சமீபத்தில் தாக்கல் ஆன மத்திய பட்ஜெட்டில் சேவை வரியை 12.36 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாக உயர்த்தி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. இந்த சேவை வரி உயர்வால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களின் விலையும் கட்டணமும் உயரப் போகிறது. இதனால் நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைகளின் குடும்ப பட்ஜெட்டில் பெரிய துண்டு விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சேவை வரியானது ஒரு குடும்பப் பட்ஜெட்டை எப்படியெல்லாம் பாதிக்கும் என ஆடிட்டர் சிஏ.பி.ராஜேந்திரகுமாரிடம் கேட்டோம். அவர் தெளிவான கணக்குகளை போட்டுத் தந்ததுடன், சேவை வரி பற்றி சில விஷயங்களையும் சொன்னார்.
சேவை வரி எப்போது குறையும்?
'மத்திய நிதி அமைச்சர் சேவை வரியை 12.36 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறார். அவர் உயர்த்தியிருப்பது 1.64 சதவிகிதம்தானே! இதனால் சாதாரண மனிதர்களுக்கு என்ன பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடப் போகிறது என்று நினைக்க வேண்டாம். சிறு துளி பெருவெள்ளம் போல சின்னச் சின்னதாக வரும் இந்த செலவுகள் பிற்பாடு மலைபோல குவியும்.
இன்றைய நிலையில் வருமான வரி கட்ட வேண்டியிருந்தும் அதைக் கட்டாமல் தவிர்ப்பவர்கள் பலர். இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், அமெரிக்காவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 48% பேர் வருமான வரி செலுத்தி வருகிறார்கள். அதனால் அங்கு சேவை வரியானது குறைந்து காணப்படுகிறது. ஆனால், நம் நாட்டில் மிக மிகக் குறைவானவர்களே வருமான வரியை சரியாகக் கட்டி வருகிறார்கள். அரசின் செலவுகளை ஈடுசெய்ய நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 40 சதவிகிதம் பேரையாவது வருமான வரியை செலுத்தும் கட்டாயத்துக்கு ஆளாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இந்தியா ஏழை நாடு. வருமானமே இல்லாதவர்கள்தான் இங்கு அதிகம் என்னும்போது எப்படி வரி கட்டுவார்கள் என்று சொல்லி நாம் தப்பிக்க நினைக்கக் கூடாது. ஏழை நாடு என்கிற நிலையை நாம் எப்போதோ கடந்துவிட்டோம். இன்றைக்கு வளர்ந்துவரும் நாடாக மாறியிருக்கிறோம். அதனால் அரசாங்கம் வருமான வரியின் மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகப்படுத்திக் கொண்டு, சேவை வரியை இனி குறைக்காமல் போனாலும், இதே நிலையுடன் தொடர வேண்டும். வருமான வரியானது வருடத்துக்கு ஒருமுறை என்பதால் பெரிதும் பாதிக்காது. ஆனால், சேவை வரி அன்றாடத் தேவைகளின் செலவுகளில் மிகப் பெரிய பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்தும்' என்றவர், சேவை வரியை உயர்த்தியதற்கான காரணத்தையும் எடுத்துச் சொன்னார்.
சேவை வரியை அதிகரிக்க என்ன காரணம்?
''சேவை வரியை மறைமுக வரி என்றும் சொல்வார்கள். மக்களின் கண்களுக்கு அகப்படாமல் இடப்படும் வரி என்பதாலேயே இதற்கு இந்தப் பெயர். இதை அதிகப்படுத்தினால் சாமானிய மனிதனால் எதிர்க்க முடியாது. நாளாக நாளாகச் சேவை வரி உயர்வால் உண்டாகும் பாதிப்புகளுக்கு மக்கள் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்வார்கள் என்கிற அரசாங்கத்தின் நினைப்பே மேலும் மேலும் அவர்களைச் சேவை வரியை அதிகரிக்கத் தூண்டுகிறது'' என்றவர், சேவை வரி எப்போது குறையும் என்பதையும் எடுத்துச் சொன்னார்.
ஜிஎஸ்டி வரவேண்டும்!
''மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் பலவிதமான மறைமுக வரிகளை ஒன்றிணைத்து ஒரே வரியாக்கும் ஒரு பெரும் வரிச் சீர்திருத்த முயற்சிதான் ஜிஎஸ்டி என்று அழைக்கப்படும் குட்ஸ் அண்ட் சர்வீஸ் டாக்ஸ் ஆகும். நம் கூட்டாட்சி அமைப்பில் மத்திய அரசாங்கம் இந்த ஜிஎஸ்டி வரியை வசூலித்தாலும் அதில் குறிப்பிட்ட ஒருபகுதியை மாநில அரசாங்கங்களுக்கு அளித்துவிடும். இந்த ஜிஎஸ்டி வரியானது வருகிற 2016, எப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். இந்த வரியானது நடைமுறைக்கு வரும்பட்சத்தில் பல்வேறு வரிக் குழப்பங்கள் நீங்கி, ஒரே சீராக வசூலிக்கப்படும் நிலை உருவாகும். இதனால் பொருட்களின் விலை குறையும். அப்போது சேவை வரியும் குறையும் என்று எதிர்பார்க்கலாம்'' என்றவர் தற்போது உயர்த்தப்பட்டுள்ள சேவை வரியினால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவரின் குடும்ப பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழும் என்பதையும் எடுத்துச் சொன்னார்.
துண்டு விழும் குடும்ப பட்ஜெட்!
மேலே தரப்பட்டுள்ள அட்டவணையில், மாதம் 50,000 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவரது ஒரு மாதத்துக்கான செலவினங்கள் தோராயமாக தரப்பட்டிருக்கின்றன. சேவை வரி 12.36 சதவிகிதமாக இருந்தபோது எவ்வளவு ரூபாய் சேவை வரியாகக் கட்ட வேண்டி இருந்தது, தற்போது 14 சதவிகிதமாக அதிகரித்திருக்கும் நிலையில் எவ்வளவு கட்ட வேண்டும் என்பதும் சொல்லப் பட்டிருக்கிறது. இதனால் மாதாந்திர பட்ஜெட்டில் அதிகரிக்கும் தொகை எவ்வளவு என்பதையும் சொல்லி இருக்கிறோம். இதை மாதிரிக் கணக்காகக் கொண்டு அவரவர்களின் வருமானம் மற்றும் செலவுகளுக்கு ஏற்ப குடும்ப பட்ஜெட்டில் விழும் துண்டைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment