சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Mar 2015

கனிமொழிக்கு திடீர் முக்கியத்துவம்: ஸ்டாலின் ஆதரவாளர்கள் குழப்பம்!

களிர் தினவிழாவின் முன்னேற்பாடு பணிகளுக்காக இந்த மாதத்தில் இரு முறை கோவைக்கு பயணம் சென்றார் கனிமொழி.  கனி மொழி கோவை வருவது புதிதல்ல. என்றாலும் அப்போதெல்லாம் கனிமொழி வருவதும் தெரியாது. போவதும் தெரியாது. திமுக தலைவரின் மகள் என்ற அந்தஸ்து பெற்றவரானாலும் விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையில் வெகு சிலரே விமான நிலையம் சென்று அவரை வரவேற்பார்கள். 

ஸ்டாலினின் ஆதரவாளர்கள் தென்படவே மாட்டார்கள். ஆனால் இந்த முறை கனிமொழியின் கோவை வருகை, திமுகவினருக்கு பல செய்திகளை சொல்லி சென்றிருக்கிறது. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி துவங்கி ஏராளமானோர் கனிமொழியை வரவேற்றார்கள். 

அவரோடு நாள் முழுவதும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக தி.மு.க. இளைஞரணி துணை செயலாளரும், ஸ்டாலினின் மிக நெருங்கிய ஆதரவாளருமான மகேஷ் பொய்யாமொழி, கனிமொழியோடு இருந்து விழா ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டார். 


இதற்கெல்லாம் கனிமொழி மகளிர் அணி செயலாளராகி விட்டார் என்பது மட்டும் காரணமல்ல. ஸ்டாலினின் முழு ஆதரவு அவருக்கு கிடைத்திருக்கிறது என்பதுதான். 'கனிமொழிக்கு கொடுக்கப்படும் இந்த திடீர் முக்கியத்துவத்துக்கு என்ன காரணம்? இது கட்சிக்கு நல்லதுதானா? என தி.மு.க.வினரிடையே பல விவாதங்களை இந்த சம்பவங்கள் உருவாக்கியுள்ளன.

இலக்கிய வாரிசு அரசியல் வாரிசானார்


2007 ஆம் ஆண்டு மாறன் சகோதரர்களுடனான மோதலுக்கு பின்னர், டெல்லியில் தயாநிதி மாறனுக்கு மாற்றாக மத்திய அமைச்சரவையுடன் நம்பகமான உறவு வைத்துக்கொள்ள ஒருவர் தேவையாக இருந்தது. அது யார் என்ற என்ற கேள்வி எழுந்தபோது, சங்கமம் கிராமிய கலைத்திருவிழா, இளைஞர் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் கவனிக்கப்பட்டு வந்த கனிமொழி, தயாநிதிமாறனுக்கு மாற்றாக டெல்லியில் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்டார். அதுவரை இலக்கிய வாரிசாக மட்டுமே அறியப்பட்டுவந்த கனிமொழி, கருணாநிதியின் ஆதரவு காரணமாக அரசியல் வாரிசாகவும் மாறினார். 

2007ல் மாநிலங்களவை உறுப்பினராக டெல்லியில் அரசியலில் அடியெடுத்து வைத்தார். ஆனால் டெல்லியே அவருக்கு பிரச்னையாக மாறிப்போனது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் அவருக்கும், கட்சிக்கும் சிக்கலை உருவாக்கியது. இதன் பின்னர் கனிமொழியை அரசியலை விட்டு நகர்த்த எல்லா முயற்சிகளும் நடந்தன. இதையெல்லாம் கடந்து 2013ல் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி, தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவராகவும் ஆனார்.
தி.மு.க.வில் ஸ்டாலின் - அழகிரி இடையிலான பகை, ஊர் அறிந்த விஷயம். ஆனால் ஸ்டாலின் - கனிமொழியிடையேயான பிரச்னை பெரிய அளவில் வெடிக்கவில்லை என்றாலும் நீறு புீத்த நெருப்பாகவே அது இருந்தது. கனிமொழி தீவிர அரசியலுக்கு வருவதை ஸ்டாலின் ஆரம்பத்தில் இருந்தே விரும்பவில்லை என்கிறார்கள் தி.மு.க.வினர். ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கனிமொழி சிக்கிய பின்னர் இது மேலும் தீவிரமடைந்தது. கனிமொழி பிரசாரம் செய்வதில் துவங்கி, அவர் விழாக்கள், கூட்டங்களுக்கு ஸ்டாலின் மறைமுகமாக தடைபோடத் துவங்கியதாக கூறப்பட்டது. "கனிமொழியால் ஸ்டாலினுக்கு ஒரு பிரச்னையும் இல்லையே? அப்படி இருக்க ஏன் கனிமொழிக்கு தொந்தரவு கொடுக்கிறார்?" என கருணாநிதி வெளிப்படையாகவே வருத்தப்பட்டதாகவும் தி.மு.க.வினர் சொல்கின்றனர்.

கை கொடுத்த தடைகளை தாண்டிய முயற்சி


இந்த தொந்தரவுகள் எல்லாம் கடந்து, அரசியலில் தொடர்ந்து முன்னேற முயற்சிகளை மேற்கொண்டார் கனிமொழி. "ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறை சென்று, சிறையில் இருந்து வெளிவந்த கனிமொழி, அப்போதைய சட்டமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய பெரும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் இதையெல்லாம் மீறி தமிழகத் தின் பல்வேறு பகுதிகளில் கனிமொழி பிரசாரம் செய்தார். அரசியல் கூட்டங்களிலும் தொடர்ந்து அவர் பங்கேற்றார். ஸ்டாலின் இருக்கும் போது மாநில அரசியலில் சாதிப்பது சாத்தியம் அல்ல என்பதை உணர்ந்திருந்தார். அதனால்தான் டெல்லியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்," என கனிமொழியின் ஆதரவாளர்கள் சொல்கின்றனர்.
இதற்கிடையே கட்சியில் முக்கிய இடத்தை பெற்று விட வேண்டும் என்பதில் கனிமொழி திடமாக இருந்தார். அதன்படியே  மகளிர் அணிச்செயலாளர் பதவியை பெற்று விட்டார் கனிமொழி. இந்த சூழலில் தான் ஸ்டாலின் செயல்பாட்டில் மாற்றங்கள் தென்படத் துவங்கியுள்ளன. அழகிரியைத்தொடர்ந்து கனிமொழியின் வளர்ச்சியையும் ஸ்டாலின் விரும்பவில்லை. இதை ஸ்டாலினின் ஆதரவாளர்கள் நன்கறிவார்கள். "கனிமொழியின் சார்பில் நடக்கும் விழாவுக்கு ஸ்டாலினும், அவரது ஆதரவாளர்களும் ஒத்துழைப்பதில்லை. பல நிகழ்ச்சிகள் நடத்துவதை ஸ்டாலின் தரப்பு தடுத்தது" என ஒரு கட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு அடங்கியது. 

இதற்கெல்லாம் உச்சகட்டமாக கடந்த ஆண்டு கனிமொழியின் பிறந்த நாளின்போது, அவரை சந்திப்பதை தவிர்க்க கோவை வந்து தங்கினார் ஸ்டாலின் என்று பேசப்பட்டது. இவையெல்லாம் ஸ்டாலின் - கனிமொழியிடையே பிரச்னை இருந்ததை அம்பலப்படுத்தியது. இந்த நேரத்தில் மகளிர் அணி செயலாளராக கனிமொழி எப்படி செயல்பட முடியும் என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் அதன் பின்னர் நடந்தவைகள் தான் எதிர்பாராத மாற்றம். 

கனிமொழிக்கு உதவும் ஸ்டாலின்


கனிமொழி மகளிர் அணிச் செயலாளராக பொறுப்பேற்றதும் பிரம்மாண்ட நிகழ்வு ஒன்றை நடத்த அவர் விருப்பப்பட்டார். கோவையில் மகளிர் தினவிழாவை கொண்டாடுவது என முடிவு செய்யப்பட,  அதற்கு முதலில் பச்சைக்கொடி கட்டியவர் ஸ்டாலின். அதோடு மட்டுமில்லாமல் கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியை அழைத்து, விழா ஏற்பாடுகளை கவனிக்குமாறு சொல்லி உத்தரவும் பிறப்பித்துள்ளார். மேலும் தனது இணைய பிரசாரத்தை கவனித்து வரும் மகேஷ் பொய்யாமொழியை,  கனிமொழியோடு அனுப்பி விழா ஏற்பாடுகளை கவனிக்க செய்தார். 

பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண்கள் ஏராளமானோரை அங்கு திரட்டி செல்லவும், மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டார். எல்லா வற்றுக்கும் மேலாக விழா முன்னேற்பாடுகளை நேரில் பார்வையிட செல் லவும் ஸ்டாலின் திட்டமிட்டார். ஆனால் மகளிர் அணி விழா என்பதால் நான் போவது சரியாக இருக்காது என கடைசியில் அந்த திட்டத்தை ரத்து செய்தார். எல்லாவற்றுக்கும் மேலாக மார்ச் 7,8 ம் தேதிகளில் கனிமொழி தலைமையில் நடக்கும் இந்த மகளிர் தின விழாவில் நிறைவுரையாற்றவும் ஒப்புதல் அளித் துள்ளார் ஸ்டாலின். 

குழப்பத்தில் ஸ்டாலின் ஆதரவாளர்கள்

ஸ்டாலினின் இந்த மாற்றத்தை அவருடன் நெருங்கி பழகியவர்களே ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். ஸ்டாலின் மாவட்ட வாரியாக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய போது பலரும் சொன்ன வார்த்தை, 'ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் நம் தோல்விக்கு காரணம். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியவர்களை நாம் ஒதுக்கி வைக்க வேண்டும்' என்பதுதான். அப்படி இருக்க ஸ்டாலினின் இந்த அணுகுமுறை ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக கருதப்பட்ட தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் கல்யாண சுந்தரம், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வெளிப்படையாக குரல் எழுப்பியபோது, ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் சொல்லி இருந்தார்.  அப்படி ஸ்டாலினை ஆதரித்தவர்கள் பலரும் ஸ்டாலினின் இந்த மன மாற்றத்தால் அதிர்ந்து போய் இருக்கின்றனர்.
ஸ்பெக்ட்ரம் புயல் வேகமாக வீசும்?

மகளிர் அணி செயலாளரானதன் மூலம் தமிழக அரசியலில் கவனம் செலுத்த துவங்கி விட்டார் கனிமொழி. ஸ்பெக்ட்ரம் என்ற ஊழல் அஸ்திரத்தையும், குடும்ப அரசியல் என்ற அஸ்திரத்தையும் எதிர்கட்சிகள் இனி இன்னும் பலமாக பயன்படுத்துவார்கள். அதை எப்படி எதிர்கொள்வது என்பதில்தான் சிக்கல் உள்ளது. எதில் இருந்து மீண்டு வர வேண்டும் என நினைத்தோமோ, அதில் மீண்டும் சிக்கிக் கொள்வது சரியாக இருக்காது," என்ற பேச்சும் எழுந்துள்ளது. 


"உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். அது ஒற்றுமையாக இருங்கள். ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுங்கள். நம்மவர்களையே எதிரிகள் போல் கருதாதீர்கள். ஏனென்றால் "பிரிவினை' பெருவினையாக மாறி தி.மு.க.வையே அழித்து விடும்" - கருணாநிதி சொன்ன வார்த்தைகள் இவை. இப்போது கனிமொழி விவகாரத்தில் ஸ்டாலின் இதைத்தான் கடைபிடிக்கிறார். இது நன்மையை தருமா அல்லது சிக்கலை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


No comments:

Post a Comment