சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Mar 2015

அடேங்கப்பா கரன்சிகள்...ஆடம்பர பவனிகள்...வளைக்கப்பட்ட அமைச்சர் பி.ஏ.க்கள்!

திகபட்சமான பணப் புழக்கம்...ஆடம்பரம்...உயர் ரக கார்களில் பவனி..இப்படி இருப்பவர்கள் மீது எப்போதுமே அதிகார வர்க்கம் ஒரு கண் வைத்திருக்கும். இதை உணர்ந்தவர்கள் முன்னே எப்போதும் எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டே இருக்கும். உணர மறுப்பவர்கள் ஆராய்ச்சி மணியின் அலறலில் நிச்சயம் அகப்பட்டுக் கொள்வார்கள்.

நாட்டில் ரெண்டாவது வகையறாக்கள்தான் அதிகம் என்பது சமீப கால செய்திகள் சொல்லும் பளிச் உண்மை.

தமிழகத்தின் அமைச்சர்கள் குறித்து எப்போதுமே சர்ச்சைகளுக்கும் புகார்களுக்கும் பஞ்சமில்லை. பஞ்சம் வராமலும் பார்த்துக்கொள்வதில் சிலபேர் தனி இலாகா வைத்தே செயல்படுகிறார்களோ என்றும் எண்ணவைத்து விடுகிறார்கள்.
அதிமுக ஆட்சிக்கு வந்த 2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலேயே சிவபதி, கோகுல இந்திரா, உதயகுமார், செந்தில் பாலாஜி உள்ளிட்ட  பல அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் எழுந்தன.
அவை அதிமுக தலைமை கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு சிலரின் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. பின்னர் சிலர் மீண்டும் வேறு துறைக்கு மாற்றப்பட்டு அமைச்சர்களாக ஆக்கப்பட்டார்கள்.

ஆனால் அடுத்து வந்த சில மாதங்களிலும் இந்தக் கதைதான் தொடர்ந்தது. வைகைச் செல்வன்,சபாநாயகராக இருந்த ஜெயக்குமார்,முனுசாமி உள்ளிட்டோரின் பதவிகள் காலியானதும் ஊழல் மற்றும் தலைமைக்கு விசுவாசமாக இல்லை என்பதாலேயே.
இந்த காரணங்களால் இது வரை 6 முறை அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டும், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் தண்டனை பெற்ற  காரணத்தால் முதல்வர் பதவியிலும் மாற்றம் கண்டு ஓடிக் கொண்டு இருக்கிறது அதிமுக ஆட்சி சக்கரம்.

இந்த நிலையில் அண்மைக்காலமாக அமைச்சர்களின் பி.ஏ.க்கள் அதிமுக தலைமையின் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது கோட்டை வட்டாரத்தில் கிலியை உண்டாக்கி இருக்கிறது. இதன் கூடவே, கடந்த சிலவாரங்களாக கண்காணிப்பு வளையத்தில் சிக்கிய சில அமைச்சர்களின் உதவியாளர்களிடமிருந்து `கோடிகள் ` கைப்பற்றப்பட்டுள்ள தகவலும் சேர்ந்து பரவி வருவது உண்மையிலேயே சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களின் தூக்கத்தைப் பறித்து இருக்கிறது.

இந்த முறை போயஸ் கார்டன் கவனம் முழுக்க பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் குவிந்துள்ளதால் அமைச்சர்கள் காட்டில் `அடை மழைதான்`. அதிலும் பள்ளிக்கல்வி துறை, உயர்கல்வித்துறை, போக்குவரத்து துறை என்று முக்கிய அமைச்சர்களின் உதவியாளர்கள் ஆடும் பணவேட்டை கார்டனின் கவனத்தில்பட்டுள்ளது. உண்மையறிந்த கார்டன் வட்டாரம் கடுப்பாகி விசாரணையை தொடங்கி உள்ளது.

முதல் கட்ட விசாரணையிலேயே `சிலர்` கணக்குகளை காட்டியுள்ளனர். அதில் காணப்பட்ட `எண்கள்` கார்டனுக்கு மயக்கத்தையே வரவைத்து விட்டது என்று கோட்டை வட்டாரத்தில் தகவல்கள் றெக்கைக்  கட்டி  பறக்கின்றன.
போக்குவரத்து அமைச்சரின் நிழலான ` தனி` உதவியாளிரிடம் இரண்டு இலக்க கோடிகளும், முக்கிய ஆவணங்களும் கார்டனின் ரகசிய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதே போல உயர்கல்வித்துறை அமைச்சர் உதவியாளர் ஒருவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், மூன்று இலக்க கோடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் கிறுகிறுத்துப் போன போயஸ் கார்டன் வட்டாரம், இருதரப்புக்கும் விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்குரிய நபர்களையே அமைச்சர்களின் உதவியாளர்களாக அமர்த்த வேண்டும்  என்று அமைச்சர்களுக்கு `ரகசிய உத்தரவு` பிறப்பிக்க வேண்டும் என்று சசிகலாவிடம் தெரிவித்துள்ளதாக  கூறப்படுகிறது.

இந்நிலையில், மீதமுள்ள அமைச்சர்களின் உதவியாளர்களும் கார்டனின் விசாரணை  வளையத்திற்குள்   கொண்டுவரப்பட்டுள்ளனர். 
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கான சில 'முன்னேற்பாடுகளுக்கான' நோக்கிலேயே இந்த அதிரடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. 

இதனையடுத்து முதன்மை அமைச்சர்கள் தவிர மற்ற அமைச்சர்களும், அவர்களின் தனி உதவியாளர்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளில் அன்றாடம் தொடர்புடையவர்கள் என்று  அனைவரும் தொடர் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது.



No comments:

Post a Comment