எண்ணற்ற கலாசாரங்களையும், இனங்களையும், மொழிகளையும், வித்தியாசங்களையும் இணைக்கும் பல விஷயங்களில் ஒன்று, நம் நாட்டின் முதுகெலும்பான சாலைகள்! வெளிநாடுகளில் டிரைவிங் அனுபவத்துக்காக சில சாலைகள் பிரபலம். இந்தியாவில் அனுபவித்து ஓட்ட சிறந்த 8 சாலைகளை இங்கே கொடுத்திருக்கிறோம். ஜாலியாக ஒரு ட்ரிப் சென்று வாருங்கள்.
ஷில்லாங்-சிரபுஞ்சி
நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களின் அழகை இன்னும் நாம் முழுமையாக உணரவில்லை. மேகாலயா மாநிலத்தில் இருக்கும் ஷில்லாங்கில் இருந்து, சிரபுஞ்சிக்கு சாலை வழியே செல்பவர்கள் நிச்சயம் அந்த அனுபவத்தை மறக்க மாட்டார்கள். வெறும் ஒன்றரை மணி நேரப் பயணம் தான் என்றாலும், ஆயுள் முழுக்க பசுமையாக மனதில் ஒட்டிக் கொள்ளக்கூடிய பயண அனுபவமாக இருக்கும். இந்தச் சாலையில் போக்குவரத்து குறைவு. அதனால், நிதானமாக ஓட்டிச் செல்லலாம். குளிர்காலத்தில் இங்கே இருக்கும் பசுமையான சூழ்நிலையை அனுபவித்து ரசிக்க ஐம்புலன்கள் போதாது.
ஆம்பி வேலி
மும்பை அருகே இருக்கும் ஓர் அருமையான மலைப் பிரதேசம் இது. மும்பையில் இருப்பவர்கள் அதிகாலையிலேயே கிளம்பிவிட்டால், புனே எக்ஸ்பிரஸ் வேயில் வேகமாகச் சென்றுவிடலாம். லோனோவாலாவைத் தாண்டிய பிறகு, புஷி அணை வரும். அதுவரை பொறுமையாக ஓட்டினால் நலம். புஷி அணைக்குப் பிறகு பச்சைப் பசேல் சுற்றுச்சூழலுடன் ஆம்பி வேலி செல்வதற்கான சாலை துவங்கும். அழகான வளைவு நெளிவுகளுடன், அகலமான சாலையான இதில், உங்களை அறியாமல் வேகமாக ஓட்ட வேண்டும் என்று தோன்றும். ஆனால், இங்கு மோட்டார் சைக்கிள்கள் வேகமாகச் செல்லும் என்பதால், கவனம் அவசியம்.
ஹரிபூர்தர் - சைல்
ஹரிபூர்தர் என்ற ஊரை, டெல்லியில் இருந்து 9 மணி நேரப் பயணத்தில் அடைந்துவிடலாம். இந்த ஊர், சுற்றுலாவுக்குப் பிரபலம் ஆகவில்லை என்பதால், நிறையப் பேருக்குத் தெரியாது. இங்கிருந்து சோலான் வழியாக சைல் நகரத்துக்கான சாலையில் ஒருமுறை சென்றுவாருங்கள். 'ஒரு பக்கா டிரைவிங் ஆர்வலருக்கான சாலை’ என்று நீங்களே சான்றிதழ் கொடுப்பீர்கள். கிட்டத்தட்ட 100 கி.மீ நீளமான இந்தச் சாலையில், 40 கி.மீ தாண்டினால், சாலை மிகவும் குறுகலாகிவிடும். பயங்கரமான வளைவுகளும் ஏற்றங்களும் இருக்கும் இந்தப் பகுதியில் தார்ச் சாலை கிடையாது. அதனால், எச்சரிக்கையுடன் ஓட்ட வேண்டும். சாலையின் இருபுறமும் இருக்கும் காட்சிகளை அனுபவித்தால் மட்டுமே, இந்த இடத்தின் ரம்மியம் புரியும்.
மணாலி - லே
இந்தியாவில் உள்ள டிரைவிங் ஆர்வலர்களின் தேசியச் சாலை, நம் நாட்டின் அழகான இடங்களில் ஒன்றான லே-வை அடைவதே சவாலான விஷயமாக இருக்கும். ஒவ்வோர் ஆண்டும், ஜூன் முதல் செப்டம்பர் வரை மட்டும்தான் இந்தச் சாலை திறந்திருக்கும். இதில், வாழ்நாளில் ஒருமுறையாவது ஓட்டிவிட வேண்டும் என்று பலரும் திட்டம் தீட்டும் அளவுக்கு அற்புதமான காட்சிகள் நிறைந்த சாலை இது. இங்கே, வானிலையும், சாலையின் நிலைமையும் எப்போது எப்படி இருக்கும் என்று யாராலும் முன்கூட்டியே யூகிக்க முடியாது. அதனால் கூடுதல் எரிபொருள், ஸ்பேர் டயர், குளிருக்கு ஏற்ற உடைகள், உணவுப் பொருட்களுடன் செல்வது நல்லது. பயணத்தின்போது முதல் நாள் இரவை, கீலாங் அல்லது ஜிஸ்பாவில் கழிக்கலாம். இரண்டாவது நாள், சார்சூ. மூன்றாவது நாள், கட்டா மலைப்பகுதி. 21 வளைவுகள் கொண்ட இந்தச் சாலை, 121 மீட்டர் உயரம் ஏறுகிறது. பிறகு, 15,000 அடி உயரத்தில், 40 கிமீ முழுக்க தட்டையான நிலம்தான்.
லிட்டில் ரான் ஆஃப் கட்ச்
இந்த இடம், மும்பையில் இருந்து 600 கி.மீ தூரத்தில் இருக்கும் ஒரு பெரிய உப்புப் படுகை. மும்பையில் இருந்து அஹமதாபாத் சென்று, அங்கிருந்து சனந்த் மற்றும் விராம்கம் நகரங்களைத் தாண்டியதும் லிட்டில் ரான் ஆஃப் கட்ச்-ஐ அடைந்துவிடலாம். ஏக்கர் கணக்கில் வெறும் உப்பு மணல் மட்டுமே இருக்கும் இந்தப் படுகையில், சாலை என எதுவும் கிடையாது. சுதந்திரமாக படுகைக்குள் காரோ, பைக்கோ ஓட்டிப் பார்க்கலாம். இந்தியாவில் இது போல சில இடங்கள்தான் உள்ளன. அதில், எளிதாக அடையக்கூடியது, இந்த லிட்டில் ரான் ஆஃப் கட்ச்.
மைசூர் - முதுமலை
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் எளிதாக அடையக்கூடிய சாலை இது. இந்தச் சாலையின் மூலம் பந்திப்பூர் மற்றும் முதுமலை விலங்குகள் சரணாலயங்கள் இரண்டையும் அடைய முடியும். முக்கியமாக, காடுகள் வழியாக இந்தச் சாலையில் செல்லும்போது ஏற்படும் அனுபவங்களை, வர்ணிப்பது இயலாது. அதிர்ஷ்டம் இருந்தால் யானைக் கூட்டங்கள், புலிகள் போன்றவற்றையும் பார்க்க முடியும். அதனால், சற்று கவனத்துடனும் இந்தச் சாலையைக் கடக்க வேண்டும்.
பர்மர் - ஜெய்சால்மர்
பர்மர் முதல் ஜெய்சால்மர் வரை இருக்கும் இந்தச் சாலை, தார் பாலைவனத்தின் நடுவே செல்கிறது. சாலையில் டிராஃபிக் குறைவாகவே இருக்கும். பல இடங்களில் நேர்கோட்டிலேயே செல்லும் என்பதால், ரொம்பவும் விரட்டாமல் ஓட்ட வேண்டும். சில இடங்களில் சாலை மோசமாக இருக்கும். அதேபோல், இந்த சாலையில் பிரேக் டவுன் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காரணம், ஆள் நடமாட்டம் இங்கு அறவே இல்லை. முக்கியமாக, மான்கள் அடிக்கடி சாலையைக் கடக்கும் என்பதால், கவனம் தேவை. முடிந்தவரை சூரிய வெளிச்சத்துக்குள் இந்தச் சாலையைக் கடந்துவிட வேண்டும். அதன் பிறகு பாதுகாப்பு குறைவு. பாலைவனத்தில் என்ன அழகு எனக் கேட்பவர்கள், ஒருமுறை இந்தச் சாலையில் ஓட்டினால், அதன் பிறகு அப்படிக் கேட்க மாட்டார்கள்!
அஹமதாபாத் - உதய்பூர்
பொதுவாக, நான்கு வழிச் சாலைகளில் வேகமாக ஓட்ட முடியுமே தவிர, அனுபவித்து ஓட்ட முடியாது. ஆனால், அஹமதாபாத் மற்றும் உதய்பூர் நகரங்களுக்கு இடையில் இருக்கும் நெடுஞ்சாலை, அப்படி அல்ல. ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களை இணைக்கும் இந்தச் சாலை, ஓட்டுவதற்கு அருமையாக இருக்கும். ராஜஸ்தானுக்குள் இருக்கும் சாலை முழுக்க பாலைவனத்தில் ஓட்டுவது போன்ற உணர்வைத் தரும். இங்கே அழகான வளைவு, நெளிவுகளுடன் ஓட்டுவதற்கு ஊக்கமூட்டும் மலைப் பாதைகளும் இருக்கின்றன. சில இடங்களில் பக்கா நேர்கோட்டில் இந்தச் சாலை செல்வதால், பாதுகாப்பான வேகத்திலும் ஓட்டலாம்.
No comments:
Post a Comment