சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Mar 2015

"தண்ணீர் கேட்டேன்... வாயில் சிறுநீர் கழித்தார்கள்..”

செய்தியைக் கேட்கவே கேவலமாக இருக்கிறது. அனுபவித்த மனிதனுக்கு எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும். இதுபோன்ற வன்கொடுமைகள் நாகரிகம் பேசும் சமூகத்தில் நடப்பதைப் பார்த்து எல்லோரும்தான் அவமானப்பட வேண்டும்.
மனிதத்தன்மை அற்ற வன்கொடுமைச் சம்பவங்கள் தமிழகத்தில் இப்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதோ வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது ஒரு கொடுமை...

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கருவானூர்  என்ற கிராமத்தில், கடந்த 2-ம் தேதி கோயில் திருவிழா நடைபெற்றது.  சாமி ஊர்வலமும், தெருக்கூத்து, தெம்மாங்கு எனக் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அப்போது,  ''தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களான அரவிந்தன், தினேஷ் ஆகியோரை, அதே ஊரைச் சேர்ந்த மாற்று சாதி இளைஞர்கள் சிலர் தாக்கினர். ஒரு தலித் இளைஞரின் வாயில் சிறுநீர் கழித்தனர்' என்று புகார் கிளம்பியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்திகள் அதிர்ச்சியூட்டின. நாடாளுமன்றத்தில் கடந்த 19-ம் தேதி அன்று இந்தச் சம்பவம் எதிரொலித்தது. கேரள காங்கிரஸ் எம்.பியான கே.சுரேஷ், ''தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர்கள் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.  அவர்களின் வாயில் சிறுநீர் கழிக்கப்பட்டுள்ளது'' என்று நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னையைக் கிளப்பினார். அதன் பிறகு, அதாவது 20-ம் தேதி அன்று, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய  தங்கராஜ், தேவேந்திரன், லோகநாதன், பாரதி, ரகுபதி, ஹரிகிருஷ்ணன் என ஆறுபேர் கைது செய்யப்பட்டனர். மணி என்பவரைத் தேடிவருகிறார்கள்.
வன்கொடுமைக்கு ஆளான அரவிந்​தனிடம்  பேசினோம். ''கருவானூர் பெருமாள் கோயிலில் எருதுகட்டும் திருவிழாவுக்கு, சின்னக்கனகம்பட்டியைச் சேர்ந்த என் மாமா மகன் தினேஷ் வந்திருந்தான். நானும் தினேஷும் தெருக்கூத்துப் பார்த்துக்கிட்டு இருந்தோம். அப்போ, தினேஷுக்கு ஒரு போன் வந்தது. அவன் ஓரமாகப் போய் பேசிக் கொண்டிருந்தான். கருகானூரைச் சேர்ந்த லோகநாதன் என்பவன், 'நீ யாரு..? எந்த ஊரு’ன்னு தினேஷைப் பார்த்துக் கேட்டிருக்கான். அதுக்கு, 'நான் சின்னக்கனக்கம்பட்டி’ன்னு தினேஷ் சொல்லியிருக்கான். அடுத்து, 'ஊருக்குள்ள இருக்கியா..? இல்ல, ரோட்டு மேல இருக்கியா..?’னு லோகநாதன் கேட்டிருக்கான். 'ரோட்டுமேல இருக்கேன்’னு தினேஷ் பதில் சொல்லியிருக்கான். அதற்கு, '...பயலாடா நீ..’ன்னு சாதிப்பெயரைச் சொல்லியிருக்கான். 'இப்ப எதுக்குத் தேவையில்லாம சாதிப்பேரை சொல்ற’னு தினேஷ் கேட்டிருக்கான். அவ்வளவுதான். 'எங்களையே எதிர்த்துப் பேசுறீயா’ன்னு அங்க இருந்த அவங்க பசங்க எல்லாம் சேர்ந்து தினேஷை அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு விஷயம் தெரிஞ்சு அங்கு ஓடினேன். அவனை அடிக்காதீங்கன்னு தடுத்தேன். அப்போ, என் சாதிப் பெயரைச் சொல்லி, உள்ளூர்ல இருந்துக்கிட்டு வெளியூர் பயலுக்கு சப்போர்ட் பண்றியா?’னு என்னையும் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
பக்கத்துல நின்ன பெரிய மனுஷங்க எல்லாம் அவுங்களை விலக்கிவிட்டு எங்களை போகச் சொன்னாங்க. நாங்களும் வந்துட்டோம். ராத்திரி 12 மணிக்கு ரகுபதி, பாரதி ரெண்டு பேரும் வந்து உங்களை யாரோ கூப்பிடுறாங்கனு சொன்னாங்க. நானும் போனேன். அங்கே போனா, ஏறக்குறைய 40 பேருக்கு மேல நின்னுக்கிட்டு இருந்தாங்க. 'இவன்தாண்டா அவனுக்கு சப்போர்ட்டுக்கு வந்தவன். இவனை அடிங்கடா’னு சொன்னாங்க. என் கை, கால்களை கட்டி, வாயில கர்ச்சீப் வெச்சி அமுக்கிட்டு எல்லோரும் வரிசையா நின்னு என்னை அடிச்சானுங்க.. அப்புறம், கீழே ரெண்டு கல்லை வெச்சி அதுல முட்டிப்போட வெச்சி, ஏறி மிதிச்சானுங்க.. என்னால அடிதாங்க முடியல. தொண்டையெல்லாம் வறண்டுபோயிடுச்சி. 'தண்ணி தண்ணி’னு சைகைல காட்டினேன். அப்போ, ஒருத்தன் 'இந்த ..........க்கு உச்சலுடான்றானு’(இந்த .........க்கு ஒண்ணுக்கு விடுங்கடா) சொன்னான். உடனே, ஒருத்தன் என் வாயில ஒண்ணுக்கு அடிச்சான். அப்புறம், என்னை கட்டி எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற டாய்லெட்ல போட்டுட்டுப் போய்ட்டானுங்க. மறுநாள் காலையில அந்தப் பக்கம் வந்த என் சொந்தக்காரங்கதான் என்னைத் தூக்கிட்டுப் போனாங்க.
மறுநாள் காலையிலே ஊர் பெரியவங்க வந்து பேசித் தீத்துக்கலாம்னு சொன்னாங்க. நாங்க அதுக்கு ஒத்துக்கலை. ஊத்தங்கரை ஜி.ஹெச்சுக்குப் போறோம்னு சொன்னோம். அங்க வேணாம், ஏதாவது தனியார் ஆஸ்பத்திரியில காமிச்சிக்கலாம்னு எங்களைத் தடுத்தாங்க. ஆனா, நாங்க கேட்கல. ஊத்தங்கரை ஜி.ஹெச்ல என்னைச் சேர்த்தாங்க. அப்போ போலீஸ் வந்து என்கிட்ட வாக்குமூலம் வாங்கினாங்க. நடந்ததை எல்லாம் போலீஸ்கிட்டே சொன்னேன். அப்புறம், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி மருத்துவமனைக்குப் போய்ட்டேன். வந்து பார்த்தா என் வாயில ஒண்ணுக்கு அடிச்சதையெல்லாம் போலீஸ் எஃப்.ஐ.ஆரில் போடவே இல்லை. சாதாரண அடிதடினு எழுதியிருக்காங்க. இப்போ எல்லாருக்கும் தெரிஞ்ச பிறகுதான் அவுங்களை அரெஸ்ட் பண்ணியிருக்காங்க' என்று தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மனவலியோடு விவரித்தார் அரவிந்தன்.
தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்றச் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் ரவி, ''இந்தக் கிராமத்தில் வசிக்கும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இங்கு வசிக்கும் குறவர் இன மக்கள் மீது தொடர்ந்து சாதிய ஒடுக்குமுறைகளைக் கையாள்கிறார்கள். இந்தச் சம்பவம் எங்கள் கவனத்துக்கு வந்தபிறகு, கடந்த 10-ம் தேதி ஊத்தங்கரை டி.எஸ்.பியைச் சந்தித்து ஒரு புகார் கொடுத்தேன். அதற்கு அவர், 'சின்னப் பிரச்னையை ஏன் பெரிசுபடுத்துறீங்க..? எதுவாக இருந்தாலும் ரெண்டு தரப்பையும் கூப்பிட்டுவெச்சி  பேசித் தீர்த்துக்கலாம்’ என்று சொன்னார். மறுபடியும் 13-ம் தேதி ஒரு புகார் கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. நாடாளுமன்றம் வரைக்கும் பிரச்னை சென்றபிறகுதான் நடவடிக்கை எடுத்துள்ளனர்' என்றார்.
கருவானூர் முன்னாள் ஊராட்சி மன்றத்​தலைவர் ராமச்சந்திரனிடம் பேசினோம். ''அவர்கள் சொல்வதெல்லாம் சுத்தப்பொய்.  எங்க ஊரில் எல்லோரும் தாயா பிள்ளையாத்தான் பழகுறோம். அவுங்களுக்கு ஒரு நல்லதுகெட்டதுனாகூட நாங்கதான் முன்னாடி நின்னு நடத்தி வைக்கிறோம். எனக்கு 57 வயசாகுது. இதுவரைக்கும் எங்களுக்குள்ள எந்தப் பிரச்னையுமே வந்ததில்லை. அன்னைக்கு திருவிழாவில்  சின்னக்கனகம்பட்டியைச் சேர்ந்த தினேஷ்ங்கிற பையன் குடிச்சிட்டு தெருக்கூத்து பார்த்துகிட்டு இருந்த பொம்பளப் பிள்ளைக மேல கல்லைத் தூக்கி போடுறது, லேசர் லைட் அடிக்கிறதுனு வம்பிழுத்துகிட்டு இருந்திருக்கான். அதனால எங்க ஊர் பசங்க போய் கேட்டிருக்காங்க. அவன்தான் எங்க பசங்களை முதலில் அடிச்சிருக்கான். அதுக்குப் பிறகுதான் ரெண்டு பேருக்கும் அடிதடியாகியிருக்கு'' என்றார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் ஊத்தங்கரை டிஎஸ்.பி பாஸ்கரனிடம் பேசினோம்.
''குறவன் பழங்குடி மக்கள்  முன்னேற்றச் சங்க செயலாளர் ரவி சொல்வதெல்லாம் பொய்க் குற்றச்சாட்டு. எல்லோரிடமும் விசாரித்ததில் அந்த தினேஷ், தங்கராஜ் என்பவருடைய தங்கச்சியை வம்பிழுத்ததாகச் சொல்கிறார்கள். அதனால்தான் தினேஷையும் அரவிந்தனையும் அடித்திருக்கிறார்கள். நாங்கள் அடித்தது உண்மைதான் என்று ஆறு பேரும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். ஆனால், சிறுநீர் கழித்தார்கள் என்று சொல்வதெல்லாம் உண்மையில்லை. ஆறுபேரையும் கைது செய்துவிட்டோம்'' என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், 'இந்தச் சம்பவம் நடந்து மூன்று வாரங்கள் வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தச் சம்பவத்தை விசாரிக்க வேண்டிய ஊத்தங்கரை டி.எஸ்.பி. பாதிக்கப்பட்ட இளைஞரைச் சந்திக்கக்கூட இல்லை. அதுமட்டுமின்றி, 'சிறுநீர் கழித்ததாகச் சொல்லப்படுவது உண்மை இல்லை’ என டி.எஸ்.பி பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். அவர், குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சிக்கிறார் என்பது இதிலிருந்து வெளிப்படையாகத் தெரிகிறது. எனவே, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற உத்தரவிடவேண்டும்’ என்று திருமாவளவன் சொல்லியிருக்கிறார்.
மனிதகுலத்துக்கு இழுக்கைத் தரும் வன்கொடுமை​கள் என்று தீரும்?


No comments:

Post a Comment