சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Nov 2014

குழந்தைகள் மரணம்... யார் குற்றம்? ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!

ர்மபுரியில் இருந்து வரும் தகவல்கள் தவிக்க வைக்கின்றன. ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையையும் தன் பக்கமாகத் திருப்பி இருக்கிறது, தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. அங்கு, அடுத்தடுத்து நிகழ்ந்துகொண்டிருக்கும் பச்சிளம் குழந்தைகளின் மரணங்கள், நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன. பிறந்து சில நாட்களே ஆன பச்சைக்குழந்தைகள் தொடர்ந்து இறந்து கொண்டு இருக்கின்றன. 'மருத்துவமனையின் அலட்சியம்என்று சிலரும், 'சத்துக்குறைவும் எடைக்குறைவும்தான் காரணம்என்று அரசும் சொல்ல ஆரம்பித்துள்ளன. ஆனால் பரிதாபம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது!

இதுவரை நடந்த இறப்புகள்! 
நவம்பர் 14 குழந்தைகள் தினம். ஆனால், தர்மபுரியைப் பொறுத்தவரை அது மரண தினமாக மாறிப்போனது. அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு, திருப்பத்தூரைச் சேர்ந்த ஷோபனாவின் பெண் குழந்தை மரணம் அடைந்தது. அடுத்த அரை மணி நேரத்தில், ஈச்சம்பாடியைச் சேர்ந்த குமுதாவின் ஆண் குழந்தை இறந்தது. பழனியம்மாள், பூர்ணிமா, ஜெயகாந்தி ஆகிய மூன்று பேருடைய பெண் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தன. அதாவது  6  மணி நேரத்துக்குள் ஐந்து குழந்தைகள் இறந்தன. அடுத்தடுத்து குழந்தைகள் மரணம் அடைந்த செய்தி, தர்மபுரி மாவட்டம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மரணம் நிற்கவில்லை. மறுநாள், சத்யா என்பவரின் பெண் குழந்தை, 17ம் தேதி ராஜலெட்சுமி என்பவரின் ஆண் குழந்தை, பொம்மிடியைச் சேர்ந்த கன்னியம்மாவின் ஆண் குழந்தை, திட்டம்பட்டியைச் சேர்ந்த அம்பிகாவின் பெண் குழந்தை, கொட்டாம்பட்டியைச் சேர்ந்த ஜெயகலாவின் பெண் குழந்தை, ஓசூரைச் சேர்ந்த பிரேமாவின் ஆண் குழந்தை என குழந்தைகளின் இறப்பு தொடர்ந்தது.

'மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவு!’  
தர்மபுரியில் இருக்கும் இந்த மருத்துவமனை பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் உட்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பச்சிளம் குழந்தைகள் தர்மபுரி மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காகப் பரிந்துரை செய்யப்படுகின்றன. இந்தத் தீவிர சிகிச்சைப்பிரிவில் 9 மருத்துவர்களும் 23 மருத்துவப் பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். இவை போதுமானதாக இல்லை என்று அந்த வட்டாரத்து மக்கள் சொல்கிறார்கள்.  தொடர் இறப்புகளுக்குப் பிறகு, மருத்துவர்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு நாளும் அதிகாரிகள் அதிகரித்துக் குறிப்பிடுகிறார்கள்.

8 வென்டிலேட்டர்... ஒரே ஒரு இன்குபேட்டர்!
பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அளிக்கப்படும் சிறப்பு சிகிச்சைகள் என்ன, தேவையான கருவிகள் அங்கு உள்ளனவா என்பதை அறிய பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்தோம்.   நிலை1, நிலை2, நிலை3 என பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. நிலை1, நிலை2 ஆகிய இரு பிரிவுகளில் அபாயக்கட்டத்தில் உள்ள 20 குழந்தைகள் சிகிச்சைபெற்று வருகின்றன. ஆனால் இங்கு 8 வென்டிலேட்டரும் ஒரே ஒரு இன்குபேட்டரும்தான் இருக்கிறது. 'பல மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள் வரும் மருத்துவமனைக்கு போதுமான வசதிகளே இல்லைஎன்று பொதுமக்கள் சொல்கிறார்கள்.

தொடர் மரணத்துக்கு என்ன காரணம்?

குழந்தைகள் தொடர் இறப்பு குறித்து ஆய்வு செய்ய  மருத்துவக் கல்லூரி இயக்குநர் கீதாலட்சுமி தலைமையில் ஒரு குழு வந்தது. பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர கண்காணிப்புப் பிரிவு ஒருங்கிணைப்பு அலுவலர் டாக்டர் சீனிவாசன், சென்னை குழந்தைகள் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பிரிவின் தலைவர் டாக்டர் குமுதா ஆகியோர் வந்திருந்தனர். ''தர்மபுரியைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இருந்து காப்பாற்ற இயலாத நிலையிலும், தனியார் மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட குழந்தைகளுமே இங்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அரசு மருத்துவமனைதான் உயிர் போகிற நிலையிலும்கூட இந்தக் குழந்தைகளைத் தாங்கிப் பிடிக்கிறது. குழந்தைகளின் எடை குறைபாடு, குறைப்பிரசவம், சுவாசக்கோளாறு, மஞ்சள்காமாலை உள்ள குழந்தைகள்தான் மரணம் அடைந்துள்ளன' என்று இவர்கள் சொல்கிறார்கள்.

'ஊட்டச்சத்து குறைந்த தர்மபுரி பெண்கள்!’
டாக்டர் குமுதாவிடம் பேசினோம். 'மரணம் அடைந்த 11 குழந்தைகளின் தாய்மார்கள் பலருடைய வயது 20ல் இருந்து 22க்குள் இருக்கிறது. இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறவர்களுக்கு ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பது இல்லை. மேலும், முதல் குழந்தை பிறந்தவுடன் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் இடைவெளி தேவை. இங்கு உள்ளவர்கள் அதைப் பின்பற்றுவதே இல்லை. குழந்தை கருவுறும் பொழுது ஒரு தாய் குறைந்தது 45 கிலோ இருக்க வேண்டும். பிரசவக்காலத்தில் 55 கிலோவுக்கு மேல் இருந்தால்தான், குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். ஊட்டச்சத்து மிகவும் முக்கியம். தர்மபுரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் இயல்பாகவே பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைவாக இருக்கும். அவர்கள் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இவர்கள் யாரும் அதைப் பின்பற்றாத காரணத்தால்தான் குழந்தைகளை இழக்க நேரிடுகிறது. இறக்கும் குழந்தைகளின் எண்ணிகையை பெரிதுபடுத்துகிறார்களே ஒழிய, மரண நிலையில் இருந்து நூற்றுக்கணக்கான குழந்தைகள் காப்பாற்றப்படுவதை யாரும் எண்ணிப் பார்க்க மறுக்கின்றனர்' என்றார்.

''அந்தக் குழந்தையைத் தூக்கிப்போடு!''

கடந்த 14ம் தேதி குழந்தையைப் பறிகொடுத்த பூர்ணிமாவின் கிராமமான மருக்காலம்பட்டிக்குச் சென்றோம். பூர்ணிமாவின் குடும்ப நண்பர்  முல்லை அரசு, ''12ம் தேதி 12 மணிக்கு பூர்ணிமாவுக்கு வலி எடுத்துருச்சி. உடனடியாக பூதநத்தம் ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டு போனோம். இன்னும் சரியா வலி எடுக்கலை மாத்திரை கொடுக்கிறோம். கொஞ்ச நேரத்துல குழந்தை பொறந்துரும்னு சொன்னாங்க. சரியா 5.15க்கு குழந்தை பிறந்திடுச்சி. '1.250 கிராம்தான் எடை இருக்கு. உடனே தர்மபுரிக்கு கொண்டுபோங்கனு சொல்லிட்டாங்க. அன்னைக்கு இரவே தர்மபுரிக்கு கொண்டுபோனோம். குழந்தைய பார்த்த ஒரு நர்ஸ், 'அந்தக் குழந்தை உடம்புல புள்ளி புள்ளியா இருக்கு. அதைத் தூக்கி அந்தப்பக்கமா போடுன்னு சொன்னாங்க. உடனேயே .சி.யுல சேர்க்காம இரவு முழுக்க ஜெனரல் வார்டுலயே வெச்சிருந்தாங்க. மறு நாள் காலையிலதான் .சி.யுக்குக் கொண்டு போனாங்க. 14ம் தேதி 6 மணிக்கு குழந்தை செத்துடுச்சினு சொல்லிட்டாங்க. ஆரம்பத்துல இருந்தே பூதநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்துலதான் செக் அப்க்கு போயிட்டு இருந்தாங்க. அவுங்க மூணு முறை ஸ்கேன் எடுத்துப்பார்த்துட்டு குழந்தைக்கு எந்தப் பிரச்னையும் இல்லைனு சொல்லிட்டாங்க. குழந்தை எடை கம்மியாக இருக்குனு முன்னாடியே சொல்லியிருந்தா அதுக்கான சிகிச்சை எடுத்து இருப்போம்'  என்றார்.

தீவிர சிகிச்சைப்பிரிவின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் ஸ்கிரீனில், '.................. என்பவருக்கு மாலை 6 மணிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. எடை 2.200 கிராம்' என்று ஓடிக்கொண்டிருந்தது. நம் குழந்தைக்கு என்ன ஆகுமோ என்று தாய்மார்களும் உறவினர்களும் நெஞ்சம் பதைபதைக்கக் காத்துக்கிடந்தார்கள்.
வறட்சியான மாவட்டம், ஏழ்மையான மக்கள், இளம்வயதில் திருமணம், ஆரோக்கியமற்ற உணவு, மருத்துவமனையின் அலட்சியம், அரசாங்கத்தின் அக்கறையின்மை... இவை அனைத்தும் சேர்ந்து பச்சிளம் குழந்தைகளைப் பழிவாங்கி வருகிறது. இனியாவது சமூக அக்கறையுடன் பிரச்னைகளை சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்கட்டும்!

தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு...

  • 2011ல் இங்கு பிரசவித்த, சிகிச்சைக்காக வந்த  குழந்தைகளின் எண்ணிக்கை 1,460. அதில், 270 குழந்தைகள் மரணம் அடைந்தன.
  • 2012ல் இங்கு பிரசவித்த, சிகிச்சைக்காக வந்த  குழந்தைகளின் எண்ணிக்கை 3,623. அதில், 374 குழந்தைகள் மரணம் அடைந்தன.
  • 2013ல் இங்கு பிரசவித்த, சிகிச்சைக்காக வந்த  குழந்தைகளின் எண்ணிக்கை 4,155. அதில், 448 குழந்தைகள் மரணம் அடைந்தன.
  • 2014ல் (நவம்பர் 17 வரை) இங்கு பிரசவித்த, சிகிச்சைக்காக வந்த  குழந்தைகளின் எண்ணிக்கை 4143. அதில், 449 குழந்தைகள் மரணம் அடைந்தன.


1,224 கோடி ரூபாய் கடன்..!
பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க, பிரசவ காலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதத்தைக் குறைக்க, பிரசவ சிகிச்சைக்கான மருத்துவ வசதிகளை ஏற்படுத்த என கடந்த 10 வருடங்களில் உலக வங்கியிடம் தமிழ்நாடு அரசு ரூ. 1,224 கோடி கடனாக வாங்கி உள்ளது. இதை வைத்து என்னதான் செய்தார்களோ?

மர்ம தேசமாகும் மருத்துவமனை!
பச்சிளம் குழந்தைகளின் தொடர் மரணங்களுக்குப் பிறகு மர்ம தேசமாக மாறி வருகிறது தர்மபுரி அரசு மருத்துவமனை. குழந்தை மரணங்களின் விவரங்களை வெளிப்படையாக அறிவித்தவர்கள், இப்போது அவற்றை மூடி மறைக்கிறார்கள். நவம்பர் 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் குழந்தைகள் இறந்தன. பல குழந்தைகள் சீரியஸ் கன்டிஷனில் இருந்தன. இந்தத் தொடர் மரணங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நெருக்கடி மருத்துவமனை நிர்வாகத்துக்கும் அரசுக்கும் ஏற்பட்ட பிறகு, 18, 19 ஆகிய தேதிகளில் ஒரு குழந்தைகூட இறக்கவில்லை என்றும், எல்லா குழந்தைகளும் நன்றாக உள்ளன என்றும் மருத்துவமனை தரப்பில் சொல்லப்பட்டது

அதன் பிறகு பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. 19ம் தேதி இரவு 11.30 மணியளவில் ஒரு குழந்தையை சத்தமில்லாமல் ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். இது, பல சந்தேகங்களைக் கிளப்புகிறது. பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப்பிரிவின் சிறப்பு நிபுணர்கள் பலர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், அவர்கள் வந்த அன்று பிரஸ் மீட் கொடுத்ததோடு சரி, அதிலும் அவர்கள் மருத்துவமனை மேல் தவறு இல்லை என்று சொன்னார்களே தவிர, அவர்கள் இதுவரை என்ன ஆய்வு செய்தார்கள் என்று சொல்லவில்லை, கிருமி தொற்று எதுவும் இருக்கிறதா என்று ஆய்வுசெய்து கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால், ஒரு குழந்தையையாவது இது கிருமித்தொற்றால் இறந்ததா என்று போஸ்ட்மார்ட்டம் செய்து உறுதிப்படுத்தி சொல்லவில்லை.


No comments:

Post a Comment