கிள்ளிவளவன் மகள் கம்பீரம்!
கிள்ளி எழுதினால் அவரது அரசியல் எதிரிகளுக்கு தேள் கொட்டியதுபோல இருக்கும். அந்தளவுக்கு பேனாவை ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடியவர். தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கியவர். பேரறிஞர் அண்ணா, தன் வாழ்நாள் முழுவதும் உச்சரித்த பெயர். அவரது நிழல்போல இருந்து, எழுத்து அரசியல் பணிகளில் நீக்கமற நிறைந்திருந்த புள்ளி விவர புலிதான் 'கிள்ளி’ என்கிற தி.சு.கிள்ளிவளவன். தற்போது வயோதிகம் காரணமாகப் படுத்த படுக்கையாகிவிட்டார். இதனை அறிந்து 5 லட்சம் ரூபாயை வங்கியில் வைப்புத்தொகையாகப் போட்டு, அதில் இருந்து மாதந்தோறும் வட்டித் தொகை ரூ.5 ஆயிரம் நிரந்தரமாகக் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார் ஜெயலலிதா.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நியூ குளக்கரை சாலையில் ஒருவர் மட்டுமே நடந்துசெல்லும் இடவசதி கொண்ட ஒற்றையடிப் பாதையில் 100 அடி தூரத்துக்கு உள்ளே சென்றால், பழைய வீடு ஒன்றின் மாடியில் புத்தகக் குவியல்களுக்கு இடையே பேசும் சக்தியற்றுக் கட்டிலில் படுத்துக் கிடந்தார் கிள்ளிவளவன். எப்போதும் உரக்கக் குரல் வரும் அவரது வீட்டில் அமைதி தவழ்கிறது. அவரது மகள்களிடம் கண்களாலும் கை செய்கைகளாலும் பேசிக் கொண்டிருந்தார். ''ஜூனியர் விகடன் பத்திரிகையில் இருந்து வந்திருக்கிறோம்!'' என்றவுடன், புருவம் உயர்த்தி நிமிர்ந்து பார்த்துவிட்டு அமைதியானார்.
தி.சு.கிள்ளிவளவன் 1926-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே நீதிக் கட்சியால் ஈர்க்கப்பட்டு, பின்னர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டவர். 1944-ம் ஆண்டு, திராவிடர் கழகத்தில் சேர்ந்து சென்னை மாவட்டப் பிரதிநிதியாகத் தொண்டாற்றியவர். பிறகு, பேரறிஞர் அண்ணா 1949-ம் ஆண்டு தொடங்கிய தி.மு.கவில் இணைந்து செயலாற்றினார். அவரின் செயலாளராகவும் அவர் நடத்திய, 'ஹோம்லேண்ட்’ பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் பணியாற்றினார். 'முரசொலி’ தமிழ் வார இதழ், நாளிதழாக மாற்றம் பெற்றபோது அதன் முதல் துணை ஆசிரியரானார்.
1967-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு அவர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தி.மு.கவை விட்டு விலகி இருந்தார். பெருந்தலைவர் காமராஜரின் அழைப்பின் பேரில், ஈ.வெ.கி.சம்பத் மூலம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றினார். 1979-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பழ.நெடுமாறனுடன் சேர்ந்து, 'காமராஜர் காங்கிரஸ்’ என்று கட்சி தொடங்கி அதன் மூத்த பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.
விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக நெடுமாறன் மாறிய பின்னர், அவரது அரசியல் கொள்கையில் மாறுபட்டு அந்தக் கட்சியை விட்டு விலகி இருந்தார். எம்.ஜி.ஆர் உடல் நலமின்றி இருந்தபோது, ராகவானந்தம் மூலமாக அ.தி.மு.கவில் சேர்ந்தார். பின்னர், வாழப்பாடி ராமமூர்த்தி தமிழக காங்கிரஸ் தலைவர் ஆனபோது அவரது அழைப்பை ஏற்று, அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றினார். வாழப்பாடி மறைவுக்குப் பிறகு அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டவில்லை.
கிள்ளிவளவனின் மூத்த மகள் கலைச்செல்வி நம்மிடம் பேசினார். ''தாய்மொழி தமிழைத் தவிர, அப்பாவுக்கு தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரியும். வாசிப்பு, எழுத்துப் பணியில் இருந்த ஈடுபாட்டால் பல மொழிகளைப் படித்தார். பன்மொழிப்புலமை காரணமாகவே அண்ணா அவரை, 'பேராசிரியர் கிள்ளிவளவன்’ என்று அன்பாக அழைப்பார். அண்ணாவுக்காக ஓடோடி உழைத்தார். ஆனால், அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது அவரை விட்டு வெளியேறிவிட்டார். பின்னர், யாரை எதிர்த்து அண்ணாவோடு சேர்ந்து அரசியல் செய்தாரோ அந்த காமராஜருக்காக உழைத்தார். பெரிய தலைவர்களோடு பழக்கம் இருந்தும் அதைத் தனது சுயலாபத்துக்காக ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை.
எங்கள் அப்பாவுக்கு முன்கோபம் அதிகம். ஒழுக்கம், நேர்மை, காலம் தவறாமை ஆகியவற்றில் உறுதியானவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., உடல் நலம் குன்றி இருந்த நேரத்தில் அப்பாவுக்கு உதவி செய்ய எண்ணி அழைத்தார். அப்பா போகவில்லை. இப்போது அம்மா உதவி செய்துள்ளார். அவருக்கு நன்றி. 'உடல் நலம் நன்றாக இருந்து, அப்பா பேசும் நிலையில் இருந்தால் இந்தப் பணத்தை வேண்டாம்’ என்று மறுத்திருப்பார். அப்பாவை மருத்துவமனையில் வைத்துப் பார்த்தால் உடலைத் தேற்றலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்பாவுக்கு 90 வயது நடக்கிறது. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் அவர், வயோதிகத்தால் அவதிப்படுவதைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது'' என்று கலங்கினார்.
தன்னுடைய அரசியல் வாழ்க்கையை கொள்கை, கோட்பாடுகளுக்காக அர்ப்பணித்த அரசியல்வாதிகளுக்கு வாழும் உதாரணம் கிள்ளி!
No comments:
Post a Comment