இந்தியச் சாலைகளில் ஃபெராரியைவிட மிக அரிதான கார் - ஃபோர்டு மஸ்டாங். ஒவ்வொரு கார் ஆர்வலருடைய வீட்டின் சுவரிலும் இந்த காரின் போஸ்டர் நிச்சயம் இருக்கும். இத்தனைக்கும் மஸ்டாங் கார்களை அதிக அளவில் ஃபோர்டு விற்பனை செய்யவில்லை. ஃபோர்டின் பிக்-அப் டிரக்கின் ஒரு மாத விற்பனை, மஸ்டாங் காரின் விற்பனையைவிட அதிகம். ஆனாலும், மஸ்டாங்கின் பெயர் உலகம் முழுக்கப் பரவியிருக்கிறது. அதுதான் ஒரு காரின் எமோஷனல் அப்பீல்!
ஆறாவது தலைமுறை மஸ்டாங் காரை பெரும் நம்பிக்கைகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளது ஃபோர்டு. ஏற்கெனவே பிரபலமான காரை, எதற்கு 'பெரும் நம்பிக்கைகளுடன்’ அறிமுகப்படுத்த வேண்டும்? அதில்தான் அடங்கியிருக்கிறது ஃபோர்டு நிறுவனத்தின் தொலைநோக்குத் திட்டம்!
ஃபோர்டு மஸ்டாங் போன்ற அமெரிக்க பெர்ஃபாமென்ஸ் கார்கள், என்னதான் ஹார்ஸ் பவர், டார்க் எண்களில் மிரட்டினாலும், டிராக் பெர்ஃபாமென்ஸில் வீக்காகவே இருந்தன. அதாவது, 'பில்டிங் ஸ்ட்ராங்க், பேஸ்மென்ட் வீக்!’
கொஞ்சம் உற்று நோக்கினால், அமெரிக்க ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு 'டிராக் கார்’ இமேஜ் இல்லாமல் இருப்பது புரியும். போர்ஷேவின் 911 காரைப் போன்று எல்லாவித ரேஸ்களிலும் பட்டையைக் கிளப்பாமல், NASCAR ,
டிராக் (Drag) ரேஸிங்குகளில் மட்டும்தான் சீறிக்கொண்டிருந்தது மஸ்டாங். வேறு சில ரேஸிங்குகளில் மஸ்டாங் பங்கு கொண்டிருந்தாலும், மஸ்டாங்கின் பெயர் அங்கெல்லாம் தீர்க்கமாகப் பதியவில்லை. இத்தனை ஆண்டுகளாக இது, ஃபோர்டு நிறுவனத்துக்குப் பெரிய உறுத்தலாக இல்லாமல் இருந்தது. காரணம், மஸ்டாங் விற்பனையாகும் நாடுகள் மிகவும் குறைவு. ஆனால், 'ஆன் தி ரோடு, ஆன் தி ட்ராக்’ என இரண்டு இடத்திலும் நல்ல பெயருடன் ஜெர்மன், பிரிட்டிஷ் கார்கள் உலகம் முழுக்கவும் படையெடுக்க ஆரம்பிக்கவும், ஃபோர்டுக்கு உலகம் முழுவதும் தன்னுடைய ஸ்போர்ட்ஸ் கார் சந்தையை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் வந்தது. ஏகப்பட்ட ஆராய்ச்சி, பெஞ்ச் மார்க்கிங் ஆகியவைகளுக்குப் பிறகு, புதிய மஸ்டாங் காரை அறிமுகப்படுத்தியது ஃபோர்டு. அதுவும் எப்படித் தெரியுமா?
முதல் மஸ்டாங் அறிமுகமாகி, 50 ஆண்டுகள் கழித்து, ஐந்தாவது தலைமுறை மஸ்டாங் காரை ஒரே சமயத்தில் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், ஷாங்காய், சிட்னி, பார்ஸலோனா, டியர்பான் (ஃபோர்டு நிறுவனம் பிறந்த இடம்) என உலகம் முழுக்க ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தி அமர்க்களம் செய்தது.
மார்க்கெட்டிங்கில் கவனமாகவே இருக்கிறது ஃபோர்டு. 'ஒன் ஃபோர்டு’ கொள்கை மூலம், முதன்முதலாக வலதுபக்க ஸ்டீயரிங் கொண்ட மஸ்டாங் உருவாக்கப்பட்டாலும், மஸ்டாங்கின் மூத்த இன்ஜினீயர் டேவ் பெரிகேக் 'மஸ்டாங்கை அமெரிக்காவில் உருவாக்கி, அதை உலகம் முழுக்கக் கொண்டுசெல்ல இருக்கிறோம். ஆனால், உலகத்துக்கான மஸ்டாங்கை நாங்கள் உருவாக்கவில்லை’ என்ற தேர்ந்தெடுத்த வார்த்தைகள் மூலம், 'மஸ்டாங் காரின் தீவிர ஆர்வலர்களான அமெரிக்க வாடிக்கையாளர்களை நாங்கள் விட்டுச் செல்லவில்லை’ எனச் சொல்லாமல் சொல்கிறார் பெரிகேக்.
புதிய மஸ்டாங் காருக்கு 3 இன்ஜின் ஆப்ஷன்கள்...
1. 435 hp சக்தியை அளிக்கும் 5.0 லிட்டர் V8 இன்ஜின்.
2. 300 hp திறன் கொண்ட 3.7 லிட்டர் V6 இன்ஜின்.
3. 310 hp சக்தியை அளிக்கும் 2.3 லிட்டர் எக்கோபூஸ்ட் 4 சிலிண்டர் இன்ஜின்.
என்ன... 4 சிலிண்டர் இன்ஜினா? ஆம். உலகம் முழுக்க, மஸ்டாங் பிராண்டை விற்பனை செய்தே தீருவது என்று தீவிரமாக இருக்கிறது ஃபோர்டு.
இணையத்தில் வெளியாகியுள்ள ஒரு போஸ்டர், நம் அண்டை நாடுகளான இலங்கை, பங்களாதேஷில்கூட மஸ்டாங் விற்கப்படும் என்கிறது. இந்தியாவின் பெயர் அந்த லிஸ்ட்டில் இல்லை. ஆனாலும், இந்தியாவில் புதிய மஸ்டாங் விற்பனைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.
புதிய மஸ்டாங்கின் உருவாக்கத்தில்தான், ஃபோர்டு நிறுவனத்தின் இன்ஜினீயர்கள் இத்தனை ஆண்டுகளாக இந்த காரை முன்னேறவிடாமல் செய்து கொண்டிருந்த ஒரு சிக்கலைக் கண்டுபிடித்தார்கள்.
1964-ம் ஆண்டில் இருந்தே காரின் பின்பக்கம் இடம் பிடித்திருந்த சாலிட் ஆக்ஸில்தான் அது. இந்த 'பேஸ்மென்ட்’ தான் வீக். உலகில் இப்போது எந்த பெர்ஃபாமென்ஸ் காரிலும் இந்த அரதப் பழசான சாலிட் ஆக்ஸில் தொழில்நுட்பம் கிடையாது. இந்த சாலிட் ஆக்ஸிலைத் தூக்கிவிட்டு, இன்டிபெண்டன்ட் ரியர் சஸ்பென்ஷனைப் பொருத்திவிட்டு போர்ஷே 911, பிஎம்டபிள்யூ M3 போன்ற கார்களுடன் புதிய மஸ்டாங்கை பெஞ்ச் மார்க் செய்தது ஃபோர்டு. இந்த கார்களை புதிய மஸ்டாங் தோற்கடிக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
No comments:
Post a Comment