எக்ஸிக்யூட்டிவ் செடான் - இந்த செக்மென்ட் கார்களின் விற்பனை மோசமாகவும் இல்லை; பிரமாதமாகவும் இல்லை. சீரான விற்பனைச் சந்தையைக்கொண்டது. இந்த செக்மென்ட் கார்களுக்கு இன்னொரு சிறப்பம்சம், டிரைவர் வைத்து ஓட்டுபவர்களையும், தானே ஓட்டுபவர்களையும் வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பதுதான். எனவே, ஓட்டவும் பயணிக்கவும் நன்றாக இருக்க வேண்டியது இந்த கார்களில் கட்டாயம். இப்போது டொயோட்டா கரோலா ஃப்ரெஷ்ஷாக இந்த செக்மென்ட்டில் களம் இறங்க, ரெனோ ஃப்ளூயன்ஸ் ஃபேஸ் லிஃப்ட் எனும் புதிய ஒப்பனையுடன் கால் பதிக்க, செவர்லே க்ரூஸ், ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா, ஸ்கோடா ஆக்டேவியா ஆகிய கார்களுக்கு நடுக்கம். இந்தியாவின் சிறந்த எக்ஸிக்யூட்டிவ் செடான் கார் எது?
இந்த ஒப்பீட்டுக்காக, இந்த 6 கார்களிலும் நாம் தேர்ந்தெடுத்தவை, மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட டீசல் இன்ஜின் மாடல் கார்கள். ஏனெனில், இவைதான் இந்த செக்மென்ட்டின் டாப் செல்லர்!
டிஸைன்
டொயோட்டா கரோலா, முற்றிலும் புதிய காராக மாறியிருப்பதால், டிஸைன் விஷயத்தில் ஃப்ரெஷ் லுக்குடன் நிற்கிறது. முன்பு போல டல்லாக இல்லாமல், யூத்ஃபுல்லாக இருக்கிறது. க்ரோம் க்ரில், அகலமான ஹெட்லைட்ஸ் என பிரீமியம் டிஸைனாக இருந்தாலும், காரின் டயர்களுக்கும் வீல் ஆர்ச்களுக்கும் உள்ள இடைவெளி மிக அதிகமாக இருப்பதால், ஒருவித பெர்ஃபெக்ஷன் இல்லை. ரெனோ ஃப்ளூயன்ஸ், எப்போதுமே பார்க்க ஸ்மார்ட்டாக இருக்கும் கார். இப்போது ஃபேஸ் லிஃப்ட் மாடல் ஸ்மார்ட்டாகவும், ஸ்போர்ட்டியாகவும் இருக்கிறது. புதிய க்ரில் டிஸைன் சூப்பர். பனி விளக்குக் குடுவையில் க்ரோம், புதிய 'டே டைம் ரன்னிங் லைட்ஸ்’ ஆகியவை புதிய டிஸைன் அம்சங்கள்.
செவர்லே க்ரூஸின் டிஸைனை, கடந்த 2013 அக்டோபரில் லேசாக 'டச்-அப்’ செய்தது அந்த நிறுவனம். பம்பர் புதிதாக அளிக்கப்பட்டாலும், ஸ்போர்ட்டியான இந்த காரின் டிஸைனுடன், புதிய பனி விளக்குக் குடுவையின் டிஸைன் பொருத்தமாக இல்லை. மேலும், க்ரூஸ் காருக்கு வயதாகிக் கொண்டே வருகிறது என்பது, மற்ற கார்களுடன் நிற்கும்போது தெரிகிறது.
இந்த செக்மென்ட்டிலேயே நீளம் குறைவான கார் என்றால், எலான்ட்ராதான். ஆனால், ஸ்டைலிஷ் டிஸைன் கார் எலான்ட்ரா. புதிய ஸ்கோடா ஆக்டேவியா, இந்த செக்மென்ட்டின் நீளமான கார். ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா, பார்த்தவுடன் மனதில் ஒட்டிக்கொள்ளும் டிஸைன் இல்லை என்றாலும், எக்ஸிக்யூட்டிவ் காருக்கான டிசைன் எத்திக்ஸுடன் இருக்கிறது.
உள்ளே...
மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு, கரோலாவின் புதிய டேஷ்போர்டை வடிவமைத்திருக்கிறது டொயோட்டா. ஆனால், சற்று உயரமாக அமைக்கப்பட்டுஇருப்பதுபோலத் தோன்றுகிறது. ஓட்டுநர் இருக்கையை அதற்கேற்ப அட்ஜஸ்ட் செய்து கொண்டால், உயரம் குறைவானவர்கள் சமாளிக்க முடியும். தரம் நன்றாக இருக்கிறது. ஆனால், விண்ட் ஸ்க்ரீனில் டேஷ்போர்டு பிரதிபலிப்பது பெரிய தொல்லை. கரோலாவின் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் தரமானதாக இல்லை. பிளாஸ்டிக் தரமும் சுமார்தான்.
ரெனோ ஃப்ளூயன்ஸ்ன் கேபின், கரோலாவைவிட நன்றாக இருக்கிறது. டேஷ்போர்டு பயன்படுத்த எளிதாக இருக்கிறது. கியர், ஹேண்ட் பிரேக் லீவர்களில் இருக்கும் தையல் வேலைப்பாடுகள் அருமை. ஆனால், மியூஸிக் சிஸ்டத்தின் பட்டன்கள் மிகச் சிறிதாக இருக்கின்றன. க்ரூஸ் கன்ட்ரோல் சுவிட்ச்கள் கியர் லீவருக்கு அருகில் கொடுக்கப்பட்டு இருப்பது அசௌகரியமாக உள்ளது. பானெட் ரிலீஸ் பட்டன் பின்னிருக்கைகளுக்கு அருகில் இருப்பதால், பயன்படுத்த மிகச் சிரமமாக இருக்கிறது.
ஹூண்டாய் எலான்ட்ராவில், ஃப்ளூயன்ஸ் கேபினில் இருக்கும் சின்னப் பிரச்னைகள் இல்லை. ஆனால், இதன் சென்டர் கன்ஸோல் டிஸைன் எல்லோருக்கும் பிடிக்காது. முன்னிருக்கைகள் வென்டிலேஷன் வசதியைக்கொண்டிருப்பது நல்ல விஷயம்.
செவர்லே க்ரூஸ் காரின் கேபின் ஸ்டைலாக இருக்கிறது. இருக்கைகள் சற்று இறுக்கமாக இருந்தாலும், ஸ்போர்ட்ஸ் கார் போல நல்ல போல்ஸ்ட்ரிங் கொண்டிருக்கிறது. ஆனால், சுமாரான பிளாஸ்டிக் தரமும், பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட விதமும் க்ரூஸின் கேபினை வெறுக்கவைக்கின்றன.
ஸ்கோடா ஆக்டேவியாவின் கேபின் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்க இருக்கைகளில் அமர்ந்தால், ஒரு சொகுசான உணர்வு கிடைக்கிறது. காருக்குள் பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களின் தரம் நன்றாக இருக்கின்றன. நாம் கையை அருகில் கொண்டுசென்றதும், தானாகவே விளக்குகள் ஒளிர்வது போன்ற சின்னச் சின்ன அம்சங்கள் நம்மைக் கவர்கின்றன.
ஸ்கோடா இருக்கும் அதே ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா காரின் கேபின், குறை சொல்லும் அளவுக்கு இல்லை. ஆனால், பார்க்க மிகச் சாதாரணமாக இருக்கிறது. ஆக்டேவியாவைப் போலவே இதிலும், சென்டர் டனல் இருப்பதால், பின்னிருக்கையில் நடுவே அமர்பவருக்குச் சற்று சிரமமாக இருக்கும். நீளமான கார் என்பதால், ஜெட்டாவைவிட ஆக்டேவியாவில் பின்னிருக்கை இடவசதி அதிகம். ஆனால், தொடைகளுக்கான சப்போர்ட், ஜெட்டாவின் இருக்கைகளைவிட குறைவுதான்.
டொயோட்டா கரோலாவின் பின்இருக்கைகளில் இடவசதி நன்றாக உள்ளது. இந்த செக்மென்ட்டிலேயே அட்ஜஸ்டபிள் பேக்-ரெஸ்ட் கொண்ட ஒரே கார் கரோலாதான். இருக்கை சீராக இருப்பதால், மூன்று பேர் வசதியாக அமர முடியும். ஆனால், ரியர் ஏ.சி வென்ட்கள் கிடையாது. செவர்லே க்ரூஸிலும் ரியர் ஏ.சி வென்ட்கள் கிடையாது என்றாலும், ஹெட்ரூம் சிறப்பாக இருக்கிறது. பழைய க்ரூஸைவிட புதிய மாடல் நல்ல இடவசதியைக் கொண்டிருப்பதுபோன்ற உணர்வைத் தருகிறது.
ரெனோ ஃப்ளூயன்ஸில் ஹெட்ரூம் குறைவுதான். ஆனால், கால்களை நீட்டி மடக்கி உட்கார இடம் தாராளம். எலான்ட்ராவில் பின்னிருக்கை தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. ஹெட்ரூம் சுமாராக இருக்கிறது. ஆறுதலாக, எலான்ட்ராவில் மட்டுமே பின்பக்கம் இருக்கும் பயணிகளின் சென்டர் ஆர்ம் ரெஸ்ட்-ல் இருக்கும் பட்டன்கள் மூலம், ஆடியோ சிஸ்டத்தை இயக்க முடிகிற வசதி உள்ளது.
இந்த 6 கார்களிலும் டிக்கியில் அதிக இட வசதியைக்கொண்டிருப்பது, ஸ்கோடா ஆக்டேவியா மட்டுமே!
இன்ஜின் - பெர்ஃபாமென்ஸ்
2.0 லிட்டர் டீசல் இன்ஜின்களைக் கொண்டிருக்கும் ஆக்டேவியா, ஜெட்டா, க்ரூஸ் ஆகிய கார்கள், இயக்க நன்றாக இருக்கின்றன. டொயோட்டா கரோலாவில் இருக்கும்
87 bhp சக்தியை அளிக்கும் 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் இருக்கும்வரை, கரோலா ஓட்டுவதற்கு நன்றாக இருக்கப் போவது இல்லை. இந்த 6 கார்களில் மிகவும் மந்தமான இன்ஜினைக் கொண்ட கார் கரோலாதான். 2,000 ஆர்பிஎம்-க்குக் கீழ் படுமோசமாக இருக்கிறது இதன் பெர்ஃபாமென்ஸ். எவ்வளவுதான் ஆக்ஸிலரேட்டரை மிதி மிதி என மிதித்தாலும், மிக மெதுவாக நத்தை போலச் செல்கிறது. 2,000 ஆர்பிஎம்-க்கு மேல் சக்தி வெளிப்பாடு சிறிது அதிகமானாலும், ஓட்டத் தூண்டும் விதத்தில் இல்லை. மேலும், வெறும் 3,500 ஆர்பிஎம்மிலேயே இதன் சக்தி வெளிப்பாடு நின்று, அதன் பிறகு இன்ஜினில் தேவையற்ற உறுமல் சத்தம் மட்டுமே வெளிப்படுகிறது. கிளட்ச்சுக்கும் அதிக வேலை வைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், இதன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் நன்றாக இயங்குகிறது. டொயோட்டா கரோலா டீசல் மாடலை, விரட்டாமல் ஓட்டுவதே நலம். அப்படியே விரட்டினாலும் ஓடப் போவது இல்லை இந்த இன்ஜின்.
ரெனோ ஃப்ளூயன்ஸில் இருப்பது,
108 bhp சக்தியை அளிக்கும் 1.5 லிட்டர் K9K டீசல் இன்ஜின். சக்திவாய்ந்த இன்ஜின் என்றாலும், கிளட்ச் இறுக்கமாக இருக்கிறது. கியர் ஷிஃப்ட் தரம் சுமாராகவே இருக்கிறது. ஆனால், மெதுவான டிராஃபிக்கில் இந்த இன்ஜினின் வேகத்தை 1,800 ஆர்பிஎம்-க்கு மேலேயே வைத்துக்கொண்டு வந்தால்தான், திடீரென்று பவர் தேவைப்படும்போது உடனடி ஆக்ஸிலரேஷன் கிடைக்கும். அதன் பிறகு, 4,000 ஆர்பிஎம் வரை சக்தி வெளிப்பாடு சீராக இருக்கிறது.
எலான்ட்ராவில் இருக்கும்
126 bhp சக்தி கொண்ட 1.6 லிட்டர் டீசல் இன்ஜின், அருமையான ஆக்ஸிலரேஷனை அளிக்கிறது.
0 100 கி.மீ வேகத்தை 10.2 விநாடிகளில் அடைகிறது எலான்ட்ரா. இதற்குக் காரணம், இதன் நெருக்கமான கியர் ரேஷியோவும்தான். இதனால், டிராஃபிக்கில் அடிக்கடி கியர் மாற்ற வேண்டியிருக்கும். இன்ஜினின் மிட் ரேஞ்ச் பெர்ஃபாமென்ஸ் சூப்பர்.
எலான்ட்ராவின் இன்ஜின் நன்றாக இருந்தாலும், ஆக்டேவியா, ஜெட்டா ஆகிய கார்களில் இருக்கும் 2.0 லிட்டர் TDI டீசல் இன்ஜின் அளவுக்கு இல்லை. இந்த இரண்டு கார்களுமே 1,500 ஆர்பிஎம்-க்கு மேல் நல்ல ஆக்ஸிலரேஷனைத் தந்து, 5,000 ஆர்பிஎம் வரைக்கும் ரெவ் ஆகின்றன. 1,750 ஆர்பிஎம்-ல் இருந்தே
32.6 kgm டார்க் இருப்பதால், பெர்ஃபாமென்ஸில் சிக்கல் இல்லை. ஆனால், ஒரே இன்ஜின்தான் என்றாலும், ஆக்டேவியாவின் பவர் ரேஞ்ச் 5,000 ஆர்பிஎம்-க்கு மேலும் இருக்கிறது. ஆனால், இரண்டு கார்களின் கிளட்ச்சுகளுமே சுமார்தான்.
செவர்லே க்ரூஸ்தான் இந்த செக்மென்ட்டின் சக்தி வாய்ந்த கார். ஆனால்,
164 bhp சக்தியை அளிக்கும் இதன் இன்ஜினின் பெர்ஃபார்மென்ஸ் அவ்வளவு சிறப்பாக இல்லை. 2012-ல் அறிமுகமான இந்தப் புதிய இன்ஜின் - பெர்ஃபாமென்ஸைவிட சாதாரண ஓட்டுதலை முன்னிறுத்தியே டியூன் செய்யப்பட்டுள்ளது. கிளட்ச் லைட்டாக இருக்கிறது. கியர்பாக்ஸ் நன்றாக ஷிஃப்ட் ஆகிறது. ஆனால், இரண்டாவது மற்றும் மூன்றாவது கியர்களுக்குள் இருக்கும் இடைவெளி சிலருக்குப் பிடிக்காது.
ஓட்டுதல் தரம் - கையாளுமை
ஃபோக்ஸ்வாகன் ஜெட்டாவில் மல்ட்டி லிங்க் சஸ்பென்ஷன் என்பதால், அதிவேகமாக ஓட்டும்போது மிகவும் ஸ்டேபிளாகச் செல்கிறது. மெதுவான வேகங்களில் சஸ்பென்ஷன் சற்று இறுக்கமாக இருப்பதுபோலத் தோன்றினாலும், மன்னிக்க முடியாத அளவுக்கு இல்லை.
ஆக்டேவியாவிலும் நல்ல சஸ்பென்ஷன் செட்-அப்தான். ஆனால், உள்ளே சத்தம் அதிகமாகக் கேட்கிறது. ஜெட்டாபோல சிறந்த ஓட்டுதல் தரத்தை ஆக்டேவியாவால் தர முடியவில்லை.
ஓட்டுதல் தரம்தான் உங்களுக்கு முக்கியம் என்றால், ஃப்ளூயன்ஸ்தான் பெஸ்ட் சாய்ஸ். எப்போதுமே ரெனோ கார்களில் ஓட்டுதல் தரம் நன்றாக இருக்கும். ஃப்ளூயன்ஸிலும் அப்படியே! எந்தவிதமான மேடு பள்ளங்களையும் அசராமல் கடக்கிறது ஃப்ளூயன்ஸ். மேலும், நேர்கோட்டில் செல்லும்போதும் ஸ்டேபிளான ஓட்டுதலைக்கொண்டிருக்கிறது.
கரோலா காரின் ஓட்டுதல் தரம், ஐரோப்பிய போட்டி கார்கள் அளவுக்கு இல்லை. மேடு பள்ளங்களை ஸ்டீயரிங் வரை உணர முடிகிறது. கரோலாவில் இருக்கும் ஒரே ப்ளஸ், இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ். இதனால், நம் ஊர் சாலைகளில் எளிதாக ஓட்ட முடிகிறது.
செவர்லே க்ரூஸின் 60'' ப்ரொஃபைல் டயர்களும், சஸ்பென்ஷனும் நல்ல ஓட்டுதல் தரத்தை அளிக்கின்றன. ஆனால், வேகமாக ஓட்டும்போது ஸ்டேபிளான உணர்வு இல்லை. சக்தி வாய்ந்த இன்ஜினை வைத்துக்கொண்டு, சுமாரான ஹை-ஸ்பீடு ஸ்டெபிளிட்டி கொண்டிருக்கிறது க்ரூஸ்.
ஹூண்டாய் எலான்ட்ரா, சிட்டி டிராஃபிக்கில் வசதியாக இருக்கிறது. ஆனால், வேகமெடுத்ததும் அசைந்தாடிச் செல்கிறது. மற்ற ஹூண்டாய் கார்களைப் போலவே சாஃப்டான ஓட்டுதல் தரத்தைக் கொண்டுள்ளது எலான்ட்ரா. எதிர்பார்த்ததுபோலவே ஸ்டீயரிங்கும் படு லைட்டாக இருக்கிறது.
முன்பைவிட புதிய கரோலா, ஸ்போர்ட்டியான ஸ்டீயரிங்கைக் கொண்டுள்ளது. ஆனால், பாடி ரோல் அதிகமாக இருப்பதால், ரொம்பவும் விளையாட்டுத்தனமாக இந்த காரை ஓட்டக் கூடாது. செவர்லே க்ரூஸ் காருக்கும் இது அப்படியே பொருந்தும். டக் டக்கென்று வளைத்துத் திருப்பி ஓட்ட காரே விரும்பவில்லை என்பதுபோல இருக்கிறது. க்ரூஸின் ஹைட்ராலிக் அஸிஸ்டட் ஸ்டீயரிங், சிட்டி டிராஃபிக்கில் ஓட்டும்போது எடை அதிகமாக இருக்கிறது.
ஃப்ளூயன்ஸ் ஸ்டீயரிங், சிட்டி டிராஃபிக்கில் லைட்டாகவும், நெடுஞ்சாலையில் வெயிட்டாகவும் இருப்பது பெரிய ப்ளஸ். நம் நாட்டில் விற்பனையில் இருக்கும் கார்களில், சிறந்த எலெக்ட்ரிக் ஸ்டீயரிங் கொண்ட மிகச் சில கார்களில் ஒன்று, ஃப்ளூயன்ஸ். வளைத்துத் திருப்பி ஓட்டும்போது ஸ்டீயரிங் நம்பிக்கை அளிக்கிறது.
ஆனால், ஜாலியான ஓட்டுதல் மற்றும் கையாளுமை என்று வரும்போது, உண்மையான போட்டி ஜெட்டாவுக்கும் ஆக்டேவியாவுக்கும்தான். இரண்டு கார்களுக்கும் இந்த விஷயத்தில் உள்ள வித்தியாசங்கள் குறைவு என்பதால் வந்த வினை இது. மற்ற நான்கு கார்களைவிட இவை இரண்டும்தான் ஓட்ட ஜாலியான கார்கள். இரண்டு கார்களிலுமே எலெக்ட்ரானிக் டிஃப்ரன்ஸியல் லாக் இருப்பதால், வளைவுகளில் தைரியமாக ஓட்டலாம்.
முதல் தீர்ப்பு
க்ரூஸின் ஸ்போர்ட்டியான டிஸைன், சக்தி வாய்ந்த இன்ஜின், 18.79 லட்ச ரூபாய் விலை (ஆன் ரோடு, சென்னை) என படிக்கத்தான் நன்றாக இருக்கிறது. ஆனால், யதார்த்தத்தில் சுமாரான கார், க்ரூஸ்.
கரோலாவின் சைஸ், இடவசதி, ஸ்டைலிங் ஆகியவை ப்ளஸ் பாயின்ட்டுகள். வாங்கிப் பயன்படுத்த, எளிதான கார் கரோலா. மன நிம்மதிதான் வேண்டும் என்பவர்கள், நிச்சயம் கரோலாவை வாங்கலாம். இதன் விலை உயர்ந்த மாடலின் சென்னை ஆன் ரோடு விலை 18.24 லட்ச ரூபாய். கரோலாவின் 1.4 லிட்டர் இன்ஜினின் அட்ராசிட்டி பற்றி முன்னரே பார்த்துவிட்டோம். 'பார்த்து’ முடிவு செய்யுங்கள்.
ஹூண்டாய் எலான்ட்ரா ஸ்டைலான, பிரீமியம் அப்பீல் கொண்ட கார். குறைவான ஆர்பிஎம்களில் இந்த இன்ஜினை சற்றுப் பொறுத்துக்கொண்டால், சமாளிக்கலாம். விலை உயர்ந்த SX
மாடலின் விலை 18.23 லட்ச ரூபாய் என்பதால், கொடுக்கும் காசுக்கேற்ற மதிப்பாக இந்த கார் தெரிகிறது. ஆனால், ஓட்டினாலும், பயணித்தாலும் ஒரு நல்ல அனுபவத்தை எலான்ட்ரா வழங்குவது இல்லை.
ஃப்ளூயன்ஸ் காரின் எர்கனாமிக்ஸ் நிச்சயம் இதன் வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்காது. ஆனால், பழகிவிட்டால் பிடித்துப்போகும் கார் ஃப்ளூயன்ஸ். அருமையான ஓட்டுதல் தரத்தைக் கொண்ட கார் இது. மற்ற கார்களுடன் நிறைய விஷயங்களில் வித்தியாசமான கார், ஃப்ளூயன்ஸ். ஆனால், 18.24 லட்ச ரூபாய் விலைக்கு ஏற்ற வசதிகள் இல்லை.
ஜெட்டாவின் விலைதான் அதன் மிகப் பெரிய மைனஸ். இந்த செக்மென்ட்டிலேயே மிக அதிக விலை கொண்ட எக்ஸிக்யூட்டிவ் காராக ஜெட்டா விற்பனையில் இருக்கிறது. 22.16 லட்ச ரூபாய் காரின் விலையை மட்டும் மறைத்துக் கொண்டால், ஜெட்டா ஒரு பெர்ஃபெக்ட் ஆல் ரவுண்டர் கார். ஆனால், சேல்ஸ்மேன் விலையை மறைக்கவும் மாட்டார். குறைக்கவும் மாட்டாரே!
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஆக்டேவியாதான் சிறந்த கார். ஜெட்டாவைவிட கொஞ்சம் நல்ல ஓட்டுதலைக் கொண்டிருக்கிறது. தரமும் ஜெட்டாவை விட நன்றாக இருக்கிறது. கேபின், உயர்தர உணர்வைத் தருகிறது. எலான்ட்ரா அளவுக்கு வசதிகள் இல்லை என்றாலும், முக்கிய வசதிகள் இருக்கின்றன. 20.11 லட்ச ருபாய் என்பதால், விலை குறைவான காரும் இல்லை. ஆனால், கொடுக்கும் காசுக்கு ஏற்ற மதிப்பை அளிக்கிறதே! ஸ்கோடா ஆக்டேவியாதான் இந்தியாவின் சிறந்த எக்ஸிக்யூடிவ் செடான். ஸ்கோடாவும் தன்னுடைய சர்வீஸ் நெட்வொர்க்கை மேம்படுத்தும் வேலைகளில் இருப்பதால், நம்பிக்கையுடன் ஆக்டேவியாவை வாங்கலாம்!
விவேகமான கார் டொயோட்டா கரோலா
உண்மையில், வாங்கிப் பயன்படுத்த தொல்லையே இல்லாத கார், கரோலா. டொயோட்டா என்பதால் இதன் சர்வீஸ், வாழ்நாள் தரம் போன்றவற்றின் மீது நம்பிக்கை வைக்கலாம். நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால், நம் ஊர் சாலைகளில் பயப்படாமல் ஓட்டலாம். ஆனால், டீசல் இன்ஜினின் பெர்ஃபாமென்ஸ் ரொம்பவும் சுமார்.
யதார்த்தமான கார் ஸ்கோடா ஆக்டேவியா
பயணியாகச் சென்றாலும் சரி, தானே ஓட்டிச் சென்றாலும் சரி. சிறப்பான அனுபவத்தைத் தருவது ஆக்டேவியாதான். இதன் 590 லிட்டர் டிக்கி இடவசதி, பின்னிருக்கைகளை மடித்தால் கிடைக்கும் 1,580 லிட்டர் இடவசதி, எக்ஸிக்யூட்டிவ் செடானையும் அவ்வப்போது டூரிங் காராக மாற்றும். இதன் கேபின் இந்த செக்மென்ட்டிலேயே விசாலமானது. பெர்ஃபாமென்ஸிலும் குறைவில்லை.
பயணிக்க சிறந்த கார் ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா
இந்த செக்மென்ட்டில் சிறந்த பின்னிருக்கை இடவசதியைக் கொண்டிருப்பது ஃபோக்ஸ்வாகன் ஜெட்டாதான். கால்களுக்கும், முதுகுக்கும், தொடைக்கும் சிறந்த சப்போர்ட்டை அளிப்பது இந்த காரின் இருக்கைகள்தான். நல்ல குஷனிங் உள்ளன. ஜெட்டாவின் ஓட்டுதல் தரம் ஸ்டேபிளாக இருப்பதால், பயணிக்க நன்றாக இருக்கிறது.
ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையில் சிறந்த கார் ரெனோ ஃப்ளூயன்ஸ்
இந்த செக்மென்ட்டில் ஓட்ட மிக நன்றாக இருக்கும் கார், ரெனோ ஃப்ளூயன்ஸ். இதன் பவர் ஸ்டீயரிங் எலெக்ட்ரிக்காக இருந்தாலும், சிறப்பாக இருக்கிறது. சஸ்பென்ஷன் செட்- அப் சூப்பர். ஆக்டேவியாவையும், ஜெட்டாவையும் இங்கு சேர்க்க முடியும். இருந்தாலும், ஓட்டுதல் என்ற ஒரு விஷயத்தை மட்டும் முன்னிலைப்படுத்தினால், ஃப்ளூயன்ஸ் வின்னர்!
காசுக்கேற்ற கார் ஹூண்டாய் எலான்ட்ரா
ஹூண்டாய் எலான்ட்ராவில்தான் வசதிகள் அதிகம். எலான்ட்ரா SX மாடலில் கூல்டு இருக்கைகள், டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், ரிவர்ஸ் கேமரா, பவர்டு டிரைவர் சீட், ரியர் சீட் ஆடியோ கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், 6 காற்றுப் பைகள், கீலெஸ் என்ட்ரி, ப்ளூ-டூத் தொலைபேசி வசதி என ஏகப்பட்டவை இருக்கின்றன. வசதிகளை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு காசை எண்ணினால், ஹூண்டாய் எலான்ட்ரா காசைக் கொட்ட ஏற்ற கார்!
No comments:
Post a Comment