சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Nov 2014

நவம்பர் 14 : நேருவின் 125 வது பிறந்தநாள்



சீனப்போரில் தோற்றவராக,காஷ்மீர் சிக்கலை தவறாகக் கையாண்டவராக,இன்றைக்கு இந்தியாவின் பெரும்பாலானஅவலங்களுக்குக் காரணமானவராகக் காட்டப்படும் அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் ? நேருவைப்பற்றிய பல்வேறு பரப்புரைகள் எந்த அளவுக்கு உண்மையானவை ? 

மாபெரும் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்த தேசத்தின் விடுதலைப்போரில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நேரு இந்தியாவின் முதல் பிரதமராக இருந்ததால் ஏகத்துக்கும் விமர்சிக்கப்படுகிற ஒரு தலைவராகஇருக்கிறார் . நேரு இங்கிலாந்தில் போய்த் தன் உயர்கல்வியை முடித்துவிட்டு இந்தியா திரும்பினார் ;மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்று ஐரோப்பாவுக்குச் சிறப்புத் தொடர்வண்டி வைத்து கூட்டிப்போகிற அளவுக்கு அவர் வீட்டில் செல்வவளம் இருந்தது . மேற்கில் அவர் செய்த பயணங்கள் அவரைச் சோசியலிசம் நோக்கி ஈர்த்தன . 





காந்தியின் கீழே இந்திய விடுதலைப்போரில் பங்குகொண்ட மூவாயிரம் நாட்களுக்கு மேலே சிறையில் கழித்தவர் அவர். சொந்த தந்தையைச் சிறையில் சிறப்பு உணவு சாப்பிடக்கூடாது என மறுத்தவர் .நேரு மோதிலாலுக்குப் பின் காங்கிரசின் தலைவர் பதவிக்கு வந்தார். தன் மகளின் முகத்தை இளவயதில் பெரும்பாலும் பார்த்ததே இல்லை ; சிறையில் இருந்து உலக வரலாற்றை மகளுக்குப் போதித்த ஒரே தந்தை இவராகத்தான் இருக்க முடியும் . 

பேரன் பிறந்த பொழுது சிறையை விட்டு மன்னிப்பு கேட்டால் அனுப்புகிறோம் என்ற பொழுது மறுத்தவர் , தெருவில் போலீஸ் வாகனம் போகும் பொழுது விளக்கு வெளிச்சத்தில் பேரனை தூக்கி இந்திரா காண்பிக்கப் பார்த்துவிட்டு ,”இவர்கள் வெளிச்சத்தில் வாழவேண்டும் என்று தான் நாங்கள் இருளில் உழல்கிறோம்!”என்று கடிதம் எழுதினார் இந்தியாவின் பிரதமர் ஆனதும் நாட்டைக் கட்டமைக்கும் வேலையில் இறங்கிய நேரு இரண்டு விஷயங்களில் தெளிவாக இருந்தார் . நாடு எப்பொழுதும் மதச்சார்பின்மை கொண்ட நாடாகவே இருக்கும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். கோயில்களுக்குப் போவதையும்,மதத்தலைவர்களைச் சந்திப்பதையும் அவர் தவிர்த்தே வந்தார்.

இந்துக்களுக்கு என்று பொதுவான சிவில் சட்டத்தை நேரு அம்பேத்கரின் விருப்பபடி கொண்டுவர முயல அதை மதவாதிகள் மற்றும் பழமைவாதிகள் எதிர்த்தார்கள். நேரு தன்னைக் கைவிட்டு விட்டதாக அம்பேத்கர் மனம் வெதும்பி பதவி விலகினார். நேரு அச்சட்டங்களைத் தனித்தனி சட்டங்களாக உடைத்து நிறைவேற்றி அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தினார் 

"
மதவாதமும்,வகுப்புவாதமும் ஆபத்தானவை. அவை இந்த நாட்டுமக்களைப் பிளவுபடுத்தலை அனுமதிக்க முடியாது. அவற்றை ஓட்டுக்களைப் பெற பயன்படுத்துவதை விட அவமானமில்லை. அப்படி மதவாதம் மற்றும் வகுப்புவாதம் மூலம் பெறும் ஒரு ஓட்டு கூட எனக்கு வேண்டாம். அவற்றைத் தொடர்ந்து எதிர்ப்பேன்" என்று முழங்கிய தலைவர் அவர் கேரளாவில் பாதிரியார்கள் அவருக்காக ஓட்டு சேகரிக்கிறார்கள் என்று அறிந்ததும் அப்படிச் செய்வது தவறு என்று கடுமையாகக் கண்டித்தார் அவர். 

நாம் எந்த அளவுக்கு ஒன்று சேர்ந்து முன் செல்கிறோமோ அந்த அளவுக்கு நாடு வளமை பெறும்.அரசியலில் மதத்தை என்றும் இறக்குமதி செய்யக்கூடாது !”என்பது நேருவின் வரிகள் . நேரு வாரிசு அரசியலை கொண்டுவந்தவர் இல்லை. இந்திரா அவர் காலத்தில் கட்சியில் ஓரங்கட்டபட்டே இருந்தார் . சாஸ்திரி,தேசாய்,காமராசர் எனப் பல மூத்த தலைவர்கள் இருந்தார்கள், நேருவின் காலத்தில் கட்சியின் ஜனநாயகம் பலமாக இருந்தது . கட்சி தலைவர்கள் இவர் சொல்வதை எல்லாப் புள்ளிகளிலும் கேட்கவில்லை ; இவரின் சொல்லை மீறி மெட்ராஸ் மாகாணத்தில் பிரகாசம் முதல்வர் ஆனார் . 

                          


அவர் காலத்தில் உட்கட்சி தேர்தல்கள் அருமையாக நடந்தன.மிகக்குறைந்த அளவிலேயே எதிர்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்த பொழுதும் அவர் காலத்தில் தான் நெடுநேரம் விவாதங்கள் நடந்தன. நேரு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப் போராட்டங்கள் எழுந்த பொழுது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துப் பிரிக்க அனுமதி கொடுத்தார். 

ஹிந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாடு கொதித்து எழுந்த பொழுது உங்களுக்கு எப்பொழுது விருப்பமோ அப்பொழுது ஹிந்தியை சேர்த்துக்கொள்ளலாம் என்று விட்டுக்கொடுத்தார் இது போலவே இவரின் வார்த்தையை மீறி ராஜேந்திர பிரசாத் சோம்நாத் ஆலயத்துக்குப் போனார். காந்தியின் படுகொலையின் பொழுது ஆர் எஸ் எஸ் இயக்கமும் சம்பந்தப்பட்டு இருந்தது என்ற இவரின் கூற்றைப் படேல் நிராகரித்தார். எல்லாரின் குரல்களுக்கும் மதிப்பு கொடுக்கிற ஒருவராக நேரு இருந்தார். சிறுபான்மை இன மக்களைக் காப்பதை தன் முக்கியப் பணியாக நேரு கருதினார். 

நேரு வாழ்நாள் முழுக்கப் பிறர் கருத்தை மதிக்கிற ஜனநாயகவாதியாக இருந்தார்; யார் வேண்டுமானாலும் தன்னை விமர்சனம் செய்யலாம் என அறிவித்து இருந்தார்.மாடர்ன் ரீவியு என்கிற பத்திரிக்கையின் இந்த வரிகளைப்பாருங்கள் ,”நேரு சர்வாதிகாரி;அவருக்குத் தற்பெருமை அதிகமாகி விட்டது ; சீசரைப் போன்ற புகழ் மற்றும் அதிகாரத்தோடு அவர் திகழ்கிறார். அவரை இப்படியே இருக்க அனுமதிக்கக் கூடாதுஇதை எழுதியது யார் தெரியுமா ஜவஹர்லால் நேரு அவர்களே தான். இந்தியாவில் தேர்தல்களின் பொழுது ஒட்டுமொத்த மக்களில் பத்தில் ஒரு சதவிகிதத்தினரை நேரடியாக சந்தித்து தேர்தல் அரசியலுக்குள் இந்தியாவை வெற்றிகரமாக அழைத்துச் சென்றார் 

யாரேனும் திட்டி கார்டூன் போட்டால் இன்னமும் நன்றாக விமர்சியுங்கள் எனக் கூப்பிட்டு பாராட்டுவார் நேருவிடுதலை பெற்றதும் நேரு இந்தியாவின் பிரதமர் ஆனார் .அப்பொழுது அவர் “tryst with destiny ” (விதியோடு ஒரு ஒப்பந்தம்)என ஆற்றிய உரை உலகப்புகழ் பெற்றது .உலகமே தூங்கிக்கொண்டு இருக்கிற பொழுது இந்த நாடு விழித்தெழுகிறது.இந்த நாட்டின் மிகப்பெரும் நல்ல உள்ளங்களின் நோக்கம் எல்லா மக்களின் கண்ணீரை துடிப்பதே ஆகும் ;அது நடக்கும் வரை நம் பணி ஓயாது !”என்பது அதன் சாரம்.

பாரளுமன்ற ஜனநாயகத்தை முழுவதும் மதித்த நேரு எதிர்கட்சிகள் பலமில்லாத காலத்திலும் தீவிரமான விவாதங்களை முன்னெடுத்தார். அவரின் கட்சி நபர் சபை கட்டுப்பாட்டை மீறியதும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தை அவரே கொண்டு வந்தார் விடுதலை பெற்ற பின் பல்வேறு நாட்டு நிர்மாணத்திட்டங்களை ஊக்குகுத்தார். அணைகள், தொழிற்சாலைகள், விவசாயம் என எல்லாவற்றிலும் மக்களை ஊக்குவித்து ஈடுபடச் செய்தார்.அணைகளைத் திறக்க போனால் அதைக் கட்டிய எளிய தொழிலாளியை விட்டே அதைத் திறக்க வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.இந்தியாவின் பிரதமராகப் பதினேழு ஆண்டுகள் தொடர்ந்து சேவை புரிந்து இருக்கும் நேருவின் சாதனை இன்றைக்கும் நிலைத்து நிற்கிறது



விதிகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்,விடுதலைக்குப் பின் எல்லாவீட்டிலும் ரேஷன் முறை அமலுக்கு வந்தது.நேரு எளிய மக்கள் நிற்கும் வரிசையில் நின்று கொண்டு இருந்தார். க்ளார்க் பதறியடித்து வந்துமுன்னே வாருங்கள்என்ற பொழுது.” விதி எல்லாருக்கும் பொதுவானதுஎன மறுத்துவிட்டார். ஓட்டுபோட்ட சட்டையைப் போட்டுக்கொண்டு வீட்டை ஒன்பது ரூபாய் மிச்சம் பிடித்து வாழ்ந்தவர் நேரு என்பது இன்றைக்கு ஆச்சரியமான செய்தியாக இருக்கலாம். 

அலகாபாத் வீட்டில் ஒழுங்காக வரி கட்டவில்லை என்று ராம் மனோகர் லோகியா குற்றச்சாட்டை எழுப்பிய பொழுது நேரு பொறுமையாக அந்தக் கேள்வியை எடுத்துக்கொண்டு பதிலளித்தார். ஆதாரங்களோடு அதிகமாகவே வரி கட்டியதை ஆதாரங்களோடு தெளிவு செய்ததும் லோகியா மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். 

ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ,முதலமைச்சர்களோகுற்றவாளிகள் அல்லது அதைத் தடுக்கத் தவறியவர்கள் என்று விசாரணையின் முடிவில் அவர்களை வீட்டுக்கு அனுப்ப அவர் யோசிக்கவில்லை. கெய்ரோன்,டி.டி.கே,மாத்தாய் என்று பெரிய பட்டியலே சொல்லலாம். நேரு அவர்களைக் கண்டும் காணாமல் இருந்தார் என்று சொல்லக்கூடும். அதே சமயம் நேரு அவர்கள் மீதான நீதி விசாரணையில் தலையிடவில்லை என்பதை நேர்மையாகப் பதிவு செய்ய வேண்டும். 

நேரு உலக நாடுகளின் ஒற்றுமைக்காகப் பஞ்சசீலக் கொள்கைகளை உருவாக்கினார். இக்கொள்கை மூலம் உலகம் அமைதிப் பாதையில் சென்றது. அணிசேராக் கொள்கையைக் கடைபிடித்துத் தாயகத்தின் மதிப்பை உலகநாடுகளிடையே உயர்த்தினார். பல மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலனி நாடுகளின் விடுதலையைக் கொண்டுவருவதில் முக்கியப் பங்காற்றினார் .இந்தியாவின் முதல் வெளியுறவுத்துறை அமைச்சராக அவரே செயல்பட்டார். பல்வேறு ஆசிய மற்றும் ஆப்ரிக்க காலனிகளின் விடுதலைக்கு காரணமானார்

வடகிழக்கில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தன்னுடைய செயலாளர்கள் ஆக்கி இந்தியாவை விட்டு வடகிழக்கு வெளியேறுவதை அவர் தடுத்தார். ஆதிவாசிகளிடமும் பரிவோடு அவர் நடந்து கொண்டார். நேருவின் பொருளாதாரக் கொள்கைகள் பெருந்தோல்வி என்று இன்றைக்கு நாம் சொன்னாலும் வலிமையான அறிவியல் பீடங்கள் அவற்றால் உண்டாகின. நீர்ப்பாசனம்,நிலங்களை ஒழுங்காகப் பகிர்ந்தளித்தல்,அனைவருக்கும் கல்வி,சுகாதாரம் ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்தாமல் போனது அவரின் தோல்விகள் 

இந்திராவின் பேச்சைக்கேட்டு ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கேரளா அரசை கலைக்கிற வேலையை அவர் செய்தது பலரை அதிரவைத்தது. ,அணிசேரா கொள்கை என்று சொல்லிக்கொண்டு இருந்தவர் சோவியத் ரஷ்யா ஹங்கேரியை தாக்கிய பொழுது மவுனம் சாதித்தார். கடிதங்களில் தன் எதிர்ப்பை காட்டினாலும் வெளிப்படையாக அதைப் பதிவு செய்யவில்லை அவர் 

சீனாவின் சிக்கலில் நேருவை தொடர்ந்து வில்லனாக்கும் போக்கு இன்றைக்கு ஹெண்டெர்சன் அறிக்கையால் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால்,ஆங்கிலேயே ஏகாதிபத்தியம் வகுத்த கோட்டை ஏற்க மாட்டேன் என்று அடம்பிடித்த மாவோ தனக்குச் சாதகமாக மஞ்ச்சூ பகுதியை அதே ஆங்கிலேய ஏகாதிபத்தியம் வழங்கிய பொழுது ஏற்றுக்கொண்டார். இந்தியாவில் சீன அக்சாய் சின்னில் சாலை அமைத்தது என்பதற்கு எழுந்த கடும் கண்டனத்துக்குப் பிறகே நகரும் முடிவை நேரு எடுத்தார். 

சீனாவிலும் மூன்று கோடி மக்கள் மரணத்தால் தனக்கு விழுந்து கொண்டிருந்த செல்வாக்கை மாவோ நிலைநாட்ட வேண்டிய சூழல் இருந்தது. திபெத்தை சீனாவிடம் இருந்து பிரிக்க நேரு எண்ணுகிறார் என்கிற தவறான எண்ணம் அவர்களுக்கு இருந்தது என்றால் நேரு சீனாவை ஒரு எதிரி என்று இறுதிவரை நம்ப மறுத்தார். அவர் சீனாவை ஏகத்துக்கும் நம்பி அது முதுகில் குத்தி தோல்வியைப் பரிசளித்த பொழுது நொறுங்கிப்போனார் என்பது அவரின் மரணத்தைத் துரிதப்படுத்தியது. 

நேரு ஆண்ட பதினேழு வருடத்தின் ஆகச்சிறந்த தாக்கம் எதுவாக இருக்கும் என்று அவரிடம் கேட்கப்பட்ட பொழுது ,”என்னுடைய அழுத்தமான சுவடாக ஜனநாயகம் இருக்கும் !” என்று அவர் சொல்லியிருந்தார். அதுவே நடந்தது. உலகப்போருக்குப் பின் விடுதலையடைந்த பெரும்பாலான நாடுகள் எப்படி ஜனநாயகத்தைக் கைவிட்டன என்பதைக் கவனித்தால் நேருவின் சாதனை புரியும். முதல் தேர்தலில் அவர் இந்தியாவின் மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கு மக்களைச் சந்தித்து ஓட்டளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 

நேரு தனக்குப் பின் ஒரு வாரிசை நியமிக்காமல் விலகியதற்குக் காரணம் அதை மக்களும்,அவர்களின் பிரதிநிதிகளும் தேர்வு செய்யட்டும் என்று எண்ணியதே காரணம்.இந்திரா காந்தி நேருவின் மறைவுக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்த தன்னுடைய தோழியிடம் அமெரிக்கா கிளம்பிப்போய் அங்கேயே செட்டில் ஆகிவிடலாம் என்று யோசிப்பதாகக் கடிதம் எழுதினார் என்பதில் இருந்தே நேரு இந்திராவை தன்னுடைய வாரிசாகப் பார்க்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். 
நேருவை வாழ்நாள் முழுக்கத் தீவிரமாக விமர்சித்த D.F.கரக்கா இப்படி அவரின் உறுதியை புகழ்ந்தார் ,"நேரு தன்னுடைய வாரிசை பற்றி எந்தக் குறிப்பிடுதலையும் செய்யாதது மெச்சத்தக்கது. நேரு தனக்குப் பின் வருகிறவர்களுக்கான பணி அது என்பதில் உறுதியாக இருந்தார். அவர் அதைப்பற்றிக் கவலைப்படவே இல்லை." 

                             


நேருவை ராமச்சந்திர குகாவின் வரிகளில் அவர்களை இப்படி வர்ணிப்பது சரியாக இருக்கும். காந்தியை போல அவர் இன, மத, ஜாதி மற்றும் வரக்க,பாலின மற்றும் புவியியல் வேறுபாடுகளைக் கடந்தவர். இஸ்லாமியர்கள் நண்பராகக் கொண்டு இந்து அவர்,அவர் ஒரு பிராமணராக இருந்தாலும் ஜாதி விதிகளை அவர் பின்பற்றவில்லை,வட இந்தியராக இருந்தும் தென்னிந்தியர்கள் மீது அவர் இந்தியை திணிக்காதவர், பெண்கள் மதிக்கவும், நம்பவும் கூடிய ஒரு ஆண் அவர்." சிறியன சிந்தியாத நேருவை நினைவு கூர்வோம்.

No comments:

Post a Comment