சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

13 Mar 2015

மறைக்கப்பட்டதா அதிகாரிகள் மரணங்கள்?

முத்துக்குமாரசாமிக்கு முன்பு...
நெல்லை வேளாண் உதவி செயற்பொறியாளரான முத்துக்குமாரசாமியின் தற்கொலை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை காரணமாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கட்சி பொறுப்புகள் காலியானதுடன் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி, முத்துக்குமாரசாமியின் தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டதால், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் அரண்டு போயிருக்கிறார்கள். முத்துக்குமாரசாமிக்கு முன்பாக நெல்லையில் இரண்டு அரசு அதிகாரிகள் மரணம் அடைந்தனர். அவர்களின் மரணங்களிலும் சர்ச்சைகளும் சந்தேகங்களும் மர்மங்களும் புதைந்து கிடக்கின்றன. அந்த மரணங்களுக்கும் யார் காரணம் என்பது இன்று வரையில் கண்டுபிடிக்கப்படவே இல்லை.

மரணம் - 1
ரயிலில் பாய்ந்த தாசில்தார் தியாகராஜன்!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தாசில்தாராகப் பணியாற்றியவர் தியாகராஜன். கடந்த 2011 டிசம்பர் 24-ம் தேதி தச்சநல்லூர் ரயில்வே கேட் அருகே (முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்ட இடம்) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்துக்கும் அதிகாரிகளின் டார்ச்சரே காரணம் என்பது குற்றச்சாட்டு.
நெல்லை என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவரான தியாகராஜன், அம்பாசமுத்திரம் தாசில்தாராகப் பணியாற்றி வந்தார். விதிமுறைகளுக்கு மாறாக எதையும் செய்ய மாட்டேன் என்பதில் அவர் கறாராக இருந்துள்ளார். அதனால் அவருக்கு, உயர் அதிகாரிகள் சிலரும் அரசியல் புள்ளிகளும் நெருக்கடிகளைக் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், தமிழக நில நிர்வாக ஆணையராக இருந்த ஓர் அதிகாரி நெல்லைக்கு வந்துள்ளார். அவரிடம் தாசில்தார் தியாகராஜன் பற்றி தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த அதிகாரி, தியாகராஜன் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார். அதன் பிறகு அவருக்கு தொடர்ச்சியாக நிறைய மனஉளைச்சல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஒருநாள், தச்சநல்லூர் ரயில்வே கேட் அருகில் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார் தியாகராஜன். அவரது மரணத்துக்கு அதிகாரிகளே காரணம் என அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அவருக்கு டார்ச்சர் கொடுத்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. தாசில்தார் தியாகராஜன் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.
மரணம் - 2
காரில் பிணமாகக் கிடந்த பொறியாளர் ராஜேந்திரன்!
நெல்லை மாநகராட்சியில் பணியாற்றி வந்தவர், உதவிப் பொறியாளர் ராஜேந்திரன். கடந்த 2013 நவம்பர் 28-ம் தேதி காருக்குள்ளே கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுக் கிடந்தார். நெல்லை மாநகராட்சிக்கான புதிய கட்டடப் பணிகளை ஆய்வு செய்யும் பணியில் இவர் இருந்தார். கட்டுமானத்தில் சில காண்ட்ராக்டர்கள் முறைகேடு செய்ததைக் கண்டுபிடித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார். இதனால், ஓரிரு காண்ட்ராக்டர்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அந்த சமயத்தில் இவரிடம் சிலர் பேரம் பேச முயன்றுள்ளனர். ஆனால், அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டாராம். இந்த நிலையில், வீட்டுக்கு அருகில் இரவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்து விட்டு சென்றுள்ளார். ஆனால், அவர் வீட்டுக்குச் செல்லவில்லை. அவரது கார் குற்றாலம் அருகே நின்று கொண்டிருந்தது.
அதிகாலையில் வாக்கிங் சென்றவர்கள் அந்தப் பகுதியில் ஒரு காரின் எஞ்சின் ஓடிக்கொண்டே இருப்பதைக் கவனித்துள்ளனர். நீண்ட நேரமாக நின்றதால் உள்ளே பார்த்தபோது டிரைவர் சீட்டில் உதவிப் பொறியாளர் ராஜேந்திரன் அமர்ந்த நிலையிலேயே பிணமாகக் கிடந்துள்ளார். அவரது கழுத்தில் நைலான் கயிற்றால் இறுக்கிய தடம் காணப்பட்டு உள்ளது. பேன்ட்டிலும் காலிலும் முட்கள் கிழித்த அடையாளங்களும் இருந்துள்ளன. அவரை ஏதோ ஒரு கும்பல் கடத்தி வந்து கொலை செய்துவிட்டு அந்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளது.
இந்த சம்பவத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதே தவிர, கொலையாளிகள் இதுவரை பிடிக்கப்படவில்லை. அவரது காரை கூட குடும்பத்தினரிடம் கொடுக்காமல் காவல் துறையினர் இழுத்தடித்து வருகின்றனர்.
தியாகராஜன், ராஜேந்திரன் வழக்கு​களைப் போல முத்துக்குமாரசாமியின் மரண வழக்கையும் முடக்கிப் போடுவதற்கு முடிவு செய்யப்பட்டு இருந்ததாம். ஆனால், பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் களத்தில் குதித்தன. தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம், நெல்லை சுதேசி மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகள் முத்துக்குமாரசாமியின் மரணத்துக்கு நியாயம் கேட்டன.
சுதேசி மக்கள் இயக்கத்தின் கூட்டத்தில், 'முத்துக்குமாரசாமியை நேரடியாகவும் மறைமுகமாகவும் தற்கொலைக்குத் தூண்டிய அனைவர் மீதும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ''முத்துக்குமாரசாமியின் மரணத்துக்குக் காரணமாக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும். முத்துக்குமாரசாமியுடன் பேசிய அதிகாரிகள், அமைச்சரின் உதவியாளர்கள் உள்ளிட்டோரின் பட்டியல் என்னிடம் இருக்கிறது. அவர் தற்கொலை செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து தொடர்ந்து டார்ச்சர் செய்தவர்கள் யார் என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசு நியாயத்துடன் நடந்துகொள்ளாவிட்டால் அந்தப் பட்டியலை வெளியிடுவேன்' என எச்சரிக்கை விடுத்தார்.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏவான வேல்துரை, 'முத்துக்குமார​சாமிக்குக் குடும்பத்தில் எந்த நெருக்கடியும் கிடையாது. அலுவலகம் செல்வதாகக் கிளம்பி வந்த அவரை யாரோ தொடர்ந்து தொடர்புகொண்டு பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார்கள். அவரது மரணத்துக்குக் காரணமான நபர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து கைதுசெய்ய வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்'' என வலியுறுத்தினார்.
ராகுல் ரத்ததான கழகத்தைச் சேர்ந்தவரும் சமூக ஆர்வலருமான வழக்கறிஞர் பிரம்மா நம்மிடம் பேசுகையில், ''முத்துக்குமாரசாமியின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதற்கு யார் காரணம் என்பதைக் காவல் துறை கண்டுபிடிக்க வேண்டும். அவரது மரணம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில கேள்விகளைக் கேட்டுள்ளேன். அதன் பதில் கிடைத்ததும் பொதுநல வழக்குத் தொடர உள்ளேன்' என்றார் ஆவேசமாக.
அதிகாரிகள் நிம்மதியாகப் பணியாற்றும் நிலை ஏற்பட வேண்டும்.


கோடிக்கணக்கில் மோசடி!
தமிழ்நாடு வேளாண்மைத் துறையில் நிறைய மோசடிகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன. அப்பாவி விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய மானியத்திலும் கைவைத்து விடுகிறார்களாம், உள்ளூர் அதிகாரிகள் சிலர். இதில் மேலதிகாரிகளுக்கு உரிய பங்குத்தொகை போய் சேர்வதாகவும் சொல்லப்படுகிறது. விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டம் ஒன்றில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் மோசடி நடந்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபற்றி நம்மிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட சமூக வளர்ச்சிக்கான தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு செயலாளர் காந்திமதிநாதன், ''பின்தங்கிய விவசாயப் பகுதிகளை மேம்படுத்த தமிழக அரசின் சார்பில் நீர்வழிப்பகுதி மேம்பாட்டு முகமை என்கிற அமைப்பு செயல்பட்டு வருகிறது. வறட்சிக்கு இலக்காகும் பகுதிகளில் இந்த முகமையின் சார்பில் விவசாயிகளுக்கு கசிவுநீர் குட்டைகள் அமைத்துத் தரப்படும். இதற்காக மிகவும் வறட்சியான பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு அந்தப் பகுதி விவசாயிகளுக்கு முதல்கட்டமாக திறன் வளர் பயிற்சி நடத்தப்படும். இந்தத் திட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் பல லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கணக்குப் போட்டுப் பார்த்தால் தலை சுற்றுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போகிறேன்' என்றார்.



No comments:

Post a Comment