சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Nov 2014

ஹீரோ இப்போ வில்லன் ஆனேன்!”

''திடீர்னு ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடிக்கிறார் கமல்; இன்னொரு படம் ரிலீஸுக்குக் காத்திருக்கு. எப்படி ஒரு ஹாட்ரிக் கேம் பிளான்?''  
''இது தானா அமைஞ்சது. ஒவ்வொரு கண்ணியும் அதனதன் இடத்தில் பொருந்தி ஓடிட்டு இருக்கு. வெவ்வேறு மனநிலையைப் பிரதிபலிக்கும் படங்கள் என்பதால், உணர்வுக் கலவைகளோடு ஒவ்வொரு பொழுதும் கழியுது.  'விஸ்வரூபம்-2’ கொஞ்சம் தாமதமா வந்திருந்தாக்கூட, பொங்கலுக்கே வந்திருக்கணும். ஒருவேளை நம்ம மூலமா வந்தா தாமதம் ஆகலாம்

இன்னொரு தயாரிப்பாளரிடம் கொடுத்தா படம் பிரமாதமா வரும்னு கெட்டிக்காரத்தனமா நினைச்சுக் கொடுத்தேன். அது இன்னும் தாமதம்தான் ஆகுது. 'பாபநாசம்படம் எதிர்பாராத வேகத்தில் முடிஞ்சிருச்சு.  ஆனா, அதுக்கும் முன்னால் முதலில் 'உத்தம வில்லன்தான் திரைக்கு வரும்.

'உத்தம வில்லன்’ - ஒரு நடிகனைப் பற்றிய கதை. எங்களுக்குத் தெரிஞ்ச கதைங்கிறதால பூந்து விளையாடிட்டு இருக்கேன். 'டபுள் பில்னு சொல்வாங்க. ஒரே படத்தில் இரண்டு கதைகள், இரண்டு கருக்கள் இணைந்து வரும். வுட்டி ஆலன் இயக்கிய 'Crimes and Misdemeanors’ படத்துல ஒருத்தர் படம் எடுக்க முயற்சி செய்வார். இன்னொரு பக்கம், ஒரு கொலை வழக்கின் விசாரணை நடக்கும். அந்த மாதிரியான ஒரு முயற்சி 'உத்தம வில்லன்’. ஹீரோ வேடத்தில் ஒரு வில்லன்

உணர்ச்சிபூர்வமான கதை ஒரு பக்கம், காமெடி இன்னொரு பக்கம். ரெண்டும் இணைந்து பிணைந்து ஓடும். இருவேறு காலகட்டங்களில் நடக்கிற கதை. படத்தில் கே.பாலசந்தர் சார் 'மார்க்கதரிசிங்கிற பேர்ல இயக்குநராவே நடிக்கிறார். எனக்கு நிஜ வாழ்க்கையில் அவர்தானே மார்க்கதரிசி. படத்தில் என் பெயர் மனோரஞ்சன். கேரளப் பாரம்பர்யக் கலையான தைய்யம் கலைஞன்!''

''அந்தத் தைய்யம் கலைஞனின் ஸ்டில் பிரபல புகைப்படக்காரரின் பிரதினு பரபரப்பு கிளம்பிச்சே?''
(சின்ன ஆவேசம் தொற்றிக்கொள்கிறது வார்த்தைகளில்...) ''வேப்ப இலையையும் மஞ்சளையும் ஒருத்தன் போட்டோ எடுத்துட்டு போய்ட்டா, உடனே காப்பிரைட்ஸ் எழுதிக் கொடுத்திருவீங்களா. அது அவன் சொத்துனு சொல்வீங்களா... மடையங்களா!’னு கேட்க நினைச்சேன். ஆனா, கேட்கலை.

(இயல்புக்குத் திரும்புகிறார்) அது என் நாட்டுக் கலை. அதை ஒரு வெள்ளைக்காரன் போட்டோ எடுத்துட்டுப் போயிட்டா, உடனே 'வெள்ளைக்காரன்கிட்ட இருந்து காப்பினு குதிப்பீங்களா? அவர் அந்த போட்டோவை எங்கே எடுத்தார்? நான் படம் பிடிக்கப்போன இடத்துலதானே எடுத்தார். சிலர் அவங்க வாயாலேயே என்னைக் கெட்டிக்காரன்னு சொல்றாங்க. இன்னொரு பக்கம் அதே வாயால 'கமல் ஒண்ணும் அவ்வளவு கெட்டிக்காரனா இருக்க வாய்ப்பு இல்லையேனு ஆழம் பார்க்கிறாங்க. ரெண்டையுமே கேட்டுக்க வேண்டியதுதான்!''

''ஆனா, இப்போ எந்தப் படம் வந்தாலும் காப்பி, இன்ஸ்பிரேஷன்னு ஒரே சர்ச்சையா இருக்கே! இன்ஸ்பிரேஷன் எப்போ காப்பி ஆகுது? அதைத் தவிர்க்க முடியாதா?''
''சினிமா பண்றவன் பண்ணிட்டே இருக்கான். அவன் எங்கே இருந்து என்ன காப்பி அடிக்கிறான்னு சிலர் தேடிட்டே இருக்காங்க. அதை நானும் பண்ணியிருக்கேன். அதெல்லாம் ஒரு பிராயத்தில் வரும். ஜெயகாந்தன் கதையைப் படிச்சுட்டு, 'இந்த மாதிரி படம் எடுக்கணும்னு ஆரம்பிப்பேன். இது சினிமாவில் மட்டும் அல்ல... 'டைம்பத்திரிகையும் 'நியூஸ் வீக்பத்திரிகையும் கிட்டத்தட்ட ஒரே தலைப்போடு வரும். அது ஒருவகையான உத்வேகம். ஒருவருக்கொருவர் ஏற்படுத்திக்கொள்ளும் போட்டி.
ஒரு விஷயம்... நான் இதுவரை வெளியே சொன்னது இல்லை. இப்போ சொல்லலாம். சுஜாதா இப்போ இருந்தாலும் கோவிச்சுக்க மாட்டார்.

 'தினமணி கதிர் 'சொர்க்கத் தீவுனு ஒரு கதை எழுதிட்டு இருந்தார் சுஜாதா. அந்தக் கதை பாதியில் நிறுத்தப்பட்டதற்குக் காரணமான நாலைஞ்சு பேரில் நானும் ஒருவன். இரா லெவின்னு ஓர் அமெரிக்க எழுத்தாளர் எழுதின 'திஸ் பெர்ஃபெக்ட் டேங்கிற நாவலுக்கும் 'சொர்க்கத் தீவுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. இதை நான் சொன்னதும் அவரும் கதையை நிறுத்திட்டார். ஆனா, அப்புறம் ரொம்ப ஃபீல் பண்ணேன். 'நீங்க கதையை நிறுத்தாம எழுதியிருக்கலாம் சார்னு நான் சொல்லவும், 'நீயே நிறுத்திட்டு, இப்போ எழுதியிருக்கலாம்னு சொன்னா என்ன அர்த்தம்?’னு கடுப்பாகிட்டார். படைப்புத் தொழிலில் இதுபோல சில சங்கடங்களைத் தவிர்க்க முடியாது.

காப்பி, இன்ஸ்பிரேஷன் இவற்றுக்கு எல்லாம் எப்படி அணை போடுவீங்க? ' ரோபோபடம்தானே 'எந்திரன்’. ஆனா, ' ரோபோபடம் வெளிவர்றதுக்கு முன்னாடியே நானும் ஷங்கரும் அந்தக் கதை பத்தி பேசியிருக்கோம். ' ரோபோ’, அசிமோவோட நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். நம்ம கம்பனைப் பத்தி என்ன சொல்றது? 'எழுதின ராமாயணத்தைத் தானே நீ திரும்ப எழுதியிருக்கே...’னு சொல்லி அவரைச் சிறுமைப்படுத்த முடியுமா?  ரவீந்திரநாத் தாகூரின் எந்த வேலையும் ஒரிஜினல் இல்லைதான். அதுக்காக அவரை மதிக்காம இருக்க முடியுமா? ஜெயகாந்தனுக்கும் இப்படி எங்கேயோ ஓர் உந்துதல் இருக்கும் இல்லையா? சிலர் எந்தச் சாயலும் இல்லாம தன்னிச்சையா எழுதுவாங்க. சிலர் எங்கே இருந்து எடுத்தாங்கனு தெரியுற சாயலோடு எழுதுவாங்க. அது இல்லாம கலை நடக்காதுனு தோணுது. இன்ஸ்பிரேஷன் இல்லாம இருக்க முடியாது. ஆனா அப்படியே அப்பட்டமா காப்பி அடிக்கிறது, ஓரளவு கலை கைவர்ற வரைக்கும் பண்ணுவாங்க. ஒண்ணுமே தெரியாம இருக்கும்போதுதான் பார்த்துப் பார்த்து டிரேஸ் எடுப்பான். வளர்ந்த பின்னாடி அதைச் செய்ய மாட்டான் கலைஞன். ஏன்னா, கலை கை வந்த பிறகு அவனுக்கு திமிர் வந்திரும்.

இன்னொரு விஷயம்... யார் யாரெல்லாம் காப்பி அடிக்கிறான்னு தேடிட்டு இருக்குற ரசிகன், அடுத்த கட்டத்துக்கு வளரலைனு அர்த்தம். முழு ரசிகனா வளர்ந்துட்டா, அதை பெரிய விஷயமா யோசிக்க மாட்டாங்க. 'காப்பியடிச்சுட்டான் .கே அதை நல்லா பண்ணியிருக்கானா?’னு பார்க்க ஆரம்பிச்சிருவான். நான் எப்படித் தட்டுத்தடுமாறி கலைஞனா வளர்ந்தேனோ, அது மாதிரி ரசிகனா, அவனும் தன் விலாசத்தை தேடிட்டு இருக்கான். சீக்கிரமா கண்டுபிடிச்சிருவான்!''

''அப்போ, காப்பி அடிச்சாலும் யாரும் யாரையும் குறை சொல்லக் கூடாதுனு சொல்றீங்களா?''
''அது நம்ம ஆளுங்களோட சைக்காலஜி.
'நீ கெட்டிக்காரன் கிடையாதுனு அடுத்தவனைச் சொல்றதுல நம்ம ஆளுங்களுக்கு ஒரு சின்ன சந்தோஷம். அவ்ளோ ஏன்... நான் கண்ணதாசனையே குறை சொல்லியிருக்கேனே!

'வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை பற்றித் தொடரும் பாவ புண்ணியம்னு பட்டினத்தார் எப்பவோ எழுதிட்டார். அதுல கடைசி வரியில கண்ணதாசன் 'கடைசி வரை யாரோ?’னு மாத்திட்டார்னு நான் சொல்லிட்டு இருந்தேன். அதுக்கு, 'விடுய்யா... செட்டியார்க்கு செட்டியார் காப்பி அடிச்சுக்கிறாங்க. என்னமோ பண்றாங்கனு ஒருத்தர் சொன்னார். ஆனா, கண்ணதாசன் மட்டுமே தெரிஞ்ச எனக்கு, அவரைத் திட்டுறதுக்காக பட்டினத்தாரைத் தேடிப் படிச்சேன்


அப்படி கண்ணதாசனைத் திட்டினது மூலமா ஒரு சித்தர் பாடல் எனக்கு அறிமுகம் ஆச்சு. அதுமாதிரி இப்ப காப்பினு திட்டுறவங்க, திட்டுறது மூலமா உலக சினிமாவைத் தெரிஞ்சுக்கிறாங்க. அப்போ என் ரசிகன் வளர்ந்துட்டு இருக்கான்னுதானே அர்த்தம். அது நல்ல விஷயம்தான்.  இப்படித்தான் வளர்ச்சி இருக்க முடியும். இவங்க எல்லாம் சினிமா ரசிகர்களா இருக்கிற வரைக்கும் கமல் வண்டி ஓடும். ஆனா, இவ்வளவு தெரிஞ்சவங்க நடிக்க வந்தா, என் மார்க்கெட் காலி. 'அடுத்த ஆள் வந்தாச்சுனு நான் மூட்டையைக் கட்டிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்!''

''60-வது பிறந்த நாளில் 'கிளீன் இந்தியானு பரபரப்பு பண்ண நினைச்சீங்களா?''  
''நரேந்திர மோடி அரசாங்கம் எனக்குக் கொடுத்தது புது ஆதார் அட்டை அல்ல. கடந்த 30 வருஷங்களா நான் செய்த பணிக்கான சான்றிதழ். என்ன... கெட்டது பண்ணா, உடனே திட்டுவாங்க. நல்லது பண்ணதால, 30 வருஷங்கள் கழிச்சுதான் பார்வையில பட்டிருக்கு. நான் இதை ஒரு விழா மாதிரி எடுத்துக்கிறேன். இதில் என் ரசிகர்களுக்கு ரொம்ப சந்தோஷம். இதைத் தவிர என் ரசிகர்களுக்கு வேற எந்தச் சம்பளமும் கிடையாது. எனக்கும் ரசிகர்களுக்குமான உறவு எப்படி ஆரம்பிச்சதுனு யோசிச்சா, பிரமிப்பா இருக்கு. என் ரசிகர் மன்றங்களை ஒரு நற்பணி இயக்கமா மாத்தலாம்னு நினைச்சப்போ நிறையக் குழப்பங்கள்.

 'ரசிகர் மன்றமே வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தப்ப, அசோகன் அண்ணன் வருத்தப்பட்டார். 'ஏன் ரசிகர் மன்றம் வேணும்?’னு அசோகன் அண்ணன் சொன்னது ஆதாயக் காரணங்கள். 'ரசிகர் மன்றமே வேண்டாம்னு சிவகுமார் அண்ணன் சொன்னது சுகாதாரக் காரணங்கள். ரசிகர் மன்றம்கிற பேர்ல எல்லாரோட மனித நேரமும் விரயமாயிட்டு இருக்கிறதைத் தவிர்க்கவும், எனக்கு அதுதான் சரியான வழியாத் தோணுச்சு. அவங்களை எதுக்கு வெறும் 'விசிலடிச்சான் குஞ்சுகள்னு நெகடிவ்வா யோசிக்கணும்? நற்பணி இயக்கமா மாத்தினேன்

அப்பவும் சிலர் மந்தமாவே இயங்கினாங்க. அரசியலுக்குள் நுழையலாம்னு சிலர் கையை முறுக்க ஆரம்பிச்சாங்க. அங்கே போயஸ் கார்டனில் ரஜினி கையைப் பிடிச்சு முறுக்கிட்டு இருந்தாங்க. என்கிட்ட யாராவது தோளில் கையைப் போட்டு தப்பான அறிவுரை சொன்னாக்கூடக் கேட்டுப்பேன். ஆனா, கையை முறுக்கிட்டு சரியான அட்வைஸ் சொன்னா, கேட்டுக்க மாட்டேன். அரசியலே வேண்டாம்னு பிடிவாதமா இருந்துட்டேன்!''  

''ரஜினியை இப்பவும் 'அரசியலுக்கு வாங்க வாங்கனு கூப்பிட்டுட்டே இருக்காங்களே. உங்களுக்கு சமீபத்தில் அப்படி அழைப்பு வந்ததா?''
''முந்தி நிறைய வரும். இப்போ நிறுத்திட்டாங்க. ஏன்னா, நான் வர மாட்டேன்னு கெட்டிக்காரங்களுக்குத் தெரிஞ்சிருச்சு. அது புரியாம பதற்றத்துல இருந்தவங்கதான், 'வா, வானு இழுத்துட்டே இருந்தாங்க. அப்போலாம் அவங்களை நான் மிரட்டக்கூடச் செஞ்சிருக்கேன். 'ஐயா... நான் வரக் கூடாதுனு பிரார்த்தனை பண்ணிக்கோங்க. அப்படி வந்தா,  உங்களுக்கு நல்லது இல்லைனு!
'விஸ்வரூபம்பிரச்னை வந்தப்ப, 'நாங்க பார்த்துக்கிறோம்னு நிறையப் பேர் வந்தாங்க. ஆனா, 'எங்க கூடவே வந்திருங்கனு யாரும் சொல்லலை!''

'' 'விஸ்வரூபம்ரிலீஸ் பிரச்னையான சமயம், 'வெளிநாட்டுக்குப் போயிருவேன்னு  சொல்லி ரொம்ப எமோஷனல் ஆகிட்டோமேனு அப்புறம் தோணுச்சா உங்களுக்கு?''
''எமோஷனல்னு சொல்றதைவிட, அப்போ நான் கொஞ்சம் கோபமாத்தான் இருந்தேன். அப்புறம் என் ரசிகர்கள் காட்டிய அன்பில் என் மனம் நெகிழ்ந்திருச்சு. 'யார் மேலயும் கோபப்படுற அருகதையே உனக்கு இல்லைனு ஒரு பணிவு மனசுக்குள் வந்திருச்சு. அந்த நேரத்தில் 'நமக்கு அநியாயம் நடக்குதேங்கிற கண்ணகியின் கோப மனநிலையில்தான் நானும் இருந்தேன்

ஆனா ரசிகர்கள், எந்தப் பிரதிபலனும் எதிர்பாராம எனக்காகக் கூடி நின்னாங்க. நிலப்பத்திரத்தைக் கையில வெச்சுட்டு ராயப்பேட்டை ரிஜிஸ்டர் ஆபீஸ்ல காருக்குள் காத்திருக்கேன். கையில குப்பைக்கூடையும் வெளக்குமாறும் வெச்சிருந்த ஒரு அம்மா, 'எழுதிக் கொடுக்காதே... எழுதிக் கொடுக்காதே... நாங்க படம் பாக்குறோம்னு கத்தினாங்க. கண்கள் கலங்கிட்டேன். அந்த அன்புக்கு என்ன கைமாறு பண்ணப்போறேன்னுதான் எப்பவும் யோசிச்சுட்டே இருக்கேன்!''


''தமிழ் சினிமா சூழல் இப்போ எப்படி இருக்கு?''
''எப்பவும்போல, 'இன்னும் தேவை... இன்னும் தேவைனு கேட்கிற நிலைமையில்தான் இருக்கு.  வியாபார உந்துதல் காரணமா... இல்லை, 'இதுவே போதும்கிற நினைப்பு காரணமானு தெரியலை... பல படங்கள் நாட்டுப்புறத்தனமா இருக்கு. மும்பையில், கேரளாவில் நடப்பது எல்லாம் ஏன் இங்கே நடக்க மாட்டேங்குதுனு தெரியலை

அங்கே சினிமாவும் இலக்கியமும் ஒண்ணுக்கு ஒண்ணு கலந்து பழகிக்குது. ஆனா, இங்கே அரசியலும் ஊடகங்களும் சினிமாவுக்குள் கலந்திருக்கு. அது நல்லதா கெட்டதானு நல்ல ஆராய்ச்சியாளர்கள் சொல்லட்டும். இப்படி இருக்கும்போது ஒரு செய்தியை நான் எப்படி நம்புறது? 'சார்பற்றனு யாரை நம்புறது? எல்லாருமே செய்தியில் கொஞ்சம் உப்பு போட்டா நல்லா இருக்கும்னு நினைக்கிறாங்க. 'இன் தி பின்ச் ஆஃப் சால்ட்னு சொல்ற மாதிரி!''

''தமிழ் சினிமா வியாபாரம் சின்னதா இருந்தப்போ நீங்களும் ரஜினியும் சேர்ந்து நடிப்பதில் அர்த்தம் இல்லைன்னு சொன்னீங்க. ஆனா, இப்போ இந்தியாவில் இந்தி சினிமாவுக்கு அடுத்து தமிழ் சினிமாதானே மாஸ். இன்னமும் உங்க ரெண்டு பேரையும் சேர்க்கிற பட்ஜெட்டும் கேன்வாஸும் கிடைக்கலையா?''
''நம்புங்க.... இன்னமும் அந்த அளவு பணம்  கைக்கு வரலை. கிடைக்க வேண்டிய பணம் கிடைச்சா, சிரஞ்சீவியையும் நடிக்கவைக்கலாம்; அமிதாப்பையும் ஆடவைக்கலாம்; நியாயமா வரவேண்டிய பணம் வந்தா, சல்மான் கான், ஷாரூக் கான் ரெண்டு பேருக்கும் சம்பளம் கொடுத்து, அதில் என்னையும் ரஜினியையும்கூட நடிக்கவைக்கலாம். ஆனா, மார்கெட்டையே இன்னும் யாரும் புரிஞ்சுக்கலை. 'அந்த மார்க்கெட் எப்போ வரும்?’னு கேட்டா, வரவைக்கணும்னு சொல்வேன். 'வெள்ளைக்காரன் போவான்னு காத்திருந்தா, சுதந்திரம் கிடைக்காது; போகவைக்கணும்!''

''சமீபமா பெரிய ஸ்டார் நடிச்ச படங்கள் வெளியாகிறதுல பெரிய சிக்கல் உருவாகுதே?''
''அந்தப் பிரச்னை எப்பவும் நடக்கும் சார். 'உலகம் சுற்றும் வாலிபன்சமயத்துல எம்.ஜி.ஆருக்கு நடக்கலையா? 'பராசக்தியில் கலைஞருக்கும் 'துக்ளக்கில் சோவுக்கும் அந்தச் சிக்கல் வந்துச்சே. இந்த மாதிரி இடைஞ்சல்களுக்குப் பயந்துட்டுத்தான், எல்லாரும் 'சபாஷ் மீனாபண்ண ஆரம்பிச்சுட்டாங்க!''

''பளபள விளம்பரங்களோட வெளியாகிற சினிமாக்களை சமூக வலைதளங்களில் தாறுமாறா விமர்சிக்கிறாங்கனு இண்டஸ்ட்ரியில் கொந்தளிக்கிறாங்களே?''
''விமர்சனத்துக்கு விமர்சனம் எழுத மாட்டேன்னு சொன்னவன் நான். 'பண்டிதன்னு சொல்றவனுக்கு 'பாண்டித்யம்இருக்கானு  முதலில் பார்க்கணும். ஆனா, இன்னைக்கு உலகத்துல விமர்சனத்தை ஒண்ணுமே பண்ண முடியாது; தடுக்க முடியாது; தவிர்க்க முடியாது. முன்னாடி இடைவேளை சமயம் தியேட்டர் பாத்ரூமில் அப்படியான விமர்சனம் கிளம்பும்.  அதைக் காதுகொடுத்துக் கேட்கவே முடியாது. ஆனா, அதைக் கேட்டு வாழ்ந்தவரும் ஒருத்தர் இருக்காரு. அவர் சாண்டோ சின்னப்பா தேவர். அவர் கம்பெனியில் நாங்க வேலை செஞ்சுட்டு இருந்தப்ப, சினிமா பார்க்க டிக்கெட் எடுத்து தருவார்


ஒரே நிபந்தனை... பட இடைவேளை சமயத்திலும் படம் முடிஞ்ச பிறகும் பாத்ரூமில் என்ன சொல்லித் திட்டுறாங்கனு அட்சரம் பிசகாம அவர்கிட்ட சொல்லணும். அதுக்குத் தனியா காசு தருவார். ஒரு படம். பேர் வேணாம். அந்தப் படம் பார்த்துட்டு அவர்கிட்ட 'ரொம்பத் திட்டுறாங்க அய்யானு தயங்கித் தயங்கிச்  சொன்னேன். 'என்ன திட்டுறாங்க?’னு கேட்டார். 'கெட்டக் கெட்ட வார்த்தையில திட்டுறாங்கனு சொன்னேன். 'அதான்டா... யாரைத் திட்டுறாங்க?’னு கேட்டார். 'வீட்ல உள்ளவங்களைத் திட்டுறாங்கனு மென்னு முழுங்கிச் சொன்னேன். 'அதான்டா... அம்மாவையா, அக்காவையா?’னு சிரிச்சுட்டே கேட்டார். அதையும் சொன்னேன். அதே படத்தை அவர் இந்தியில் ரீமேக் பண்ணி வெற்றிப்படமாகக் கொடுத்தார்

'இங்க தப்பு பண்ணேன்டா... அதை அங்கே சரி பண்ணேன்னு சொன்னார். அந்த பாத்ரூம் திட்டு பத்தி சொன்னப்போ, 'எவன்டா சொன்னான்?’னு அவர் கோபப்படலை. 'ஏன் சொன்னான்?’னு யோசிச்சார். 'ஏதோ தப்பு செஞ்சிருக்கேன். அதை ரசிகன் அவன் பாஷையில சொல்றான்னு யோசிச்சதுனாலதான் அவர் சாண்டோ. 'திட்டுனவன் வீடு எங்கேடா?’னு அவர் கோபப்பட்டிருந்தா, அவர் சாதாரண சின்னப்பா தேவராத்தான் இருந்திருப்பார். அப்போ கழிப்பறையில கேட்ட திட்டுகள் எல்லாம் இப்போ நெட்ல கேட்குது. நாமதான் நெருப்புக்கோழி மாதிரி தலையை மண்ணுக்குள்ள புதைச்சுட்டு உக்காந்திருக்கோம். ஆள் அனுப்பி பாத்ரூமில் உளவு பார்க்கிற வேலைகூட இல்லை. நேரடியாவே தெரிஞ்சுக்கலாம். அதைச் சாதகமாத்தானே பார்க்கணும்.

நடிகர் திலகம் ஒருபோதும் தன்னை நடிகர் திலகமா நினைச்சுக்கிட்டதே இல்லை. தான் ஒரு நல்ல நடிகன்னு மட்டும்தான் நினைச்சுட்டு இருந்தார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் ஒவ்வொரு பட ரிலீஸின்போதும் 'என்னை ஒப்புக்கிட்டாங்களா, இயக்குநரா ஏத்துகிட்டாங்களா?’னு பதற்றமாவே இருப்பார். போற-வர்ற ஆளுங்ககிட்ட கேட்டுட்டே இருப்பார். 'ஆனந்த விகடன்விமர்சனத்துல என்ன எழுதுவாங்கனு கவலைப்பட்டுக்கிட்டே இருப்பார். புரண்டு புரண்டு படுத்திட்டு இருப்பார். ஒரு படத்துக்கு அவர் எதிர்பார்த்த விமர்சனம் வரலை. உடம்பே முடியாமப்போயிருச்சு. 'ஏன் சார் இவ்வளவு கவலைப்படுறீங்க?’னு கேட்டா... ஏத்துக்கவே மாட்டார். அவ்வளவு கவலைப்படுவார்.  
எனக்கு விமர்சனம் பிடிக்காதுதான். ஆனா, அதை நான் ஒதுக்கிட மாட்டேன். அடுத்த அப்ளாஸுக்கான அட்வான்ஸ்னு நினைச்சுப்பேன். அவனைப் பேசவிடாம தடுக்குறதால நாம ஜெயிச்சுக் காட்ட முடியாது. அதே வாயால நம்மைப் பாராட்டவெச்சுட்டா, அதைவிட பெருமை வேற என்ன இருக்க முடியும்?''

''ஒரு இயக்குநரா 'நடிகைஸ்ருதியை எப்படி மதிப்பிடுவீங்க?''
''ஓர் உதாரணத்துக்குச் சொல்லணும்னா, நடிகை ஸ்ரீதேவிக்குக் கிடைச்சதுபோல ரொம்ப அரிதான வாய்ப்புகள் ஸ்ருதிக்குக் கிடைச்சிருக்கு. அது எல்லாருக்கும் கிடைக்காது. அதாவது சினிமான்னா என்னன்னு புரியுறதுக்கு முன்னாடியே, அதை ரொம்பப் பக்கத்துல இருந்து வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு. எனக்கும் அப்படி சின்னப் பையனா சினிமாவை வேடிக்கை பார்க்க வாய்ப்பு கிடைச்சது. ஆனா, நான் சிவாஜி சார் வீட்டுக்குப் போவேனே தவிர, அவர் ரூம் 'எப்படி இருக்கும்?’னு பார்த்தது கிடையாது. ஸ்ருதி அவர் ரூமுக்குள்ள போய்ட்டு வரும். குளிக்க டவல் எடுத்துக் கொடுக்கும்.

அப்படி ஒரு நாள் வீட்டுக் கொல்லைப்புறத்து வேப்ப மரத்தடியில், சிவாஜி சார் சேர் போட்டு உட்கார்ந்திருந்தார். அப்போ ஸ்ருதிக்கு ஆறு, ஏழு வயசு இருக்கும். அதைக் கூப்பிட்டு வம்பு இழுக்குறார். 'இங்க வாடி... உங்க அப்பன் பெரிய ஆக்டரா?’னு அவர் கேட்க, ஸ்ருதி முகத்தைச் சுண்டி, 'ஆமானு சொல்லியிருக்கு. 'உங்க அப்பன்கிட்ட கேட்டுப் பார்த்தியா... யாரு பெரிய நடிகன்னு?’ அவர் திரும்பக் கேட்டிருக்கார். 'அப்பாதான்னு ஸ்ருதி சொல்லியிருக்கு. 'அதெல்லாம் இல்லை. என் பேரைச் சொல்வான்டினு அவர் சொல்லிட்டு, 'பந்தயம் வெச்சுக் கலாமா... உங்க அப்பனைவிட நான்தான்டி பெரிய நடிகன். உனக்கு நடிச்சுக்காட்டவா?’னு அவர் கேட்டதும் ஸ்ருதி, 'அதெல்லாம் வேணாம். இந்த மரத்துல ஏறிக்காட்டுங்கனு சொல்லியிருக்கு

அந்தப் பதிலை அவர் எதிர்பார்க்கலை. அவருக்கு என்ன பண்றதுனு புரியலை. 'யப்பா உன் பொண்ணுவிட்ட சவாலை, என்னால தாக்குப்பிடிக்க முடியலை. மரத்துல ஏறுறதுதானடா உன் நடிப்பு?’னு சொல்லிச் சொல்லிச் சிரிச்சார். அப்போ அவர் நிஜமாவே 'என்ன சொன்னார்?’ங்கிற அர்த்தம் இப்போ ஸ்ருதிக்குப் புரிஞ்சிருக்கு. அந்த வெற்றி அவங்களுக்கு விபத்து அல்ல. ஆனா, இன்னும் போகவேண்டிய தூரம் இருக்கு. என்கிட்ட இல்லாத திறமை அவங்ககிட்ட இருக்கு. நான் எழுத மட்டும்தான் செஞ்சேன். அவங்க இசையமைச்சாங்க; எழுதவும் செய்வாங்க. 'உன்னைப்போல் ஒருவன்படத்துக்கு தனி ஆளா பேக்ரவுண்டு ஸ்கோர் அடிச்சு முடிச்சுட்டுப் போயிட்டாங்க. அந்தத் திறமை இன்னைக்கு எத்தனை நடிகைகள்கிட்ட இருக்கு? எனக்குத் தெரிஞ்சு இல்லைனுதான் சொல்வேன்!''


''அக்க்ஷரா நடிக்க வந்ததும் எதிர்பாராத திருப்பமா இருக்கே?''
''அக்ஷரா நடிப்பாங்கனு நானும் எதிர்பார்க்கலை. அவங்களுக்கு டெக்னிக்கல் சைடுதான் ஆர்வம் அதிகம். மும்பையில் உதவி இயக்குநரா இருந்தாங்க. நல்லா டான்ஸ் ஆடுவாங்க. திடீர்னு 'சமிதாப்படத்துல அமிதாப்ஜி, தனுஷ்கூட நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. போன வாரம் ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தாங்க. 'ஃபென்டாஸ்டிக் ஆக்டிங். க்ளோஸ்அப் வாஸ் குட்னு போட்டு கீழே அமிதாப்னு இருந்துச்சு. அக்க்ஷரா நடிப்பைப் பாராட்டி, அமிதாப் அனுப்பின மெசேஜ் அது.

 'அமிதாப் இப்படி என்கிட்டகூட ஒரு தடவையும் சொல்லலையேம்மானு பூரிப்பா பதில் சொன்னேன். அக்ஷரா இயக்கப்போறேன்னு சொல்லிட்டுப் போயிட்டு திடீர்னு நடிச்சதும், கே.பி. சார் என்கிட்ட சொன்னதுதான் ஞாபகம் வந்தது. நானும் முதல்ல இயக்குநர் ஆகணும்னு சான்ஸ் கேட்டு அவரைத்தான் சந்திச்சேன். உடனே என் பொடனியில் தட்டி, 'இயக்குநரானா, ஆட்டோரிக்ஷாவுலதான் கடைசி வரைக்கும் ஊர் சுத்திட்டு இருப்ப. முதல்ல நடி. வீடு எல்லாம் வாங்கிட்டு அப்புறம் இயக்குறதைப் பத்தி யோசினு சொன்னார். பிறகு நான் முதல் படம் இயக்கும்போது, 'என்னடா திடீர்னு படம் டைரக்ட் பண்ற?’னு கேட்டார். 'வீடு கட்டிட்டேன் சார்னு சொன்னேன். 'ஆனா, 40 வருஷம் ஆச்சேடா. தாஜ்மஹாலே இதைவிட சீக்கிரம் கட்டிட்டாங்களே...’னு சிரிச்சார்!''

''60 வயசு... சினிமாவில் வேகத்தை அதிகரிக்கணும்னு எதுவும் திட்டம் இருக்கா?''
''ஒவ்வொரு நிமிஷத்தையும் இன்னும் ஆனந்தமா அனுபவிக்கணும்னு மட்டும் திட்டம். சினிமாவில் பரபரப்பான காலகட்டத்துல நான் என் குழந்தைகளோடு செலவழிச்ச நேரத்தை, மத்த நடிகர்கள் செலவழிச்சிருப்பாங்களானு கேட்டா சந்தேகம்தான். இன்னும் சொல்லப்போனா, ரெண்டு பேரும் பிறந்த பிறகு நான் படம் பண்றதையே குறைச்சுக்கிட்டேன். அப்போ ரஜினி வருஷத்துக்கு ஆறேழு படங்கள் பண்ணிட்டு இருந்தார். கையில நேரம் இல்லாம போயஸ் கார்டன் வீட்டு முன்னாடி ஜீப்- நின்னு சண்டைக் காட்சியில் நடிச்சிட்டு இருந்தார்

அந்த வழியா நான் போனப்ப, 'என்ன கமல் இந்தப் பக்கம்... ஷூட்டிங்கா?’னு கேட்டார். 'இல்லை... சும்மா ஒரு வேலையா இந்தப் பக்கம் வந்தேன். இன்னும் 10 நாட்கள் ரெஸ்ட் இருக்குனு சொன்னேன். 'பார்த்தீங்களா அவர் எவ்வளவு ஃப்ரீயா இருக்கார்?’னு இயக்குநரை முறைச்சார் ரஜினி. குடும்பத்தோடு இருக்கிறப்பவே நான் தனித்தும், புசித்தும், விழித்தும் இருக்கும் ஆள். இப்போ ஸ்ருதி, அக்ஷரா கால்ஷீட் கிடைக்கிறதும் கஷ்டமா இருக்கு. கொண்டாட்டத்துக்குக் கேட்கவா வேணும்!''

''தமிழ்நாட்டில் 'தமிழக முதல்வர்’, 'மக்கள் முதல்வர்னு ரெண்டு பேர் இருக்காங்களே... அதைப் பத்தி உங்க கருத்து?''
''இன்னும் எத்தனை முதல்வர் வேணும்னாலும் வெச்சுக்கங்க. ஆனா, மக்களுக்கு நல்லது பண்ணுங்க. அது போதும் எனக்கு!''



No comments:

Post a Comment