சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Mar 2015

கிரிக்கெட் பார்க்க சைக்கிளில் பயணம்... சச்சின் வீட்டில் சாப்பாடு... ஜெயில் தண்டனையும் உண்டு!

சுமார் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பாதிபேர் கிரிக்கெட் ரசிகர்கள். கிரிக்கெட் உலகளாவிய விளையாட்டாக மாற இந்த ரசிகர்கள்தான் காரணம்.
இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டுமென்றால் ஒரு சில ரசிகர்கள் கிரிக்கெட்டுக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு கிரிக்கெட்டால் பெரிய அளவில் பலன் இல்லை. ஆனாலும் கிரிக்கெட்டை அவர்கள் நேசிக்கும்விதமே தனி. பீகாரை சேர்ந்த சுதிர்குமார் சவுத்ரியும் அந்த ரகம்தான். இந்திய அணி எங்கே சென்றாலும் பின்னாலேயே சுதிரும் செல்வார். சச்சின் வீட்டில் சாப்பிடுவார். தெருவோரம் படுத்துக் கொள்வார், ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பார்..திடீரென்று பாகிஸ்தானில் இருப்பார். மறுநாள் லணடன் பறப்பார். தீவிர கிரிக்கெட்  பக்தரான சுதிர்குமார் பற்றிய சில சுவாரஸ்யங்கள் இங்கே...

கடந்த 2002ஆம் ஆண்டு கொல்கத்தா ஏடன் கார்டனில் நடைபெற்ற இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டிதான் சுதிருக்கும் சச்சினுக்குமிடையேயான அறிமுகத்தை முதன் முதலாக ஏற்படுத்தியது. அந்த போட்டியை டி.வி.யில் பார்த்த சுதிர்குமார் சச்சினின் தீவிர ரசிகரானார்.


அடுத்த ஆண்டு அதாவது 2003ஆம் ஆண்டு மும்பையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்தியா--நியூசிலாந்து அணிகள் மோதின.இந்த போட்டியை பார்க்க, பீகாரின் முஷாபர்பூரில் இருந்து மும்பைக்கு சைக்கிளில் பயணத்தை தொடங்கினார் சுதிர். சுமார் 1700 கி.மீ தொலைவு பயணித்து மும்பை வந்தடைந்தார். சச்சினை சந்தித்து விடவேண்டுமென்பதுதான் அப்போது அவருடைய ஒரே நோக்கம்.

மும்பையில் டிரிடன்ட் ஹோட்டலில், சச்சினின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று கொண்டிருப்பதாக சுதிர்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த ஹோட்டலுக்கு சென்ற சுதிர்குமார் எப்படியோ செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் அறைக்குள்ளும் புகுந்து விட்டார். அங்கே பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்கள் சூழ்ந்திருக்க, அனைவர் முன்னிலையிலும் அப்படியே சச்சின் காலில் விழுந்து விட்டார் சுதிர். 

சச்சினிடம் கிரிக்கெட் மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்த, இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் அசந்து விட்டார். அன்றைய தினமே சச்சினே தனது காரில் சுதிரை வீட்டுக்கு மதிய உணவுக்கு அழைத்து சென்றார். மதிய உணவுக்கு பின் சச்சின் நியூசிலாந்து- இந்திய அணிகளுக்கிடையேயான போட்டியை காண டிக்கெட்டும் வழங்கினார். சுதிருடன் பேசும் போது, அவருக்கு அப்போது கல்லூரி தேர்வு நடக்கவிருப்பதை சச்சின் தெரிந்து கொண்டார். தேர்வு எழுதிவிட்டு வருமாறு சச்சின் சுதிரிடம் கேட்டுக்கொண்டார்.ஆனால் சுதிரோ தேர்வு எப்போது வேண்டுமானாலும் எழுதலாம்... என்று மும்பையிலேயே இருந்து போட்டியை பார்த்து விட்டுதான் பீகார் கிளம்பினார்.

கட்டாக்கில் நடந்த நியூசிலாந்து - இந்தியா போட்டியின் போது, இந்திய அணி தோற்கும் நிலையில் இருந்தது. அப்போது மைதானத்திற்குள் புகுந்த சுதிர்குமார் சச்சினின் காலை தொட்டு வணங்கினார். பின்னாலேயே போலீசும் துரத்திக்கொண்டு வந்தது. சுதிரை பிடித்து சென்ற போலீசாரிடம் தயவு செய்து அவரை அடித்துவிடாதீர்கள் என சச்சின் கேட்டுக் கொண்டார். 

அடுத்து ஹைதரபாத்தில் நடந்த போட்டியின் போது சச்சின் சதமடித்தார். மைதானத்திற்குள் புகுந்த சுதிர் சச்னின் பாதங்களை தொட்டார். பின்னாலே வந்த போலீஸ் சுதிரை குண்டுகட்டாக தூக்கி சென்று ஜெயிலில் போட்டுவிட்டது. 

தொடர்ந்து மும்பைக்கு சென்ற சுதிர், சச்சினை நேரில் சந்தித்தார். அப்போது பீகாரில் விளையும் அரியவகை பழமான லிட்டிஸ் பழங்களையும் கையோடு எடுத்து சென்று சச்சினுக்கு வழங்கினார். அன்று முதல் சச்சினுக்கும் சுதிருக்கும் ஒரு பிணைப்பு ஏற்பட்டு விட்டது. அதற்கு பின் சுதிர் பார்க்கவுள்ள அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் சச்சினே செலவு செய்யத் தொடங்கினார். 

கிரிக்கெட் பைத்தியம் காரணமாக 3 வேலைகளை சுதிர் இழந்துள்ளார். முதலில் முஷாபர்பூரில் உள்ள சுதா பால் நிறுவனத்தில் வேலை தொலைந்தது. அடுத்து சிக் ஷா மித்ரா என்ற நிறுவனத்தில் 2004ஆம் ஆண்டு வேலை கிடைத்தது. அந்த சமயத்தில் இந்திய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செல்ல, வேலை வேண்டாம் என்று கூறிவிட்டு பாகிஸ்தானுக்கு சைக்கிளில் சென்று விட்டார்.
பாகிஸ்தானில் இவருக்கு ஆதரவளித்தது யார் தெரியுமா? பாகிஸ்தான் அணியின் தீவிர கிரிக்கெட் ரசிகரான சாச்சா என்பவர்தான். லாகூர் வந்த சுதிர்குமாரை அன்போடு வரவேற்ற சாச்சா என்ற செல்லப் பெயர் கொண்ட அந்த ரசிகர், கிட்டத்தட்ட சுதிரை தத்து எடுத்துக் கொண்டார். பாகிஸ்தானில் இருந்த வரை இருவரும் சேர்ந்தே போட்டிகளை காண செல்வார்கள், வருவார்கள். 

இந்தியாவில் போட்டி நடந்தால் ரயிலில் செல்வதுதான் சுதிர்குமாரின் வழக்கம். ரயிலில் செல்வதற்காக சுதிர்குமார் டிக்கெட் எடுப்பதில்லை. பல முறை சச்சினின் தீவிர ரசிகர் என்பதால் விடுவிக்கப்பட்டார். ஒரு முறை டிக்கெட் பரிசோதகர் ஒருவர், நீங்கள் சச்சின் பெயரை களங்கப்படுத்துகிறீர்கள் என்று கூறிவிட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த சுதிர் அதற்கு பின், பிளாட்பார டிக்கெட் இல்லாமல் கூட ரயில் நிலையங்களுக்கு செல்வதில்லை. 

ஐ.பி.எல் போட்டியில் சச்சின் ஆடுவதால் மும்பை இந்தியன்ஸ் அணியின் தீவிர ரசிகராகிவிட்டார் சுதிர் குமார்.இரண்டாவது சீசன் ஐ.பி.எல். போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளையும் சுதிர்குமார் நேரில் பார்த்துள்ளார். இரண்டாவது சீசன் ஐ.பி.எல். போட்டிகள் தென்ஆப்ரிக்காவில் நடைபெற்றதால், ஸ்பான்ஷர்களை பிடிக்க சுதிர்குமாரால் இயலவில்லை.

கடந்த 2009ஆம் ஆண்டு கான்பூரில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அதனை பார்க்க சுதிர்குமார் வேலி தாண்டி உள்ளே குதித்து விட்டார். போலீசார் பின்னி எடுத்து விட்டனர். அந்த சமயத்தில் சச்சின்தான் சுதிர்குமாரை காப்பாற்றியிருக்கிறார். மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் சச்சின் அறிவுரை வழங்கினார். 

கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய முதல் ஆட்டம் மிர்பூரில் நடந்தது. இந்த போட்டியை பார்க்க மிர்பூர் சென்ற சுதிர்குமார், தனது தலைமுடியை இந்தியா போன்றே வெட்டிக் கொண்டார்.
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்ற போது, இந்திய அணி வீரர்களின் டிரெஸ்சிங் அறையில் இருந்து சச்சின் அழைப்பதாக சுதிர்குமாரை வந்து இரண்டு பேர் அழைத்து சென்றனர். அங்கு இந்திய வீரர்களுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாட சுதிரும் அனுமதிக்கப்பட்டார். உலகக் கோப்பையை கையில் ஏந்தியவாறு இந்தியா...இந்தியா என்று கோஷமிட்ட அந்த சாதாரண ரசிகரின் புகைப்படம் அடுத்தநாள் வட இந்திய பத்திரிகைகள் அனைத்திலும் இடம் பெற்றிருந்தது. 

சச்சின் விளையாடிய வரை சுதிரின் உடலில் சச்சின் என்றே எழுதப்பட்டிருக்கும். சச்சின் ஓய்வு பெற்ற பின்னர் 'மிஸ் யூ சச்சின்' என்ற வாசகம் சுதிரின் உடலை அலங்கரிக்கிறது.

நடப்பு உலகக் கோப்பையை முன்னிட்டு சுதிர்குமார் ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளார். இதற்கு ஃபீவர்104 என்ற ரேடியோ நிறுவனம் ஸ்பான்ஷர் செய்துள்ளது. எனினும் சுதிருக்கு விசா கிடைக்கவில்லை. இந்த சமயத்தில் சச்சின்தான், சுதிர்குமார்  இந்தியாவின் அடையாளம். அவருக்கு விசா வழங்க ஆவண செய்யவும் என்று டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்துக்கு கடிதம் எழுதினார். பின்னர் விசா வழங்கப்பட, இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு ஒருநாள் முன்னதாக சுதிர்குமார் ஆஸ்திரேலியா சென்றுவிட்டார். 

உலகக் கோப்பை போட்டிகளின் போது, தனக்கு ஸ்பான்ஷர் செய்யத ரேடியோ சேனலுக்காக வீடியோ கிளிப்புகள், வீரர்களின் பேட்டிகள்,ரசிகர்களின் பேட்டிகளை தயார் செய்து சுதிர் அனுப்புகிறார். சுதிர்குமார் பேட்டி கேட்டால் எந்த கிரிக்கெட் வீரரும் மறுப்பதில்லையாம்.
நியூசிலாந்தின் ஆக்லாந்து விமானநிலையத்தில், உடல் முழுவதும் மூவர்ணம் பூசிக்கொண்டு சுதிர்குமார் செல்ல,அவருக்கு 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் சச்சின் வழங்கிய கடிதத்தை காட்டி சுதிர்குமார் தப்பித்தார். 

தற்போது 33 வயதாகி கிட்ட சுதிர்குமார் திருமணம் செய்து கொள்ளவில்லை. கிரிக்கெட்தான் அவரது முதல் மனைவியாம். கல்யாணம் கட்டிக் கொண்டு ஒரு பெண்ணுடைய வாழ்க்கையை பாழாக்க விரும்பவில்லை என்கிறார். 


சுதிர்குமாரின் கிரிக்கெட் பைத்தியம் காரணமாக அவரது தந்தை இவரிடம் பேசுவதில்லையாம். தந்தை வீட்டில் இருந்தால் சுதிர்குமார் வீட்டுக்கு செல்வதை தள்ளிப்போட்டு விடுவாராம். ரக்ஷா பந்தன் சமயங்களில் வீட்டுக்கு சென்று தனது சகோதரியிடம் ராக்கி கட்டிக் கொள்கிறார். மற்றபடி பெரியதாக வீட்டுக்கும் சுதிருக்கும் தொடர்பு இல்லை. 

இந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்தும் ஒரே இலக்குதான் சுதிரின் மனதில் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் விஷயம். இந்த உலகில் உயிரோடு இருக்கும் வரை சச்சினின் பெயரை அவர் உடலில் தாங்கி நிற்க வேண்டுமென்பதுதான் அவரது ஒரே ஆசை.

சுதிர்குமார் போன்ற ரசிகர்களால்தான் கிரிக்கெட் உயிர் வாழ்கிறது உன்னதமாக... என்றே சொல்லத் தோன்றுகிறது!


No comments:

Post a Comment