சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Mar 2015

ஏற்றம்தரும் ஏற்றுமதி தொழில்கள்!

புரதச்சத்துக்கள் நிறைந்த முட்டை உடல்நலத்துக்கு ஏற்றது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், ஏற்றுமதி தொழிலுக்கு முட்டை சிறந்தது என்பது நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம். ஆம், இன்றைக்கு விவசாயம் தொடர்பான பல பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதி ஆவதுபோல முட்டை, முட்டை பவுடர் ஆகியவையும் சிறப்பாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களில் பால், முட்டை, இறைச்சி ஆகியவை பெரும்பங்கு வகிக்கின்றன. சமீபத்திய தகவலின்படி, அதிகமாக முட்டை தயாரிக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. தற்போதைய நிலையில் முட்டை உற்பத்தியானது ஆண்டுக்கு 8% வளர்ச்சி அடைந்து வருவதாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய (Agricultural and Processed Food Products Export Development Authority, சுருக்கமாக APEDA) தகவல் தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் உற்பத்தி!
உலக அளவில் முட்டை உற்பத்தியில் இந்தியா 4.95 சதவிகிதமாக இருந்து வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, ஹைதராபாத், விசாகப்பட்டினம், சித்தூர், கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம், ஒடிஸா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் முட்டையானது அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த 2013-14-ம் ஆண்டில் நம் நாட்டிலிருந்து ஜப்பான், வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, தைவான், சவுதி அரேபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டி ருக்கிறது.
முட்டை ஏற்றுமதி குறித்து,FIEO தென்மண்டல அலுவலகத்தின், இணை துணை பொது இயக்குநர் உன்னி கிருஷ்ணன் சொன்னதாவது:
'தமிழ்நாட்டில் முட்டை உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாவட்டம் நாமக்கல். முட்டை உற்பத்தியில் மட்டுமல்ல, ஏற்றுமதியிலும் சிறந்து விளங்குகிறது. இந்திய அளவிலான முட்டை ஏற்றுமதி யில் 95% முட்டை நாமக்கல் மாவட்டத் தில் இருந்துதான் ஏற்றுமதியாகிறது. மீதி இருக்கும் ஐந்து சதவிகித முட்டைகள் மற்ற மாநிலங்களிலிருந்து ஏற்றுமதி ஆகின்றன. முட்டை மட்டுமல்லாமல், முட்டையின் வெள்ளை பவுடர் மற்றும் மஞ்சள் கரு பவுடர் ஆகிய இரண்டுக்கும் ஏற்றுமதி மவுசு காணப்படுகிறது.
உலக அளவில் ஜெர்மனிதான் மிகப் பெரிய முட்டை இறக்குமதி நாடாகும். நமது அரசாங்கம் தரும் புள்ளி விவரங்களின்படி, தினமும் சுமார் 20 லட்சம் முட்டைகள் அரபு நாடுகள், குவைத், மஸ்கட், ஈரான், ஈராக் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இன்றைய நிலையில் ஆப்பிரிக்க மற்றும் வளைகுடா நாடுகளுக்கு, துபாய்தான் மிகப் பெரிய முட்டை விநியோக மையமாக உள்ளது' என்றார்.
நாமக்கல் போல, முட்டை உற்பத்தியில் ஆந்திரா சிறந்து விளங்கினாலும், இந்தியாவிலேயே முட்டை ஏற்றுமதியில் முதலிடத்தில் இருப்பது நாமக்கல்தான் என்கிற தகவலுடன், முட்டை ஏற்றுமதி குறித்து முழுமையான தகவலை வழங்கினார் நாமக்கல்லைச் சேர்ந்த வி.கே.எஸ். எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் கண்ணன்.
ரிஸ்க் பிசினஸ்; லாபமும் அதிகம்!
'கடந்த பத்து வருடங்களாக முட்டைகளை வாங்கி ஏற்றுமதி செய்து வருகிறேன். முட்டை உற்பத்தி அதிகமுள்ள நாமக்கல் மாவட்டத்தில், என்னைப் போன்று முட்டைகளை வாங்கி ஏற்றுமதி செய்பவர்களே அதிகம். இங்கு நடைபெறும் முட்டை வர்த்தகத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு, நாமக்கல் மண்டலத்தைச் சேர்ந்த அலுவலகம் (National Egg Coordination Committee, Namakkal Zone) விலையை வர்த்தகச் சூழ்நிலையைப் பொறுத்து நிர்ணயம் செய்கிறது.
உற்பத்தியாளர்கள் கொண்டுவரும் முட்டைகளில் தரமான முட்டைகளை, நியாயமான விலை கொடுத்து வாங்கி, அதை ஏற்றுமதிக்கு ஏற்ப தயார் செய்து ஏற்றுமதி செய்து வருகிறோம்.
முட்டைகளை ஏற்றுமதி செய்யும்முன், அவற்றை இந்தியாவின் ஏற்றுமதி கண்காணிப்பு கவுன்சில் நிறுவனத்தின் ஆய்வுக்கு உட்படுத்தி அவர்களின் சான்றிதழ் பெறுவது அவசியமாகும். முட்டைகளை ஏற்றுமதி செய்யும்போது, அதன் மீது தூசி எதுவும் இருக்காமல் மிக வெண்மையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். நாங்கள் உற்பத்தியாளர் களிடமிருந்து வாங்கும் முட்டைகளை அப்படியே ஏற்றுமதி செய்யாமல் அதை நன்கு சுத்தப்படுத்தி ஏற்றுமதி செய்கிறோம்.
இன்றைய நிலையில் ஓமன் மற்றும் லைபீரியாவுக்கு இங்கிருந்து அதிக முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படு கின்றன. இதுதவிர, சிரியா லியோன், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதிக்கான வாய்ப்பு அதிகரித்துக் காணப்படுகிறது.
ஓமனுக்கு முட்டை ஏற்றுமதி செய்வது அதிகரிக்க முக்கியக் காரணம், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய சிறந்த போக்குவரத்து வசதி இருப்பதே.
ஏற்றுமதிக்கு ஏற்ற காலம்!
வெளிநாட்டினர் நம் நாட்டிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்யக் காரணம், அந்த நாடுகளில் நிலவும் பருவநிலைதான். பெரும்பாலான வெளிநாடுகளில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்படுவதால், உடலின் வெப்பத்தைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள முட்டையைச் சாப்பிடுகின்றனர். இதனால்தான் அங்கிருப்பவர்கள் அதிக அளவில் முட்டையைச் சாப்பிடுகிறார்கள்.
பொதுவாக, ஓர் ஆண்டில் செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்துக் காணப்படும். மற்ற மாதங்களில் ஏற்றுமதி வாய்ப்புகள் சராசரியாக இருந்துகொண்டிருக்கும்.
2006-2008-ம் ஆண்டுகளை முட்டை ஏற்றுமதிக்கான தங்கமான நேரம் என்றே சொல்லலாம். ஏனெனில், அந்த நேரத்தில் அரபு நாடுகள், இங்கிலாந்து ஆகியவை முட்டைகளை அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்தன. அதனால் அங்கு முட்டையின் தேவை யானது மிகவும் அதிகரித்துக் காணப் பட்டது.
அந்தச் சமயங்களில் நாங்கள் ஒருமாதத்துக்கு 150 கன்டெய்னரில் (ஒரு கன்டெய்னரில் 4,72,320 முட்டைகள் இருக்கும்) முட்டைகளை ஏற்றுமதி செய்தோம். ஆனால், தற்போதைய நிலையில் மாதம் 50 கன்டெய்னரில் மட்டுமே தூத்துக்குடி துறைமுகம் வழியாக பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.
ஏற்றுமதி அளவு!
பெரும்பாலான இறக்குமதியாளர்கள் 50-55 கிராம் எடையுள்ள முட்டைகளையே அதிகம் விரும்புகிறார்கள். ஏனெனில், இந்த அளவுள்ள முட்டைகளில் உடையும் தன்மையானது குறைவாக இருக்கிறது. அதனால் உற்பத்தியாளர்களிடமிருந்து முட்டைகளை வாங்கும்போது இந்தவகை முட்டைகளையே வாங்குவோம். வெவ்வேறு அளவுள்ள முட்டைகள் கலந்திருப்பின் அவை அளவு வாரியாகப் பிரித்த பின்னரே ஏற்றுமதி செய்யப்படும்.
போட்டி நாடுகள்!
அமெரிக்கா, சீனா, பிரேசில் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முட்டை ஏற்றுமதியில் இந்தியாவுக்குப் போட்டி நாடுகளாக விளங்குகின்றன. இதில் பிரேசில் நமக்கு மிகப் பெரிய போட்டி நாடாக இருந்து வருகிறது. ஆனாலும், இந்தியாவில் உற்பத்தியாகும் முட்டையின் நிறம், தரம், சுவை ஆகியவை சிறப்பாக இருப்பதால், வெளிநாடுகளில் இந்திய முட்டை களுக்கென்று தனி இடம் இருக்கிறது. இந்திய முட்டைகளுக்கான மவுசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏற்றுமதி செய்யும் முட்டையின் விலையானது, தேவை மற்றும் ஏற்றுமதி யாகும் நாடுகளைப் பொறுத்து வித்தி யாசப்படும்.போக்குவரத்துச் சூழல் மிக எளிதாக இருப்பின் அந்த நாட்டுக்காக ஏற்றுமதியாகும் முட்டை விலை குறைந்து காணப்படும்.
சாதக, பாதகங்கள்!
உலக நாடுகள் மத்தியில் முட்டைக்கான தேவை அதிகரித்து வருவதால், அதற்கான ஏற்றுமதி வாய்ப்பு களும் அதிகரிக்கலாம்.இது எளிதில் உடையும் தன்மையுள்ள உணவுப் பொருள் என்பதால், அதைக் கையாள்வதில் மிகுந்த எச்சரிக்கை தேவை. அதேபோல, ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளை போதிய அளவு குளிரூட்டப்பட்ட கன்டெய்னர்களில் அடைத்து ஏற்றுமதி செய்தால்தான் தரமான முட்டைகள் சரியாக இறக்குமதியாளர்களுக்குப் போய்ச் சேரும்.
நாமக்கல் Vs ஆந்திரா!
நாமக்கல்லும், ஆந்திராவும்தான் இந்தியாவில் முட்டைகளை அதிகம் உற்பத்தி செய்கிறது. இன்றைய நிலையில் ஆந்திராவில் நாள் ஒன்றுக்கு சுமார் 6 கோடி முட்டை உற்பத்தியாகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 3.15 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. ஆந்திராவில் உற்பத்தியாகும் முட்டைகள் உள்நாட்டு முட்டை தேவையைப் பூர்த்திசெய்யப் போதுமானதாக இருப்பதாலும், ஏற்றுமதிக்கான போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பதாலும் அங்குள்ளவர்கள் அதிகமாக ஏற்றுமதியில் ஈடுபடுவதில்லை.
நாமக்கல்லில் உற்பத்தியாகும் முட்டைகளில் 95% ஏற்றுமதிக்குப் பயன்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்துக்கு போக்குவரத்து வசதி சிறப்பாக இருப்பதால், அதைப் பயன்படுத்தி ஏற்றுமதி செய்து வருகிறோம்' என்றார்.
முட்டையை நம்மவர்கள் மட்டுமல்ல, உலகம் முழுக்க உள்ளவர்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். எனவே, நீங்கள் இந்தத் தொழிலில் இறங்கி, நல்ல லாபம் பார்க்கலாமே!

No comments:

Post a Comment