சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Nov 2014

சலவையாளர் கூடம்

சென்னையில் மிகப்பழமையான யார் பார்வையிலும் படாத ஒரு இடம் கடந்த 112 ஆண்டுகளாக உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டு இருக்கிறது.
அந்த இடம்தான் சென்னை சேத்துப்பட்டில் உள்ள சலவையாளர் கூடம்.
கிட்டத்தட்ட ஐநூறு குடும்பத்தை சேர்ந்த இரண்டாயிரம் பேர் இந்த இடத்தில் வெளுக்கப்படும் துணிகளைப் போலவே வெள்ளை உள்ளத்துடன் உழைப்பை மட்டுமே அறிந்தவர்களாக இருக்கின்றனர்.
சென்னையில் சலவைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் அவர்களுக்கு என்று தொழில் செய்ய ஒரு இடம் இல்லாமல் சிரமப்படுவதை உணர்ந்து அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் சென்னை சேத்துப்பட்டில் சலவையாளர் கூடத்தை நிர்மாணித்தது.
1902ம் ஆண்டு முதல்:
துணி துவைப்பதற்கான கற்கள்,தண்ணீர் தேக்கிவைப்பதற்கான தொட்டி, காயவைப்பதற்கான இடம் மற்றும் ஓய்வு அறைகள் என்று 1902ம் ஆண்டு இந்த சலவவையாளர் கூடம் திறந்து வைக்கப்பட்டது.
படிப்படியாக இங்கு பல மாற்றங்கள் ஏற்பட்டபோதும் 1902ம் ஆண்டு கட்டப்பட்ட இரும்புகூண்டு போன்ற ஓய்வு அறை இப்போதும் உள்ளது. நான்கு பேர் உட்காரமட்டுமே இடவசதி கொண்ட இந்த கூண்டிற்குள் தற்போது பல சலவையாளர்கள் குடும்பமே நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
118 சலவையாளர்களுக்கான இடவசதி கொண்டிருந்தாலும் கடந்த 112 ஆண்டுகளில் அடுத்தடுத்த தலைமுறைகளும் இதே இடத்தில் வாழவேண்டியிருப்பதால் தற்போது 500 சலவையாளர் குடும்பங்களை சேர்ந்த இரண்டாயிரம் பேர்களின் வாழ்வாதாரத்திற்குரிய இடமாக இந்த இடம் உள்ளது.
அதிகாலை நான்கு மணிக்கு இவர்களது உழைப்பு துவங்கி விடுகிறது ஆணும் பெண்ணும் குழந்தைகளும் என்று குடும்பம் குடும்பமாக உழைக்க துவங்குகின்றனர். ஒருவர் அடித்து துவைக்க இன்னொருவர் அதை எடுத்து பிழிய, மற்றவர்கள் காயப்போட என்று எல்லோருக்கும் வேலை காத்திருக்கிறது.
இப்படியாக பகல் வரை வேலை இடைஇடையிடையே கஞ்சி, காபி என்று வயிற்றுப்பாட்டையும் பார்த்துக் கொள்கிறார்கள். பிறகு ஐயர்னிங், துணிகள் டெலிவரி என்று பொழுது சரியாக இருக்கிறது.
விடுமுறை ஏதுமில்லை:
இவர்களுக்கு வாரவிடுமுறை ஓய்வு என்றெல்லாம் எதுவும் கிடையாது உடம்பு முடியாவிட்டால் இரண்டு நாள் வீட்டில் படுத்துக்கிடப்பார்கள் ஆனால் வீட்டில் படுத்துக் கிடந்தால் யார் சோறு போடுவார்கள் என்பதால் வேலைக்கு வந்துவிடுவார்கள்.
வாஷிங் மெஷின் வரவால் வீட்டு துணிகள் எதுவும் வருவது கிடையாது. பெரும்பாலும் விடுதிகள், அழகு நிலையங்கள், மருத்துவமனைகளில் உபயோகிக்கப்படும் துணிகள்தான் சலவைக்கு வருகின்றன.
இங்கு உள்ள எல்லோருக்குமே வேலை இருக்கும் அவரவர்களுக்கு கிடைக்கும் வேலையை பொறுத்து அன்றாடம் வருமானம் இருக்கும் இந்த வருமானம் இருநூறு ரூபாயில் இருந்து ஐநூறு ரூபாய் வரைக்குள் கிடைக்கும்.
இந்த வருமானத்தில்தான் குடும்பத்தை நடத்தி குழந்தைகளை படிக்கவைத்து நல்லது கெட்டது எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளவேண்டும். மழைக்காலத்தில் இந்த வருமானமும் பாதிக்கப்படும் அப்போது எல்லாம் எங்கள் நிலமை இன்னும் மோசமாக இருக்கும் என்கிறார் சோகத்துடன் சலவையாளர் கூடத்தின் தலைவர் ராமச்சந்திரன்.
இப்போது விடுதிகளிலும் பெரிய அளவில் வாஷங்மெஷின் வைத்து அவர்களே துணிகளை துவைத்துக் கொள்கின்றனர். ஆகவே எங்கள் சேவை வருங்காலத்தில் எந்தளவிற்கு தேவைப்படும் என்பது புரியவில்லை.
நீண்டநாள் கோரிக்கை:
சலவையாளர்களை எஸ்.சி பிரிவில் சேர்க்கச் சொல்லி நீண்டநாட்களாக கோரிக்கை வைத்துள்ளோம் ஆனால் எம்பிசி பட்டியலில்தான் வைத்துள்ளனர் இதன் காரணமாக பிள்ளைகளை நாங்கள் படிக்கவைத்தாலும் வேலை கிடைப்பது இல்லை. இதனால் படித்த பிள்ளைகள் கூட பழையபடி எங்களுடன் இருந்து துணிகள்தான் துவைக்கிறார்கள்.
தண்ணீரும் முன்பு போல தாராளமாக கிடைப்பது இல்லை ஆகவே சலவைத்துணிகளை குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
இப்படி அவர்களுக்கு பல குறைகள் இருந்தாலும் உழைப்பில் குறை வைக்காமல் துணிகளை துவைத்து வெளுத்து தும்பை்பூ போல தருவதில் எந்த குறையும் வைப்பது இல்லை.
கம்பீரமாய் நாம் நடக்க தேவைப்படும் விதத்தில் துணிகளை தரும் சலவையாளர்கள் வாழ்க்கையில் கம்பீரம் பெறும் நாள் எந்நாளோ?


No comments:

Post a Comment