சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Mar 2015

திருமணம்...பணம்...உல்லாசம்... ஒரு பெண்ணின் கதை!

திருமணம் சொக்கத்தில் நிச்சயக்கப்படுவதை விட ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்றே சொல்லலாம். திருமணம் என்ற பெயரில் நடக்கும் மோசடிகள் இன்று பலவிதம்.

முன்பெல்லாம் கோயில் விழா, திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட சுபகாரியங்களில் பங்கேற்கும் போது இன்னொரு சுபகாரியத்துக்கு வித்திடப்படும். ஆனால், இன்று உறவின் வட்டம் சுருங்கிபோய்விட்டது. திருமண தகவல் மையங்களிலும், இன்டர்நெட்டிலும் மணமகன், மணமகளை தேடும் படலம் நடந்து வருகிறது. பெரும்பாலான திருமணங்களுக்கு புரோக்கர்கள் வழிகாட்டுகின்றனர். சரியாக விசாரிக்கப்படாமல் அரங்கேறும் திருமணங்களின் சாயம், ஒருசில மாதங்களிலேயே வெளுத்துப் போய்விடுகிறது. அதோடு கணவன், மனைவிக்கு இடையே சரியான புரிதல் இல்லாமல் கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து வரை பிரச்னை செல்கிறது.


திருமணத்தையே முதலீடாக வைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்  கோவையை சேர்ந்த காயத்ரி என்ற இளம்பெண். இவரது நிஜப்பெயர் இந்து. இவரைப்பற்றி திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் விசாரித்தால், அவரது தந்திரங்களை பட்டியலிடுகின்றனர் காவலர்கள். இவரைப் போன்ற பெண்களிடம் ஆண்கள் உஷாராக இருக்க வேண்டும் போல!

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த இந்து, கோவையில் உள்ள அனாதை விடுதியில் தங்கி பி.எஸ்சி. பட்டம் பெற்றார். சிறுவயதிலிருந்தே ஆடம்பர பிரியராகவே இவர் இருந்துள்ளார். சொகுசு வாழ்க்கை வாழ திட்டமிட்ட அவர், திருமணத்தையே முதலீடாக மாற்றி இருக்கிறார். இன்டர்நெட் மூலமாகவும், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளத்தில் தன்னுடைய வசீகர புகைப்படத்தை பதிவு செய்து அதன் மூலம் வரன் தேடினார். அப்போது தன்னுடைய பெயரை காயத்ரி என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். காயத்ரியின் அழகில் முதலில் மயங்கியது தி.நகரை சேர்ந்த தொழிலதிபர் நரசிம்மராவ். காயத்ரியும், நரசிம்மராவும் மனவிட்டு போனில் பேசினார்கள். பிறகு 2010ல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், காயத்ரிக்கு எதிர்பார்த்த வாழ்க்கை கிடைக்கவில்லை. இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு நரசிம்மராவிடம் இருந்து விவாகரத்து பெற்றார் காயத்ரி.

இதையடுத்து வரன் தேடும் படலத்தை மீண்டும் தொடங்கினார் காயத்ரி. இந்த முறை சுபிக் ஷா, ரேணுகா, லட்சுமி என்று பெயர்களில் வரன்களை தேடினார். 2012ல் திருச்சியை சேர்ந்த ரவிக்குமாரை இவர் திருமணம் செய்தார். இந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. இந்த விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. ரவிக்குமாரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயை அவர் வாங்கியுள்ளார். இதன்பிறகு 2013ல் கோயில் புஜாரி ராஜகோபாலை திருமணம் செய்து அவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம், 5 பவுன் நகைகளை அவர் அபகரித்துள்ளார். இதையடுத்து 2014, நவம்பரில் முகப்பேரை சேர்ந்த சீனிவாசனை தன்னுடைய வலையில் வீழ்த்தியுள்ளார் காயத்ரி. அவரிடம் 50 ஆயிரம் ரூபாய், 5 பவுன் நகைகளை வாங்கியுள்ளார். இதன்பிறகு அம்பத்தூரை சேர்ந்த பாலாஜி என்பவரை திருமணம் செய்ய தன்னுடைய வலையில் வீழ்த்தியுள்ளார். திருவேற்காடு கோயிலில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்க..... அதை மோப்பம் பிடித்த சீனிவாசன், காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் காயத்ரி என்ற பெயரில் கல்யாண ராணியாக வலம் வந்த அவரை திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தினர் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள். காயத்ரியிடம் ஏமாந்தது 4 பேர் என்கிறார்கள் காவல்துறையினர். ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ளாமல் பல லட்சங்களை ஏமாந்தவர்களின் பட்டியல் அதிகம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

ஏமாற்றுவது எப்படி?

காயத்ரியின் வசீகர தோற்றம் போல அவரது பேச்சும் இனிமையாக இருந்துள்ளது. வரன் தேடுவதாக குறிப்பிடும் காயத்ரி, தன்னுடைய செல்போன் நம்பரையும் அதில் குறிப்பிடுவாராம். அந்த எண்ணில் வரன் சம்பந்தமாக பேசுபவர்களிடம் பவ்யமாகவும், மரியாதையாகவும் நடந்து கொள்வாராம் அவர். அவரது காந்தப் பேச்சில் மயங்கும் மணமகனை தனிமையில் சந்தித்து மனம் விட்டு பேசுவாராம். அப்போது அவர் பெரும்பாலும் குறிப்பிடுவது தனக்கு வரப்போகும் கணவனுக்கும், அவரது வீட்டிற்கும் மருமகளாக மட்டுமல்லாமல் மகளாகவே இருப்பதாக கூறுவதோடு, சிறுவயதில் தான்பட்ட கஷ்டங்களை சொல்லி அவர்களது இதயத்தில் இடம்பிடித்துவிடுவாராம். இதன்பிறகு இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்து அதில் சந்தோஷமாக இருப்பவர்களிடம் அதைச்சொல்லியே பணத்தை கறப்பதில் காயத்ரி பெரிய கில்லாடியாம். அவரிடம் சிக்குபவர்கள் திருமணத்துக்கு முன்பு அல்லது பின்பு பணத்தை இழப்பது நிச்சயம் என்கிறார்கள் காவல்துறையினர். இப்படி சம்பாதித்த பணத்தை அவர், சொகுசு வாழ்க்கைக்கு செலவழித்துள்ளார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இன்று இளமையிலேயே வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார் இந்த இளம்பெண்.

தமிழகத்தில் உள்ள மகளிர் காவல் நிலையங்களில் இதுபோன்ற பிரச்னைகள் குறித்து புகார்கள் தினமும் வருகின்றன. இந்த கல்யாண ராணியைப் போல கல்யாண மன்னர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் இப்போது மூலதனமாக இருப்பது சமூக வலைத்தளமும், இணையத்தளமும்தான். இணையதளங்கள் மூலம் இணையும் இதயங்கள் ஏனோ ரொம்ப நாளைக்கு தாக்குப்பிடிப்பதில்லை.

கமிஷனுக்கு ஆசைப்பட்டு சில திருமண புரோக்கர்கள் மூலம் நிச்சயிக்கப்படும் திருமணங்களிலும் பல்வேறு பிரச்னைகள். கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்துவேறுபாடு கடைசியில் விவாகரத்தில் முடிகிறது. இதனால் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. சினிமா பிரபலங்கள், வி.ஐ.பிக்களின் விவாகரத்து வழக்குகள் என்றால் வெளிவுலகிற்கு தெரிகிறது. மற்றவர்களின் வழக்குகள் நீதிமன்றத்துக்குள்ளளே முடிவடைந்து விடுகிறது.

கல்யாண ராணி, ராஜாக்களிடம் ஏமாறாமலிருக்க, ஆயிரம் தடவை யோசித்து திருமண செய்ய முடிவெடுக்க வேண்டும். இதைத்தான் திருமணம் என்பதை ஆயிரங்காலத்து பயிர் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.


No comments:

Post a Comment