சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Nov 2014

ஓட்டுனர் தொழில்...ஓராயிரம் பிரச்னைகள்!

டப்பெயர்வுக்காக, நம் தேசத்தில் குறுக்கு நெடுக்காக தினந்தோறும் ஓடிக்கொண்டிருக்கும்  சிறிதும் பெரிதுமான பல்வேறு விதமான வாகனங்கள்தான், பல்வேறு மொழி பேசும் மக்களை இணைக்கின்றன. 

குமரி முதல் காஷ்மீர் வரை தேச ஒருமைப்பாட்டை பேணிக்காப்பதில் தங்கள் பங்கை செலுத்துகின்றன இந்த வாகனங்கள். பெருமைக்குரிய இந்த பங்களிப்புக்கு ஆணிவேர் அந்த வாகனங்களை இயக்கும் டிரைவர்கள். 

அரசு, தனியார் என எந்த வாகனமாக இருந்தாலும் தேசமென்னும் இதயம் நின்று விடாமல் இயங்க காரணமாக இருக்கும் ரத்த நாளங்கள் இந்த டிரைவர்களே. இவர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இலக்கை அடையும் இடத்தில்தான் ஓய்வு. இவர்களும் விடுமுறையில்லா தொழிலாளர்கள்தான். வாகனத்தில் ஏறி விட்டால், மாற்று டிரைவர் வரும் வரையில் வீட்டிற்கோ, சொந்த வேலைகளுக்கோ செல்ல முடியாது. இவ்வளவு ஏன், நாமெல்லாம் குடும்பத்தோடு கொண்டாடும் பண்டிகை காலங்களில் எங்கோ ஒரு சாலையில் ஓடிக்கொண்டிருப்பார்கள் டிரைவர்கள். 

வாகனங்களை தவிர்த்துவிட்டு வாழ முடியாத இன்றைய சூழலில், இவர்களும் நம் வாழ்க்கைக்கு உத்தரவாதமளிப்பவர்களாக இருக்கிறார்கள். அந்தவகையில் பயண நேர கடவுள் டிரைவர்கள்தான். ஆனால், நம் சமூகத்தில் டிரைவர்களை எந்த இடத்தில் வைத்திருக்கிறோம். சிறப்பாக பணி செய்யும் டிரைவர்களை எத்தனை பேர் மனமுவந்து பாராட்டுகிறோம். பொருளாதார அடிப்படையில் டிரைவர்களை அணுகும் நம் மனப்போக்கு எப்போது மாறும்? வாகனங்கள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில் சொந்தமாக டிரைவிங் செய்யும் வாகன உரிமையாளர்கள் கூட, நெடுந்தூரம் செல்ல முடிவெடுத்துவிட்டால், அவர்களின் தேர்வு புரபஷனல் டிரைவர்கள்தான். காரணம் சின்சியாரிட்டி.

இப்படி எக்காலத்திலும் தவிர்க்க முடியாத நபர்களாக வலம் வரும்  இந்த டிரைவர்கள் எதிர் கொள்ளும் பிரச்னை என்பது சம காலத்தில் அதிகரித்து வருகிறது. சாலை வசதிகள் உருப்படியாக  இல்லாத இந்தியாவில், அதி நவீன வெளிநாட்டுக்கார்கள் பல்கிப்பெருகியுள்ளன. ஆட்டோக்களை விட கால் டாக்சிகள் பெருகிவிட்டன. சாலை நெருக்கடி மிக்கதாகி வருகிறது. சாலை போக்குவரத்து அமைச்சகமும், சட்டம் ஒழுங்கை காட்டி காவல்துறை செய்யும் இடையூறுகளும் ஓட்டுநர் தொழிலை, ஒடு்க்கப்படும் தொழிலாக்கி வருகிறது. குடும்ப சிக்கல்கள், மற்ற தொழிலை விட போதிய நிரந்தர வருமானம் இல்லாத சூழல்... இது மட்டுமில்லாது தொழிலுக்கு போன இடத்தில் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலை என, டிரைவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், வாகனங்களுக்கு வரும் பிரச்னைகளை விட அதிகமாக உள்ளன. 

சம்பவம்
சமீபத்தில் தூத்துக்குடி துறைமுகத்தில், சரக்கு இறக்கிவிட்டு நின்ற கண்டெய்னர் லாரி மாயமானது. கோவையில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் கண்டெய்னர் லாரியை, ஜன. 4ல் நெல்லையை சேர்ந்த பால்துரை ஓட்டி வந்தார்.
ஜன., 5 ல் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிய பின்னர், கண்டெய்னர் லாரியை கீரின் கேட் பகுதியில் நிறுத்தி விட்டு, பால்துரை நெல்லையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, நிறுத்தியிருந்த கண்டெய்னர் லாரியை காணவில்லை. கோவையில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு பால்துரை தகவல் தெரிவித்தார். போலீஸார்  லாரியை தேடி வருகின்றனர்.

சம்பவம் 2
சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. ராதாபுரத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் சென்னையில் கால் டாக்சி ஓட்டி வந்தார். கும்பல் ஒன்று பாக்கியராஜ் கால் டாக்சியை வாடகைக்கு அமர்த்தி மேல்மருவத்தூருக்கு அழைத்து சென்றது. போகிற வழியில் அவரை கொன்றுவிட்டு காரை கடத்தி சென்றனர்.போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலைகாரர்களை கைது செய்தனர். காரையும் மீட்டார்கள். ஆனால், பாக்கியராஜின் உயிர்?

சம்பவம் 3
சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் டிரைவர் பாலாஜி. நேற்று ( திங்கட்கிழமை) இரவு உரிமையாளரை கெல்லீஸ் தேவாலயத்தில் இறக்கி விட்டு அங்கேயே காத்திருந்தார். திடீரென ஒரு மர்மநபர் அவரை தாக்கிவிட்டு கள்ளச்சாவி போட்டு காரை மின்னல் வேகத்தில் கடத்தி சென்றார். சுதாரித்த பாலாஜி, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க, விரைவாக செயல்பட்ட  போலீசார் கார் குறித்த தகவல்களை அனைத்து காவல்நிலையங்களுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் தெரிவித்து தீவிர சோதனை நடத்த உத்தரவிட்டனர். வடபழனி சிக்னல் அருகே பிடிபட்டது கார்.   பிடிபடவில்லை என்றால் டிரைவர் பாலாஜி மீதுதான் திருட்டுப்பழி சுமத்தப்பட்டிருக்கும் என்பதை சொல்லவேண்டியதி்ல்லை.

சம்பவம் 4
சில நாட்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே, கோரைக்கூட்டம் என்ற இடத்தில் அதிகாலை 5 மணிக்கு, கேட்பாரற்று நின்ற ஆட்டோவை அப்பகுதி மக்கள் பார்த்தனர். அதில் வாலிபர் ஒருவர்  கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்டது ஆட்டோ டிரைவர் செந்தில்குமார் எனத் தெரிந்தது. தனிப்படை போலீசாரிடம் சிக்கிய கொலையாளிகள் விசாரணையில், காப்பர் கம்பி திருடுவதற்குச் சென்ற அவர்கள், தங்களோடு ஒத்துழைக்கும்படி  சவாரிக்கு அழைத்துவந்த டிரைவர் செந்தில்குமாரை வற்புறுத்தஅதற்கு மறுத்ததால் கழுத்தை அறுத்து கொன்றதாக வாக்குமூலம் தந்தனர்


முக்கிய வழக்குகளில் காவல்துறை விசாரணைப்பட்டியலில் முதலில் சேர்த்துக்கொள்வது உள்ளுர் ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களைத்தான். “விசாரணைஎன்ற பெயரில் காவல்துறையின் தாக்குதலுக்கும் ஆளாக வேண்டியதிருக்கிறது. இப்படி காலம் முழுக்க மக்களின் சேவைக்காக இயங்கும் வாகன ஓட்டுநர்கள் இதே காலகட்டத்தில் பாதுகாப்பில்லாத வாழ்க்கை வாழ வேண்டியதிருக்கிறது.

 
மூத்த கார் டிரைவரான அழகர்சாமி, ‘’ நான் 1966 லிருந்து கார் ஓட்டுறேன். அப்பவெல்லாம் கார் டிரைவர்களுக்கு நல்ல மரியாதை. விஷேசங்களுக்கு வண்டி ஓட்டிப் போனா நம்மளை தாங்குவாங்க. அதுபோல சவாரி வருகிறவர்களும் ரொம்ப மரியாதையாக நடந்து கொள்வார்கள். கவுரவம் பார்க்க மாட்டார்கள். அப்போது நாங்களும் ரொம்ப டீசண்டாக நடந்து கொள்வோம். அப்படி சம்பாதித்து செட்டிலானவர்கள் நாங்கள். 

தற்போது வாடகை கார் தொழிலை ரொம்ப கீழே கொண்டு வந்து விட்டார்கள். இத்தொழிலுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத நபர்கள், வருமானம் ஒன்றையே நோக்கமாக கொண்ட பெரும் நிறுவனங்கள்  பாரம்பரியமாக இத்தொழிலில் ஈடுபட்ட வாடகை கார் டிரைவர்களை பிச்சைக்காரர்களாக்கி விட்டார்கள். 


எதுவும் மக்களுக்கு விலை மலிவாக கிடைத்தால் நல்லதுதான். ஆனால், கால் டாக்சிக்காரர்கள் செய்வதில் பல மோசடிகள் உள்ளது. வசதியானவர்களிடம் மாதம் ஒரு அமவுண்ட் தருவதாக புதுக்கார்களை வாங்கி ரெண்டு வருஷம் அதை நல்லா ஓட்டிட்டுதிடீரென்று கட் பண்ணி விடுகிறார்கள். அடுத்து வரும் புது காரை சேர்த்து விடுகிறார்கள். இப்படித்தான் நடக்குது. அதுபோல டிரைவர்களையும் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். காரையும் கஸ்டமரையும் நேசிக்கும் டிரைவர்கள், இவர்களால் காணமல் போய் விட்டார்கள். பல கால்டாக்சி கம்பெனிகள், டிரைவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கொடுப்பதில்லை. தொழிலாளருக்கான எந்த வசதியும் செய்து கொடுப்பதில்லை.” என்றார். 

சேவியர் என்பவர் என்பவர்,  “எல்லா தொழிலும் இருப்பதுபோல் ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் பொதுவாக டிரைவர்கள் அனைவரும் ரொம்பவும் ஒழுக்கமாகவும், சின்சியராகவும்தான் இருக்கிறார்கள். தற்போதெல்லாம் சவாரி செல்லும் டிரைவர்களுக்கு சரியான பாதுகாப்பில்லை. திருடர்கள் யார், கொலைகாரன் யாரென்று காரில் பார்த்து ஏற்ற முடியாது. அதுபோல சிலர் காரில் அநாகரிகமாக நடந்து கொள்வார்கள். வண்டிக்குள்ளேயே தண்ணியடிப்பது, வாந்தியெடுப்பது இதை கேட்டால் டிரைவரை அடிப்பதென்று பல சம்பவங்கள் நடக்குது. அரசு, பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் டிரைவர்களைத்தவிர வாடகை கார் ஓட்டும் எந்த டிரைவரும் எதிர்காலத்துக்கு எதுவும் சேர்த்து வைக்க முடியாது. இப்போதைக்கு டிரைவர்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் மோசமாக உள்ளது’’ என்றார். 

நாகராஜ் என்பவர், ‘’நாங்கள் அதிக பணம் கேட்பதாக சொல்கிறார்கள். இங்கேருந்து பஸ் ஸ்டாண்டு போக நாங்க இருநுறு ரூபாய் கேட்போம். கால்டாக்சிக்காரர் நூறு ரூபாய் கேட்பார். காரணம், திரும்ப வரும்போது அவருக்கு அடுத்த சவாரி கிடைக்கும். நாங்க அப்படி ஏத்த முடியாது. மறுபடியும் கிளம்பிய இடத்துக்கே வரணும். இதுதான் வித்தியாசம். இன்னைக்கு ஆட்டோவை விட கால் டாக்சி அதிகமாயிடுச்சு. அப்பவெல்லாம் குடும்ப டாக்டர் மாதிரி ஒவ்வொரு வீட்டுக்கும் தெரிஞ்ச்சவங்களா கார் டிரைவர் இருப்பாங்க. இப்ப அந்த உறவெல்லாம் இல்லாம போச்சு.’’ என்றார். 

மதுரை மாவட்ட சி..டி.யூ. கார்-வேன் ஓட்டுனர் சங்க தலைவர் தெய்வராஜ், ‘’நாடு முழுதும் டிரைவர்கள் எதிர் கொள்ளும் பிரச்னைகள் அதிகமுள்ளது. சில மாநிலங்களுக்கு சவாரிக்கு செல்லும் நம்மவர்கள் பல இன்னலுக்கு ஆளாகிறார்கள். எங்க சங்கத்தை சேர்ந்த டிரைவர் ஒருவருக்கு கொல்காத்தாவில் ஏற்பட்ட பிரச்னைக்கு அங்கிருக்கும் சி..டி.யூ. சங்கத்தின் மூலம் பேசி தீர்த்தோம். ஆனா, இது எல்லா டிரைவர்களுக்கும் அமையாது. 

டிரைவர்களுக்கு நல்ல தூக்கமில்லை, ஓய்வு இல்லைஇங்கே கேரளாவுக்கு போற வாளையார் செக் போஸ்ட்ல சோதனை போடுறோம்னு ரெண்டு நாளெல்லாம் லாரி டிரைவருங்க காத்து கெடக்க வேண்டியிருக்கு. பல ஊர்கள்ல வண்டியை திருடிட்டு போயிடுறாங்க. 

சமீபத்துல துத்துக்குடி ஸ்டர்லைட்டுலருந்து காப்பர்லோடு ஏற்றிவந்த லாரி, நாகமலை புதுக்கோட்டையில திருடு போனது. போலீஸார், புகார் வாங்காம டிரைவரை அலைக்கழிச்சாங்க. இப்படி நிறைய சம்பவங்கள். 


நாமக்கல்லில்தான் அதிகமாக லாரி நிறுவனங்கள் இருக்கு. ஆனா நிறுவன முதலாளிகள் டிரைவர்களை முழு நேர ஊழியரா வச்சுக்கிறதில்லை. அவங்களுக்கு அடிப்படையான எந்த சலுகையும் செஞ்சு கொடுக்கிறதில்லை. வண்டி ஓடினா, படி ன்னு ஒரு சிஸ்டத்தை வச்சிருக்காங்க. ஒரு டிரைவர் காலம் முழுக்க ஒரு நிறுவனத்தில் வண்டி ஓட்டினாலும் எதிர்காலத்துக்கு அந்த நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பு ஏற்காது. பொதுவா மற்ற தனியார் துறைகளில் கிடைக்கும் எந்த சலுகையும் எதிர்பார்க்க முடியாது. அரசுதான் இதையெல்லாம் களையனும்" எனக் கூறுகிறார். 

மேலும், "இன்னும் கொஞ்ச நாளில் ஆர்டிஓ அலுவலங்களை பிரைவேட் ஏஜென்சிகளிடம் கொடுக்க போறாங்களாம். அப்படி ஒரு நிலை வந்தா பணக்காரங்கதான் வண்டி வச்சுக்க முடியும், வண்டி ஓட்ட முடியும்கிற நிலை வந்துடும். இந்த தொழிலை நம்பி இருக்க லட்சக்கணக்காணவர்கள்  வாழ்க்கை கேள்விக்குரியதாகிவிடும் அபாயமிருக்கு. மற்ற தொழில்களை போல, தொழிலாளர்களின் மீதான பரிவைப்போலவே எங்களின் மீதும் அரசு அக்கறை கொண்டு எங்கள் எதிர்காலத்திற்கு ஏற்ற திட்டங்களை செயல்படுத்தவேண்டும்" என்று கூறுகிறார் தெய்வராஜ்.


No comments:

Post a Comment