பாஷா, டப்ளின், பிளெண்ட் போன்ற சென்னையின் நட்சத்திர ஹோட்டல் பப்கள் மட்டும் அல்ல... நீலாங்கரை தொடங்கி மகாபலிபுரம் வரை தமிழகத் தலைநகரில் எங்கே பார்ட்டி நடந்தாலும், அங்கே இவர்களை நீங்கள் பார்க்கலாம். சாம் பால், லக்ஷ்மண பிரபு, மனோஜ் பெனோ, பிரியா மணிகண்டன். வருடம் முழுக்க களைகட்டும் பார்ட்டிகளில் சிம்பு, ஆர்யா, நயன்தாரா, த்ரிஷா, ஆண்ட்ரியா என இவர்களுடன் அன்பு முத்தங்களைப் பகிர்ந்துகொள்ளாத சினிமா பிரபலங்களே இல்லை எனலாம்.
பார்ட்டி ஃபீவர் உச்சத்தில் இருக்கும் ஒரு சனிக்கிழமை மாலை இவர்களைச் சந்தித்தேன்.
''பேட்டியை சீக்கிரம் முடிச்சிடுவீங்கள்ல... இன்னைக்கு, குஷ்பு கல்யாண நாள் பார்ட்டி. அப்புறம் இன்னொரு பிசினஸ் பார்ட்டி. இன்னைக்கு ராத்திரி முழுக்க செம டைட்'' என ஆரம்பத்திலேயே அவசரப்படுத்தினார்கள்.
இவர்களில் சாம் பால், இரண்டு பொறியியல் கல்லூரிகளையும் சென்னையில் பல ஸ்டைலிஷ் உணவகங்களையும் நடத்திவருகிறார். லக்ஷ்மண பிரபு, திண்டுக்கல்லில் ஒரு பொறியியல் கல்லூரியை நடத்துவதோடு சென்னையிலும் பல நிறுவனங்களை நடத்திவருகிறார். மருத்துவரான மனோஜ் பெனோ சென்னையின் பிரபல பில்ராத் மருத்துவமனையின் இயக்குநர். பார்ட்டி பிரபலங்கள் மத்தியில் 'அக்கா’ எனச் செல்லமாகக் கொஞ்சப்படும் பிரியா மணிகண்டன், சினிமாவில் ஆடை வடிவமைப்பாளர்; ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மனைவி.
''அதெப்படிங்க... சென்னையில எங்கே பார்ட்டி நடந்தாலும் உங்களைப் பார்க்காமல் இருக்க முடியலை. அவங்களே கூப்பிடுவாங்களா... இல்லை நீங்களே போயிடுவீங்களா?'' - முதல் கேள்விக்கே மொபைல் சீண்டல்களில் இருந்து கலைந்தார்கள்.
''ஹேய்... கூப்பிட்டுவெச்சுக் கலாய்க்கிறீங்களா? ராத்திரி 8 மணிக்கு மேல அந்த இரவு எங்க கையில இல்லை. பிறந்த நாள், திருமண நாள், பட ரிலீஸ், படத்தோட வெற்றி, கடைத் திறப்பு விழா... இன்னும் வெளியே சொல்ல முடியாத பல காரணங்களுக்காக பார்ட்டி நடக்கும். இதுல நாங்க நடத்துற பார்ட்டியே நிறைய இருக்கும். காலையில 11 மணிக்கு, 'சார் இன்னைக்கு ராத்திரி தாஜ் ஹோட்டல்ல பார்ட்டி. வந்துடுங்க’னு அழைப்பு வரும். அட, கடைசி நேரத்துலதானே சொன்னாங்க... போகாம விட்ரலாம்’னு போகமா இருக்க முடியாது. மறுநாள், 'அவங்க பார்ட்டிக்கு வந்தீங்க... எங்க பார்ட்டிக்கு ஏன் வரலை?’னு நட்பை முறிச்சுக்குவாங்க. அதனால் யார் மனசும் கஷ்டப்பட வேண்டாம்னு எங்கே, யார் கூப்பிட்டாலும் அங்கே போயிருவோம். பார்ட்டிக்கு நாங்க வந்ததைக்கூட கவனிக்காம ஜாலி பண்ணிட்டு இருப்பாங்க. அதனால நாங்க வந்ததுக்கு அடையாளமா அவங்ககூட செல்ஃபி எடுத்துக்குவோம். அதை ஃபேஸ்புக்லயும் போட்ருவோம்'' என்கிறார் மனோஜ் பெனோ.
''பார்ட்டின்னா சினிமாவுல காட்டுற மாதிரி கசமுசா நடக்கும்... வில்லனுங்க ரெண்டு பேர் முறைச்சுப் பார்த்துட்டு கொலை, ரேப்னு எதுக்கோ திட்டம் போட்டுட்டு இருப்பாங்கனு எல்லாம் நினைக்காதீங்க. காலேஜ் பசங்க தினமும் அந்தந்த ஏரியா டீக்கடையில டீயே சாப்பிடாம மணிக்கணக்கா உட்கார்ந்து ஜாலியா பேசிட்டுக் கலைஞ்சு போவாங்கள்ல, அதுபோலத்தான் நாங்க. டீக்கடைக்குப் பதிலா ஸ்டார் ஹோட்டல். அவ்வளவுதான் வித்தியாசம்'' எனச் சொல்லும் லக்ஷ்மண பிரபு, மணிரத்னத்தின் 'ஓ.கே கண்மணி’ படத்தில் நடித்திருக்கிறார். மணிரத்னம், சுஹாசினி தம்பதியின் நெருக்கமான நண்பர்.
''ராத்திரி முழுக்க பார்ட்டி பண்ணிட்டு, காலையில நல்லா தூங்கிடுவோம்னு நினைக்காதீங்க. விடியவிடிய பார்ட்டி பண்ணாலும் நான் காலையில எட்டரை மணிக்கு ஹாஸ்பிட்டல்ல இருப்பேன். சாமுக்கும் பிரபுவுக்கும் காலேஜ் உள்பட ஏகப்பட்ட பிசினஸ் இருக்கு. அதெல்லாம் கவனிக்கணும். பல பேரிடம் பேசி அந்த நாளுக்கான டார்கெட் நிர்ணயிக்கணும். பிரியாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் ப்ளஸ் சினிமா வேலைகள். அதனால ஒவ்வொரு நாள் காலையிலயும் நாங்க எல்லோருமே அவ்ளோ பரபரப்பா இருப்போம். அந்த டென்ஷனைக் குறைக்கத்தான் ராத்திரி செம ஜாலி'' - பார்ட்டி கொண்டாட்டங்களின் பின்னணி சொல்கிறார் மனோஜ் பெனோ.
''அந்த நடிகரும் இந்த நடிகையும் பிரிஞ்சுட்டாங்க, இந்த நடிகரும் அந்த நடிகரும் அடிச்சுக்கிட்டாங்கனு செய்தி படிக்கிறப்ப எல்லாம் எனக்குச் சிரிப்புத்தான் வரும். ஏன்னா, அதுக்கு முந்தின ராத்திரிதான் அந்த ரெண்டு பேரும் எங்க பார்ட்டில கட்டிப்பிடிச்சு, முத்தம் கொடுத்துட்டு செம ஆட்டம் போட்டிருப்பாங்க. ஒருவேளை அவங்களுக்குள்ள சண்டையே இருந்தாலும், பார்ட்டிக்கு வந்துட்டா செம ஜாலி ஆகிடுவாங்க. போகும்போது நண்பர்களாத்தான் போவாங்க. அதான் பார்ட்டியின் பியூட்டி'' - பார்ட்டி கலாசாரம் பற்றி பிரியா மணிகண்டனின் சந்தோஷச் சான்றிதழ் இது.
''விஜய், அஜித், த்ரிஷா, நயன்தாரா, சிம்பு, தனுஷ்னு எல்லோர்கூடவும் பார்ட்டி பண்ணுவோம். பிசினஸ் டென்ஷன் குறைக்கத்தான் பார்ட்டிக்குப் போறோம். அங்கே போய் விடிய விடிய மூக்கு முட்ட குடிக்கிறது எல்லாம் இல்லை. டென்ஷன் கொடுக்கிற எந்த நினைப்பும் இல்லாம, ரெண்டு, மூணு மணி நேரம் சந்தோஷமா சிரிச்சுப் பேசுவோம். அது நம்ம மனசை அவ்ளோ ரிலாக்ஸ் பண்ணும். அடுத்த நாள் தெம்பா வேலைபார்க்க அது உதவும். அதனால வி லவ் பார்ட்டி'' என தம்ஸ்அப் சொல்லிவிட்டு பார்ட்டி பண்ணக் கிளம்புகிறார்கள் நால்வரும்!
லெட்ஸ் பார்ட்டி!
பார்ட்டி டிப்ஸ்!
* அடிக்கடி பார்ட்டி நடத்தும் கோலிவுட் பிரபலம் த்ரிஷா! 'நாளைக்குனு ஒரு நாளே இல்லை. இன்னைக்குத்தான் கடைசி நாள்ங்கிற மாதிரி செம ஜாலியா பார்ட்டி பண்ணுவார் த்ரிஷா. அந்த விஷயத்தில் அவரை கோலிவுட்ல யாராலயும் அடிச்சுக்க முடியாது!’ என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
* விஜய், அஜித் தொடங்கி மணிரத்னம் வரை யார் வந்தாலும், பார்ட்டி டான்ஸ் ஃப்ளோரில் நடனமாட வேண்டும் என்பது பார்ட்டி கோட். அவங்களும் லைட் மூவ்மென்ட்டாவது போடுவாங்க.
* சென்னை மவுன்ட் ரோடு தாஜ் ஹோட்டலில் இருக்கும் 'பிளெண்ட்’தான் நகரின் ஹிட்ஹாட் பார்ட்டி பார். சென்னையின் அனைத்துப் பிரபலங்களையும் இங்கே சர்வசாதாரணமாகப் பார்க்கலாம்.
*இதுபோன்ற ஹைஃபை பார்ட்டிகளுக்கு, அழைப்பு இருந்தால் மட்டுமே செல்ல முடியும். இல்லையென்றால், பார்ட்டி வட்டாரத்தில் நீங்கள் பிரபலமானவராக இருக்க வேண்டும். அப்படியும் இல்லையென்றால், வாசலில் நிற்கும் ஜிம் பாய்ஸுக்கு நண்பர்களாகவாவது இருக்க வேண்டும்.
* சில பார்ட்டிகளுக்கு அனுமதிக் கட்டணம் உண்டு. சில பார்ட்டிகளுக்கு பெண்களோடு வந்தால்தான் அனுமதி!
No comments:
Post a Comment