சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Nov 2014

கற்க கசடற விற்க அதற்குத் தக

ள்ளி மாணவர்கள் எப்போதும் தேர்வை நோக்கியே சிந்திப்பவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். அதிலும் அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் நிலை இதன் உச்சம். ஒவ்வொரு நாளும் இரண்டு தேர்வுகள் எழுதுகின்றனர். காலை, பள்ளிக்கு வந்ததும் ஒன்று; மாலை, பள்ளி முடியும்போது ஒன்று. ஒரு நாளைக்கு ஒரு பாடம் என வாரத்தின் ஐந்து நாட்களும் அவர்களுக்குத் தேர்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஒரு தேர்வின் நேரம் 10 நிமிடங்கள்தான் என்றாலும், அதை தினசரி இரண்டு வேளை செய்ய வேண்டியிருக்கும்போது, பெரும் சுமையாக, மன அழுத்தமாக மாறுகிறது.
சதாசர்வகாலமும் மாணவர்கள் தேர்வுக்குப் படித்துக்கொண்டே, தேர்வு எழுதிக்கொண்டே இருக்கின்றனர். அது குறித்த பதற்றம் அவர்களை நிரந்தரமாகச் சூழ்ந்திருக்கிறது. ஒரு தேர்வில் தேர்ச்சி அடையாவிட்டால், அதே நாளில் ஏதாவது ஒரு நேரத்தில் மறுதேர்வு எழுத வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக சி.சி. முறையில் படித்த மாணவர்கள், இப்போது 10-ம் வகுப்பு சென்றுள்ளனர். இதுவரை மனப்பாடம் இல்லாமல் எளிமையான வழிமுறைகளில் படித்த அவர்கள், இப்போது மனப்பாடக் கல்விமுறைக்குள் நுழைந்துள்ளனர். எடுத்ததுமே முரட்டு அடியாக ஒரு நாளைக்கு இரண்டு தேர்வுகள் என்பது, அவர்களைக் கடுமையாக அச்சுறுத்துகிறது.
தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவே, அரசு இத்தகைய முயற்சிகளை மேற்கொள்கிறது. அது பலனைத் தருகிறதா என்பதை இனிதான் பார்க்க வேண்டும். இதன் மறுபுறம் தேர்வுக்கு அப்பாற்பட்டு சிந்திக்கும் வாய்ப்பை இறுகப் பூட்டிவைப்பது எந்த வகையில் சரி? பள்ளி மாணவர்கள், தேர்வு எழுதத் தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் அல்ல. அவர்களை அந்தந்த வயதின் இயல்புகளுடன் இருக்க அனுமதிக்க வேண்டும். 15, 17 வயதில் இளமைத் துடிப்புடன் ஓடி விளையாட வேண்டிய பருவத்தில், விளையாட்டை அடியோடு மறுப்பது பெருங்கொடுமை.
ஒரு காலத்தில் அனைத்து பள்ளிகளிலும் பி..டி. பீரியட் இருந்தது. அந்த முக்கால் மணி நேரத்துக்காக, நாள் முழுக்க ஏக்கத்துடன் காத்திருப்பார்கள் மாணவர்கள். கபடி, வாலிபால், கால்பந்து, ஓடுவது, தாண்டுவது என விதம்விதமான விளையாட்டுகளை ஆசைதீர விளையாடுவார்கள். ஆனால், இன்று பள்ளியும் விளையாட்டும் ஒன்றுசேரவே முடியாததுபோல மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களிடம் இருந்து விளையாட்டு வன்முறையாகப் பிடுங்கப்படுகிறது. பி..டி பீரியடில் வேறொரு பாடத்துக்கு சிறப்பு வகுப்பு நடத்துகின்றனர். தனியார் பள்ளிகளில் பிள்ளையைப் படிக்கவைக்கும் பெற்றோரோ, பையன் விளையாடுவதைக் கண்டால் பதறிப்போகின்றனர். 'இதுக்காடா உன்னை லட்சம், லட்சமா டொனேஷன் கொடுத்து படிக்கவைக்கிறேன்?’ என வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்கிறார்கள். பள்ளி ஓட்டப் பந்தயத்தில் ஓடி ஜெயித்துப் பெற்ற கோப்பையுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளும் இனிய தருணம், அவர்களுக்குக் கிடைக்காமலேயே போய்விடுகிறது.
விளையாட்டை கல்வியின் எதிரியாகச் சித்திரிக்கிறார்கள். ஆனால், உண்மையில் நல்ல கல்வியைப் பெற விளையாட்டு முக்கியம். நன்றாக விளையாடி நல்ல உடல்நலத்தைப் பெறும்போதுதான், சுறுசுறுப்பாகச் சிந்திக்க முடியும். சிறந்த கல்வியைப் பெறும் திறனும் அப்போது தான் கிடைக்கும். மேலும் வகுப்பறையின் இறுக்கம் தளர்ந்து, மனம் உற்சாகம் அடைந்து, மைதானத்தில் விளையாடும் நேரத்தில்தான் மாணவர்களின் நட்புலகம் இன்னும் நெருக்கம் ஆகிறது. பள்ளிப் பருவத்தை எண்ணிப்பார்த்து மகிழும் படியான இனிப்பான நினைவுகளை, விளையாட்டு மைதானங்கள்தான் தர முடியும்; வகுப்பு அறைகள் அல்ல.
சரி, விளையாட்டை மறுத்து, பொழுதுபோக்குகளைப் புறக்கணித்து நடத்தப்படும் நமது பள்ளிக் கல்வியின் தரம்தான் என்ன? அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்ட பருவத் தேர்வுகளின் முடிவுகள், நமது கல்விமுறை குறித்த பல கேள்விகளை எழுப்புகின்றன. மொத்தம் 7.02 லட்சம் பேர் எழுதிய அந்தத் தேர்வில் 3.47 லட்சம் பேர் மட்டுமே தேர்வாகி உள்ளனர். இது வெறும் 49.49 சதவிகிதம்தான். பாதிக்குப் பாதி பேர் தேர்ச்சி பெறவில்லை. இந்த அதிர்ச்சி ஒருபுறம் என்றால், இதற்கு நேரெதிராகக் கடந்த சில ஆண்டுகளாக நமது பள்ளியின் தேர்வு முடிவுகள் மேல்நோக்கியதாக இருக்கின்றன. 100-க்கு 100 மதிப்பெண் எடுப்போரும், அதிக மதிப்பெண் எடுப்போரும் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளனர். தேர்ச்சி விகிதமும் வெகுவாகக் கூடியிருக்கிறது. ஆனால், அங்கிருந்து கல்லூரிக்கு வந்துசேரும் அதே மாணவர்கள், இங்கு மட்டும் தேர்வில் தோல்வி அடைவது ஏன்? இது மிக முக்கியமான கேள்வி. கிண்டியில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இதுகுறித்த அதிர்ச்சிக் கதைகளைக் கேட்கலாம்.
ப்ளஸ் டூ தேர்வில் மிகச் சிறந்த மதிப்பெண் எடுத்து கட்-ஆஃப் மதிப்பெண்ணில் முன்னணியில் இருப்பவர்களின் முதல் தேர்வு இந்தக் கல்லூரிதான். நாமக்கல் தனியார் பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண் எடுக்கும் பலரும் இங்கு சேர்கின்றனர். ஆனால், இந்த மாணவர்கள் கல்லூரியில் பாஸ்மார்க் எடுத்து தேர்ச்சி அடையக்கூட திணறுகின்றனர். புரிந்துகொண்டு படிக்கவேண்டிய கல்லூரியின் பாடத்திட்டமுறை அவர்களை அச்சுறுத்துகிறது. இவற்றை எதிர்கொள்ள முடியாமல் சில மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டும் இருக்கிறார்கள்.
அந்தப் பெண்ணின் பெயர் கவிதா என வைத்துக்கொள்வோம். அவர் மேட்டூர் பகுதியில் உள்ள ஒரு விவசாயியின் மகள். வசதியான குடும்பம். தன் பிள்ளையை ராசிபுரம் தனியார் பள்ளி ஒன்றில் சேர்த்தார். 1,100-க்கும் மேல் மகள் மதிப்பெண் எடுத்தார். சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் 25 லட்சம் நன்கொடை கொடுத்து எம்.பி.பி.எஸ் சேர்த்துவிட்டார். ஆனால், அந்தப் பெண்ணால் ஒரு பாடத்தைக்கூட படிக்க முடியவில்லை. பாடத்தைப் புரிந்துகொண்டு படிக்கும் முறையே அவருக்குப் புதிதாக இருந்தது. சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு ஓடிவந்தார். 'முதலில் அப்படித்தான் இருக்கும். போகப் போகச் சரியாயிடும்என அறிவுரை சொல்லி, கல்லூரியில் விட்டுவந்தார் அப்பா.
ஆனால், அந்தப் பெண்ணால் கல்லூரி வாழ்க்கையோடும், அந்தப் படிப்போடும் ஒட்டவே முடியவில்லை. 'நான் படிக்க முடியாது. படிப்பைவிட்டு நின்னுடுறேன்எனச் சொல்லத் தொடங்கினார். பெற்றோர் மறுத்தபோது தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டினார். பயந்துபோன பெற்றோர் அவ்வப்போது சென்று வீட்டுக்கு அழைத்து வருவதும், ஆறுதல் சொல்வதுமாக இருந்தனர். காரில் வீட்டுக்கு வரும் வழியில் மேட்டூர் அணை பாலத்தைக் கடக்கும்போது எல்லாம் அதில் குதித்து இறந்துவிடுவதாகச் சொன்னார். இது இப்படியே நீண்டது. முதலாம் ஆண்டு கல்லூரி நெருங்கும் சமயத்தில் சொன்னபடியே தற்கொலை முயற்சியை கவிதா மேற்கொண்டபோது பெற்றோர் விழித்துக்கொண்டனர். உடனடியாக கல்லூரியைவிட்டு நிறுத்திவிட்டு, அவருக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டனர். நல்ல ஆளுமைத்திறன் உள்ள புத்திசாலித்தனமான தன் பெண்ணின் வாழ்க்கையைச் சிதைக்க அந்தப் பெற்றோர் செலவழித்த தொகை, கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய். இது ஒரு கவிதாவின் கதை மட்டும் அல்ல; பல மாணவர்கள் இப்படி பள்ளியில் மாவட்ட ரேங்க், மாநில ரேங்க் எடுத்துவிட்டு, கல்லூரியில் திகைத்து நிற்கின்றனர்.
ஆக, கல்லூரியை எதிர்கொள்ளும் மன திடத்தை, அறிவுத்திறனை வழங்குவதாக நமது பள்ளிக் கல்வி இல்லை. பிரதம் ஃபவுண்டேஷன் என்ற என்.ஜி.., ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவில் கல்வி குறித்த ஆய்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடுகிறது. 'அசர்(Annual Survey of Education Report -ASER) என அழைக்கப்படும் இந்த சர்வேயின் 2013-ம் ஆண்டு முடிவுகளைப் பார்த்தால், நமது கல்வித் தரம் குறித்து கடும் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் 50 சதவிகிதம் மாணவர்களுக்கு, ஒன்றாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தைக்கூட வாசிக்கத் தெரியவில்லை. 6, 7, 8-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் வகுத்தல் கணக்குகள் தெரிந்தவர்கள், 31 சதவிகிதம் பேர்தான். 69 சதவிகிதம் பேருக்குத் தெரியவில்லை. ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 53.4 சதவிகிதம் பேருக்கு, தமிழ் எழுத்துக்களை அடையாளம் காணக்கூடத் தெரியவில்லை.
தனியார் பள்ளிகளின் நிலையும் சிறப்பாக இல்லை. அங்கு மூன்றாம் வகுப்பு மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தை வாசிக்கும் தரத்துடன்தான் இருக்கிறார்கள். 2012-ம் ஆண்டில் இருந்து இந்தத் திறனும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதே நேரம் ஆசிரியர்கள், மாணவர்களின் வருகைப்பதிவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. '90 சதவிகித வருகைப்பதிவு கொண்டிருக்கும் ஒரு மாணவரால் 35 மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை என்றால், அது மாணவரின் தோல்வி அல்ல; ஆசிரியரின் தோல்விஎன்கிறது இந்த அறிக்கை.
ஆகவே அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்ற வரம்புகளைக் கடந்து ஒட்டுமொத்தமாக மாணவர்களுக்குச் சென்றுசேரும் கல்வியின் தரம் போதுமான அளவுக்கு இல்லை. தினம் இரண்டு தேர்வு, விளையாட்டு கிடையாது, ஞாயிற்றுக் கிழமையும் படிப்பு, ஸ்பெஷல் கிளாஸ், டியூஷன் என மாணவர்கள் மீது இறுக்கம் அதிகரிக்க, அதிகரிக்க... கல்வியின் தரம் பின்னுக்குப் போகிறது என்பதுதான் கசப்பான உண்மை.


No comments:

Post a Comment