கர்நாடக மாநிலம் - பல ஆன்மிக பொக்கிஷங்களின் களஞ்சியமாக திகழ்கிறது.சைவம், வைணவம் தாண்டி பல சமண குகைக்கோயில்களையும் கர்நாடக மாநிலத்தில் பார்க்க முடிகிறது.அவை அத்தனையும் இன்று ஆன்மிக பொக்கிஷங்களாய் காலம் கடந்தும் நிற்கிறது.
அப்படி ஒரு ஆன்மிக பொக்கிஷம்தான் சரவணபெலகுளா. கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து 158 கி.மீ தொலைவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3350 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது சரவணபெலகுளா. விந்தியகிரி மற்றும் சந்திரகிரி என்ற இரு பெரும் மலைகளால் சூழ்ந்திருக்கிறது சரவணபெலகுளா.
சரவணபெலகுளா என்னும் கன்னடச் சொல்லுக்கு தமிழில் 'சரவண வெள்ளைக்குளம்' என்று அர்த்தம். ஊரின் நடுவே பெலகுளா என்ற குளம் இருக்கிறது.பெலா என்றால் வெள்ளை என்றும்; குளா என்றால் குளம் என்றும் கன்னடத்தில் அர்த்தம் வருகிறது.
சரவணபெலகுளா சமணர்களின் புனிதத் தலமாகும். விந்தியகிரி மலையின் உச்சியில் அமைந்திருக்கிறது கோமதீஸ்வர பகவான் என்று அழைக்கப்படும் சமணத் துறவி பாகுபலியின் சிலை. 57 அடி உயரத்தில் மலை உச்சியில் பாகுபலி சிலை ஒற்றைக் கல்லினால் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. உலகின் மிகப் பெரிய ஒற்றைப் கல் சிலை சரவணபெலகுளாவில் உள்ள இந்த பாகுபலியின் சிலை தான்.
சமணர்களால் போற்றப்படும் 24 தீர்த்தங்கரர்களுள் முதலாமவரான ரிசபருக்கு நூறு புதல்வர்கள், முதலாமவர் பரதன், இரண்டாவது மகன் பாகுபலி.பரதனுக்கு முடிசூட்டு விழா நடக்க, பகுபாலி வெகுண்டு சகோதரன் பரதனோடு போரிட்டு வெற்றி வாகை சூடுகிறான். போரில் தோற்ற தமையனின் வாடிய முகம் கண்டு, பகுபாலி துறவறம் மேற்கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன.சரவணபெலகுளாவில் பாகுபலிக்கு வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டுள்ளது, அங்குள்ள ஒற்றைக் கல்லால் ஆன கோமதீஸ்வரர் சிலைக்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மஸ்தகாபிஷேக திருவிழாவில் அபிஷேகம் செய்யப்படுகிறது. கடந்த 2006-ஆம் ஆண்டு 87-வது திருவிழா விமரிசையாக நடந்திருக்கிறது.
சரவணபெலகுளா, ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இருக்கிறது. மலையின் உச்சியில் அமைந்துள்ள குகைக் கோயிலில் சமண சமயத்தை சார்ந்த பலரது சிலைகளும் இடம் பெற்றுள்ளது.சுமார் 1500 படிகள் ஏறித் தான் மலைக் கோயிலை அடையமுடியும். செங்குத்தான மலை பாதையில் ஏறும் போதே சரவணபெலகுளாவின் ஒட்டுமொத்த அழகையும் கண்டு ரசிக்கலாம்.கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேலென மரங்கள் சூழ்ந்திருக்கும் அழகே தனி தான். கோயில் அமைப்புகளும், அங்குள்ள சிலைகளின் வடிவமைப்பும் சிற்ப கலைக்கு எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது.
இங்குள்ள மற்றுமொரு மலை சந்திரகிரி. மௌரிய மன்னன் சந்திரகுப்தரின் நினைவாக இந்த மலைக்கு சந்திரகிரி என பெயர் வந்துள்ளது. மேலை கங்கர்கள் என்ற அரச பரம்பரையின் சிற்பக் கலை மற்றும் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது இந்த சரவணபெலகுளாவின் சமணக் கோயில்.
கர்நாடக மாநிலம் செல்லும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் சரவணபெலகுளாவும் ஒன்று.
No comments:
Post a Comment