போ என விட்டீர்கள். மக்களைத் தெருவில் விட்டீர்கள். ‘குடிகாரன்’ என்று உங்களை குறிப்பிட்ட ஜெயலலிதாவும், ‘அவர் வந்து ஊற்றிக் கொடுத்தாரா?’ என்று அவரிடம் கேட்ட  கேட்ட நீங்களும் கூட்டணி வைத்துக் கொண்டீர்கள். அந்தக் கூட்டணி குறித்து பலப்பல ஹேஷ்யங்கள் உலவியபோது, அதைக் குறிப்பிட்டு நீங்கள் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை கொண்டு உங்களை  ஊடகங்கள் விமர்சிக்கவில்லை! 
அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்று எதிர்க்க்ட்சித் தலைவராக சட்டசபைக்குள் கெத்தாக நுழைந்த உங்களால், ஒரு கூட்டத்தொடரைச் சமாளிக்க முடியவில்லை. கையை மடித்து நாக்கைத் துருத்தி வெளியில் வந்த உங்களை, நீங்கள் சொன்ன ஒற்றை வார்த்தையைக் கொண்டு ஊடகங்கள் புறக்கணிக்கவில்லை. ஜெயலலிதாவைப் பார்த்து கேள்வி கேட்க முடியாதவர்கள் நீங்கள் என்று செய்தியாளர்களைப் பார்த்து துப்புகிற விஜயகாந்த் அவர்களே, நீங்கள் கடந்த 5 ஆண்டுகளில் ஜெயலலிதாவைப் பார்த்து கேட்ட கேள்விகள் எத்தனை? உங்கள் எம்.எல்.ஏ.க்கள் கேட்ட கேள்விகள் எத்தனை? நீங்கள் கேட்கமுடியாதபடி உங்களை வெளியேற்றினால், அதைக் கண்டித்து நீங்கள் சட்டப்பேரவை வளாகத்திற்குள்ளும், சட்டமன்றத்தின் முன்பும் கூடி நடத்திய போராட்டங்கள் எத்தனை? 29 எம்.எல்.ஏக்கள் ஜெயித்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் சட்டமன்றத்திற்குப் போய், ஜெயலலிதாவை எதிர்த்துக் கேள்வி கேட்கமுடியாமல், அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கும் உங்களைப் பார்த்து, நீங்கள் சொல்லிய வார்த்தையைக் கொண்டு ஊடகங்கள் விமர்சிக்கவில்லை.  
 
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்திலும் பணியாற்றாமல், தொகுதிக்குள்ளும் பணியாற்றாமல் தன்னிலை மறந்து கிடந்த நேரத்தில், நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அத்தேர்தல் தொடர்பான ’பலனளிக்கும் கூட்டணி’ அமைக்க தி.மு.க.வுடனும்  பாரதிய ஜனதாவுடனும் ஒரே சமயத்தில் பேச்சு வார்த்தை நடத்தினீர்கள்.  ரகசிய ஒப்பந்தங்களுக்குப் பிறகு பாரதிய ஜனதா அணியில் போய்ச் சேர்ந்ததுடன், 14 தொகுதிகளையும் வாங்கினீர்கள். அதில் ஒரு இடம் உங்கள் மச்சானுக்கு ஒதுக்கப்பட, மற்ற இடங்களை வாங்க முடிந்தவர்கள் வாங்கிக் கொண்டார்கள். ஆனால்,  போட்டியிட்ட 14 இடங்களிலும் தோல்வி. அப்போது கட்சியை விஜயகாந்த் அடகு வைத்துவிட்டார் என்று நீங்கள் குறிப்பிட்ட வார்த்தையைச் சொல்லி ஊடகங்கள் உங்களை விமர்சிக்கவில்லை!      

தமிழகத்தில் உள்ள எந்தக் கட்சியையும் எடுத்துக்கொள்ளலாம். அந்தக் கட்சிகளில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் என அனைவரும் தனிப்பட்ட முறையில் குடிப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கலாம். அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் யாரும், கட்சியின் மேடையிலோ, தேர்தல் பிரச்சார மேடைகளிலோ என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறுவதுமான காட்சியைத் தமிழகம் ஒருநாளும்  கண்டதில்லை. ஆனால், விழுப்புரத்தில் நீங்கள் நடத்திய லஞ்ச எதிர்ப்பு மாநாட்டில் உங்கள் நிலை எப்படி இருந்தது? அங்கு உங்களைத் தலைவராக நம்பி லட்சக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர். அவர்களுக்கு முன்பு நீங்கள் ஆற்றிய அந்த அரிய உரை, என்னவென்று இன்றுவரை யாருக்கும் புரியவில்லை. அந்தக் காட்சிகள் தேவைப்பட்டால், உங்கள் கேப்டன் தொலைக்காட்சி செய்திப் பிரிவில் போய்க் கேளுங்கள். போட்டுக்காட்டுவார்கள். இல்லையென்றாலும் பிரச்னை இல்லை. இப்போதும் அந்த அவமானப் பேச்சு வலைத்தளங்களில் இருக்கிறது. அன்றே ஊடகங்கள் உங்களை நீங்கள் குறிப்பிட்ட வார்த்தையைச் சொல்லி உங்களை விமர்சிக்கவில்லை! 

“ஜெயலலிதாவைப் பார்த்து கேள்வி கேட்க தைரியமில்லை. செய்தியாளர்களா நீங்கள்? த்த்தூ” என்று துப்பிய திரு. விஜயகாந்த் அவர்களே... நீங்களே சொந்தமாக ஒரு ஊடக நிறுவனம் நடத்துகிறீர்கள் என்பதை மறந்துவிட்டீர்களா? அ.தி.மு.க தலைமைக் கழகம் நடத்தும் நிகழ்ச்சிகள், அறிவாலயத்தில் நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்புகள், கம்யூனிஸ்ட் தலைவர்களும், பாரதிய ஜனதா கட்சிக்காரர்களும், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நடத்தும் கூட்டங்களில் உங்கள் செய்தியாளர்களும், சுற்றி சுற்றி வந்து மற்ற செய்தியாளர்களைப்போல் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அங்கெல்லாம் அவர்கள் மிக கண்ணியமாகவே நடத்தப்படுகிறார்கள். ’நீ கேப்டன் டி.வியா? உன் கேள்விக்கு நான் பதில் சொல்லமாட்டேன் என்று தி.மு.க தலைவர் கருணாநிதியோ, அன்புமணி ராமதாஸோ ஒருநாளும் அவர்களிடம் சொன்னதில்லை. ஆனால், நீங்கள் பிற ஊடகவியலாளர்களை அதன் நிர்வாகத்தை மனதில் வைத்தே எதிர்கொள்கிறீர்கள்... வசை பாடுகிறீர்கள். ஆக, திரு விஜயகாந்த் அவர்களே, உடனடியாக நீங்கள் ஏன் கேப்டன் டி.வி செய்தியாளர்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுத்து, ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்கக் கூடாது? ஒருவேளை அது முடியாதென்றால், அப்போது நீங்கள் யார் மீது துப்பிக்கொள்வீர்கள். உங்கள் மீதா? 
 
ஊடகங்களைப் பார்த்து ஜெயலலிதாவுக்கு அச்சமா?
 
ஜெயலலிதாவும் செய்தியாளர்களைச் சந்தித்துக் கொண்டுதான் இருந்தார். போயஸ் கார்டன் வேதா நிலைய வாசல், தலைமைச் செயலகம், அ.தி.மு.க அலுவலகம் மற்றும் ஜெயலலிதா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்று வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் செய்தியாளர்கள் ஜெயலலிதாவிடமும் கேள்விகள் கேட்டுக் கொண்டுதான் இருந்தனர். ஆனால், கருணாநிதியிடம் கேள்வி கேட்கும் போது, இருக்கும் எளிமையான மனநிலை-உரிமையான மனநிலை, ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்கும்போது செய்தியாளர்களிடம் இருக்காது என்பது உண்மை. ஜெயலலிதா ‘சிடுசிடு’ முகத்தையே காட்டுவார். இறுக்கமாக இருப்பார். ‘பிரஸ். அமைதி’ என்று அதட்டவும் செய்வார். அதனால், அவர் நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு இறுக்கம் இருந்துகொண்டே இருக்கும். இந்த நிலையில், 2011 சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும், பத்திரிகையாளர்களை அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் சந்தித்த ஜெயலலிதா, இனிமேல் நான் உங்களை வாரம் ஒருமுறை சந்திப்பேன். நான் போகும் இடங்களில் எல்லாம் நீங்கள் மைக்கை எடுத்துக்கொண்டு என்னைத் துரத்தத் தேவையில்லை என்று ஒரு ஒப்பந்தம் போட்டார். சொன்னதுபோல் முதல் வாரம் சந்திக்கவும் செய்தார். ஆனால், அதற்கடுத்த வாரத்தில் இருந்து அந்த பிரஸ்மீட் நடக்கவில்லை. அதன்பிறகு, பத்திரிகையாளர்களும் கேமராவும் தன்னை நெருங்க முடியாத வகையில் ஜெயலலிதா தனக்குத் தானே ஒரு இரும்புத் திரையைப் போட்டுக் கொண்டார். எந்தச் சூழலிலும் கேள்விகளை எதிர்கொண்டு, அதில் தன் நிலை என்ன என்பதை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் கருணாநிதியின் ஆற்றல் ஜெயலலிதாவிடம் கிடையாது. அதனால், அவர் அந்த இரும்புத் திரையை அணிந்து கொண்டு ஆட்சி நடத்துகிறார். அவர் அதைத் தனக்குப் போட்டுக் கொண்டதோடு அல்லாமல், தனது அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி அடிப்படை உறுப்பினர் வரை அனைவரையும் அதற்குள் சிக்க வைத்துள்ளார். பொதுநிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்களை பக்கத்திலேயே அனுமதிப்பதில்லை. வார இதழ்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிப்பதில்லை என்று ஒரு சர்வாதிகாரத்தன்மையோடு அரசாங்கத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதற்கு அர்த்தம் ஊடகங்கள் அவரைப் பார்த்து பயப்படுகிறது என்பதல்ல... ஜெயலலிதா ஊடகங்களை எதிர்கொள்ள அஞ்சுகிறார் என்பதே..!

ஜெயலலிதாவைப் பிடித்துள்ள அந்த அச்சம், அவர் தலைமையின் கீழ் இயங்கும் ஒட்டுமொத்த அரசு எந்திரத்திற்கும் இன்று கடத்தப்பட்டுள்ளது. அதன்விளைவுதான், கடந்த மாதம் சென்னையை வெள்ளம் மூழ்கடித்து தேசியப் பேரிடர் அளவிற்கு சேதத்தை உருவாக்கிய நிலையிலும் ஒரு முதலமைச்சரை ஊடகங்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஊடகங்களைத் தொடர்பு கொள்ள முதலமைச்சரும் விரும்பவில்லை. சரி உடல்நிலையில் கோளாறா? என்று சந்தேகத்தை கிளப்பி செய்தி வெளியிட்டால், அதற்குப் பதில் இல்லை. ஆனால், கேள்வி எழுப்பிய பத்திரிகை மீது அவதூறு வழக்குப் போடப்படுகிறது. அமைச்சர்கள் ஊடகங்களிடம் பேச மறுக்கிறார்கள். குறிப்பிட்ட அதிகாரிகளைத் தவிர மற்றவர்கள் ஓடி ஒளிகிறார்கள். இப்படிப்பட்ட இருட்டான அரசாங்கம் தான் நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்தெல்லாம் தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல் போகிற போக்கில் நீங்கள் ‘தூ’ என்று துப்புவது சரியா திரு.விஜயகாந்த் அவர்களே!
இங்கு விஜயகாந்த் த்த்த்தூ என்றதும், அவரைத் நோக்கித் திருப்பித் துப்புவதற்கு செய்தியாளர்களிடம் ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், பிரச்னையின் மையப்புள்ளி அதுவல்ல. இப்படிப்பட்ட அராஜகப் போக்கை முதன் முதலில் உருவாக்கி வைத்த, ஜெயலலிதாவின் இருட்டு அரசாங்கத்தை மௌனமாக வேடிக்கை பார்ப்பதை விடுத்து, அதை கேள்விகளால் உடைக்கத் தொடங்க வேண்டும் ஊடகங்கள். 

இல்லையென்றால், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியாத முதலமைச்சரும், 24 மணி நேரமும் என்ன பேசுகிறோம் என்றே தெரியாத ஒரு தன்னிலை மறந்த எதிர்க்கட்சி தலைவரும் உள்ள மாநிலத்தில்  இப்படிப்பட்ட அவமானங்களைச் செய்தியாளர்கள் தினமும் சந்திக்கத்தான் வேண்டும்!  


வாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...!

ன்று வரை 700 மில்லியன் மக்கள் ஒரு மாதத்தில் 'வாட்ஸ் அப்' பயன்படுத்தி வருகின்றனர். அதில், ஒரு மாதத்தில் மட்டும் 30 பில்லியன் செய்திகள் பரிமாறப்பட்டுகிறது. இந்த 'வாட்ஸ் அப்'பில் தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது சுய விவரங்களை பரிமாறிக் கொள்கின்றனர். இங்கு சாதாரணமாக பேசிக்கொள்வது மட்டுமின்றி புகைப்படம், வீடியோ, வங்கி கணக்கு விவரங்கள், தொடர்புகளும் தனிப்பட்ட வகையில் பரிமாறப்படுகின்றன.
இங்கு பிரைவசி இல்லாததால், சமூக வளைதளங்களில் உலவும் தீய எண்ணமுடையவர்கள் அதை தவறாக பயன்படுத்த முடியும். அதனால் ESET நிறுவனம், தங்களது சுய விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படாதவாறு பாதுகாக்க சில முக்கிய குறிப்புகளை அளித்துள்ளனர்.

1.) வாட்சப் லாக்:

வாட்ஸ் அப்-ஐ லாக் செய்வதில் முக்கியமான விஷயம் முதலில் ஒரு பாஸ்வேர்டு அல்லது 'பின்' பயன்படுத்துதலே சிறந்தது. வாட்ஸ் அப்பிற்கென பிரத்தியேகமாக எந்த ஒரு லாக்கும் இல்லை. இதற்கென ஆப் லாக்கை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இதனால், மூன்றாவது மனிதர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும். ஆனாலும், செல்போன் தொலைந்து போகும் பட்சத்தில் அதை தவறாக பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே 'சாட் லாக்', 'வாட்ஸ் அப் லாக்', 'செக்யூர்சாட்' இவை மூன்றும் ஆண்ட்ராய்டு போன்களில் எளிதாக பயன்படுத்தலாம். எனவே இவற்றை பயன்படுத்தி யாரும் உங்களது தகவல்களை திருடாமல் பார்த்துக் கொள்ளலாம்.

2.) வாட்சப் புகைப்படங்கள், போட்டோ ரோலில் சேர்வதை தடுக்க:


புகைப்படங்களை பரிமாறும்பொழுது, அவை பொதுவாக உங்கள் போட்டோ ரோலில் சேகரிக்கப்படுகிறது. அதனால் அவை திருடப்பட வாய்ப்புகள் அதிகம். இவற்றை ஐபோனில் எளிதில் தடுக்கலாம். போன் செட்டிங்கில் உள்ள மெனுவில் சென்று, பிரைவசியில் உள்ள புகைப்படத்தை 'டீசெலைக்ட்' செய்ய வேண்டும். இதனால் அவை போட்டோ ரோலில் சேர்வது எளிதில் தடுக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு பயனாளர்கள், இதனை 'பைல் எக்ஸ்ப்லோரர் ஆப்' மூலம் தடுக்கலாம். இதில், நோ மீடியா எனும் பைலை உருவாக்குவதின் மூலம் தடுக்கப்படுகிறது. வாட்ஸ் அப் இமேஜை லாக் செய்வது ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கலாம். ஆனால், போன்கள் திருடப்படும்போது 100% பாதுகாப்பைத் தரும் என கூற முடியாது.

3.) லாஸ்ட் சீனை மறைப்பது:

நீங்கள் கடைசியாக எப்போது ஆன்லைனில் இருந்தீர்கள் என மற்றவர்களுக்கு தெரியும். இது மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வழிவகை செய்யலாம். இந்த லாஸ்ட் சீன்  மற்றவர்கள் அறியாதவாறு தடுக்க 'ஹைடு லாஸ்ட் சீனை' பயன்படுத்தலாம். ஆனால் இதை செய்தால் உங்கள் தொடர்புகளில் உள்ளவர்களின் லாஸ்ட் சீனையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியாது.

4.) ப்ரொஃபைல் பிக்சரை தவறாக பயன்படுத்துவதை தடுக்க:

உங்கள் ப்ரொஃபைல் பிக்சரை நீங்கள் பயன்படுத்தும்போது அதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு அதிகம். அதோடு இந்த ப்ரொஃபைல் புகைப்படத்தை பயன்படுத்தி கூகுள் சர்ச் சில் உங்களது விவரங்களை பெற முடியும். அதனால், ப்ரைவசியில் உங்கள் புகைப்படத்தை தொடர்புகளில் மட்டும் பொருத்த வேண்டும்.

5.) போலி தகவல்களிடம் விழிப்போடு இருங்கள்:


வாட்ஸ் அப் எப்பொழுதும் நேரடியாக உங்களோடு தொடர்பு கொள்வதில்லை என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள். வாட்ஸ் அப் நேரடியாக உரையாடல்கள், ஆடியோ தகவல்கள், புகைப்படங்கள், மாற்றங்கள், வீடியோக்கள் எப்பொழுதும் மின்னஞ்சல் உதவியில்லாமல் உங்களுக்கு அனுப்பாது. குறிப்பிட்ட இலவச நன்கொடைகள் பற்றிய தகவல்கள் வந்தால் நிச்சியம் அது போலியாக தான் இருக்கும். இவை நம்பத்தகுந்தது அல்ல.

6.) தொலைபேசி தொலைந்தால் வாட்ஸ் அப்பை செயலிழக்கச் செய்யுங்கள்:


செல்போன் தொலைந்தால், வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு எளிய மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. சிம் கார்டை லாக் செய்வது பற்றிய வசதிகளை அளிக்கறது. தொலைபேசி தொலைந்து போனால் உடனே அதே எண்ணில் மற்றொரு தொலைபேசியில் வாட்ஸ் அப் அக்கவுண்ட்டை திறந்தால் தானாகவே தொலைந்த வாட்சப் அக்கவுண்ட் செயலிழக்கப்படும். இதன் மூலம் வாட்ஸ் அப் அக்கவுண்ட் தானாகவே செயலிழக்கப்படும்.

7.) எதைப்பற்றி பேசுகிறோம் என்பதில் தெளிவாக இருங்கள்:


இது கடைசி, இதுவே முடிவல்ல என்பதை உணர்ந்து செயல்படுங்கள். சுய தகவல்களை எப்பொழுதும் பகிர்வதை தவிர்த்திடுங்கள். முகவரி, தொலைபேசி எண், வங்கி விவரம், கிரெடிட் கார்டு விவரம், பாஸ்வேர்டுகளை வாட்ஸ் அப்பில் பகிராதீர்கள்.

8.)வாட்ஸ் அப்பை 'லாக் அவுட்' செய்ய மறக்காதீர்கள்:

வாட்ஸ் அப் தற்போது நிறைய சேவையை வழங்கி வருகிறது. பல பயனாளர்களுக்கு வாட்சப் லாக் அவுட் செய்வது பற்றிய விவரம் தெரிவதில்லை. இதை தொலைபேசி மூலமோ பிரௌசர் மூலமோ செய்யலாம்.

உஷாராக இருங்கள்!

புத்தாண்டு இரவில் இதெல்லாம் செய்யாதீர்கள்! - சொல்கிறது காவல்துறை

ங்கிலப் புத்தாண்டு பண்டிகையை வரவேற்கும் விதமாக சாலைகளில் நடக்கும் கொண்டாட்டத்தில் நடந்து முடிகிற அசம்பாவிதங்கள் ஆண்டுதோறும் கூடிக் கொண்டே போகின்றன.  அதிலும் தமிழகத் தலைநகர் சென்னையில் இது ஏகத்துக்கும் அதிகரிக்கிறது!

மெரீனா. ஈ.சி. ஆர். போன்ற கடற்கரைச் சாலைகளில் , சீறிப் பாயும் வாகனங்களால் நடக்கும் உயிரிழப்பு விபத்துகள்... மெரீனா தொடங்கி மாமல்லபுரம் வரை  கடல் குளியலில் எதிர்பாராமல் நடந்து விடும் மூச்சுத்திணறல் மரணங்கள்... இவைகளை கடுமையான கண்காணிப்பு, எச்சரிக்கை மூலம் காவல்துறையினர் நினைத்தால் தடுத்து விட முடியும். உச்சக்கட்ட மது விருந்தால் இறக்கிறவர்களை மட்டும்தான் போலீசாரால் தடுக்க முடியாது.
டிசம்பர் 31- நள்ளிரவுக் கொண்டாட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர என்ன மாதிரியான வியூகத்தை  ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்?  என போலீஸ் ஏரியாவில் கேட்டதில் , வந்த தகவல்கள். 

#புத்தாண்டில்  மது அருந்திவிட்டு பொது இடங்களில் கொண்டாட்டம் என்ற பேரில் ஆடிக் கொண்டிருக்கக் கூடாது. மீறினால் நடவடிக்கைதான்... எல்லாமே அளவோடு இருந்து விட்டால், ஆண்டின் முதல் நாள்தானே என்ற மனித நேயத்தோடு கண்டும் காணாமலும் இருந்து விடுவோம்.

#நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறுகிற அத்தனை அசம்பாவித சம்பவங்களுக்கும் ஹோட்டலின் மேலாளர், உரிமையாளரே பொறுப்பு. ஹோட்டல்களில் போடப்படுகிற மேடைகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அனுமதியை ஹோட்டல் நிர்வாகம் பெற வேண்டும் என்பதை உறுதிப்படுத்தச் சொல்லியிருக்கிறோம்.
# அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நட்சத்திர ஹோட்டலை திறந்து வைத்து கேளிக்கைகளை தொடர கண்டிப்பாக அனுமதி கிடையாது.  அதேபோன்று மது ஆதிக்கத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களை நீச்சல் குளத்தில் இறங்க ஹோட்டல் நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

# ஈ.சி.ஆர். பகுதிகளில் இருக்கிற ஒருசிலர் தங்களுக்கு சொந்தமான பண்ணை வீடுகளை "பெஸ்டிவல்-ரென்ட்" என்ற பெயரில் நாளொன்றுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் பல லட்ச ரூபாய் என்றளவில் வாடகைக்கு விடுவதாக கடந்த ஆண்டே புகார்கள் எழுந்தது. ரகசிய சோதனையில் அந்த வீடுகளை வாடகைக்கு எடுத்து வைத்து சமூக விரோதச் செயல்களில், குறிப்பாய் போதை ஊசி, வரம்பு மீறிய  உல்லாசங்களில் ஈடுபட்டவர்களைப் பிடித்து நடவடிக்கை எடுத்தோம். பண்ணை வீட்டின் அதிபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தோம்.

#குடித்து விட்டு கார், பைக் போன்ற வாகனங்களை  ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து, வாகனம் பறிமுதல்  என்பதோடு அவர்களுடன் காரிலோ, பைக்கிலோ சேர்ந்து பயணிக்கும் நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யலாமா என்றும் திட்டம் ஆலோசனையில்  உள்ளது.

இத்தனைக்  கெடுபிடிகள் இருந்தாலும், மெரீனா கடலில் குளிக்க சென்று இறக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதும்   சாலை விபத்துகளில் இறக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் கூடிக்கொண்டேதான் போகிறது. புத்தாண்டு சமயம் டிசம்பர் 31- இரவு 11 மணியிலிருந்து 12 மணிவரை கூடுகிற அல்லது வாகனங்களில் சீறிப்பாய்கிற மனிதத் தலைகள் மட்டும் ஐந்து லட்சம் முதல் எட்டு லட்சம் வரை இருக்கும் என கணக்கிடப் பட்டுள்ளது.
அதே வேளையில் மெரீனா, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர், மாமல்லபுரம் கடற்கரை மணற் பரப்பில் மட்டுமே பத்து லட்சத்தில் தொடங்கி ஐம்பது லட்சம் பேர் உலவுகிறார்கள். இது ஒரு மணிநேரக் கணக்கு மட்டுமே. சாலைகளில் சீறிப் பாயும் வாகனங்கள், நட்சத்திர ஓட்டல், பண்ணை வீடுகள், கடற்கரை மணல் வெளிகள், சுற்றுலா மற்றும்  வழிபாட்டுத் தலங்கள் என்று ஒட்டு மொத்த மக்களையும் பல்வேறு இடங்களில்  "உயிர் போகாமல் காத்து" பாதுகாப்பு அளிக்க வேண்டிய கூடுதல் கடமை போலீசாருக்கு.

குறிப்பாக வேகமாய் பறக்கும் வாகனங்கள் மூலமும், கடலில் குளித்தல் மூலமும் அதிக பட்சமாய் பறிபோகும் உயிர்களை தடுத்துக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் போலீசாருக்கு இருக்கிறது.

சாலை விபத்துகளுக்கு பிரதான காரணமாக ஒட்டுமொத்த அளவுகோலில் நிற்பது மது அருந்திவிட்டு வானம் ஓட்டுதலே என்பது இறுதி முடிவாக உள்ளது... கடலில் , நீர்நிலைகளில், இன்னபிற கொண்டாட்ட பொழுதுகளில் உயிரிழப்புக்கு காரணமாக  சொல்லப் படுவதும் மது அருந்தி விட்டு இவைகளில் ஈடுபடுதலே என்பதும் இதன் முடிவாக இருக்கிறது.

புத்தாண்டை கொண்டாடபொதுமக்கள் தயார்... உயிர்கள் பறி போகாதபடி அவர்களை காப்பாற்ற  போலீஸ் தயாரா ? என்ற கேள்வியைத்தான் (அவர்களின்  ஆள் பற்றாக்குறை சோகம் இருந்தும்) நாம் கேட்க வேண்டியுள்ளது.

2014 மே- இறுதி நிலவரமாக தேசிய குற்ற ஆவணக் காப்பகமும், இதர சமூக ஆர்வல குழுமங்களும் அளித்துள்ள  சாலை விபத்தால் உயிரிழப்பு குறித்த ஒரு விபரக் குறிப்பு:

 இந்திய அளவில், சாலை விபத்து : 67,255 ,காயம் மட்டும் : 77,725, இறப்பு : 15,190. நாட்டின் மொத்த விபத்தில் 14.9% தமிழ்நாட்டில்தான் நடக்கிறது.

2013-ம் ஆண்டை விட 2014-ம் ஆண்டு 1.5%  கூடுதலாய் விபத்துகள் நடந்துள்ளன.
உயிரிழப்பில் உ.பி. முதலிடமும், மகாராஷ்டிரா இரண்டாமிடமும், தமிழகத்துக்கு மூன்றாமிடமும் கொடுக்கப் பட்டிருக்கிறது.

டூ.வீலர் மூலம் ஏற்பட்ட விபத்துகள்  26.4%, லாரி, கனரக வாகனங்கள் மூலம் 20.1%, கார்கள் மூலம் 12.1%,  வாகனங்கள் பழுது காரணமாக 2.8%, மோசமான வானிலை காரணமாக, 5.3%, மதுபோதையில் வாகனத்தை இயக்கியதின் காரணமாக 2.6% என்ற அளவில் விபத்துகள் நடந்திருக்கின்றன.

நகர்ப்புறங்களில் 54.7% அளவும், கிராமப் புறங்களில் 45.3% அளவும் விபத்துகள் நடந்துள்ளன. இதில் தேசிய நெடுஞ்சாலைகளில் 5,189, மாநில சாலைகளில் 5,090, விரைவுச் சாலைகளில் 155, பிற சாலைகளில் 4,756 என்ற கணக்கில் உயிரிழப்பு சம்பவங்கள் 2014- மே மாதம் வரையிலான கணக்கில் வருகின்றன.

உலக மக்கள் தொகையில் 17.5% மக்கள் வாழ்கிற இந்தியாவில் சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு மட்டுமல்ல... கடலில், நீர் நிலைகளில், இன்னபிற சூழல்களில் கவனக் குறைவாகவும், போதிய வழிகாட்டல் இல்லாமலும் இறக்கிறவர்களின் எண்ணிக்கை 2020-க்குள் முதல் இருபது இடங்களை பிடிக்கக் கூடும் என்ற கவலை சமூகவியலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

1970-ல் லட்சத்துக்கு 2.7% சதவீதம் (13 பேர்) மட்டுமே  சாலை விபத்தில் உயிரிழந்த நிலை மாறி, 2011-ல் 11.8% உயிரிழப்பும், 42.3% காயமும் என்ற நிலைக்கு சாலை விபத்துகள் எகிறியது. நாட்டிலுள்ள மொத்த வாகனத்தில் 13.9% சதவீதம் தமிழ்நாட்டில் தான் புழக்கத்தில் இருக்கின்றன.

29 Dec 2015

சசிகலாவுக்கு ’நம்பர்-2’ அந்தஸ்து! -வெளியாகிறதா அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

மிழக சட்டசபைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்து கட்சிகளிலும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. கட்சியின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களை நடத்துவதிலும், கூடவே கூட்டணிக்கான ரகசிய தூது விவகாரங்களிலும் அனல் பறக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,  ஆண்டு இறுதியில் (31.12.2015) நடத்தும் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு மீது தனிக்கவனம் விழுந்திருக்கிறது.
சென்னை திருவான்மியூரில், ஶ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழுவை நடத்தவிருக்கிறது. சுமார் 4,500 பேர் ஒரே நேரத்தில்,  எந்தப் பகுதியில் இருந்தும் மேடையில் இருக்கும் ஜெயலலிதாவை பார்க்கும் வகையில் மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான தீவிரப் பணியில் கடந்த மூன்று நாட்களாக, கட்சி அலுவலகப் பொறுப்பாளர் மகாலிங்கம் ஈடுபட்டு வருகிறார்.  ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய அமைச்சர்கள் கொண்ட டீம்,  இதற்கான சூப்பர்வைசிங் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை 'எட்ட' நின்று (மட்டும்) கவனித்து,  ரிப்போர்ட் கொடுக்கும்படி மேலிடம் தரப்பில் சொல்லி விடப்பட்டிருக்கிறதாம்.

2016 தேர்தலுக்கு முன் அ.தி.மு.க எதிர்கொள்ளவிருக்கிற பொதுக்குழு என்பதால், பொதுக்குழுவின் முடிவுகள், தீர்மானங்களின் வடிவங்கள் குறித்த எதிர்பார்ப்பும் உச்சத்தில் இருக்கிறது. 'இந்தப் பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் ஏதேனும் அறிவிப்பாக வர வாய்ப்பு இருக்கிறதா?’ என்று கட்சி வட்டத்தில் விசாரித்தோம்.

'புலி வருது, புலி வருது கதையாக ஒவ்வொரு செயற்குழு, பொதுக்குழுக்களிலும்  ‘உடன்பிறவா சகோதரி’ சசிகலாவுக்கு மிக முக்கியப் பொறுப்பு அளிக்கப்படும் என்கிறார்கள். ஆனால், இந்த முறை அப்படி அது ஹேஷ்யமாக இருக்க வாய்ப்பில்லை. தலைமைக்கு அடுத்த இடத்தில் சசிகலாவை 'அமர' வைக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள் நம்பிக்கையும் உறுதியுமாக!

அப்ப, கட்சிக்குள்ள இரண்டு 'அம்மா'வா..?


அட... இதற்குதான் சீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதித்ததா?

ரும் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ஒரு தம்பதியினர் 2 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என சட்டப்பூர்வமாக அறிவித்திருக்கிறது சீன அரசு. 1978-ம் ஆண்டு முதல் இருந்து வரும் சர்ச்சைக்குரிய 'ஒரு தம்பதி-ஒரு குழந்தை' திட்டத்தை நீக்கியிருப்பது சீன மக்களிடையேயும், மனித உரிமை ஆர்வலர்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இந்த முடிவுக்கு, சீனா வந்தது ஏன்?

திட்டம் பிறந்த கதை

அதைத்தெரிந்து கொள்வதற்கு முன்பு இந்த திட்டத்தின் வரலாற்றையும் கொஞ்சம் அறிய வேண்டியது அவசியம். 1949-ல் மாவோ சீனாவை தன்வசப்படுத்தியபோது, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்ததும் சீனாதான். 50 கோடிக்கும் மேல் இருந்தது அன்றைய சீனாவின் மக்கள் தொகை. அப்போது, இதனை சுமையாகக் கருதாமல், சீனாவின் தனித்துவமான பலமாக கருதியது சீனக்கம்யூனிச கட்சி.
“அதிக மக்கள் தொகை என்பது அதிகமான மக்கள் சக்திக்கு அடையாளம். சுதந்திரமாக செயல்படும் 600 மில்லியன் மக்கள் என்பது, அணுசக்தியை விட பத்தாயிரம் மடங்கு வலிமையானது” என்றார் அன்றைய கம்யூனிச கட்சியின் ஹூ யாபேங். ஆனால் மருத்துவம், விஞ்ஞானம் ஆகியவை வளர, வளர மக்களின் இறப்பு விகிதம் குறையத்துவங்கியது. பிறப்பு விகிதம் சீராக அதிகரித்துக்கொண்டே சென்றது. இதை 1950களிலேயே உணரத்துவங்கியது சீன அரசு. அதிகரிக்கும் மக்கள் தொகை ஒரு வகையில் பிரச்னைதான் என்பதை கண்டுகொண்டது. இதற்கு காரணமாக அன்று அமைந்தது, அப்போது நாட்டில் வந்த வெள்ளம்.  லட்சக்கணக்கான மக்களை வெள்ளம் வெகுவாக பாதிக்க, அதன் பின்பு வந்த உணவுப்பஞ்சம், நாட்டை உலுக்கி எடுத்தது. அதிகமான மக்களுக்கு போதுமான உணவளிக்க முடியாமல் அரசு திணறியது. பின்னரே தனது பெருமைக்கான சுருதியை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்துக்கொண்டு, இதற்கான தீர்வுகளைப்பற்றி சிந்திக்கத் துவங்கியது.

1970களில், இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. உற்பத்தியை விட, நுகர்வோர்களின் எண்ணிக்கை அதிகமானதால் உணவு, உடை, இருப்பிடம் என எல்லாவற்றிலும் பற்றாக்குறை, போட்டி என சிக்கல்கள் உருவாகத் தொடங்கியது. அரசு தலையிட்டு எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த வேண்டிய நிலை வந்தது. 60 கோடியாக இருந்த சீனாவின் மக்கள் தொகை, 80 கோடியை எட்டியது. பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, முதல்கட்டமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, சீன கம்யூனிசக் கட்சி 'Late, Long and Few' என்ற வாசகத்தை பிரபலமாக்கியது. அதாவது தாமதமாக திருமணம் செய்து, குறைவாக குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள். இரண்டு குழந்தைகளுக்கு இடையே நீண்ட இடைவெளி இருக்கட்டும் என மென்மையாக, அறிவுரைகள் வழங்கியது. குழந்தைகள் அதிகம் பெற்றுக்கொள்ளாது இருக்க, குடும்பக்கட்டுப்பாடு முறைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தம்பதிகளை, குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ள ஊக்குவித்தது.

1976-ல் மாவோ மறையவே, ஆட்சிப்பொறுப்பு அப்படியே, டெங் ஜியோபிங்கிடம் வந்தது. சீனாவை பொருளாதார ரீதியாக ஆசியாவில், வல்லரசாக மாற்ற கனவு கொண்டிருந்தார் டெங். அதற்கு ஒவ்வொரு சீனக்குடிமகனும் ஒத்துழைக்க வேண்டுமே? அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமானால், அவர்களது தனி நபர் வருமானம் உயர வேண்டும். அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்க வேண்டும். இதற்கு தடையாக இருப்பது எது என யோசித்தார். அதிகப்படியான குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் குடும்பங்கள், பொருளாதார ரீதியாக வளர்வது கடினம் என்பதோடு, சீனாவின் வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுத்துகின்றனர் என நினைத்தார். மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை குறைக்க விரும்பினார். இதன் விளைவாக 1978-ல் அறிமுகமானது 'ஒரு தம்பதி-ஒரு குழந்தை திட்டம்'.
அன்று முதல் இன்று வரை இருக்கும் திட்டத்தின் வரலாறு இதுதான். இதில் இருந்து சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டும் உள்ளது. நாட்டின் சிறுபான்மையினர் சமூகத்தினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் மிகவும் பின்தங்கியிருக்கும் ஊர்களில், சில இடங்களில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 2008-ல் சிச்சுவான் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு, 70,000 மக்கள் மாண்டனர். 10,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் இதில் அடக்கம். அப்போது பலரும், தங்கள் ஒரே குழந்தையையும் விபத்தில் இழக்க, அவர்களுக்கு மேலும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள, அனுமதி அளிக்கப்பட்டது. இப்படி, கொஞ்சம் கொஞ்சமாக பார்த்து, பார்த்து சலுகைகள் அளித்தது மிகப்பெரிய எதிர்ப்பையும் கிளப்பின. ஆனால், அந்த சலசலப்புக்கு கொஞ்சமும் அஞ்சாமல், கொள்கையில் உறுதியாக நின்றது சீனா.

சலுகைகள் என்ன?

இந்த சட்டத்தை, நாடு முழுக்க கொண்டு சேர்ப்பது சாதாரண விஷயம் அல்ல என்பது அரசுக்கு நன்கு தெரிந்திருந்தது. எனவே இந்த சட்டத்தை பின்பற்றும் தம்பதிகளுக்கு அரசு மானியங்கள், பள்ளி, கல்லூரிகளில் முன்னுரிமை, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வங்கிக் கடன்கள், அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் என அள்ளி அள்ளிக்கொடுத்தது அரசு. அரசு ஊழியர்களின் குழந்தைகள் 14 வயதை எட்டும் வரை, அவர்களுக்கு சம்பளத்துடன் ஊக்கத்தொகையும் அளித்தது. இதே சலுகைகள், தங்கள் திருமணத்தை தள்ளிப்போடும் மக்களுக்கும் அளித்தது சீன அரசு.

இதில் யாருக்கும் பிரச்னைகள் இல்லை. ஆனால், இந்த சட்டத்தை பின்பற்றாத மக்களுக்கு அரசு இழைக்கும் அநீதிகள்தான் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு கடும் அபராதம் விதித்தது. இதை செலுத்த முடியாமல் போகும் பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பு செய்வது, சட்ட உரிமைகளை மறுப்பது போன்றவை மனித உரிமை ஆர்வலர்களின் கோபத்தை தூண்டியது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 1 கோடிக்கும் மேல் கட்டாய கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளன என்பது வேதனையான விஷயம்.

கருப்பு குழந்தைகள்

சீனாவில் மொத்தம் 13 மில்லியன் கருப்பு குழந்தைகள் இருக்கிறார்கள். யார் இவர்கள்? ஒரு தம்பதி- ஒரு குழந்தை திட்டத்தை மீறி பிறக்கும் குழந்தைகளுக்காக அவர்களின் பெற்றோர்கள் அரசுக்கு,  'சமூக பாராமரிப்பு நிதி' எனத் தனியே 5,000 யுவான் கட்டணம் செலுத்த வேண்டும். இது மிகமிக அதிகமான கட்டணம் என்பதால், ஏழைகளால் செலுத்த முடியாது. எனவே, அவர்களின் குழந்தைகள் கருப்புக் குழந்தைகளாக கணக்கில் கொள்ளப்படுவர். ஹூகோ என்பது சீனாவின் குடிமகனாக பதிவு செய்து கொள்ளும் அடிப்படை சட்டநெறிமுறை. இவர்களுக்கு அதில் பதிவு செய்துகொள்ளும் வாய்ப்பு கிடையாது. எனவே, இவர்கள் சீனக்குடியுரிமை பெற முடியாது. மருத்துவமனைகளில் அனுமதி கிடையாது. பள்ளிகளில் சேர முடியாது. பிறப்பு சான்றிதழ் எதுவும் கிடைக்காது என்பதால், வங்கிக்கணக்கு, வேலை என எதுவும் கிடைக்காது. சொந்த வீடு கட்டக்கூட அனுமதி கிடையாது. இப்படி சொந்த நாட்டிலேயே அகதிகளாக, அகதிகளை விட மோசமாக  வாழும் இவர்களின் எண்ணிக்கை மட்டுமே 2010 கணக்கெடுப்பின்படி, 13 மில்லியன். இது போர்ச்சுக்கல் நாட்டின் மக்கள் தொகையை விட அதிகம்.

“நான் இங்குதான் பிறந்தேன். ஆனால், இந்த நாட்டின் குடிமகளுக்குரிய எந்த உரிமையும் எனக்கு கிடையாது. என்னிடம் ஹூகோ இல்லை என்பதால், என்னை சுற்றியுள்ள அனைவரை விடவும் நான் வித்தியாசமானவளாக இருக்கிறேன். நான் நாட்டில் புறக்கணிப்படாத இடங்களே இல்லை. பல நாட்கள் பள்ளிகளின் வெளியே நின்று, பாடம் நடத்துவதை வேடிக்கை பார்த்திருக்கிறேன். ஆனால், பாடம் படிக்கத்தான் முடியாதே...” என்கிறார் 22 வயது பெண்ணான லீ.
இப்படி சீனாவின் கருப்பு குழந்தைகளின் சோக பக்கங்கள் ஏராளமாக இருக்கிறது. தற்போது, நீக்கப்பட்டிருக்கும் இந்த சட்டம் இவர்களுக்குத்தான் வாழ்க்கையின் இன்ப வாசலை திறந்து விட்டிருக்கிறது. இப்படி நிழலில் வாழும் இவர்களை,  சீனக்குடிமக்களாக எந்தவொரு கட்டணமும் இன்றி, பதிந்து கொள்வோம் என அறிவித்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் ஜீ ஜின்பிங். இதன் மூலம் வருங்காலத்தில் எல்லா சட்ட உரிமைகளும் இவர்களுக்கு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.

அப்படி இருந்தும் சீனாவின் மக்கள்தொகை ஏன் குறையவில்லை?

இப்படி இவ்வளவு கடுமையான தண்டனைகள், கட்டுப்பாடுகள் இருந்தும் ஏன் இன்னும் சீனாவே மக்கள் தொகையில் முன்னணியில் இருக்கிறது? இதற்கு காரணம் 1980களிலேயே சீனாவின் மக்கள் தொகை 98 கோடியாக உயர்ந்து விட்டது. அதற்கு பிறகு வந்த கட்டுப்பாடுகளால் மட்டும் கடந்த 38 ஆண்டுகளில் 40 கோடி குழந்தை பிறப்புகளை தடுத்திருந்தாலும், நிலைமை ஏற்கனவே கைமீறிப்போயிருந்தது. இதனால்தான் தற்போது சீனாவின் மக்கள்தொகை 137 கோடியாக இருக்கிறது.

இப்போது ஏன் கொள்கையை தளர்த்துகிறது சீனா?

தற்போது சீனாவில் இருக்கும் முதியோர்களின் எண்ணிக்கை, அதாவது 60 வயது தாண்டியவர்களின் எண்ணிக்கை 21 கோடியை தாண்டியுள்ளது. இது இன்னும் சில வருடங்களில், அதிகமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, முக்கியமாக உழைப்பாளர் சக்திக்கு தேவையான இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடும். பணியாட்கள் பற்றாக்குறை, உற்பத்தி பாதிப்பு ஆகியவை ஏற்படும்.
அடுத்த அடி, பாலின விகிதம். ஒரே ஒரு குழந்தைகள் மட்டுமே, பெற்றுக்கொள்வதால் பெரும்பாலான நகரங்களில் ஆண்-பெண் விகிதத்திலும் பெரிய அளவிலான சமச்சீரற்ற தன்மை உருவாகியிருக்கிறது. இது சமூக பாலின சமத்துவத்தையும் பாதிப்பதால், இந்த பிரச்னையும் முக்கியமானதாக இருக்கிறது. இதனால் வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்திருக்கிறது சீனா. இதன் மூலம் 13 மில்லியன் தம்பதிகள் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள் எனவும் அறிவித்திருக்கிறது. இதன்படி, அடுத்த ஆண்டுகளில் சீனாவின் மக்கள் தொகை இன்னும் அதிகமாகும். தற்போதைய பிறப்பு விகிதத்தை வைத்துக் கணக்கிட்டால், 2035-ல் 146 கோடியாக மக்கள் தொகை உயர்ந்து விடும்.

இது நிச்சயம் வரவேற்கத்தக்கதா?

இல்லை என்கின்றனர் சீனாவின் மனித உரிமை ஆர்வலர்கள். ஒரு தம்பதி-ஒரு குழந்தை என்னும் திட்டம் 'ஒரு தம்பதி- இரு குழந்தை' என்று மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. மூன்றாவதாக பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் சட்ட உரிமைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, ஒரு குழந்தையின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர, வேறு எந்த சுதந்திரமும் இதனால் கிடைக்கவில்லை. ஏனெனில் ஒரு தம்பதியினர் எவ்வளவு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசு எப்படி முடிவு செய்யலாம்? அது அவர்களின் தனிமனித உரிமை அல்லவா? அதைப்போலவே, இவ்வளவு ஆண்டுகள் கழித்து, திருத்தப்பட்டுள்ள இந்த திட்டம் இனி போதும் என நினைத்தால், மீண்டும் பழையபடி, சட்டத்தை மாற்ற அரசுக்கு சில நிமிடங்கள் போதுமே? எனக்கேள்வி எழுப்புகின்றனர் அவர்கள்.

ஆக, இந்த விஷயத்தில் சீனாதான் இன்னும் பல காலம் நம்பர் 1.


என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர்)

மிசாவுக்கு முன்பு தொடங்கியது ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை. ஆனால், அவருக்கு முதல்வர் நாற்காலி கிட்டவில்லை. 1993-ம் ஆண்டில் ஆரம்பித்த வைகோவின் தனி ஆவர்த்தனம், 20 ஆண்டுகளைக் கடந்தும் மணிமுடியை அவருக்குச் சூட்டவில்லை. கட்சி தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. விஜயகாந்த்தின் கோட்டைக் கனவு ‘கானல் நீர்’தான். ‘மக்கள் தலைவர்’ என்கிற அடைமொழிக்காரர் மூப்பனார், பிரதமர் நாற்காலி வரை பேசப்பட்டார். ஆனால், அது அவருக்கு எட்டாக் கனியாகிவிட்டது. இவர்களுக்​கெல்லாம் வாய்க்காத வாய்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு இரண்டு முறை கிடைத்தது. அதற்குப் பெயர்தான் அரசியல்.
அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் இல்லை; கட்சியில் தலைவரோ, பொதுச் செயலாளரோ இல்லை; தொண்டர்கள் ஆதரவு இல்லவே இல்லை; கூட்டத்தைக் கட்டிப்போடும் பேச்சாற்றல் இல்லை; இப்படி ‘இல்லை’கள் என்பதையேத் தகுதியாக வைத்திருந்த 
ஓ.பன்னீர்செல்வத்துக்காக தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலி இரண்டு முறை நகர்த்தி வைக்கப்பட்டது. கட்சியிலும் ஆட்சியிலும் ஜெய​லலிதாவுக்கு அடுத்த இடம். ‘நம்பர் 2’ தகுதிபெற்ற ஓ.பன்னீர்செல்வத்தை, போடிநாயக்கனூர் வாக்காளர்கள் தேர்வு செய்யாமல் போயிருந்தால் இந்த அத்தனையும் சாத்தியமில்லை. போடி மக்களுக்கு அவர் ஆற்றிய கடமைகள் என்ன? ‘என்ன செய்தார் எம்.எல்.ஏ’-வின் முதல் கதாநாயகன், பன்னீர்செல்வம். அவரது போடி தொகுதி பராக்கிரமங்களைப் பார்ப்போம்.
தமிழகத்துக்கு முதலமைச்சரையும், நிதி அமைச்சரையும் தந்த தொகுதி போடி, ஓ.பன்னீர்செல்வத்தின் பாராமுகத்தால் இப்போது தெருக்கோடியில் ஒதுங்கிக் கிடக்கிறது. ‘‘வாரத்துக்கு ஒருமுறை தொகுதிப் பக்கம் வருவார். தொகுதிக்குள் கோயில் கோயிலாக வலம் வருவார். அரசு விழா நடந்தால்  தலைகாட்டுவார். அவரைச் சந்திப்பது சாத்தியமே இல்லை’’ எனப் புலம்புகிறார்கள் போடிக்காரர்கள். இப்படி, பன்னீருக்கு இருக்கும் எதிர்ப்பு கடந்த எம்.பி. தேர்தலிலேயே எதிரொலித்தது. ஓட்டுகேட்டு ரங்கநாதபுரம், கரட்டுப்பட்டி கிராமங்களுக்கு அவர் வந்தபோது கிராமத்துக்குள்விடாமல் தடுக்கப்பட்டார். பொட்டிபுரம் ஏரியாவில்தான் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப் போகிறார்கள். இது போடி தொகுதிக்குள்​தான் வருகிறது. தேனி மாவட்டத்தையே உலுக்கி எடுத்த பிரச்னை பூதாகரமாக வெடித்தது. ஓ.பன்னீர்​செல்வம் கண்டுகொள்ளவே இல்லை. இதுவரை ஒருமுறைகூட நியூட்ரினோ அமையவிருக்கும் கிராமத்துக்குச் செல்லவில்லை. போராடிய மக்களைச் சந்திக்கவில்லை.
மூடப்பட்ட மதுரை - போடி ரயில் பாதை!
1928-ம் ஆண்டில் இருந்து மதுரை - போடி இடையே ஓடிக்கொண்டிருந்த ரயில் சேவை 2011-ல் பயணத்தை நிறுத்திக்கொண்டது. பயணிகளுக்கு மட்டுமல்லாது, போடி ஏரியாவில் உற்பத்தியாகும் ஏலக்காய் உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை ரயிலில் கொண்டு செல்ல முடிந்தது. ‘92 கி.மீ தூர மீட்டர்கேஜ் பாதையை மாற்றிவிட்டு 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அகல ரயில் பாதை அமைக்கப்படும்’ என 2009 - 2010-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்ததால் ரயில் சேவை நிறுத்தப்பட்டு பாதையும் அகற்றப்பட்டது. அதன்பிறகு நிதி ஒதுக்கீடு இல்லாததால் திட்டம் அப்படியே முடங்கிப்போனது. கடந்த 4 ஆண்டுகளில் மொத்தமே 17 கோடி ஒதுக்கினார்கள். ரூ.270 கோடியாக இருந்த திட்ட மதிப்பீடு 302 கோடியாக உயர்ந்ததுதான் மிச்சம். திட்டத்தை நிறைவேற்றச் சொல்லி அனைத்துத் தரப்பினரும் போராட்டங்கள் நடத்தியதால் 2015 - 16 ரயில்வே பட்ஜெட்டில் வெறும், 10 லட்சம் ரூபாய் ஒதுக்கினார்கள். கம்பம், குமுளி, போடிநாயக்கனூர் ஏரியாக்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு சுமார் 240 கோடி ரூபாய் அளவுக்கு விவசாய உற்பத்திப் பொருட்கள் மற்றும் சரக்குகள் சாலை மார்க்கமாக அனுப்பப்பட்டு வருகிறது. திட்டம் நிறைவேற்றினால், பயணிகள் போக்குவரத்து மூலமாக மட்டுமே சுமார் 700 கோடி ரூபாய் ரயில்வே துறைக்கு வருவாய் கிடைக்கும்.
ஓ.பன்னீர்செல்வம், இந்தப் பிரச்னையை காதில்கூட வாங்கிக்கொள்ளவில்லை என்பதற்கு உதாரணம் இது. ஓ.பி. முதல்வராக இருந்தபோது ரயில்வே அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் மதுரை - போடி அகல ரயில்பாதைத் திட்டத்தைப் பற்றி குறிப்பிடவே இல்லை. ‘போடிநாயக்கனூர்-கோட்டயம் இடையே மட்டுமே புதிய பாதை தேவை’ என்று மட்டுமே சொன்னார். ஏற்கெனவே இருந்த பாதையைப் பறிக்கொடுத்துவிட்டு நிற்கும் போடிக்காரர்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது ஏகக் கொதிப்பில் இருக்கிறார்கள். எம்.பி. தேர்தல் பிரசாரத்தில் பேசிய ஜெயலலிதா, “ரயில் பாதை அமைப்பதற்குத் தேவையான நிதியை ஒரே தவணையில் ஒதுக்குவேன்” என முழங்கிவிட்டுப் போனது ‘புஸ்வாணம்தான்.
டாப் ஸ்டேஷன்!
போடி அருகே மலைப் பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா இடமாகக் காட்சி அளிக்கிறது டாப் ஸ்டேஷன். போடியில் இருந்து குரங்கணி வரையில் செல்ல சாலை வசதி இருக்கிறது. குரங்கணியில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் டாப் ஸ்டேஷனுக்குப் போக  சாலை கிடையாது. மலைப்பாதையில் நடந்துதான் செல்ல வேண்டும். இங்கே போக வேண்டும் என்றால், 115 கிலோ மீட்டர் தூரம் கடந்து கேரளா மூணாறு வழியாகத்தான் செல்ல முடியும். ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆகும். டாப் ஸ்டேஷன் தமிழகத்தில் இருந்தும் அங்கு செல்ல முடியவில்லை. ‘டாப் ஸ்டேஷன், குரங்கணி இரண்டும் சுற்றுலாத்தலமாக்கப்படும்’ என போடி பிரசாரத்தில் ஜெயலலிதா சொன்னார். பன்னீர்செல்வமும் ‘மூணாறைப்போல டாப் ஸ்டேஷனும் சுற்றுலாத்தலமாக்கப்​படும்’ என்றார். வாக்குறுதிகள் பஞ்ச​ராகிக் கிடக்கின்றன.
தேவாரம் டூ சாக்குலூத்து மெட்டு!
போடி தொகுதிக்குட்பட்ட மக்கள், கேரளாவில் தோட்டத் தொழிலுக்குப் போகிறார்கள். தேவாரத்தில் இருந்து போடி வந்து அங்கிருந்து போடி மெட்டு வழியாக சாக்குலூத்து மெட்டுக்குப் போய் வருகிறார்கள். சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தப் பாதையில் ஜீப்பில் போய் வர மூன்று மணி நேரத்துக்கு மேல் ஆகும். தேவாரத்தில் இருந்து சாக்குலூத்து மெட்டுக்குப் போவதற்கு வெறும் 10 கிலோ மீட்டர்தான். அரைமணி நேரத்தில் போய்​விடலாம். ஆனால், பாதை இருந்தும் ரோடு வசதி இல்லை. சாக்குலூத்து மெட்டு சாலை என்பது பல ஆண்டு கோரிகை.  ‘சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி கொடுத்தார் பன்னீர். ஆட்சி முடியப் போகிறது திட்டம் கிடப்பில்தான் இருக்கிறது. ‘‘கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் சாலை அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. இரண்டு கோடி செலவில் ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்றன. அப்போது எம்.எல்.ஏ-வாக இருந்த லட்சுமணன் முயற்சிகள் எடுத்தார். ஆட்சி மாற்றம் நடந்த பிறகு வனத்துறை அனுமதி பெறுவதில் தொடர்ச்சியான அணுகுமுறை இல்லாததால், பணிகள் கைவிடப்பட்டன. மத்திய அரசிடம் அனுமதிபெறக்கூட பன்னீர்செல்வம் அக்கறை காட்டவில்லை. சாலை அமைக்கப்பட்டால் தொழிலாளர்களுக்கு வசதி கிடைப்பதோடு, இங்கே விளையும் காய்கறிகளை கேரளாவுக்குக் குறைந்த செலவில் கொண்டு செல்ல முடியும். ஆனால் ‘சாலை அமைக்கப்படும்’ என சொல்லிக்கொண்டே இருக்கிறார். இன்னும் எத்தனை காலத்துக்கு மக்களை ஏமாற்றுவார் எனத் தெரியவில்லை’’ என்றார்கள் கேரளாவுக்குச் செல்லும் தொழிலாளர்கள்.
18-ம் கால்வாய்!
விவசாய ஆதாரமாக இருந்துவரும் 18-ம் கால்வாய் திட்டம் தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதன் திட்டப்பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை. ‘அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் 18-ம் கால்வாய் திட்டப்பணிகள் முழுமை அடைய நடவடிக்கை எடுக்கப்படும்’ என பன்னீர் வாக்குறுதி கொடுத்தார். அமைச்சர் ஆனதும், சுத்தகங்க ஓடையிலிருந்து கொட்டக்குடி வரைக்கும் திட்டத்தை நீட்டிக்க ரூ.51.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகச் சொன்னார். ஆனால், சர்வே பணிகள் மட்டுமே நடந்தன. போடியில்  பிரதான விவசாயம் மா சாகுபடி. பிரசாரத்துக்கு வந்த ஜெயலலிதா ‘மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை, பழுக்கவைக்கும் கூடம் மற்றும் குளிர்பதனக் கிடங்கு ஆகியவை நிறுவப்படும்’ என வாக்குறுதி தந்தார். அது காற்றில் பறக்கிறது. ‘தொகுதி முழுவதும் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும்’ எனச் சொன்னார். மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மட்டும் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் நடந்திருக்கின்றன. பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தும் போடியில் குளங்கள் போதிய அளவில் தூர்வாரப்படவில்லை’’ என்கிறார்கள் தொகுதிவாசிகள். “‘பி.டி.ஆர். தந்தை பெரியார் வாய்க்கால் ஆயக்கட்டில்’ உள்ள பதிவு பெற்றுள்ள 5,146 ஏக்கர் நிலங்களுக்கு இருபோக நீர்ப்பாசன வசதி செய்து தரப்படும்” என போடியில் பிரசாரத்தில் சொன்னார் ஜெயலலிதா. இதே கோரிக்கையை பன்னீரும் தந்தார். நிறைவேறவில்லை.
பன்னீர் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை ‘அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்’. ஓட்டு அருவாளை வாக்குச்சாவடிக்கு எடுத்து போகத் தயாராகிவிட்டார்கள் போடிக்காரர்கள்.

இது போடி மனசு!
தொகுதியை வலம் வந்ததோடு தொகுதி முழுவதும் சர்வே ஒன்றை நடத்தினோம். மொத்தம் 950 பேர்களை சந்தித்து எடுக்கப்பட்ட சர்வேயின் முடிவு இங்கே.

பிளஸ்... மைனஸ்!
‘அரசு பொறியியல் கல்லூரியைக் கொண்டு வருவேன்’ என்கிற வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார். போடி பரமசிவன் கோயிலைச் சுற்றி கிரிவலப் பாதை அமைத்திருக்கிறார். போடி அரசு மருத்துவமனையை நவீனப்படுத்தும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. டாக்டர்கள் பற்றாக்குறையைப் போக்க பிரசவ வார்டு கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்கிறது. பாதாளச் சாக்கடைத் திட்டம் மெதுவாக நடைபெற்று வருகிறது. கூட்டுறவுத் துறையில் சேமிப்புக் கிடங்குகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறார். பாதாளச் சாக்கடை நீரைச் சுத்திகரிப்பதற்கு மேல சொக்கநாதபுரத்தில் தி.மு.க ஆட்சியில் இடம் ஒதுக்கப்பட்டது. நின்றுபோன அந்தத் திட்டத்தை 70 கோடி ரூபாய் செலவில் மீண்டும் தொடங்கியிருக்கிறார்.

தம்பி ராஜாவால் ஓ.பி-யின் பெயர் ரிப்பேர் ஆகி இருக்கிறது. ‘‘ஓ.பி. ஊரில் இல்லாத நேரத்தில் தேனி மாவட்டத்தின் நிழல் மந்திரி ராஜாதான்’’ எனச் சொல்கிறார்கள். தலித் பூசாரி தற்கொலை உட்பட ராஜாவின் பெயர் தொடர்ந்து மீடியாவில் அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

எம்.எல்.ஏ. ஆபீஸ் ரெஸ்பான்ஸ் எப்படி?
தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகத்தை ஓ.பி.எஸ் பயன்படுத்தவில்லை. தென்றல் நகரில் இருக்கும் அந்த அலுவலகம் புதர்மண்டி கிடக்கிறது. அங்கே தப்பான விஷயங்கள் நடப்பதாக ஏரியாவில் இருப்பவர்கள் புலம்புகிறார்கள். சுப்புராஜ் நகரில் தனியாக வீடு பிடித்து அதில்தான் எம்.எல்.ஏ அலுவலகத்தை அமைத்திருக்கிறார் பன்னீர். அதன் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை சோதித்தோம். தொகுதிவாசியாக வேடம் போட்டு பட்டா வழங்க அனுமதிகோரி வீட்டுவரி ரசீது, ரேஷன் கார்டு ஆவணங்களோடு எம்.எல்.ஏ அலுவலகத்தில் மனுக் கொடுத்தபோது அங்கே இருப்பவர்கள் ‘சனிக்கிழமை அமைச்சர் வருவார். அவரிடம் நேரடியாக மனுக் கொடுங்கள்’’ என வாங்க மறுத்தார்கள். அந்த அலுவலகத்தில் பணியாற்றும் குணசேகரனிடம் சனிக்கிழமை தொடர்பு கொண்டபோது ‘‘சனிக்கிழமை அரசு விழாக்களில் அமைச்சர் கலந்துகொள்கிறார். ஞாயிற்றுக்கிழமை வாருங்கள்’’ என்றார். ஞாயிற்றுக்கிழமை அழைத்தோம். ‘அவசரம் என்றால் பெரியகுளத்துக்குப் போங்கள்’ என இணைப்பைத் துண்டித்தார். வாக்காளர்களுக்கு பன்னீர் அலுவலகத்தில் கிடைக்கும் ரெஸ்பான்ஸுக்கு இது சாம்பிள்.
ஓ.பன்னீர்செல்வம் ரியாக்‌ஷன் என்ன?
தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், பணிகள் என்ன என்பதை அறிய எம்.எல்.ஏ அலுவலக அலுவலர் குணசேகரனிடம் விவரங்கள் கேட்டபோது, அமைச்சரின் பெர்சனல் பி.ஏ ரமேஷிடம் கேட்கச் சொன்னார். ரமேஷிடம் கேட்டபோது, ‘‘உங்க பத்திரிகையில் என்ன எழுதுவீங்கனு தெரியும்’’ என்றவர், ‘‘திட்டங்கள் குறித்தத் தகவல்களை பி.ஆர்.ஓ அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுங்கள்’’ எனச் சொன்னார். பி.ஆர்.ஓ அலுவலகத்தில் கேட்டோம். ‘‘தனியாக ஒரு தொகுதிக்கு மட்டுமே திட்டப் பணிகளை நாங்கள் எடுத்துவைப்பதில்லை’’ என்றார்கள்.
மீண்டும் ரமேஷிடம் பேச முயன்றும் அவர் போனை எடுக்கவே இல்லை.