சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Mar 2015

மத்திய பட்ஜெட் எப்படி? - ஓர் அலசல்!

பாஜக தலைமையிலான அரசு முழுமையான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. சலுகைகள், பெயர் சொல்லும் படியாக புதிய திட்டங்கள் என்று எதுவும் இல்லாமலும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

நடுத்தர வர்க்கத்தினரைக் கவரும் வகையில் தனி நபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படலாம் அல்லது சேமிப்புத் திட்டங்களுக்கான முதலீட்டு வரம்புகள் உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்ப்புகள் நிலவியது. அதே போல் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் அறிவிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டது.அதுவும் நிறைவேறவில்லை.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட  இடைக்கால  பட்ஜெட்டில், வரிசெலுத்தும் தனிநபர்களுக்கு சலுகை  அளிக்கும் தனி அணுகுமுறை இருந்தது கவனிக்கவேண்டிய ஒன்று.

ஆட்சிக்கு வந்த நிலையில் தாக்கல் செய்யப்பட்டமுதல் நிதிநிலை அறிக்கை என்பதால் சில சலுகைகளை அருண் ஜெட்லி  அறிவித்திருந்தார் போலும். அந்த அறிக்கையில் தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருந்தது. அதேபோல், சேமிப்புத் திட்டங்கள் மீதான வரி விலக்கை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாக உயர்த்தினார்.  ஆனால் தற்போது தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில்  இது போன்ற நடுத்தர வர்க்கத்தினரை அருண் ஜெட்லி கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.அதே போல சாமான்ய மக்களையும் சிந்தனையில் கொள்ளாமல் உயர்தர வகுப்பினரையே முக்கிய இலக்காகக் கொண்டு அவர்களுக்கு நலன் தரும் அறிவிப்புகளால் தொகுக்கப்பட்ட அறிக்கையாகவே இந்த பட்ஜெட் பளிச்சிடுகிறது.


நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டை போலவே இந்த பொது பட்ஜெட்டும் இருக்கிறது. பல்வேறு திட்டங்களுக்கு அரசின் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், பொருளாதாரம் உயர் வளர்ச்சியை எட்டவும் கூடுதல் வருவாய் தேவை என்று அரசு  கருதுவதே இதற்குக் காரணம் என்று கூறப் பட்டாலும், மக்களுக்கு இனிப்புச் செய்தி தரும் பட்ஜெட்டே வரவேற்பை பெறுவது இந்திய வழக்கம் அல்லவா.

`மேக் இந்தியா`  என்ற இலக்கை நிர்ணயித்துச் செயல்படும் பாஜக அரசிடம் அதைத் தாண்டிய திட்டங்களை, செயல்பாடுகளை  வேண்டுவது பொருளற்றதே. ஆனாலும் இது போன்று  கோடிக் கணக்கானோர் எதிர்பார்த்து ஏமாந்துள்ளது அவ்வளவு சாதாரணமானதாக எடுத்துக் கொள்ள இயலாது.
மத்திய அரசு, பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் மற்றும் அந்நிய நேரடி முதலீடுகளை மட்டுமே பெரிதும் நம்பி இருப்பதை நிதிநிலை அறிக்கை தெளிவாக காட்டுகிறது. 2015-16 நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.5 விழுக்காடு என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறை மற்றும் உற்பத்தித் தொழில்துறையின் பங்களிப்பு குறைந்துள்ள நிலையில் எவ்வாறு சாத்தியமாகும் என்று தெரியவில்லை.
அதே போல பணவீக்க விகிதம் 5 விழுக்காட்டுக்குக் கீழே குறைந்துள்ளது என்றாலும், சேவை வரி 12.34 விழுக்காடு என்பது 14 விழுக்காடு என்று உயர்த்தப்படுவதால், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாது என்ற யதார்த்தம், கடுமையான சுமையை பொது மக்கள் மீது சுமத்தும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், பெட்ரோல் டீசல் மீதான வரிகளைக் குறைத்தால்தான் மக்களுக்குப் பலன் கிடைக்கும். ஆனால் மத்திய அரசு நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு, மக்களுக்கு அதிகப் பயன் தரும் மானியங்களை முழுதாகவே ரத்து செய்கின்ற நடவடிக்கையில்  தீவிரமாக இருக்கிறது என்பது முரண்பாடாக இருக்கிறது.

கடந்த காங்கிரஸ் அரசின் முக்கிய திட்டமான  கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை முடக்கிவிட்டதாக நாடு முழுவதும் பெருமளவில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் அதற்கு கூடுதல் நிதி ஒதுக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல கிராமப்புற ஆதராமான விவசாயத்தைக் காக்க முன்னேற்றம் தரும் திட்டங்கள் இல்லாதது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று.
ஆனால் அடுத்த ஆண்டுகளுக்கும் சேர்த்து வேளாண் கடனுக்காக 8.5 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 4 விழுக்காடு வட்டியில் வழங்கப்படும் கடன் தொகையை 3 இலட்சம் ரூபாயிலிருந்து அதிகரிக்க வேண்டும். ஓராண்டுக்குள் கடனை திரும்பச் செலுத்தத் தவறியவர்களுக்கு 14 விழுக்காடு அபராத வட்டியை இரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வைத்த நியாயமான கோரிக்கைகள் ஒதுக்கப் பட்டுவிட்டன.வேளாண் துறைக்கான முதலீடும் அதிகரிக்கவில்லை.
பிரதமரின் ‘இந்தியாவில் தயாரிப்பு’ திட்டத்துக்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், நிதிநிலை அறிக்கையில் அதுபற்றி எதுவும் குறிப்பிடப்படாமல் இருப்பது உள் அர்த்தம் கொண்டதாக தெரிகிறது.

மாறாக செல்வ வரியை ரத்து செய்து இருப்பதன் மூலம் மத்திய அரசின் ஆதரவு யார் பக்கம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் நாட்டின் பெரிய நிறுவனங்களுக்காக வரி விகிதம் 5 விழுக்காடு குறைத்துள்ளது பெரும் லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கே பலனைத் தரும். 

அதே நேரத்தில், செல்வ வரி மற்றும் வங்கிகளின் வாராக்கடன் வசூல் இலக்கை எட்ட முயற்சிக்காமல், நிதி ஆதாரங்களைத் திரட்ட பொதுத்துறைப் பங்குகள் விற்பனையை ஊக்குவிப்பது ஏற்கக்கூடியதும் அல்ல.

ஏழைகளின் அரசு என்று கூறிக்கொள்ளும் மத்திய அரசு, மக்கள் நலவாழ்வுக்கு, பொது சுகாதாரத் திட்டங்களுக்கு 10 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யாமல், பொது சுகாதரத் துறை காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

ஆண்டுமுழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கடுமையாக உழைக்கும் கோடிக் கணக்கான  தொழிலாளர்கள் வாழ்க்கையை சீர் குலைக்கும் வகையில், வருங்கால வைப்பு நிதி திட்டத்தில்  சேருவது கட்டாயம் என்பதை விருப்ப உரிமையாக மாற்றி இருப்பது மிகவும் தவறான முன்னுதாரணம்.வைப்புநிதி என்பது தொழிலார்களின் வாழ் நாள் சேமிப்பு ஆகும். அதில் மாற்றம் என்பது பல்வேறு விரும்பத் தகாத சிக்கல்கள் உருவாகி  தொழிலாளர்களின் எதிர்கால குடும்ப நலனைப் பாதிக்கும் செயல் அன்றி கண்டிப்பாக நன்மை தராது.

சிறு, குறு தொழில் முனைவோருக்குக் கடன் வழங்கும் திட்டம், தமிழகத்தில் உயர்தர எய்ம்ஸ்  மருத்துவமனை உருவாக்குதல், வரி விலக்குடன் கூடிய பத்திரங்கள் வெளியிடுதல் போன்ற வரவேற்கக் கூடிய அறிவிப்புகளும்  இருக்கின்றன.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , "இந்த பட்ஜெட்டில் ஒன்று மில்லை. ஏழை மக்களுக்கு எதிரானது.பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள் தான் இருக்கிறது. குறிப்பிட்டு சொல்லும்படி ஒன்றும் இல்லை" என்று கூறியிருப்பதையும்,
மல்லிகார்ஜுன கார்கே  “ மிகப்பெரும் கார்பரேட் நிறுவனங்களுக்கும் தொழிலதிபர்களூக்குமான பட்ஜெட். லோக் சபா தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளித்தவர்களுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட் இது. இது ஏழைகளுக்கானதாக இல்லை  சமூக நலத்திட்டங்களுக்கு போதுமான அளவு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை" என்று விமர்சித்து இருப்பதையும் புறந்தள்ள முடியவில்லை.

மொத்தத்தில் ஆளும் அரசுக்கு நன்மையையும், வாக்களித்த மக்களுக்கு நன்மை தீமை இரண்டும் தராத பட்ஜெட் இது.


No comments:

Post a Comment