சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Nov 2014

தூசி தவிர்த்தால், தும்மல் குறைக்கலாம்


சூப்பர் ஸ்டார் ரஜினி 'முத்துபடத்தில், நாடக மேடையின் முன்பு அமர்ந்து 'ஹச் ஹச்என்று தும்முவார். மேடையில் வசனம் பேசிக் கொண்டிருக்கும் மீனாவுக்கு இது இடையூறாக இருக்க, அவர் ரஜினியுடன் சண்டை போடுவார்.  அப்போது ரஜினி, ஸ்டைலாக‌, 'ஏம்மா... இந்த தும்மலு, இருமலு, விக்கலு, கொட்டாவி, நல்லது, கெட்டது, பசி, தூக்கம், பொறப்பு, இறப்பு, பணம், பட்டம், பதவி இதெல்லாம் தானா வரும். வந்தாலும் ஏன்னு கேக்க முடியாது! போனாலும் தடுக்க முடியாது' என்று வசனம் பேசியதும் கை தட்டல்களும் விசில் சத்தமும் தூள்பறக்கும். தும்மல் என்பது இயற்கையானது. அதை ஒருபோதும் தவிர்க்கமுடியாது என்பதற்குத்தான் இந்த நீளமான டயலாக்.

'இது நூற்றுக்கு நூறு உண்மைதான். தும்மல் என்பது இயல்பான ஒன்று. ஆனால், சிலர் பக்கத்தில் இருப்பவர்கள் பதறும் அளவுக்கும், வீடே அதிரும் அளவுக்கும் தும்முவார்கள். இது காலம், காலமாகவே இருந்து வரும் பிரச்னைதான். வயது முதிர்ந்தவர்களுக்கே அதிர வைக்கும் தும்மல் பிரச்னை அதிக அளவில் காணப் படுகிறது. இப்படி தும்மல் அதீத சத்தத்துடன் வெளிப்படுவதற்கு என்ன காரணம், அடுக்கடுக்கான தும்மல் எதனால் ஏற்படுகிறது, இதனால் உடலுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பது பற்றிய பல்வேறு சந்தேகங்கள் பலருக்கும் எழலாம். எந்தப் பிரச்னையையும் எளிதில் சமாளிக்க வழி இருக்கிறது'' என்கிறார் சென்னை காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் பாலமுருகன்.  

'நம் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய ஒரு கிருமியோ, தூசியோ நம் சுவாசம் வழியாக உடலுக்குள் ஊடுருவும்பட்சத்தில், உடனடியாக அதை வெளியேற்றும் தற்காப்பு நடவடிக்கைதான் தும்மல். இது நொடிப்பொழுதில் நடக்கும் செயல்பாடு. எதிர்பாராத நேரத்தில் தோன்றும் இதன் வேகம் காரணமாகத்தான் சமாளிக்க முடியாமல் சிலர் அதிக சத்தத்துடன் தும்முகின்றனர். அத்துடன் தும்மலிட அதிகம் சிரமப்படுபவர்களும் அதிக சத்தத்துடன் தும்முவார்கள். இது ஒவ்வொருவரின் உடல் இயல்பைப் பொறுத்து மாறுபடும்.  அதிக சிரமப்பட்டு தும்மும்போது, காது வலியும் ஏற்படலாம். மூக்குக்கும் காதுக்கும் தொடர்பு இருப்பதால் மூக்கில் இருக்கும் சைனஸ் பிரச்னையின் தாக்கம் காது வரைக்கும் பாதிப்புக்குள்ளாக அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால்தான் சின்னக் குழந்தைகளிடம் மூக்கைப் பொத்திக்கொண்டு தும்மக் கூடாது என்பார்கள்!

அன்றாட வாழ்வில் நாம் தூசி படிந்த காற்றையே சுவாசித்து வருகிறோம். இதன் தொடர்ச்சியாக சுவாசப் பகுதியில் அலர்ஜி ஏற்பட்டு மூக்கின் உட்பகுதியில் சிவந்து வீக்கம் உண்டாகலாம். இதனால் சுவாசப் பிரச்னை மற்றும் தும்மலின்போது அதிக சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மூக்கில் இருந்து நீர் வடிதல், தொடர்ச்சியான அதீத தும்மல் மற்றும் மூக்கு அடைப்பு போன்றவை இதன் முதல் அறிகுறிகள். நாளடைவில், இதுவே சைனஸ் பிரச்னையாக மாறி, சிறிது தூசி பட்டால்கூட தொடர்ச்சியான தும்மலை ஏற்படுத்திவிடும்' என்கிற டாக்டர் பாலமுருகன், சிகிச்சை முறைகளையும் கூறுகிறார்.  

'தும்மல் நிகழ்வின் வளர்ச்சியைத் தடை செய்வதே முதலாம் கட்ட மருத்துவம். சுத்தமற்ற காற்றை சுவாசிப்பதைத் தவிர்ப்பதில் தொடங்கி நம் கை நகத்தை சுத்தமாக வைத்திருப்பது வரை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இதுவே இதன் 50 சதவிகித வளர்ச்சியைத் தடுத்ததற்கு சமம். இந்தப் பிரச்னை அதிகமாகும்பட்சத்தில் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும். எண்டோஸ்கோப்பி மூலம் சுவாசப் பகுதியில் அலர்ஜி எந்த அளவுக்கு உள்ளது, இதன் விளைவால் மூக்கின் உட்புறச் சதைகள் எந்த அளவுக்கு வீங்கி இருக்கிறது என்பதையும் பரிசோதித்துப் பார்த்து சரிப்படுத்த முடியும். அலர்ஜி, வீக்கம் காரணமாக சுவாசப் பிரச்னையுடன் சேர்த்து தும்மும்போது ஏற்படும் காது வலிக்கு, சைனஸ் பகுதியைத்தான் முதலில் பரிசோதிக்க வேண்டும்' என்கிறார்.  
              
சைனஸ் அலர்ஜியைத் தடுக்க எளிமையான டிப்ஸ்
  •  இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலையணை உறையை மாற்றி சுத்தப்படுத்த வேண்டும்.
  •  வீட்டை சுத்தப்படுத்தும் போது மூக்கை துணியால் கட்டிக்கொள்ள வேண்டும்.  
  •  தூசி படியும் பொருட்களைப் படுக்கை அறையில் வைக்காதீர்கள்.  
  •  வெளியே செல்லும்போது, முகத்தில் மாஸ்க் அல்லது துணி கட்டிச் செல்வதை வழக்கப் படுத்திக் கொள்ளுங்கள்.  
  •  தினமும் காலை மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் தும்மலைத் தூர விரட்டலாம்.  
  •  வாரம் இரு முறை ஆவி பிடிக்கலாம்.
  •  கை நகங்களை வெட்டி சுத்தமாக வைக்கலாம்.
  •  அதிக எண்ணெய் ஆகாரங்கள், கொழுப்புச் சத்து உள்ள உணவுகளைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் அதிக எடை காரணமாக, தொண்டை மற்றும் மூச்சுப்பகுதியில் உள்ள சதைப்பற்று தடிமனாகலாம். இது சுவாசப் பிரச்னைக்கும், தும்மலின்போது அதிக சிரமத்துக்கும் வழிவகுக்கும்.



No comments:

Post a Comment