அதிக பணிச்சுமை, மன அழுத்தம், மாசு படிந்த சுற்றுச்சூழல் எனப் பல காரணங்களால் உடலும் மனமும் கெட்டு, ஓய்வின்றித் தவிக்கிறோம். இதை மனதில் வைத்து, ஆங்காங்கே மசாஜ் சென்டர்கள், ஸ்பாக்கள் பெருகிவிட்டன. ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் ரூபாய் என ‘ஸ்பா’ நடுத்தர மக்கள் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இனி அந்த நிலை இல்லை. தமிழக அரசின் கதர் கிராம தொழில் வாரியத்தின் சார்பாக, சென்னை குறளகத்தில் இயற்கை ஸ்பா மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஆடம்பர ‘ஸ்பா’க்களில் செய்யப்படும் அதே சிகிச்சைகள் மிகக் குறைந்த கட்டணத்தில் இங்கே செய்யப்படுகின்றன.
நீராவிக் குளியல் (Steam bath)
நீராவிக் குளியலுக்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முக்கோண வடிவ பெட்டியில் தலை மட்டும் வெளியே தெரியுமாறு உட்காரவைக்கப்பட்டு, பெட்டி மூடப்பட்டுவிடும். பெட்டிக்கு வெளியே தண்ணீர் சூடுபடுத்தப்பட்டு நீராவி மட்டும் பெட்டிக்குள் செலுத்தப்படும். பெட்டிக்குள் சுமார் 45 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை இருப்பது, சென்சார் மூலம் உறுதிப்படுத்தப்படும். நீராவியால் உடலில் உள்ள நீர்ச்சத்து, கழிவுகளோடு சேர்ந்து வியர்வையாக வெளியேறிவிடும். வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் 45 டிகிரி வெப்ப நிலையைத் தாங்க முடியாதவர்களுக்கு அவர்கள் உடல் தாங்கும் வெப்பநிலையில் சிகிச்சை தரப்படும்.
நீராவிப் பெட்டிக்குள் உட்காரச் செல்வதற்கு முன்பும், சிகிச்சை முடிந்த பிறகும் அதிக அளவு நீர் அருந்தவேண்டும். சிகிச்சை முடிந்தவுடன் நன்றாகக் குளிக்க வேண்டும். இதய நோய், ரத்த அழுத்தப் பிரச்னை, வலிப்பு நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் இந்த சிகிச்சையை எடுக்கக் கூடாது. நீராவிக் குளியல் உடல் உழைப்பு குறைந்த வேலைகளைச் செய்பவர்களுக்கு உள்ள இறுக்கமான தசைகளைத் தளர்வாக்கும். உடலில் ரத்த ஒட்டம் சீராகும்.
கட்டணம்: ` 200
முதுகுத் தண்டுவட சிகிச்சை (Spinal Theraphy)
ஓரே இடத்தில் உட்கார்ந்தபடியே வேலைசெய்யும் பெரும்பாலானவர்கள் அவதிப்படுவது முதுகுவலியால்தான். இவர்களது வலிக்குத் தீர்வளிக்கிறது இந்த சிகிச்சை. முதுகுத் தண்டுவடக் குளியலுக்கு எனத் தனியாக ஒரு ‘டப்’ இருக்கிறது. டப்பின் மீது முதுகுபடுமாறு படுத்துக்கொள்ள வேண்டும். முதுகுத் தண்டுவடத்தின் மேல் தண்ணீரானது, நுண்ணிய துளைகள் வழியாக அதிவேகமாகப் பீய்ச்சி அடிக்கப்படும். தண்டுவடத்தில் பாயும் அதிக வெதுவெதுப்பான நீரினால் முதுகு வலி குறையும். ரத்த ஓட்டம் சீராகும். நரம்புகள் தூண்டப்படும். இதனால், உடல் புத்துணர்ச்சி அடையும். சிகிச்சை முடிந்தவுடன் நன்றாகத் தூக்கம் வரும். வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை அனைவருமே இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். மன அழுத்தம் உள்ளவர்கள், தூக்கமின்மையால் தவிப்பவர்களுக்கு உகந்த சிகிச்சை இது.
கட்டணம்: ` 200
மூலிகை மண் சிகிச்சை (Mud Theraphy)
இயற்கையான முறையில் விவசாயம் செய்யப்பட்ட மண், கரம்பை மண். இதனுடன் முல்தானி மட்டி, ரோஜா இதழ், கோரைக் கிழங்கு, பூலாங் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், வேப்பிலை, குப்பைமேனி, ஆடுதொடா இலை, உப்பு ஆகியவை சேர்த்து அரைக்கப்பட்ட பவுடரை, வயிறு, கழுத்து, கை, கால், முகத்தில் நன்றாகத் தடவிவிட்டு அரை மணி நேரம் கழித்துக் குளிக்கவேண்டும். இயற்கையான முறையில் விவசாயம் செய்யப்பட்ட சிறந்த மண்ணுடன், மூலிகைகளும் சேருவதால் தோலில் உள்ள கழிவுகள் நீங்கும், ரத்த ஓட்டம் சீராகும், உடல் வெப்பம் குறையும். மழை நேரங்களில், இந்த மூலிகை மண் குளியல் எடுக்க வேண்டாம்.
கட்டணம்: ` 200
எண்ணெய் மசாஜ் (Oil Massage):
உடல் முழுவதும் நல்லெண்ணெயை ஊற்றி, சுமார் 75 நிமிடங்கள் மசாஜ் செய்யப்படும். கை, கால், வயிறு ஆகிய பகுதிகளில் மட்டும் பிரத்யேகமாகவும் மசாஜ் செய்யப்படும். உடலில் வலி இருக்கும் இடங்களில் மட்டும் மசாஜ் செய்ய பிண்ட தைலம் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய் மசாஜ் செய்துகொள்வதால், உடல் சூடு குறையும். வலி குறையும். ரத்த ஓட்டம் சீராகும். உடல் புத்துணர்ச்சி அடையும். சைனஸ், சளி பிரச்னைகள், காய்ச்சல், சரும நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் எண்ணெய் மசாஜ் செய்துகொள்ளக் கூடாது.
குறிப்பிட்ட பகுதிக்கு: ` 350, உடல் முழுவதும்: ` 850
மெழுகு ஒத்தடம் (Wax Treatment)
உடலில் ஏதேனும் வலி, வீக்கம் இருப்பவர்களுக்கான சிகிச்சை இது. உடல் தாங்கக்கூடிய வெப்பநிலையில் உருகிய மெழுகை ஒரு துணியில் நனைத்து, எந்த இடத்தில் வலி இருக்கிறதோ, அந்த இடத்தில் மெழுகு கட்டப்படும். 15 நிமிடங்கள் வரை உடல் பொறுத்துக்கொள்ளும் வெப்பநிலையில் இருக்கும் மெழுகின் சூட்டில், கட்டியின் வீக்கம், வலி குறையும். மாத்திரை மருந்துகள் இன்றி எளிமையாக இந்த முறையில் வலியைக் குறைக்கலாம். வலியைப் பொறுத்து சிகிச்சை எடுக்கவேண்டும். விபரீதமான கட்டிகள், புற்றுநோய்க் கட்டிகளுக்கு இந்த சிகிச்சை பயன்தராது.
கட்டணம்: ` 200
அக்குபஞ்சர் (Acupuncture)
பாரம்பரிய சீன மருத்துவமுறை. உடலில் எந்த இடத்தில் வலி ஏற்பட்டாலும், அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் வலியைக் குணப்படுத்தலாம். தொடர் தலைவலி போன்ற எந்த வலிகளாக இருந்தாலும் ஊசி கொண்டு நரம்புகளைத் தூண்டிவிடும்போது வலி போய்விடும். சர்க்கரை நோயாளிகளுக்கும், உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கும்கூட அக்குபஞ்சர் சிகிச்சை உண்டு. ஆனால், அதற்கு டயட் கண்டிப்பாகத் தேவை.
கட்டணம்: ` 150
ரெஃப்லெக்சாலஜி (Reflexology)
நம் உடலில் உள்ள, ஒவ்வொரு பாகத்தின் முடிச்சுகளும் கை, கால்களில்தான் சேரும். உள்ளங்கை, உள்ளங்காலில் உள்ள நரம்புகளின் மேல் குறிப்பிட்ட அழுத்தம் கொடுத்து அழுத்தும்போது அந்த நரம்புகள் தூண்டிவிடப்பட்டு அதன் வேலையைச் சரியாக செய்யும். இந்த சிகிச்சையில் கை, கால்கள் தொடர்ந்து 30 நிமிடம் நன்றாக அழுத்திவிடப்படும். இந்த சிகிச்சையின்போதே எளிதில் தூக்கம் வந்துவிடும். ஒரு முறை சிகிச்சை எடுத்துக்கொண்டபின், கை கால்களில் எந்த இடத்தில் எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டால், வீட்டிலேயே செய்துகொள்ளலாம்.
கட்டணம்: ` 350
அனைவருக்கும் உண்டு அரசு ‘ஸ்பா’!
தமிழ்நாடு கதிர் கிராமத் தொழில் வாரிய சி.இ.ஒ-வாக சகாயம் இருந்தபோது, அவரது முயற்சியால் சென்ற ஆண்டு, செப்டம்பர் மாதம், சென்னை பிராட்வேயில் உள்ள குறளகத்தில் தொடங்கப்பட்டது இந்த ஸ்பா மையம். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மையம் இயங்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. ஆண்களுக்குத் தனியாக ஒருவரும், பெண்களுக்குத் தனியாக ஒருவரும் இங்கே சிகிச்சை அளிக்கின்றனர். விரைவில் தமிழகம் முழுவதும் அரசின் அதிகாரப்பூர்வ ஸ்பாக்கள் தொடங்கப்பட உள்ளன. ஸ்பா, மசாஜ் சிகிச்சை தவிர, யோகாவும் இங்கு கற்றுத்தரப்படுகிறது. உணவு ஆலோசனைகளும் அளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment