சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Mar 2015

காதலியை மணந்த காதலன்... வீடு புகுந்து மகளை கடத்திய தந்தை!

ராயக்கோட்டையில் வீடு புகுந்து புதுமாப்பிள்ளையை கத்திமுனையில் மிரட்டி, அவரது காதல் மனைவியான சென்னை மாணவியை கடத்திச் சென்றதாக ஊட்டி அ.தி.மு.க. நகராட்சி துணைத்தலைவர் உள்பட 10 மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் ஊட்டி நகராட்சி துணைத்தலைவராக இருக்கிறார். இவரது மகள் சுருதி கிருஷ்ணன் (23). இவர் சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் எம்.ஏ. 3ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரகமத் காலனியைச் சேர்ந்த முரளிதரன் என்பவரது மகன் மார்க்ராஜூ (24). இவர் ராயக்கோட்டையில் உடற்பயிற்சி மையம் நடத்தி வருகிறார். 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர் குன்னூரில் குடியிருந்தபோது ஊட்டியில் நடந்த ஒரு திருமணத்திற்கு சென்றார். அங்கு அவர் சுருதி கிருஷ்ணனை சந்தித்தார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.
பின்னர் மார்க்ராஜூ ராயக்கோட்டை திரும்பிய பின்னரும் போனில் பேசி தனது காதலை வளர்த்து வந்துள்ளார். இவர்களின் காதல் சுருதி கிருஷ்ணனின் பெற்றோருக்கு தெரியவந்ததால் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். 15 நாட்களுக்கு முன்பு சுருதி கிருஷ்ணனுக்கும், பெங்களூரைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆனது.


இதில் விருப்பம் இல்லாத சுருதி கிருஷ்ணன் வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம்பிடிக்க திட்டமிட்டார். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி சுருதிகிருஷ்ணனை அவரது பெற்றோர் காரில் பெங்களூருக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். வழியில் கிருஷ்ணகிரியில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்தியுள்ளனர்.

அப்போது சுருதி கிருஷ்ணன் இதுபற்றி மார்க்ராஜூவிற்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே மார்க்ராஜூ அங்கு வந்து கோபாலகிருஷ்ணன் குடும்பத்தினர் தங்களை மறந்து பேசிக்கொண்டிருந்த நேரத்தில் சுருதி கிருஷ்ணனை மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். இருவரும் 11ஆம் தேதி ராயக்கோட்டை வஜ்ரநாதேஸ்வரர் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். அதோடு பாதுகாப்பு கேட்டு ராயக்கோட்டை காவல்துறையிலும் மனு கொடுத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சுருதி கிருஷ்ணனின் தாய் சுனிலா ராயக்கோட்டைக்கு வந்து தனது மகளிடம் பேசினார்.

அப்போது சுருதி கிருஷ்ணன், கணவருடன் தான் வாழ்வேன் என்று உறுதியாக கூறிவிட்டார். இதனை தனது கணவரிடம் அவர் தெரிவித்ததும், கோபாலகிருஷ்ணன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் ராயக்கோட்டைக்கு நேற்று கார்களில் வந்தனர். அவர்கள் திடீரென்று மார்க்ராஜூவின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த மார்க்ராஜூ, அவரது தாய் ஜமீ உள்ளிட்ட 3 பேரை சரமாரியாக தாக்கி, கத்தி முனையில் மிரட்டி ஒரு அறையில் தள்ளி பூட்டினார்கள்.

சுருதி கிருஷ்ணனை காரில் கடத்திக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத மார்க்ராஜூ கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் வந்து அறை கதவை திறந்துவிட்டனர். மார்க்ராஜூ இது தொடர்பாக ராயக்கோட்டை காவல்துறையில் புகார் செய்தார்.

அந்த புகாரில், நானும் ஊட்டி நகராட்சி துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணனின் மகள் சுருதிகிருஷ்ணனும் காதலித்து வந்தோம். எங்களின் காதலுக்கு சுருதி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து, வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்ததால் சுருதி என்னுடன் வந்துவிட்டார். நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். என்னை தாக்கி கத்தி முனையில் மிரட்டி எனது மனைவியை கடத்திச் சென்றுவிட்டனர். அவர் சுருதி கிருஷ்ணனை கவுரவ கொலை செய்து விடுவோரோ என்று அஞ்சுகிறேன். எனவே, எனது மனைவியை மீட்டு தாருங்கள் என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் ராயக்கோட்டை காவல்துறையினர் ஊட்டி நகராட்சி துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட 10 பேர் மீது கடத்தல், கொலை மிரட்டல் உள்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



No comments:

Post a Comment