சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Nov 2014

கொலையாளியாகும் மாணவர்கள்!

நாம் நாகரீகமடைந்து விட்டதாக நம்பிக் கொண்டிருக்கிறோம். வாழ்க்கை முன்பை விட பாதுகாப்பானதாகவும், மேம்பட்டிருப்பதாகவும் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம் தலைமுறையில் ஏன் மனிதர்கள் இத்தனை வன்மத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்பதை நினைக்கும்போது  வேதனையாக இருக்கிறது.

கண நேரத்தில் எழுகிற உணர்ச்சிகள் கொலைகளுக்கு வழி வகுக்கின்றன. இந்த கொலைக்காக நாம் நாளை தூக்குத்தண்டனை பெறலாம் அல்லது வாழ்நாள் முழுக்க சிறையில் இருக்க நேரலாம் என்றெல்லாம் எவரும் யோசிப்பதில்லை. தடாலடியாக உணர்வு மேலிட கொலைகளை செய்து விடுகிறார்கள் மனிதர்கள்.

பெரும்பாலும் சென்சிட்டிவான அல்லது பெண்கள் தொடர்பான, சொத்து தொடர்பான சச்சரவுகளே கொலைகளில் முடிகின்றன. பெரும்பாலான குற்றங்கள் உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு நடக்கின்ற நிலையில், சமீபத்தில் நடக்கும் கொலைகள் பீதியை கிளப்புகின்றன.

இந்த வருடம் மே மாதம் நடந்த சம்பவம் இது.

சங்கரன்கோவில் அருகே உள்ள அழகநேரியை சேர்ந்தவர் செல்வா. இவர் கோவில்பட்டியில் இருந்து நெல்லை வந்த தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த மே மாதம் 20 ஆம் தேதி இவரது பஸ் கங்கைகொண்டான் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அப்போது 4 வாலிபர்கள் பஸ்சில் ஏறினார்கள். அவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி வந்ததால் கண்டக்டர் செல்வாவுக்கும், 4 வாலிபர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே நடுவழியில் அவர்களை கண்டக்டர் இறக்கிவிட்டார். இதனால் கண்டக்டர் செல்வா மீது அவர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

4
வாலிபர்களும் பெட்ரோல் கேனுடன் அந்த பேருந்து இறுதியாக எங்கு நிற்குமோ அங்கு வந்தார்கள். அங்கு நின்று கொண்டிருந்த கண்டக்டர் செல்வா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடிவிட்டனர். காயமடைந்த செல்வா மருத்துவமனையில் பின்னர் உயிரிழந்தார். கண்டக்டர் செல்வாவை எரித்துக் கொன்ற வழக்கில் ஏரல் பெருங்குளத்தை சேர்ந்த பெத்தபெருமாள், அப்பாத்துரை, புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டுடன் காட்டை சேர்ந்த வேல்ராஜ் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட காரணத்துக்காக ஓர் உயிரையே பறிக்கும் அளவுக்கு தண்டனை கொடுக்கிறார்கள். அதுவும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கும் அளவுக்கு. சரி, அதன் அடுத்த தலைமுறையான பள்ளி மாணவர்கள் எப்படி?

தி்ண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் வினோத் என்ற 16 வயது பதினொன்றாம் வகுப்பு மாணவன் வகுப்பறையிலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறான். ஏற்கெனவே சென்னை பள்ளி ஒன்றில் வகுப்பறையிலேயே உமா மகேஸ்வரி என்ற ஆசிரியை ஒரு மாணவனால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். ஏன் இதுபோன்று நடக்கிறது? இப்போதுதான் மாணவர்களை ஆசியர்கள் திட்டுகிறார்களா? 20 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள பள்ளிகளை எல்லாம் இந்த தலைமுறை மாணவர்கள் எப்படி எதிர்கொண்டிருப்பார்கள்? 

ஒவ்வொரு பள்ளிக்கூடமும் அமெரிக்காவின் அபுகிரைப் சிறையைப் போல சித்ரவதைக் கூடமாகவே இருந்தது. அடி ஒவ்வொன்றும் இடியென இறங்கும். விதவிதமான சித்ரவதைகள், அவமானங்கள் இதெல்லாம் ஏன் அக்காலத்தில் அடித்த ஆசிரியரை திட்ட தோன்றவில்லை? ஒரு பட்டப்பெயர் வைப்பதோடு அந்த கோபம் கரைந்து விடுமே. இன்றைக்கு கண்டிக்கும் ஆசிரியர்களை கொலை செய்யும் அளவுக்கு மாணவர்கள் மாறிப்போனது எதனால்? சக மாணவனுடன் ஏற்படும் சண்டையில் அடித்துக் கொலை செய்யும் அளவுக்கு மாணவர்கள் உருமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.

ஆசிரியர்களிடம் கேட்டால், "இப்பெல்லாம் பசங்களை திட்டவே முடியல. ஏதாச்சும் திட்டினா சமுதாய பிரச்னையாயிடுது. அடிச்சா போலீஸ் கம்ளெயிண்ட் ஆயிடுது" என்கிறார்கள். மாணவர்களை அடிக்கவோ, அதட்டவோ கூடாது என்ற அச்சம் பொதுவாக ஆசிரியர்களிடம் பரவியிருக்கும் நிலையில் ஏன் மாணவனை அடிக்க வேண்டும், அதட்ட வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. அடிக்க முடியவில்லையே என்ற கவலைதான் ஆசிரியர்களுக்கு.

சரி ஒரு மாணவன் சமுதாயத்திற்கு பயன்படுகிறவனாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் பழைய கதை. நன்றாக சம்பாதித்து தன் குடும்பத்தை முன்னேற்றி, நல்ல வரதட்சணை வாங்கி செல்வந்தனாக வாழ இன்றைய கல்விமுறை போதும். ஆனால் அவன் சமூகப் பொறுப்பு மிக்க ஒரு மனிதனாக தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் பயன்படுகிறவனாக மாற பள்ளி மட்டும் சரியாக இருந்தால் போதாது.
சமூகம் கேடுகெட்டதாக இருந்து, பள்ளி மட்டும் சரியாக இருந்தால் சமூகத்தின் அவலங்களும், சமூகத்தின் சாதி வெறியும்தான் பள்ளியில் பிரதிபலிக்கும். குடும்பம், சமூகம், பள்ளி என ஒட்டு மொத்த சீர்கேட்டின் விளைவுகள்தான் இவை. எங்கிருந்து இந்த சீர்கேட்டை சரி செய்யப் போகிறோம்? 


No comments:

Post a Comment