பீட்ஸா, பர்கர் டே... கொண்டாடும் இந்த காலத்தில், பெங்களூரில் நிலக்கடலை திருவிழா கொண்டாடுகிறார்கள் என்றால் ஆச்சர்யம்தானே. அதுவும் பல்வேறு கலாச்சார பின்னணி கொண்ட மக்கள் வாழும் பெங்களூருவில், நிலக்கடலை திருவிழா கொண்டாடி வருவது அனைவரையும் பழமையை நோக்கி திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
பெங்களூரு பசவனகுடியில் கவிகங்காதேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் நவம்பர் 16,17,18 ஆகிய மூன்று நாட்கள் நிலக்கடலை திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவிழாவிற்கென ஒரு வரலாறு உண்டு. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு போர்ச்சுகீசியர்கள் நம் நாட்டை ஆண்டுகொண்டிருந்தபோது, முதன் முதலாக அவர்கள் இந்த கவிகங்காதேஸ்வர சுவாமி கோயில் வளாகத்தில் நிலக்கடலையை அறிமுகப்படுத்தி இவ்விழாவை தொடங்கி வைத்ததாக கூறப்படுகிறது.
அன்றிலிருந்து இன்று வரை 500 ஆண்டுகளாக பழைமை மாறாமல் இத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெங்களூருவை சுற்றியுள்ள ராம் நகர், மண்டியா, மைசூர், பிடுதி, சாம்ராஜ் நகர் மற்றும் தமிழகத்தில் இருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் இருந்தும் நிலக்கடலைகள் கொண்டு வரப்படுகிறது. விதவிதமான நிலக்கடலை வகைகளை நிலத்தில் கொட்டி குவியலாக விற்பனை செய்யப்படும்.
பெங்களுரு சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள், குடும்பத்தோடு இந்த திருவிழாவில் கலந்துகொண்டு தங்களது உபயோகத்திற்காக நிலக்கடலை வாங்கி செல்கிறார்கள். மற்ற இடங்களில் நிலக்கடலை வாங்குவதற்கும், இங்கு நிலக்கடலை வாங்குவதற்கும் நிறைய சிறப்புகள் இருக்கிறது. விவசாயிகள் நேரடியாக இத்திருவிழாவில் நிலக்கடலை விற்பனை செய்ய வருவர். அதனால் நிலக்கடலை குறைந்த விலையில் கிடைக்கும்.
அதுமட்டுமின்றி பல தரப்பட்ட நிலக்கடலைகள் வருவதால் அதில் பிடித்தவற்றை வாங்கிச் செல்கிறார்கள். இந்த நிலக்கடலை திருவிழாவை பார்ப்பது மனதுக்கு சந்தோஷமாக இருப்பதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் இங்கு பலர் வேண்டுதலுக்காக, பல ஆயிரம் ரூபாய்க்கு நிலக்கடலை வாங்கி ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். திருவிழாவில் நிலக்கடலை விற்பனையில் ஈடுபட்டிருந்த வியாபாரி வேலாயுதம், ‘‘எங்க சொந்த ஊரு தர்மபுரி மாவட்ட பென்னாகரம். 10 வருடமாக இந்த திருவிழாவில் நிலக்கடலை விற்பனை செய்ய வந்துகொண்டிருக்கிறேன். ஆரம்பத்துல நாட்டு நிலக்கடலை மட்டுமே இந்த திருவிழாவிற்கு வந்து கொண்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் விவசாயத்தில் மாற்றம் ஏற்பட்டதால் தற்போது பலவகை நிலக்கடலைகளும் விற்பனைக்கு வருகிறது. நான் பச்சைக் கடலை 30 மூட்டையும், வறுத்த கடலை 10 மூட்டையும் கொண்டு வந்திருக்கிறேன். இதில் நேற்றே பாதி தீர்ந்து விட்டது. இந்த திருவிழாவில் நிலக்கடலையை மொத்தமாக கொள்முதல் செய்யவும், வீட்டு உபயோகத்திற்கும், கோவில் வேண்டுதல்களுக்கும் நிலக்கடலை வாங்கிட்டு போவாங்க. எத்தனை மூட்டை நிலக்கடலை கொண்டு வந்தாலும் அனைத்தும் விற்பனை ஆகிவிடும். இதுவே இந்த இடத்தின் மகிமை. இங்கு பச்சைக் கடலை, அவித்த கடலை, வறுத்த கடலை, தோல் நீக்கப்பட்ட கடலை கிடைக்கும். பச்சை நிலக்கடலை தரத்தை பொருத்து ஒரு படி 10 முதல் 20 வரையும் ஒரு மூட்டைக்கு 4000 முதல் 5000 வரையும் விற்கப்படுகிறது. வறுத்த கடலை தரத்தை பொருத்து 15 முதல் 25 வரையும், ஒரு மூட்டைக்கு 4500 முதல் 5500 வரை விற்கப்படுகிறது ’என்றார்.
தள்ளுவண்டியில் வறுத்தகடலை விற்றுக் கொண்டிருந்த வடமலை, ‘‘நான் இந்த வறுத்த கடலை விற்பனை செய்வதை சிறுதொழிலாக 20 வருடமாக செய்து கொண்டிருக்கிறேன். என் குடும்பத்திற்கு சோறு போடுவதே இந்த நிலக்கடலை விற்பனை தொழில்தான். நான் தொழில் தொடங்கும்போது ஒரு படி நிலக்கடலை 3 ரூபாய்க்கு வாங்கினேன். அப்போது ஒரு பொட்டலம் 1 ரூபாய்க்கு கொடுத்தேன். ஆனால் இப்போது ஒரு படி நிலக்கடலை 15 முதல் 25 வரை விற்கப்படுவதால் ஒரு பொட்டலம் 10 ரூபாய்க்கு விற்கிறேன்.
இப்போவெல்லாம் வெறுமைக்கு சாப்பிட வாயில நுழைய முடியாத பெயரில் எல்லாம் என்னன்னவெல்லாமோ திண்பண்டம் வந்திடுச்சி. ஆனா எத்தனை காலம் போனாலும் மக்களுக்கு நிலக்கடலை மீது மக்களுக்கு இருக்கும் மோகம் தீரவே தீராது. அந்த நிலக்கடலையை அரசு சிறப்பு கவனம் எடுத்து நிலக்கடலை உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
|
உங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.
22 Nov 2014
நிலக்கடலை திருவிழா..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment