சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Mar 2015

பலாத்காரம் செய்தவர் உயிருடன் இருப்பது கோபமளிக்கிறது: சானியா ஆவேசம்!

ஈவு இரக்கமின்றி பாலியல் பலாத்காரம் செய்தவர் இன்னும் உயிருடன் இருப்பது கோபமளிக்கிறது என்று சானியா மிர்சா ஆவேசமாக கூறி உள்ளார்.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி தனது நண்பருடன் சென்று கொண்டிருந்த 23 வயது துணை மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட ஒரு கும்பல் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்தது. அதன்பின், அந்த கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்ட அந்த மாணவி, பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டு, 5 பேர் திகார் சிறையிலும், ஒரு சிறுவன் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். இதில், ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மேலும், பேருந்து ஓட்டுனர் முகேஷ் சிங் என்பவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

உலக மகளிர் தினமான வருகின்ற 8 ஆம் தேதி ஒளிபரப்ப, இங்கிலாந்தை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வின் மற்றும் பி.பி.சி. குழுவினர் ’இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப் படம் ஒன்று எடுத்துள்ளனர். அதற்காக, திகார் சிறையில் அனுமதி பெற்று முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுத்துள்ளனர்.

அந்த பேட்டியில் முகேஷ் சிங், ''ஒரு கை எப்போதுமே ஓசை எழுப்பாது. அதற்கு இரண்டு கைகளும் தேவை. பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு ஆணைவிட பெண்ணே அதிக காரணமாகிறாள். ஆணும், பெண்ணும் ஒன்றல்ல. வீட்டு வேலைகள், வீடுகளை பராமரிக்கும் வேலைகளை மட்டுமே பெண்கள் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு, இரவு நேரங்களில் டிஸ்கோ கிளப்புகளை சுற்றுவது, பார்களுக்கு செல்வது, ஆபாசமான உடைகளை அணிவது, தவறான செயல்களை செய்வது போன்றவற்றை செய்யக் கூடாது.

மேலும், ஒரு நல்ல பெண் 9 மணிக்கு மேல் ரோட்டில் வெளியே சுற்றமாட்டாள். அந்த சம்பவத்தில் பலாத்காரத்தின்போது, அந்த பெண் எதிர்த்து போராடியிருக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. அவர் போராடியிருக்கக் கூடாது. நாட்டில் 20 சதவீத பெண்கள் மட்டுமே நல்லவர்கள்" என்று கூறி உள்ளார். 

இந்த பேட்டி குறித்து அறிந்த மத்திய அரசு, சிறை அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திகார் சிறை டைரக்டர் ஜெனரல் அலோக் குமாரை உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ''தண்டனை பெற்ற குற்றவாளி சிறை காவலில் இருக்கும்போது பேட்டி கொடுக்க அனுமதிப்பது மிகவும் தீவிரமாக கவனிக்க வேண்டிய சம்பவம். உடனடியாக இந்த சம்பவம் பற்றிய முழு விவரமும் அறிக்கையாக அளிக்க வேண்டும்" என்று கூறி இருக்கிறார்.

இந்நிலையில், இது தொடர்பாக டென்னிஸ் வீராங்கனையும் ஐக்கிய நாடுகள் சபையின் தெற்காசிய பிராந்திய மகளிர் நல்லெண்ண தூதருமான சானியா மிர்சா கூறும்போது, ''மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் அளித்த பேட்டியை பார்த்து எனக்கு கோபம்தான் வருகிறது. ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல் பேட்டி அளித்துள்ளார்.


மேலும், அவருக்கு மூளையில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். நல்லபடியாக உள்ள யாரும் இப்படி செய்யவும் மாட்டார்கள், பேசவும் மாட்டார்கள். ஈவு இரக்கமின்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ள அந்த நபர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதை நினைக்கையில் எனக்கு கோபம்தான் வருகிறது" என்றார்.


No comments:

Post a Comment