சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Mar 2015

நீங்களும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகலாம்! வழிகாட்டுகிறார் நட்ராஜ் ஐ.பி.எஸ்.

மிழக காவல் துறையில் அடுத்த தலைமுறை தயாராகிக் கொண்டிருக்கிறது!
1,078 சப்-இன்ஸ்பெக்டர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வந்ததும் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்காகத் தயாராகிக்கொண்டிருக்கும் வருங்கால சப்இன்ஸ்பெக்டர்களுக்கு ஆலோசனை சொல்கிறார் தமிழக முன்னாள் போலீஸ் டி.ஜி.பியும், டி.என்.பி.எஸ்.சி முன்னாள் தலை​வருமான நட்ராஜ்.
''எழுத்துத் தேர்வு, மொத்த மதிப்பெண்களில், குறைந்தபட்ச கட்ஆஃப் 35 சதவிகிதம் என்று நிர்ணயிக்கப்​பட்டுள்ளது. அதாவது, 35 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களில் இருந்து  இடஒதுக்கீடு அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுவர். அதன் பிறகு, உடற்கூறு அளத்தல், உடல்தகுதி தேர்வு, உடல்திறன் போட்டிகள் ஆகியவற்றுக்கு அழைக்கப்படுவார்கள். உடல்திறன் தேர்வுகள் முடிந்த பிறகு 1:2 எண்ணிக்கையில் நேர்காணல் உண்டு.

பொதுப் பிரிவில் எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 70 மார்க். உடல்திறன் போட்டிக்கு 15 மார்க். ஸ்பெஷல் மார்க் 5 (என்.சி.சி 2, என்.எஸ்.எஸ் 1, ஸ்போர்ட்ஸ் 2 ), நேர்காணலுக்கு 10 என்று மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. காவல் துறை ஒதுக்கீட்டில் எழுத்துத் தேர்வுக்கு 85 மார்க். ஸ்பெஷல் மார்க் 5 (தேசிய அளவில் காவல் துறையினருக்கான பணித்திறன் போட்டிகளில் தங்கப் பதக்கம் 5 மார்க், வெள்ளிப் பதக்கம் 3 மார்க், வெண்கலப் பதக்கம் 2 மார்க்), நேர்காணலில் 10 மதிப்பெண் என்று மொத்தம் 100 மார்க். எனவே, எழுத்துத் தேர்வில் கூடுதல்  மதிப்பெண் எடுத்தால்தான் அடுத்தகட்டத் தேர்வுக்குச் செல்ல முடியும். அதேநேரத்தில் எழுத்துத் தேர்வில் அதிக மார்க் எடுத்திருந்தால் உடல்திறன் தேர்விலும் நேர்காணலிலும் மார்க் குறைந்தாலும் சரிக்கட்ட முடியும். எனவே, முதலில் நடைபெறும் எழுத்துத் தேர்வு மிகவும் முக்கியமானது' என்று சொன்னவர், ''தேர்வு பாடத்திட்டம் பட்டப்படிப்பு தரத்தில் இருக்கும் என்றாலும் ப்ளஸ் டூ தரத்தில்தான் தேர்வுக்கான பாடத்திட்டத்தை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்​வாணையம் கொடுத்​துள்ளது. எனவே, ப்ளஸ் டூ தரத்​தில் படித்தால் போதும். தேர்வுக்குக் கொடுக்​கப்பட்டுள்ள பாடத்​திட்​டங்களை பள்ளிப் பாடப் புத்தகங்களில் இருந்து தலைப்பு வாரியாக குறிப்பு எடுத்துப் படிக்க வேண்டும். உதாரணமாக அறிவியல் பாடத்திட்டம், 'அறிவியல் விதிகள், அறிவியல் கருவிகள், புதுப்புனைவுகளும் கண்டு​பிடிப்புகளும், விஞ்​ஞானிகளின் பங்களிப்பு, மனித உடற்செயலியல், நோய்கள், நோய்களுக்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள், உணவும் சமச்சீரான உணவும், மனித மரபியல், விலங்குகள் மற்றும் பறவைகள், சுற்றுச்சூழலும் வாழிடமும், தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள்  காரங்கள், உப்புகள், இயக்கம்  நியூட்டனின் இயக்க விதிகள், பருப்பொருள் மற்றும் மின்னியலின் இயல்புகள், தேசிய ஆராய்ச்சி நிலையங்கள்’ என்ற தலைப்பில் பாடத்திட்டம் தரப்பட்டுள்ளது. அந்தத் தலைப்புகளில் உள்ளவற்றை கருத்தூன்றி படித்தால் போதுமானது.  
காவல் துறை ஒதுக்கீட்டில் தேர்வு எழுதுகிறவர்களுக்குப் பொது அறிவு வினாத்​தாளும் உண்டு. பொதுப்பிரிவில் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதே பாடத்திட்டம்தான் காவல் துறை ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு எழுதுவோருக்கும் தரப்பட்டுள்ளது. கூடுதலாக அவர்கள், காவல் நிலைய ஆணைகள், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சிய சட்டம், போலீஸ் நிர்வாகம் ஆகியவற்றைப் படிக்க வேண்டும்.
அன்​றாடம், காவல் நிலையங்களில் செயல்​முறைகளில் இருக்கும் காவல் நிலை ஆணைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, காவல் நிலை ஆணை 151 என்பது என்ன சொல்கிறது என்றால், 'காவல் துறையினர் சித்ரவதை செய்ததாக அல்லது மரணம் விளைவித்ததாக அல்லது கொடுங்காயம் ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகளின் பேரில் நடைமுறை’ என்பதை விவரிக்கிறது. சட்டப் பாடங்களில் காவல் துறை சார்ந்த விஷயங்கள் தெரிந்திருந்தால் போதுமானது.  
மேலும், சப்இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு என்று வந்துள்ள நோட்ஸ்களில் முந்தைய தேர்வுகளின் வினா  விடைகளைக் கொடுத்திருப்பார்கள். வினாக்களின் அமைப்பு, எந்தெந்த பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, கேள்விகள் எப்படி கேட்கப்படுகின்றன என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள இது உதவும். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால்தான் அடுத்தகட்டத்துக்குப் போக முடியும். சிலருக்கு உயரம், மார்பளவு விரிவு செய்தல் போன்றவற்றில் சிறிய அளவில் குறைபாடு இருந்தால் முறையான உடற்பயிற்சி மூலம் அதைச் சரிசெய்து விடலாம். எனவே, அதைப் பற்றி இப்போது கவலைப்படாமல் எழுத்துத் தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஹால் டிக்கெட் வந்த பிறகு முதல் நாளே தேர்வு மையத்தைப் பார்த்து பதற்றம் இல்லாமல் மறுநாள் தேர்வு எழுதச் செல்லுங்கள். தேர்வுக் கண்காணிப்பாளர் சொன்னவுடன் கேள்வித்தாளை பிரித்துப் பார்க்க வேண்டும். தேர்வு எழுதுவோருக்குத் தரப்பட்டுள்ள குறிப்புகளைப் படித்துப் பார்க்க வேண்டும். முதலில், தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதிவிட வேண்டும். இரண்டாவதாக, முடிந்தவரை எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். மூன்றாவதாக, முதல் இரண்டு விதிகளையும் நிச்சயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த மூன்று விதிகளையும் கடைப்பிடித்தால் தேர்வில் வெற்றி பெறலாம். நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். வாழ்த்துகள்!'' என்று சொல்லி முடித்தார்.

'இதைப் படிங்க... பாஸ் பண்ணுங்க!’

சப்இன்ஸ்பெக்டர் தேர்வு பட்டப்படிப்பு  தரத்திலானது என்றாலும் தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான அறிவியல், சமூக அறிவியல், கணிதம், தமிழ் ஆகிய எல்லா பாடப்புத்தகங்களையும் ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூவில் வரலாறு, பொருளியல், வணிகவியல், அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களையும் நன்கு படித்தால் போதுமானது. ஆனால், எல்லா பாடங்களையும் படிக்க வேண்டும். இதுவரை நடைபெற்ற எல்லா தேர்வுகளிலும் தமிழக வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, சங்க காலம், தமிழ் அறிஞர்கள், புலவர்கள், கவிஞர்கள், தலைவர்கள் தொடர்பான கேள்விகள் அதிக அளவில் கேட்கப்பட்டுள்ளன. எனவே, தமிழ் பாடநூலின் ஆசிரியர் குறிப்புப் பகுதிகளை நன்கு படிக்க வேண்டும். உளவியல் பகுதியில் 30 மதிபெண் தரப்பட்டுள்ளன. கணிதம் மற்றும் அறிவுக்கூர்மை கேள்விகளுடன் மனிதனின் இயல்பான நடைமுறை அறிவை சோதிக்கும் வகையிலும் உளவியல் வளத்தை சோதிக்கும் வகையிலும் கேள்விகள் இருக்கும். பொதுப்பிரிவினருக்கு, பொது அறிவுப் பகுதிக்கு 40 மதிப்பெண்; உளவியல் அறிவுக்கூர்மைக்கு 30 மதிப்பெண். மொத்த கேள்விகள் 140. ஒரு கேள்விக்கு அரை மதிப்பெண் வீதம் மொத்த மதிப்பெண் 70. தேர்வுக் காலம் 2.30 மணி நேரம்.
காவல் துறை ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு பொது அறிவு 15 மதிப்பெண். இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், காவல் நிலை ஆணைகள் மற்றும் காவல் நிர்வாகம் ஆகியவற்றுக்கு 70 மதிப்பெண். ஆக மொத்தம் 170 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் அரை மதிப்பெண் வீதம் 85 மதிப்பெண். தேர்வுக் காலம்: 3 மணி நேரம்.


No comments:

Post a Comment