திருச்சி பெப்சி நிறுவனம் சட்ட விரோதமாகச் செயல்படுகிறது என சுற்றுவட்டார கிராம மக்கள், கடந்த 25-ம் தேதி சாலைமறியலில் இறங்கினர்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குப் பின்புறம் உள்ள சின்ன சூரியூர், பெரிய சூரியூர் கிராமங்களுக்கு இடையே இயங்கி வருகிறது, எல்.ஏ பாட்டிலர்ஸ் எனும் பெப்சி கம்பெனி. இந்த நிறுவனம் முன்னாள் காங்கிரஸ் எம்.பி அடைக்கலராஜின் குடும்பத்தினருக்குச் சொந்தமானது.
போராட்டத்தில் கலந்துகொண்ட சூரியூரைச் சேர்ந்த ராமையா, ''இங்கு விவசாயம்தான் பிரதான தொழில். பெப்சி கம்பெனி வந்த பிறகு, எல்லாம் வீணாப்போச்சு. கம்பெனி ஆரம்பிச்ச வேகத்துல பெரிய சூரியூர் எல்லைக்கு உட்பட்ட கம்பெனி வளாகத்தில் ஆறு போர்வெல்களையும், அதே வளாகத்தில் கும்பக்குடி எல்லையில் அஞ்சு போர்வெல்களையும் போட்டு தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறாங்க. அத்தனையும் ராட்சத போர்கள்.. இதனால சுற்றுவட்டாரத்துல இருக்கிற 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் படுபாதாளத்துக்குப் போயிடுச்சு'' என்றார்.
காந்தளூர் பஞ்சாயத்துத் தலைவரும், திருச்சி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவருமான மாரிமுத்து, ''2010-ல் இந்த கம்பெனியை இங்கு ஆரம்பித்தபோது மக்களிடம் கருத்துகேட்கும் கூட்டமோ, அறிவிப்போ நடத்தாமல் ஆரம்பிச்சாங்க. இந்த நிலையில் கடந்த 24-ம் தேதி, 'கம்பெனி நிர்வாகத்துக்கு ஆதரவாகப் பணம் பறிக்க மக்கள் போராடுவதாகவும், 700 பேருக்கும் மேல அந்த நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் இந்த கம்பெனியால் மக்களுக்கு ஆபத்து இல்லை. மக்களைத் தூண்டிவிடும் துரோகிகளை கைது செய்யவேண்டும்’ என இந்தப் பகுதியில் போஸ்டர்களை ஒட்டினாங்க. இதன் பிறகுதான் மக்கள் கோபமடைந்து பெப்சி கம்பெனியை முற்றுகையிட்டனர்'' என்றார்.
தண்ணீர் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் வினோத்ராஜ் சேஷன், ''தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் ஆதாரங்களைத் திரட்டினோம். அதில் எல்.ஏ பாட்டிலர்ஸ் நிறுவனம், ஒரு லட்சம் சதுர அடியில் செயல்படுவதாகத் தெரியவந்தது. அதில் ரெண்டாயிரம் சதுர அடி கட்டடம் கட்டினாலே நகர் ஊரமைப்புத் துறையிடம், அனுமதி வாங்க வேண்டும். அப்படி எந்த அனுமதியையும் பெப்சி நிர்வாகம் வாங்கவில்லை என்பது தெரியவந்தது. முழுக்க சட்டவிரோதமாக செயல்படுகிறது. இந்த நிறுவனத்தால் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பும் மக்களின் வாழ்வாதாரமான நிலத்தடி நீர் சுரண்டப்படுவதும் நடக்கிறது'' என்றார்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டுப் பொறியாளர், நிலத்தடி நீர் செயற்பொறியாளர், தீயணைப்பு கோட்ட அலுவலர், உள்ளாட்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட 10 அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்து கம்பெனியை ஆய்வுசெய்ய உத்தரவிட்டுள்ளார்.
பெப்சி கம்பெனி எல்.ஏ.பாட்டிலர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான பிரான்சிஸின் சகோதரர் ஜோசப் லூயிஸிடம் பேசினோம். ''அந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவர் விவசாயத்துக்கான மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீர் எடுத்து விற்பனை செய்துவந்தார்.
இது தெரிந்து மின்சாரத் துறையினர் ஒண்ணேகால் லட்சம் ரூபாய் அபராதம் போட்டுட்டாங்க. அதற்கு நாங்கள்தான் காரணம் என நினைச்சிக்கிட்டு எங்களுக்கு எதிரா அவர் போராட்டங்களைத் தூண்டிவிடுகிறார்'' என்றார். தண்ணீர் வளம் கொள்ளைப்போவதைத் தடுக்க வேண்டியதும் அரசின் கடமைதான்!
No comments:
Post a Comment