சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Mar 2015

சிங்கத்தை பிடரியில் அடித்து வீழ்த்தியது வங்கதேசம்

'தி லயன்ஸ்' என்று செல்லப்பெயர் கொண்ட இங்கிலாந்து அணியை பிடரியில் அடித்து வீழ்த்திய வங்கதேசம் உலகக் கோப்பை போட்டியின் காலிறுதி சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்தது.
இந்த ஆட்டம் இங்கிலாந்துக்கு வாழ்வா சாவா? ஆட்டமாக இருந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தால் வங்கதேச அணி காலிறுதிக்கு முன்னேறி விடும் என்ற நிலையும் இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

வங்க தேச அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இக்பாலும் இம்ருல் கயாசும் களமிறங்கினர். வங்க தேச அணி 3 ரன்கள் எட்டிய போது இம்ருல் கயாஸ் அவுட் ஆனார். 2 ரன்களே எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்தில் ஜோர்டானிடம் அவர் பிடி கொடுத்தார். அடுத்து சவும்யா சர்க்கார் களமிறங்கினார். இந்த ஜோடியும் நிலைத்து ஆடவில்லை. 2 ரனகள் எடுத்த நிலையில் தமிம் இக்பாலும் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டையும் ஆண்டர்சனே கைப்பற்றினார்.
ஆனால் அடுத்து ஜோடி சேர்ந்த சவும்யா சர்க்கார் மக்மதுல்லா ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. சவும்யா சர்க்கார் 40 ரன்களில் அவுட் ஆனாலும் மக்மதுல்லா அதிரடியை தொடர்ந்தார். 131 பந்துகளை சந்தித்த மக்மதுல்லா 2 சிக்சர் 7 பவுண்டரிகளுடன் சதத்தை பூர்த்தி செய்தார். உலகக் கோப்பை போட்டியில் வங்காளதேச அணி வீரர் அடித்த முதல் சதம் இதுவாகும்.
தொடர்ந்து களமிறங்கிய 77 பந்துகளில் 88 ரன்களை  அதிரடியாக  ஆடி குவித்தார். இதனால் வங்க தேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 272 என்ற கவுரமான ஸ்கோரை எட்டியது.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதலில் நிதானமாக ரன்களை சேர்த்தது. மொயின் அலி 19 ரன்களும், இயார்ன் பெல் 63 ரன்களும் எடுத்தனர். ஹேல்ஸ் 27 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். ஜோ ரூட்டுக்கு கேப்டன் மோர்கன் கைகொடுப்பார் என்று எதிர்பார்த்தால் அவரோ பொசுக்கென்று டக் அவுட்டனார். பின்னர் வந்த டெயிலரும் 3 ரன்களில் வெளியேறிவிட இங்கிலாந்து அணி தோல்வியை நோக்கி செல்லத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் 132 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தவித்தது.
பின்னர் ஜோ ரூட்டும் பட்லரும் இணைந்து குருவி சேர்ப்பது போல் ரன்களை சேகரித்தனர். எனினும் ஜோருட் 27 ரன்களில் மோர்டாசா பந்துவீச்சில் வீழ்ந்தார். இதனைத் தொடர்ந்து வந்த பட்லரும், வோகசும் அதிரடியாக விளையாடினர். இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் நிலையும் உருவானது. இந்த சமயத்தில் தேவையில்லாமல் தஷ்கின் அகமது பந்தை தொட்டு விக்கெட் கீப்பரிடம் பிடி கொடுத்து அவுட் ஆனார் பட்லர்.
தொடர்ந்து வந்த ஜோர்டான் பரிதாபமான முறையில் ரன்அவுட் ஆனார். வோகஸ் கடைசி வரை போராடினாலும் வெற்றிக்கு தேவையான ரன்களை இங்கிலாந்து அணியால் எட்ட முடியவில்லை. 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்களையே எடுத்தது. இதனால் வங்கதேச அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

வங்கதேச அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 7 புள்ளிகளை பெற்றுள்ளது. அதேவேளையில் இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் இருந்து 2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. அடுத்த ஆட்டத்தில் வங்கதேச அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து அணி கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்கிறது. அந்த போட்டி முடிந்தவுடன் ஆப்கானிஸ்தானையும் கூட்டிக் கொண்டு இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை விட்டு வெளியேற வேண்டியதுதான். 


No comments:

Post a Comment