சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Mar 2015

வரன் தேடுவதில் கிளர்ச்சி செய்த இந்துஜா!

ந்திய இணைய உலகில் இப்போது இளம்பெண் இந்துஜா பிள்ளை பற்றி தான் பேச்சாக இருக்கிறது. சமவயதிலான இளம்பெண்கள் அவரை தங்களுக்கான முன்னோடியாக பார்க்கின்றனர் என்றால், திருமண வயதில் இருக்கும் ஆண்களோ இந்துஜாவை வியப்போடு அன்னாந்து பார்க்கின்றனர். இந்துஜா அப்படி என்ன செய்து விட்டார்?
இந்திய திருமண வரன் தேடும் படலத்தில் சின்னதாக ஒரு கிளர்ச்சி செய்து தான் யார் என்பதை அழகாக உணர்த்தியிருக்கிறார். அப்படியே புது யுகத்தின் இளம்பெண்களின் விருப்பங்களையும், கனவுகளையும் கச்சிதமாக எடுத்துச்சொல்லியிருக்கிறார். அதோடு இந்திய மணமகள் பற்றிய பழகிப்போன சித்திரத்தையும் லேசாக களைத்துப்போட்டு 21ஆம் நூற்றாண்டின் நிதர்சனத்தை சொல்லாமல் சொல்லியிருக்கிறார். இந்துஜா செய்த கிளர்ச்சி தனிப்பட்ட நோக்கிலானது என்றாலும் அது, லட்சியத்தை நெஞ்சில் சுமந்து நிற்கும் இக்காலத்து இளம்பெண்களை பிரதிநித்துவப்படுத்தும் செயலாகவும் இருக்கிறது.


24 வயதான இந்துஜா, தனக்கு வரண் பார்ப்பதற்காக பெற்றோர்கள் எழுதிய அறிமுக குறிப்புக்கு பதிலாக, தனக்கான மாற்று அறிமுக குறிப்பை எழுதியுள்ளார். இதை இணைய யுகத்திற்கு ஏற்ப தனியே ஒரு இணையதளம் அமைத்து சொல்லியதால், அவர் ஒட்டுமொத்த இணைய உலகின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

விஷயம் இது தான். இந்துஜா பெங்களூரில் வசிக்கும் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர். சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமண வயது வந்துவிட்டதாக பெற்றோர்கள் கருதியதால், எல்லா இந்திய பெற்றோர்களும் செய்வது போல அவர்களும் தங்கள் மகளுக்கு பொருத்தமான மாப்பிளையை தேடத் துவங்கினார். இந்த மாப்பிள்ளை தேடலில் எல்லோரும் செய்வது போல, திருமண பொருத்தம் பார்க்கும் இணையதளத்தில், அவருக்கான மணமகன் தேவை விளம்பரத்தை கொடுத்தனர். நன்றாக படித்த அழகான பெண்ணுக்கு, இன்னும் நன்றாக படித்த, பொருத்தமான பையன் தேவை என்பது போல அந்த விளம்பரம் அமைந்திருந்தது.

இந்த விளம்பரத்தை பார்த்த இந்துஜா லேசாக கொந்தளித்துப் போனார். அவர் இதற்குள் திருமணத்திற்கு தயாரில்லை என்பது ஒரு காரணம் என்றால், அதைவிட முக்கியமாக, அந்த விளம்பரத்தில் பெற்றோர்கள் தன்னைப்பற்றி குறிப்பிட்டிருந்த விதம் அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பொறியியல் படித்து, சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் இஞ்சினியராக வேலை பார்க்கும் பெண்ணுக்கு வரண் தேவை என பெற்றோர் குறிப்பிட்டிருந்தனர். நீங்கள் நவீன யுகத்து இளம்பெண் என்றால் இத்தகையை பொத்தம் பொதுவான அறிமுக குறிப்பை படித்தால் பொங்கி வரத்தான் செய்யும் அல்லவா? இந்துஜாவுக்கு அப்படி தான் இருந்தது.
பெற்றோர் கொடுத்த அறிமுக குறிப்பில் தன்னைப்பற்றி விவரங்கள் எதுவுமே இல்லை என நினைத்தார். அவரது தனிப்பட்ட நம்பிக்கை, கனவுகள், எதிர்ப்பார்ப்பு எதுவுமே அதில் இல்லை. இருந்த விவரங்களோ தவறாக இருப்பதாக நினைத்தார். சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் வேலை பார்க்கும் நிறுவனம் சாப்ட்வேர் நிறுவனம் அல்ல; அது ஒரு ஸ்டார்டப் நிறுவனம். பன்னாட்டு நிறுவனங்களை வெறுக்கும் இந்துஜா, வளர்ச்சிக்கு வழி காட்டும் ஸ்டார்டப் நிறுவனத்தில் வேலை பார்ப்பதை அவர் பெருமையாக கருதுகிறார். புதியதை காண விரும்பும் தொழில் முனைவோருக்கு பக்க பலமாக இருப்பதில் உற்சாகம் காணும் தன்னை சாப்ட்வேர் இஞ்சினியர் என சுருக்கியதும் அவருக்கு எரிச்சலாக இருந்தது.

பெரும்பாலான இளம்பெண்கள் இல்லங்களில் எதிர்கொள்ளும் நிலை தான். தங்களின் தனித்தன்மை புறந்தள்ளப்பட்டு, நன்றாக படித்த அழகான பெண் என்று சொல்லப்படுவதை அநேகமான திருமண பருவத்தில் நிற்கும் ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்ளவே செய்கின்றனர். பல பெண்கள் பெற்றோர்களிடம் வாதிட்டு தங்கள் தனித்தன்மையை உணர்த்த முற்படுவதும் உண்டு.

இந்துஜாவும் தான் யார் என்பதை தெரிவிக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் ஸ்டார்டப் கலாச்சாரத்தில் மூழ்கிய யுவதி என்பதாலோ என்னவே இது பற்றி தனது பெற்றோருடன் மல்லுக்கட்ட விரும்பாமல், இதற்காக என்றே ஒரு இணையதளத்தை அமைத்தார்.  http://marry.indhuja.com/ எனும் அந்த இணையதளத்தில் அவர் தன்னைப்பற்றியும், தனது வருங்கால கணவர் பற்றிய எதிர்ப்பார்ப்பையும் குறிப்பட்டிருந்தார். இந்த இணையதளத்தின் முகவரியை மட்டும் பெற்றோரிடம் கொடுத்து, வரண் தேடலின் போது இந்த இணையதள முகவரியை மட்டும் சுட்டிக்காட்டினால் போதும் என்று கூறிவிட்டார். பெற்றோருக்கான சாந்தமான பதிலடியாக இந்த தளம் அமைந்ததோடு, அவரைப்பற்றி கச்சிதமாக தெரிவிக்கும் வகையில் இருந்தது.

நல்ல நிறம், அழகு, படித்த பெண் என பெற்றோரின் வழக்கமான வழவழ அறிமுகத்திற்கு பதில் அவர், பாலினம் டாம்பாய் ரகம், 5.4 அடி உயரம், நாத்திக எண்ணம் கொண்டவள், தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட ரகம், கலாச்சார் அடையாளம் தமிழர், வசிப்பது பெங்களுரில் என கம்பீரமாக அமைந்திருந்தது. கல்வித்தகுதி பி.இ. என குறிப்பிட்டிருந்தவர் தனது வேலியை, ஸ்டார்டப்பில் வளர்ச்சி கிரியா உக்கி என தெரிவித்திருந்தார். மேலும் விவரங்களாக, தனக்கு புகைப்பது பிடிக்காது, பேட்மிண்டன் , நடனம் பிடிக்கும், டிவி பிடிக்காது, அதிகம் படிப்பதில்லை, பெண்மையான பெண் இல்லை, திருமணத்திற்கான நபரும் இல்லை போன்ற விவரங்களையும் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல மணமகனிடம் தான் எதிர்பார்க்கும் தன்மைகளையும் கச்சிதமாக குறிப்பிட்டிருந்தார். எல்லாவற்றுக்கும் மேல் மரக்கிளை ஒன்றின் மீது படுத்திருப்பது போன்ற அவரது புகைப்படமும் அவரது சுதந்திர உணர்வை வெளிப்படுத்தியது. இப்படி திருமண வரண் பார்க்கும் படலத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதற்காகவே இணையதளம் அமைத்ததே ஒரு புதுமையாக இருந்தது என்றால், அதில் ஒரு லட்சிய இளம்பெண்ணாக அவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட விதம் இன்னும் சிறப்பாக இருந்தது.
அதனால் தான் இந்துஜாவின் இந்த திருமண இணையதளம் சமூக ஊடகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அவரது இணையதளத்திற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையும் எக்கச்சக்கமாக அதிகரித்தது. பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக தளங்களிலும் இந்த முயற்சி விவாதத்தை ஏற்படுத்தியது. டிவிட்டர் குறும்பதிவுகளில் பலர் அவரது இயல்பான வெளிப்படுத்தலை பாராட்டியிருந்ததோடு சிலர் அவரை திருமணம் செய்து கொள்ளவும் கோரிக்கை வைத்தனர். வெளிநாட்டை சேர்ந்த சிலர், தாங்களும் இதில் பங்கேற்க தகுதி உண்டா என கேட்டிருந்தனர். மீடியாக்களும் இந்துஜாவை கவனித்து செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்துஜா இந்த இணையதளம் மூலம் தன்னை வெளிப்படுத்தி இருக்கும் விதம் பரவலாக பாராட்டை பெற்று அவரை ஒரு இணைய நடசத்திரமாக்கி இருக்கிறது. இந்துஜாவின் பெற்றோரும் அவரது சுந்திரமான குணத்தை புரிந்து கொண்டு ஆதரித்துள்ளனர். காலம் மாறுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். 



No comments:

Post a Comment