'பாட்ஷா’வை தி.மு.க-வும், 'அண்ணாமலை’யை அ.தி.மு.க-வும், 'பாபா’வை பா.ம.க-வும் ஓட்டியதைப்போல 'லிங்கா’ படத்தை ஓட்ட இதோ வந்துவிட்டது பா.ஜ.க. இந்தப் படத்துக்கான செலவு இல்லாத பி.ஆர்.ஓ-வாக வேலைபார்க்கிறார் பா.ஜ.க-வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்!
தமிழிசையின் அப்பா குமரி அனந்தன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோது, ரஜினியை காங்கிரஸுக்குள் இழுக்கும் படலம் தொடங்கியது. அன்றைய பிரதமரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவருமான நரசிம்மராவை டெல்லிக்கே சென்று சந்தித்தார் ரஜினி. விடாக்கண்டனும் கொடாக்கண்டனுமான ராவ் - ரஜினி சந்திப்பில் எந்தப் பயனும் ஏற்படவில்லை. 'நீங்கள் காங்கிரஸ் கட்சிக்குள் வந்துவிடுங்கள்’ என ராவ் விடுத்த அழைப்பை, ரஜினி ஏற்கவில்லை. இதோ, 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. குமரி அனந்தனின் மகள் தமிழிசை, பா.ஜ.க-வின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக ஆனதில் இருந்து, ரஜினியை பா.ஜ.க-வில் சேரும்படி அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறார். காட்சி மாறவில்லை; கட்சிதான் மாறி இருக்கிறது.
அன்று ராவ், ரஜினியை டெல்லிக்கு வரவழைத்துப் பேசினார். இன்று மோடி, ரஜினி வீட்டுக்கே வந்து பேசினார். பா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா, தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். வழக்கம்போல் ரஜினி மௌனமாக இருக்கிறார்.
தமிழ்நாடு அரசியல் சூழ்நிலை, இதற்கு முன் இருந்ததைவிட இப்போது அதிக நம்பிக்கையைக் கொடுத்துள்ளது பா.ஜ.க-வுக்கு. 50 ஆண்டு கால அரசியலில் அசைக்க முடியாத கட்சிகளாக இருந்த தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மிகப் பெரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நேரம் இது. அந்தக் கட்சிகளில் முகமும் முகவரியுமாக இருக்கும் தலைமைப் பீடங்களே, ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளன. ஒன்றின் பலவீனத்தை இன்னொன்று பலம் ஆக்கிக்கொண்டு வென்ற காலம் பறிபோய்விட்டது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திப் பாயத் தயார் ஆகிறது பா.ஜ.க. அதற்குத் தேவை ஒரே ஒரு மாஸ்க்; அவர்களை ஈர்க்கிறது ரஜினியின் மாஸ்!
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த வழக்கில், நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும், சொத்துப் பறிப்புத் தண்டனையும் பெற்று... ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ தகுதியை இழந்து, தமிழ்நாட்டு முதலமைச்சர் பொறுப்பையும் பறிகொடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் சிறைவைக்கப்பட்டுள்ளார் ஜெயலலிதா. ஜாமீன் வாங்குவதே பெரிய பிரளயம் ஆகிக்கொண்டிருக்கிறது. வழக்கில் இருந்து விடுபடுவது பற்றி யோசிக்கவே முடியவில்லை. ஒருவேளை அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெல்லலாம். ஆனால், அம்மா முதலமைச்சர் ஆக முடியும் என ஆருடம் சொல்ல ஒருவர்கூட முன்வரவில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்ற நரேந்திர மோடி, 'இனி நம்முடைய இலக்கு, அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி’ என தன் ஆசையை வெளிப்படுத்தினார். அதனால்தான் சிந்தாந்த வேறுபாடு கொஞ்சமும் இல்லாத சிவசேனாவுடன்கூட கூட்டணி வைக்காமல் மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடிக்க மல்லுக்கு நிற்கிறார். அப்படிப்பட்ட மோடி தமிழ்நாட்டைத் தள்ளிவைப்பாரா?
நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு அடுத்த தனிப்பெரும் கட்சி என்ற இடத்தில் இருக்கிறது அ.தி.மு.க. 'மூன்றாவது அணி ஆட்சியைப் பிடிக்கும் சூழ்நிலை வருமானால் ஜெயலலிதாதான் பிரதமர்’ என அகில இந்தியத் தலைவர்கள் சிலர் பேசியதை மோடி மறந்திருக்க மாட்டார். 'மோடியா... லேடியா... என்பதுதான் இந்தத் தேர்தல்’ என ஜெயலலிதா செய்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரமும் மோடிக்கு என்றும் கசப்பைத் தரக்கூடியது. மே மாதத்தில் மிரட்டிக்கொண்டிருந்த ஜெயலலிதா, அக்டோபரில் இப்படி அகப்பட்டுக்கொள்வார் என மோடியே எதிர்பார்க்கவில்லை.
ஜெயலலிதா மீதான வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது முதலே, ரஜினியுடன் உறவுகொண்டாட ஆரம்பித்துவிட்டார் அமித்ஷா. சமீபத்திய சில வாரங்களில் கே.எஸ்.ரவிகுமாரைவிட ரஜினிக்கு அதிகம் போன் செய்தது அமித்ஷாதான்! இது அ.தி.மு.க விவகாரம் என்றால்... தி.மு.க நிலையைப் பற்றி சொல்லவேண்டியது இல்லை. அதற்கு திசையெங்கும் சிக்கல்.
டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவரும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நவம்பர் 10-ம் தேதி தொடங்கும் என நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்துள்ளார். இது சி.பி.ஐ தாக்கல் செய்த வழக்கு. ஜனவரி இறுதிக்குள் இந்த வழக்கின் தீர்ப்பு வரப்போகிறது. இதே நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கின் குற்றச்சாட்டுப் பதிவு, அக்டோபர் 20-ம் தேதி நடக்க இருக்கிறது. 'கலைஞர் டி.வி-க்கு 200 கோடி ரூபாய் முறையற்ற வழியில் வந்தது’ என்பது இந்தக் குற்றச்சாட்டின் சாராம்சம். ஏர்செல் - மேக்ஸிஸ் சம்பந்தமான வழக்கின் குற்றப் பத்திரிகையும் இதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
தனி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அமைக்கப்பட்ட விவகாரம், சி.பி.ஐ-யின் பரிசீலனையில் இருக்கிறது. மத்திய தொலைத்தொடர்பு துறையின் முன்னாள் அமைச்சர்களான ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகிய இருவரும் இந்த வழக்குகளின் மையப்புள்ளிகள். கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி, பேரன் கலாநிதி மாறன் ஆகிய மூவரும் இந்த வழக்கு வலைக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். கலைஞர், சன் ஆகிய இரண்டு டி.வி-களும் இந்த வழக்குக்குள் வந்து போகின்றன. மொத்தத்தில் அறிவாலயம் ஆடித்தான் போயிருக்கிறது. ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பில் கருணாநிதி அடக்க சிகாமணியாக இருந்ததற்கு இதுதான் காரணம். ஆக, 2015-ம் ஆண்டு முழுக்கவே தி.மு.க-வைப் பொறுத்தவரை சி.பி.ஐ சிறப்பு ஆண்டாக இருக்கப்போகிறது.
இப்படி இரண்டு கட்சிகளும் பாதாளத்தில் போய்க்கொண்டிருக்கும்போது, வேதாளமாக எழப் பார்க்கிறது பா.ஜ.க. இதற்கு தோள்கொடுக்க ரஜினி என்ற விக்கிரமாதித்தன் இல்லாவிட்டால் வீண் என்று பா.ஜ.க-வுக்குத் தெரியும். மோடி தன் வீடு தேடி வந்தபோதும் பிடிகொடுக்காத ரஜினி, இனி அரசியல் ஆசை வசப்படுவாரா என்பதும் சந்தேகமே. 1995-ம் ஆண்டு நிலைமை இப்போது இல்லை என்பதும் ரஜினிக்குத் தெரியும். இப்போது ரஜினிக்கு இன்னும் 20 வயது கூடிவிட்டது மட்டும் அல்ல, உடலும் மனமும் அதைவிடக் கூடுதலாகத் தளர்ந்துவிட்டது என்பதையும் உணர்வார்.
'லிங்கா’ பட ஷூட்டிங்குக்காக மூன்று ரஜினியை வைத்துள்ளார்கள். வேகமான சில காட்சிகளுக்கு டூப் ரஜினிகள்தான் நடிக்க வைக்கப்படுகிறார்கள். சிங்கப்பூர் மருத்துவமனைக்குப் போய்விட்டு வந்ததை மறுபிறப்பாகத்தான் ரஜினி பார்க்கிறார். உடலும் உற்சாகமும் குறைந்த நேரத்தில் வரும் பா.ஜ.க ரதத்தில் தனியாக மட்டும் அல்ல, யாரும் தூக்கிவிட்டாலுமே ரஜினி ஏறுவது கஷ்டம்தான்.
'அரசியலில் ஜெயிக்கணும்னா, திறமை, புத்திசாலித்தனம், உழைப்பு மட்டும் பத்தாது. சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம்... இந்த மூன்றுக்கும் மிகப் பெரிய இடம் உண்டு. அரசியலுக்கு நான் வந்திருக்கணும்னா, 1996-லேயே வந்திருக்கணும். என்னைக் கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது. கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணினா, வாழ்க்கை நல்லாவா இருக்கும்? வரணும்னு நினைச்சா, நாளைக்கே ஏற்பாடு பண்ணிடுவேன். ஆனா, அவன் சொல்லணும்!’ என 'எந்திரன்’ பட ரிலீஸ் நேரத்தில் ரசிகர்களைக் கூட்டிவைத்து ரஜினி சொன்னார். எனவே, ரஜினிக்குத் தெரியும், இது மற்றவர்களுக்குக் கெட்ட நேரமாக இருந்தாலும், தனக்கு நல்ல நேரம் அல்ல என்று!
மேலும், ரஜினி வரும் இடத்தில் விஜயகாந்த் இருக்க மாட்டார். ராமதாஸ், இருக்கவே மாட்டார். வைகோ ஏற்கெனவே இல்லை. எனவே ரஜினியை மட்டும் நம்பி... இருக்கிறதை விட்டுவிட்டுப் பறக்கிறதைப் பிடிக்கப்போகிறதா பா.ஜ.க?
No comments:
Post a Comment