சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Nov 2014

MBA - மூன்றெழுத்து மந்திரம்

எம்.பி.. என்றால் மாஸ்டர் ஆஃப் பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்பது எல்லோருக்கும் தெரியும். பி.., பி.எஸ்சி., பி.காம்., இன்ஜினீயரிங் ஆகிய இளங்கலைப் படிப்புகள் முடித்தபின் படிக்கும் இரண்டு வருட முதுகலைப் படிப்பு. இந்த படிப்பை பிஸினஸ் மேனேஜ்மென்ட் என்றும் சில கல்லூரிகள் அழைக்கின்றன.

பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்றால் பிஸினஸை எப்படி நிர்வகிப்பது என்று சொல்லித்தரும் படிப்பு. அட்மினிஸ்ட்ரேஷன் என்றால் நிர்வாகம். பிஸினஸ் என்றால்..?
பிஸினஸ் என்கிற வார்த்தை, நாம் எல்லோரும் சரளமாகப் பயன்படுத்தும் வார்த்தை. சரவணன் மளிகைக் கடை பிஸினஸ் செய்கிறார்; கண்ணன் டெக்ஸ்டைல் பிஸினஸ் நடத்துகிறார்; முத்து ஹோட்டல் பிஸினஸ் பண்ணுகிறார்; லட்சுமிக்கு பூ வியாபாரம். இதெல்லாம்தான் பிஸினஸ்.  ஆனால், இதெல்லாம் ஒருவர் செய்யும் தொழிலாச்சே! இதைப் போய் பிஸினஸ் என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறீர்களா? வாருங்கள், உங்கள் கேள்விக்கு பதில் கண்டுபிடிப்போம்.

உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு டீக்கடை இருக்கிறது. விஜய் டீ ஸ்டால் என்று பந்தா போர்டு. முதலாளி ராமன் நாயர். காலை எழுந்தவுடன் அவர் கடையில் ஸ்ட்ராங் டீ குடித்தால்தான் நிறையப் பேருக்கு மூளை சுறுசுறுப்பாகும்.

கொதிக்கும் பாய்லர் பக்கத்தில் நின்றுகொண்டு நாயர்தான் டீ போடுவார். அவர் மனைவி அம்முக்குட்டி கல்லாவில் வரவைக் கவனிப்பார். கஸ்டமர்களுக்கு டீ எடுத்துக் கொடுக்க, தம்ளர்களைக் கழுவ, எடுபிடி வேலைகளுக்கு ரஜினி என்னும் பொடியன்.
நாயர் தன் கடையில் என்ன செய்கிறார் என்று ஒருநாள் கவனியுங்கள். அதிகாலையில் ஆவின் பூத்தில் பால் வாங்குகிறார். அப்புறம் முருகன் ஸ்டோர்ஸில் டீத்தூள், சர்க்கரை வாங்குகிறார். டீ போடுகிறார். மக்கள் வந்து டீ குடிக்கிறார்கள், பணம் கொடுக்கிறார்கள். இரவு கடை மூடும் முன், நாயரும் அம்முக் குட்டியும் வரவு செலவு கணக்குப் பார்க்கிறார்கள். டீத்தூள், சர்க்கரை பாக்கி இருக்கிறதா, இல்லை வாங்க வேண்டுமா, எவ்வளவு வாங்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்கள்.

ராமன் நாயர் எதற்கு வியாபாரம் செய்கிறார்? பால் வாங்க, டீத்தூள் வாங்க, ரஜினிக்குச் சம்பளம் தர, கடை வாடகை கொடுக்க அவர் செலவு செய்கிறார். இந்த செலவுகளுக்குப் போக வரும் பணம் லாபம். ராமன் நாயர் உழைப்பது இந்த லாபத்துக்குக்காகத்தான்.
இதுதான் பிஸினஸ். சோப்பு, டூத் பேஸ்ட், மளிகைச் சாமான்கள், உணவுப் பொருட்கள். காய்கறி பழம், செல்போன், டி.வி, மியூஸிக் சிஸ்ட்டம், ஃப்ரிட்ஜ், ஏர்கன்டிஷனர் போன்ற பொருட்களைக் கடைகளில் விற்கிறார்கள். பணம் கொடுத்து அவற்றை வாங்குகிறோம். இவையும் பிஸினஸ் அல்லது வியாபாரம்.

இவை மட்டும்தான் பிஸினஸா?
உங்கள் வீட்டில் மின்சாரம் இல்லை. எலெக்ட்ரீஷியனைக் கூப்பிடுகிறீர்கள். ரிப்பேர் செய்கிறார். வேலை முடிந்தவுடன் அவருக்குப் பணம் கொடுக்கிறீர்கள். அவர் கொடுத்தது பொருள் அல்ல, தன் திறமையால் கொடுத்த சேவை.

நீங்கள் கம்ப்யூட்டர் படிக்கப் போகிறீர்கள். இங்கேயும் பணம் கொடுக்கிறீர்கள். என்ன பொருள் வாங்குகிறீர்கள்? படிப்பு, அறிவு. இது ஒரு பொருள் இல்லையே?

இன்ஃபோசிஸ் கம்பெனி மென்பொருள் தொடர்பான கம்பெனி. அதைப் போன்ற டி.சி.எஸ், விப்ரோ, காக்னிஸன்ட் டெக்னாலஜீஸ், ஹெச்.சி.எல். என பல சாஃப்ட்வேர் கம்பெனிகள் இருக்கின்றனவே? இந்த கம்பெனிகளின் ஊழியர்கள் அடிக்கடி புராஜெக்ட் வேலைக்காக அமெரிக்கா போய் வருகிறார்கள். அமெரிக்க கம்பெனிகளில் பணியாற்றுகிறார்கள்.  
இந்த ஊழியர்களின் வேலைக்காக, அமெரிக்க கம்பெனிகள், இந்த கம்பெனிகளுக்குப் பணம் கொடுக்கின்றன. இந்த இந்திய கம்பெனிகள் அமெரிக்காவுக்கு என்ன விற்கின்றன? ஒரு பொருளையும் விற்கவில்லை. தங்கள் ஊழியர்களின் திறமைகளை அமெரிக்க கம்பெனிகளுக்குக் கொடுக்கின்றன

உங்கள் எலெக்ட்ரீஷியன், நீங்கள் கம்ப்யூட்டர் படித்த இன்ஸ்டிட்யூட், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் ஆகியோர் விற்பது பொருள் அல்ல, சேவை. எனவே, பிஸினஸ் என்பது பொருட்களை மட்டுமல்ல, பொருட்களையோ, சேவையையோ விற்பது. இது அன்றாட வழக்கில் நாம் கொடுக்கும் விளக்கம். பொருளாதார ஆசிரியரைக் கேட்டால் அவர் சொல்லுவார், 'பிஸினஸ் என்பது லாபம் பண்ணுகிற நோக்கத்தோடு பொருட்களையோ, சேவையையோ விற்பது.'

பிஸினஸில் என்னென்ன வேலைகள் இருக்கின்றன? இந்த வேலைகளை மேனேஜ்மென்ட் படிப்பில் என்னென்ன பெயரில் அழைக்கிறார்கள்? ஓர் உதாரணத்துக்கு, ராமன் நாயரின் பிஸினஸைப் பார்ப்போம்.

டீத்தூள். பால், சர்க்கரை எவ்வளவு இருக்கிறது என்று கணக்குப் போட்டு, தேவையான அளவுக்கு அவற்றை வாங்கி, டீ தயாரிப்பது புரொடக்ஷன் (Production)விஜய் டீ ஸ்டால் என்று போர்டு வைத்து வாடிக்கையாளர்களைத் தன் கடைக்கு வரவைப்பதும், அவர்கள் விரும்பும் ஸ்டிராங்க் டீ கொடுத்து அவர்களைத் திருப்திப்படுத்துவதும் மார்க்கெட்டிங் (Marketing).
அம்முக்குட்டி கல்லாவை நிர்வகிப்பது, வரவு செலவுக் கணக்குப் பார்ப்பது நிதி நிர்வாகம்

(Finance Management).
அம்முக்குட்டியும் ரஜினியும் சரியாக வேலை பார்க்கிறார்களா என்று நாயர் கவனிக்கிறாரே, அது ஊழியர் நிர்வாகம். (Personal Management)
இவை அத்தனையையும் ஒருங்கிணைத்து லாபம் வரவைக்கிறாரே, அதுதான் பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்.


உங்கள் ஊரில் முருக விலாஸ், வசந்தபவன், சந்திரபவன் என்றெல்லாம் ஹோட்டல்கள் இருக்குமே? விஜய் டீ ஸ்டாலைவிட அவை நூறு மடங்கு பெரியவை. தமிழகத்திலும், உலகின் பல பாகங்களிலும் கிளைகள் வைத்திருக்கும் சரவணபவன் அண்ணாச்சி ராமன் நாயரைவிட பல நூறு மடங்கு பெரிய நிர்வாகத்தின் முதலாளி. உலகெங்கும் ஐந்து நட்சத்திர தாஜ் ஹோட்டல்கள் நடத்தும் ரத்தன் டாடா ஆயிரம் ராமன் நாயர்களுக்குச் சமம்.
விஜய் டீ ஸ்டாலில் புரொடக்ஷன், மார்க்கெட்டிங், நிதி நிர்வாகம், மனிதவள மேம்பாடு, பொது நிர்வாகம் என்ற பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷனின் அத்தனை அங்கங்களும் உண்டு. டாடாவின் தாஜ் ஹோட்டல்களிலும் இவை அத்தனையும்தான் உண்டு. என்ன வித்தியாசம்?
அளவு, பிரமாண்டம். நாயரிடம் வேலை பார்ப்பது இரண்டே பேர்; டாடாவிடம் பத்தாயிரம் பேர். நாயரின் வியாபாரம் ஆயிரக் கணக்கில்; தாஜ் ஹோட்டல் வருமானம் ஆயிரம் கோடியில். விஜய் டீ ஸ்டாலுக்கும் தாஜ் ஹோட்டலுக்கும் அடிப்படை பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் தத்துவங்கள் ஒன்றேதான்.

மாருதி கார் தயாரிக்கிறது. இன்ஃபோசிஸ் மென்பொருள் துறையில் இருக்கிறது. ஹிந்துஸ்தான் லீவர் லக்ஸ், ரெக்ஸோனா சோப்கள், பெப்ஸோடண்ட் டூத்பேஸ்ட் தயாரிக்கிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ், பெட்ரோலியம் போன்ற பல துறைகளில் ஈடுபட்டிருக்கிறது. இவர்களுக்கும் நாயருக்கும் உற்பத்தி நிர்வாகக் கொள்கைகள் ஒன்றேதான்.

இந்த எல்லா கம்பெனிகளுக்கும், உற்பத்தியில் மட்டுமல்ல, மார்க்கெட்டிங், நிதி நிர்வாகம், மனிதவள மேம்பாடு, பொது நிர்வாகம் என்ற பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ஆகிய பிஸினஸின் எல்லாத் துறைகளிலும் அடிப்படைக் கொள்கைகள் ஒன்றேதாம். அதாவது, நீங்கள் எம்.பி.. படித்தால், பிஸினஸ் நடத்தும் அறிவை ஆழமாகப் புரிந்துகொண்டால், உங்களால், விஜய் டீ ஸ்டாலை, தாஜ் ஹோட்டலை, மாருதி கார் நிறுவனத்தை, ஹிந்துஸ்தான் லீவரை, ரிலையன்ஸை, இன்ஃபோசிஸை, உலகத்தின் எந்த கம்பெனியையும் வெற்றிகரமாக நடத்த முடியும்.
நீங்கள் கம்பெனிகளை வெற்றிகரமாக நிர்வகிக்க ஆசைப்பட்டால் கம்பெனிகளின் எல்லா நடவடிக்கைகளையும் பற்றிய ஆழ்ந்த அறிவு வேண்டும். அதாவது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியவை:

ஊழியர் நிர்வாகம் (Personnel Management)
விற்பனை நிர்வாகம் (Marketing Management)
உற்பத்தி நிர்வாகம் (Manufacturing Management)
நிதி நிர்வாகம் (Finance Management)
கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு நிர்வாகம் (Computer & Information Systems Management)  
சுருக்கமாகச் சொன்னால், எம்.பி.. படிப்பில் இவற்றைத்தான் கற்றுக்கொடுக்கிறார்கள். இவை ஒவ்வொன்றையும் விவரமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள் அல்லவா? இவற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள, பிஸினஸ் எப்படி வளர்ந்தது, மேனேஜ்மென்ட் கொள்கைகள் எப்படி உருவாயின, பிஸினஸ் மாற்றங்களுக்கும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கும் ஏற்ப மேனேஜ்மென்ட் கொள்கைகள் எப்படியெல்லாம் உருமாறின என்று முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
பிஸினஸ் சரித்திரமும், மேனேஜ்மென்ட் கொள்கைகளின் சரித்திரமும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை, மிக மிக சுவாரஸ்யமானவை. அந்த சரித்திரப் பாதையில் கொஞ்சம் பயணிக்க அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.


No comments:

Post a Comment