சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Nov 2014

'பணவளக்கலை’


பணமில்லாமல் வாழவே முடியாதா? நானெல்லாம் பணமில்லாமலே வாழத் தெரிந்தவன் என்று சிலர் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள். இவர்கள் முதலில் புரிந்துகொள்ள மறுப்பது 'பணமே வாழ்க்கையில்லைஎன்பதையும், அதேசமயம், 'பணமில்லாமல் வாழ்க்கையே இல்லை!’ என்பதையும்தான். பணம் அத்தியாவசியம் என்ற நியதியைக் கொண்ட உலகில், திண்டாடாமலும் (பணமில்லாமல்), தடுமாறாமலும் (நிறையப் பணம் சேர்த்துவிட்டதால்) இருப்பதற்கான வழிகள் சிலவற்றை கண்டு தேறுவது அவசியம்.  

வாழ்க்கையென்பது புத்திசாலிகளுக்கு கனவு, முட்டாள்களுக்கு விளையாட்டு, பணக்காரர்களுக்கு காமெடி நிறைந்த பொழுதுபோக்கு, ஏழைகளுக்கு பெரும் விபத்து என்று அறிஞர் ஒருவர் கூறியுள்ளார். இந்த அர்த்தம் பொதிந்த வாசகத்திற்குள் பல உள்அர்த்தங்கள் உள்ளன. இதன் உள்அர்த்தங்களை முழுமையாகப் புரிந்துகொண்டுதான் நாம் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடரவேண்டும்.
நீங்கள் எக்கச்சக்கமான திறமையுடனும் புத்திசாலித்தனத்துடனும் இருந்து பணத்தின் மீது ஆசையில்லாமல் இருந்தீர்கள் என்றால் ஒரே ஒரு உதவியை இந்த உலகுக்குச் செய்யுங்கள். உங்களது புத்திசாலித்தனத்தையும் திறமையையும் உபயோகித்து நிறைய சம்பாதியுங்கள். நாட்டில் எத்தனையோ பேர் அத்தியாவசியத் தேவைகளைக் கூடப் பெற முடியாமலும், திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்காமலும் தவிக்கிறார்கள். பணத்தின் மீது ஆசையில்லாத நீங்கள் கஷ்டப்படுகிறவர்களின் துயரைத் துடைத்து, சரியான வாய்ப்பு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கித் தரலாமே!  

பலரும் பல தேவைகளுடனும் இயலாமையுடனும் காத்திருக்க, புத்திசாலித்தனமும் திறமையும் இருப்பவர்கள் எனக்குப் பணத்தின் மீது ஆசையில்லை என்று சொல்லி உருப்படியாக எதுவும் செய்யாமல் இருந்தால் அவர்களிடத்தில் இருக்கும் இயலாமையை மறைக்க முயல்கிறார்களோ என்ற சந்தேகமே மற்றவர்களுக்கு வரும். அடிப்படை வசதிப் பற்றாக்குறை நிறைந்தவர்கள் இருக்கும் உலகில் திறமையும் புத்திசாலித்தனமும் உங்களிடம் நிறைந்திருந்தால் அதை உபயோகித்து பொருள் ஈட்டி மற்றவர்களுக்கு உதவி செய்து,  அருளைத் தேடுங்கள். பொருளில்லாமல் நன்கு வாழத் தெரிந்த நீங்கள், பணம் ஈட்டி அதை இல்லாத, இயலாதவர்களுக்கு தருவதன் மூலம் அருளையாவது சேர்த்து வானுலகில் பயன் பெறலாம் என்பதுதான் என் அன்பான வேண்டுகோள்.
பணம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், பணத்தை வைத்துக்கொண்டு கஷ்டப்படுபவர்கள் என்ற இரண்டு வகை நபர்களையும் நாம் கண்முன்னே பார்க்கின்றோம். பணம் பற்றிய புரிதல் இந்த இருவருக்குமே உதவுவதாக இருக்கும்.

சரி, நம் பயணத்தைத் தொடருவோம். பணம் என்றவுடன் மனதில் தோன்றும் இன்னொரு விஷயம் ரிஸ்க் என்பதாகும். பணம் சம்பாதிக்க ரிஸ்க் எடுக்கவேண்டும். இந்த ரிஸ்க்கெல்லாம் நம்மால் எடுக்க முடியாது என்று நம்மில் பெரும்பாலானோர் ஒதுங்கிவிடுகின்றோம். இது பிறவிக்குணமா? அல்லது வளர்த்த விதமா? என்பதையெல்லாம்விட ரிஸ்க் பற்றிய நம்முடைய குறைந்த அளவிலான புரிதலே இவ்வாறு நம்மை ஒதுங்கச் செய்துவிடுகின்றது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.  
பிறந்ததிலிருந்து நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் ரிஸ்க் என்பது இருக்கத்தான் செய்கின்றது. இந்த ரிஸ்க்குகள் பல வகையாக இருக்கலாம்.  

சில ரிஸ்க்குகள் உடனடி விளைவுகளைத் தருபவை (கெட்டுப்போன உணவைச் சாப்பிட்டவுடன் வாந்தி எடுப்பதைப்போல); சில ரிஸ்க்குகள் நீண்டநாட்களில் விளைவுகளைத் தருபவை (அதிக கொழுப்புள்ள உணவைத் தொடர்ந்து நீண்டநாள் சாப்பிட்டு கொலஸ்ட்ராலை அதிகரித்துக்கொண்டு கஷ்டப்படுவதைப்போல); சில ரிஸ்க்குகள் எடுக்கும் ஒரே தடவையில் விளைவைத் தருபவை (கெட்டுப்போன உணவு ஒருவேளை சாப்பிட்டாலே பிரச்னை); சில ரிஸ்க்குகள் தொடர்ந்து பல தடவை எடுக்கும்போது விளைவுகளைத் தருபவை (ஜங்க் ஃபுட் தொடர்ந்து சாப்பிட்டால் பிரச்னை); சில ரிஸ்க்குகள் நமக்கு நேரடி நஷ்டத்தைத் தருபவை (நம்முடைய பணம் கையைவிட்டுப் போகும்); சில ரிஸ்க்குகள் மற்றவருக்கு நஷ்டத்தைத் தருபவை (நம்முடைய முதலாளிக்கு அவருடைய பணம் கையை விட்டுப் போகும்); சில ரிஸ்க்குகள் உடல்/பொருள் ரீதியான (கை/கால் உடைதல்) நஷ்டத்தைத் தருபவை; சில ரிஸ்க்குகள் மனரீதியான நஷ்டத்தைத் தருபவை (தாய், தந்தை, மகள், மனைவி, காதலி விபத்துக்குள்ளாதல்); 

சில ரிஸ்க்குகள் மனிதர்களை பாதிப்பவை (விஷங்கள்); சில ரிஸ்க்குகள் மனிதனைச் சுற்றியிருக்கும் சுற்றுச்சூழலை பாதிப்பவை (விஷமான பூச்சிக்கொல்லிகள்); சில ரிஸ்க்குகள் நாமாகவே விரும்பி எடுப்பவை (தீம் பார்க்கில் விளையாடுவது); சில ரிஸ்க்குகள் விரும்பாமலே வருபவை (தீவிரவாதம் - குண்டுவெடிப்பு). இப்படி உலகில் நம்மைச் சுற்றியிருக்கும் பல்வேறு வகையிலான ரிஸ்க்குகளை நாம் புரிந்துகொண்டு செயல்படவேண்டி இருக்கின்றது.

இதையும் தாண்டி இந்த ரிஸ்க்குகளை எப்படி கட்டுப்படுத்துவது என்பதையும் நாம் புரிந்துகொண்டு வாழவேண்டியுள்ளது. ரிஸ்க்குகள் எந்த அளவுக்கு கட்டுப்படுத்தக்கூடியவை, எந்த அளவு எல்லோருக்கும் சமநிலையானது (அதாவது, நீங்கள் அந்த ரிஸ்க்கை எடுத்தாலும் சரி, நான் அந்த ரிஸ்க்கை எடுத்தாலும் சரி, அது ஒரே மாதிரியான விளைவைத்தான் இரண்டு பேருக்கும் தரும் நிலையைக் கொண்டது), எந்த அளவுக்கு பயத்தைக் கொடுக்கக் கூடியது, எந்த அளவு நம்மால் அதன் விளைவுகளிலிருந்து மீண்டுவர சாத்தியம் உள்ளது, எந்த அளவு இந்த ரிஸ்க் வாழ்வில் நம்முடைய நம்பிக்கையை தகர்க்க வல்லது, எந்த அளவு அந்த ரிஸ்க்கை தரும் விஷயத்தில் நாம் நம்பிக்கை வைக்க முடியும் என்பது போன்ற விஷயங்களையும் நம் வாழ்வில் நாம் நன்கு ஆராய்ந்து அறிந்து செயல்படவேண்டியுள்ளது.

ரிஸ்க்கே வேண்டாம் என்று முடிவு செய்து மனிதன் வாழவே முடியாது. ஏனென்றால், நம்மைச் சுற்றி ரிஸ்க் எங்கெங்கும் வியாபித்திருக்கின்றது. புதிய டெக்னாலஜிகள் (இன்டர்நெட்), பழைய டெக்னாலஜிகள் (சவுக்குமர ஏணிகள்), புதுவகை மருந்துகள் (ஸ்டெம்-செல் தெரபி), வீட்டு மருத்துவம் (சீரியஸான பிரச்னைக்கு அஞ்சறைப்பெட்டி வைத்தியம் செய்ய முயற்சிப்பது), தனிநபர் உறவுகள் (உறவுமுறிவு, நம்பிக்கைத் துரோகம்), தெரிந்த வன்முறை சம்பவங்கள் (திருட்டு), புதுப்புது வன்முறைகள் (குண்டுவெடிப்புகள்) என பல்வேறு வகையானவற்றிலும் பல்வேறு வகையான எதிர்மறை விளைவுகளை விளைவிக்கக்கூடிய ரிஸ்க்குகளுடனேயே உலகத்தில் நாம் செயல்பட்டு வருகின்றோம்.

இதுபோன்ற ரிஸ்க்குகள் வாழ்க்கையில் இருப்பதை நாம் எள்ளளவும் சட்டை செய்யாமலேயே சுலபமாக வாழப் பழகியிருக்கின்றோம். அதேசமயம், நாம் புதிதாகச் செய்யப்போகும் ஒரு விஷயத்தில் ரிஸ்க் இருக்கின்றது என்று தெரிந்தால், அதை செய்வதை நம்மில் பெரும்பாலானோர் தவிர்க்கவே முயல்கின்றோம். புதிய முயற்சிகள் அனைத்துமே ரிஸ்க் நிறைந்தவை. நிச்சய வெற்றிக்கு சாத்தியமான புதுமுயற்சி என்று ஒன்று உலகத்தில் இல்லவே இல்லை.





No comments:

Post a Comment