'டொய்டொடொடொய்...’ என்ற பின்னணி இசையுடன் வட்டவடிவ லோகோ உருண்டு முடித்ததும், 'வணக்கம்... செய்திகள் வாசிப்பவர்...’ என இவர்கள் வாசிக்கும் செய்திதான் அப்போதைய தலைமுறைக்கு கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்றதையும், இந்திரா காந்தி மரணத்தையும் சொல்லியது. செய்திகளைக் கவனிக்கிறோமோ இல்லையோ... 'புடவை சூப்பர்ல’ என்பது தொடங்கி நெற்றிப் பொட்டு, கழுத்து செயின், சிகையலங்காரம் வரை டிரெண்டிங் ஃபேஷன் உண்டாக்கியவர்கள் டி.டி செய்தி வாசிப்பாளர்கள். ஆனால், இன்று நூற்றுக்கணக்கான செய்தி சேனல்கள், வலைதளங்கள், மொபைலில் செய்தி சேவைகளுக்கு இடையே செய்தி வாசிப்பாளர்களுக்கு எனப் பிரத்யேக இலக்கணமும் இடமும் இல்லாமலேயே போய்விட்டது!
'கோல்டன் பீரியடு’ டி.டி செய்தி வாசிப்பாளர்கள் 'எய்ட்டீஸ், நைன்ட்டீஸ் நடிகர்கள்’போல ஒரு ரீயூனியன் சந்திப்பு நிகழ்த்த... அந்தச் செய்தி உள்ளது உள்ளபடி இங்கே...
'ஹேய்... எப்படி இருக்க?’ என்ற செல்ல அணைப்புகள், 'லெட்ஸ் டேக் எ செல்ஃபி’ என மின்னும் புன்னகைகள், 'முதல் நாள் லைவ்ல நீ பண்ண கலாட்டா... சான்ஸே இல்லை’ என 'அந்த நாள்’ ஞாபகங்களுடன் உருக்கமும் நெருக்கமுமாக இருந்த சந்திப்பை ஒருங்கிணைத்தது செந்தமிழரசு, அருணகிரி, விஜய் கிருஷ்ணன் ஆகியோரின் ஆர்வம்.
'எனக்கு குரு அவங்கதான். ஒவ்வொரு வார்த்தைக்கும் உச்சரிப்பு சொல்லிக் கொடுத்தது அவங்கதான். நல்லா பேசுறப்போ பாராட்டவும் செய்வாங்க. அவங்க இல்லேன்னா ரொம்பக் கஷ்டமாகி இருக்கும்’ என அத்தனை பேரும் வாய் நிறைய, மனம் நிறைய உச்சரிக்கும் பெயர்... ஷோபனா ரவி.
''அச்சோ... அதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க. அவங்க நல்லா பண்ணினப்போ பாராட்டினேன். கத்துக்கணும்னு விரும்பினப்போ கத்துக்கொடுத்தேன். ஆனா, இப்போ இவ்வளவு பேர் சொல்லும்போது, 'நான் என் வேலையைச் சரியா செஞ்சிருக்கேன்’னு தோணுது. ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என ஷோபனா வெட்கத்துடன் சிரிக்க, ''அப்போ ஒவ்வொரு செய்திவாசிப்பாளருக்கும் தனித்தனி ரசிகர்கள் இருந்தாங்கன்னா, எல்லா செய்தி வாசிப்பாளர்களும் ஷோபனா மேடமுக்கு ரசிகர்கள். ஒவ்வொரு வார்த்தையை உச்சரிக்கிறது மட்டும் அல்ல. அப்போ முகத்தை எப்படிக் கம்பீரமா வெச்சுக்கணும்... ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவுல எவ்வளவு இடைவெளி விடணும்னு எல்லாமே அவங்ககிட்டதான் கத்துக்கிட்டோம்'' என்றார் விஜய் கிருஷ்ணன்.
''போதும் நிறுத்துங்க ப்ளீஸ். எனக்கே கூச்சமா இருக்கு. அப்பவும் இப்பவும்... எல்லாருமே நல்ல செய்தி வாசிப்பாளர்கள்தான். என்ன நான் கொஞ்சம் சீனியர் ஆகிட்டேன். அவ்வளவுதான்'' என ஷோபனா சொல்ல, தொடர்ந்தார் பாத்திமா பாபு.
''அப்போ டி.டி-ல செய்தி வாசிப்பாளர்கள் தேர்வுக்கு 250 பேர் வருவாங்கன்னா... முதல் பார்வைக்கே ஒருத்தர் முகமும் திருப்தி இல்லைனா, எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. அதையும் தாண்டி அடுத்த ரவுண்டு போனா பத்துப் பக்கம் வாசிக்கச் சொல்வாங்க. அதுல ஒரே ஒரு வார்த்தை சொதப்பிட்டாக்கூட... காலிதான்.
அதனால அப்போ டி.டி இன்டர்வியூல கலந்துக்கிட்டதையே ஒரு தகுதியாச் சொல்லி மத்த சேனல்கள்ல வேலைக்குச் சேர்ந்தாங்க நிறையப் பேர்.''
''எனக்கு டி.டி-ல இருந்து நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வந்ததுமே, ஆர்வம் தாங்காம உடனே கிளம்பிப்போயிட்டேன். அங்கே பயங்கரக் கூட்டம். 'என் நம்பர் 1007. என்னை எப்போ கூப்பிடுவாங்க’னு விசாரிச்சேன். சிரிச்சுட்டாங்க. '1007-ங்கிறது வெறும் நம்பர் இல்லை. உங்களுக்கு முன்னால 1,006 பேர் இருக்காங்க. அவங்களுக்கு நேர்முகத் தேர்வு முடிஞ்ச பிறகுதான், உங்களுக்கு அழைப்பு வரும். அதுக்கு இன்னும் ஒரு வாரம் ஆகும்’னு கொடுத்தாங்க பாருங்க ஒரு ஷாக். அப்புறம் அந்தப் பட்டியல் 750 பேரா குறைஞ்சு, பிறகு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இப்போ நான் சி.பி.சி.ஐ.டி-யில் சிறப்பு அரசுத் தரப்பு வழக்கறிஞர். பல விசித்திரமான விநோதமான வழக்குகள் வருது. அதையெல்லாம் சமாளிக்க டி.டி-யில் ஒரு செய்தி வாசிப்பாளரா நான் எடுத்த பயிற்சி ரொம்ப உதவுது. கிட்டத்தட்ட பரீட்சைக்குப் படிக்கிற மாதிரி அப்போ நாங்க செய்தி வாசிக்கத் தயார் ஆவோம். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு சூழ்நிலையில் என்ன அர்த்தம், எதைச் சொல்லலாம்... எதைத் தவிர்க்கலாம்னு பாலபாடம் கத்துக்கொடுத்தது டி.டி-தான்'' - இது ஜெயந்தி ஆனந்தின் சிலாகிப்பு.
''ஷோபனா ரவி மேடம் நியூஸ் வாசிக்கும்போது பார்க்கணுமே... அவ்வளவு கூலா இருப்பாங்க. ஒரு தடவை கிரிக்கெட் செய்தி வாசிச்சுட்டு இருக்காங்க. அப்போ ஒருத்தர் அப்போதைய ஸ்கோர் பார்த்துட்டு வந்துசொல்றார். அதை அப்படியே காதுல வாங்கிட்டே அது சம்பந்தமான செய்தியை ஃப்ளோவா சொல்றாங்க. செமல்ல?'' என ஷோபனா ரவிக்கு மீண்டும் ஒரு லைக்கிட்டார் நாச்சியார்.
''எனக்கு செய்தி வாசிக்கக் கிடைச்ச அனுபவமே செம கலாட்டா...'' என சிரிப்பை அடக்கியபடி கதை சொன்னார் ரத்னா.
''டி.டி-யில் எப்படி செய்தி வாசிக்கிறாங்கனு கவனிக்கிற ஒரு 'அப்சர்வேஷனுக்காக’ நான் அன்னைக்கு ஸ்டுடியோ போயிருந்தேன். ஆனா, செய்தி வாசிப்பாளருக்கு 'லைவ்’ ஆரம்பிக்கிற நேரம் பார்த்து தொடர்ச்சியா இருமல் வர ஆரம்பிச்சிடுச்சு. அவரால் சமாளிக்கவே முடியலை. டேபிளுக்கு கீழ கையால சைகை காமிச்சு, 'நீ வந்து வாசி’னு சொல்றார். எந்த முன்தயாரிப்பும் இல்லாம, போய் உக்கார்ந்து கடகடனு செய்தி வாசிச்சுட்டேன். அப்போ எனக்குள்ள எந்தப் பதற்றமும் இல்லை. ஆனா, அப்புறம் யோசிச்சா 'இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’னு தோணுச்சு'' என ரத்னா முடிக்க, ''இப்போ திரை விமர்சனம் வரை அசத்துறீங்களே ரத்னா'' என அவருக்கு ஒரு சபாஷ் கொடுத்தார் சாந்தி.
''முன்னாடி நாம நியூஸ் ஸ்க்ரோல் ஆகிறதையும் கட்டுப்படுத்திக்கிட்டு, செய்தியையும் உணர்ச்சிபூர்வமா வாசிச்சுட்டு... அப்பப்பா எவ்ளோ சவால்! ஆனா, இப்போ எல்லாம் கம்ப்யூட்டரைஸ்டு ஆகிடுச்சு. ஒருநாள் நிலநடுக்கத்துல சென்னையே லேசா குலுங்குது. நான் சேர்லதான் ஏதோ பிரச்னைபோலனு நினைச்சு செய்தி வாசிச்சுட்டு வர்றேன். அப்புறம் டி.வி பார்க்கும்போதுதான் தெரியுது... நிலநடுக்கம் வந்ததுகூடத் தெரியாம நான் செய்தி வாசிச்சிருக்கேன்னு. இன்னொரு நாள் பீச் ரோட்ல இருக்கிற டி.டி அலுவலகத்துக்குப் போறதுக்கு ரொம்ப முன்னாடியே வழியெல்லாம் அடைச்சுட்டாங்க. என்னனு விசாரிச்சா.... சுனாமி! மொத்தக் கும்பலும் கடலைவிட்டு விலகி ஓட நான் மட்டும் போலீஸ்கிட்ட போய், 'நான் போய்தான் செய்தி வாசிக்கணும்’னு சொல்லிப் புரியவெச்சுட்டுப் போனேன். செம த்ரில் அனுபவம்'' என சிலிர்க்கிறார் சாந்தி. தொடர்ந்து இதே ரீதியில் பலரும் பலப்பல அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள, இப்போது செய்திகளின் பரிணாமம் குறித்தும் அலசினார்கள்.
''இந்தத் துறையின் சூப்பர் சீனியர்களான உங்க எல்லாருக்கும் ஒரு கேள்வி... இப்போ செய்தி வாசிக்கிறவங்களுக்கு நீங்க சொல்ல விரும்புற டிப்ஸ் என்ன?''
ஒரு நொடி அமைதிக்குப் பின் அனைவரின் பார்வையும் ஷோபனா ரவி பக்கம் திரும்ப, அவர் சட்டெனச் சுதாரித்து 'நான் மாட்டேன்’ என்பதுபோல சைகையாலேயே மறுக்க. ''சரி... எல்லார் சார்பாகவும் விஜய் கிருஷ்ணன் சொல்வார். அவர் இப்போ செய்தி வாசிக்கும் பயிற்சியும் கொடுத்துட்டு இருக்கார். அவர் சொல்றது சரியா இருக்கும்'' என்றார் செந்தமிழரசு.
''வெறுமனே ஒரு நியூஸ் ரீடரா மட்டும் இருக்காதீங்க. ஒரு நியூஸ் பிரசன்டரா இருங்க. நாம செய்தி வாசிக்கிறதைப் பார்க்கிறவங்களுக்கு, அவங்க வீட்டுக்குள்ளயே ஒருத்தர் நுழைஞ்சு செய்தி சொல்ற நட்புஉணர்வைக் கொடுக்கணும். உடைகள்ல கவனம் இருக்கிற அதே அளவுக்கு வார்த்தைகளிலும் அதன் உச்சரிப்பிலும் கவனம் இருக்கணும். முக்கியமா செய்தி வாசிக்கும்போது, அது நம்ம முகத்தில் எந்தச் சலனத்தையும் உண்டாக்கக் கூடாது. எந்தச் செய்தியை எப்படிப்பட்ட குரலில் உச்சரிக்கணும்னு தீவிரப் பயிற்சி எடுத்துக்கணும். ஒவ்வொரு செய்திக்குமான குரல் தொனியே, அந்தச் செய்தியின் மூடுக்கு நம்மைக் கொண்டுபோகணும். கண்களை மூடிட்டுக் கேட்டா, காதில் விழும் செய்தியின் விஷ§வல்கள் நம்ம மனசுல பரவணும்'' என விஜய் கிருஷ்ணன் சொல்ல... அனைவர் கண்களிலும் ஆமோதிப்பு சிக்னல்.
பேட்டி முடிய, சந்திப்பு தொடர்ந்தது.
'பசங்க என்ன பண்றாங்க?’, 'வீட்ல விசேஷம்... அவசியம் வரணும்!’, 'அப்படியே இருக்கீங்களே.... என்ன டயட்?’ என்றெல்லாம் நலம் விசாரிப்புகளுக்கு இடையே வரதராஜன், ''ஏம்ப்பா.... இந்தியா மேட்ச் ஸ்கோர் என்ன?'' எனக் கேட்க, சொல்லிவைத்ததுபோல அனைவரும் தேடியெடுத்துக் கிளிக்கியது அவரவர்களின் மொபைல்!
''சரி... சரி... ஒரு நிமிஷம் எல்லாரும் இங்கே கவனிங்க. அட்டென்ஷன் ப்ளீஸ்'' எனக் குரல் கொடுத்து கவனம் ஈர்த்த சுரேஷ், ''உங்க எல்லாரோட மொபைல் நம்பரும் கொடுங்க. கிட்டத்தட்ட 20 வருஷம் கழிச்சு எல்லாரும் ஒண்ணு சேர்ந்திருக்கோம். இந்த ரீயூனியன் அப்படியே தொடரணும். நமக்கே நமக்குனு ஒரு வாட்ஸ்அப் குரூப் சேர்த்துருவோம்'' என்றார்.
ஆன் தி ஸ்பாட்டில் உருவாகியது 'செய்திகள் வாசிப்பவர்’ வாட்ஸ்அப் குரூப்!
No comments:
Post a Comment