சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Nov 2014

எச்சரிக்கை... எபோலா!

துவரை உலகத்தில் கண்டறிந்தவற்றில் அபாயகர ஆட்கொல்லி நோய் இதுதான்என்கிறது உலக சுகாதார நிறுவனம். 'இது ஒரு மனிதப் பேரழிவு’  என்று வர்ணிக்கின்றன உலக ஊடகங்கள். இதற்கு முன்தடுப்பு மருந்துகள், குணப்படுத்தும் மருந்துகள் என எதுவும் இல்லை. மரணத்தை நிச்சயப் பரிசாகக் கொண்டுவருகிறது எபோலா. ஆப்பிரிக்காவில் தொடங்கிய இந்த நோய், இப்போது ஐரோப்பிய, அமெரிக்கக் கண்டங்களுக்கும் பரவி... அகில உலகத்தையும் அச்சுறுத்துகிறது.

கடும் அசதி, திடீர் காய்ச்சல், தசை வலி, தொண்டையில் புண் எனத் தொடங்கி, கடும் வயிற்றுப்போக்கு, உடல் துவாரங்களில் இருந்து ரத்தம் கசிவது வரை சென்று இறுதியில் மரணம்... இதுதான் எபோலா இயங்குமுறை! எய்ட்ஸ் தாக்கினால்கூட, பல ஆண்டுகள் உயிர் வாழ முடியும். ஆனால், எபோலா தாக்கினால் சில மாதங்களில் மரணம் நிச்சயம். நோய் எதிர்ப்பு சக்தி அபாரமாக இருப்பவர்கள் மட்டுமே இதன் தாக்குதலில் இருந்து பிழைக்கின்றனர். சிம்பன்ஸி குரங்குகள், பழந்தின்னி வெளவால்கள், காட்டு மான்கள் போன்றவற்றை எபோலா வைரஸ் தாக்கி, இவற்றின் உடல் திரவங்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது. ஒரு மனிதனிடம் இருந்து மற்றவருக்குப் பரவுவதும் உடல் திரவங்கள் மூலம்தான். காற்றின் மூலம், தண்ணீரின் மூலம் இந்த நோய் பரவுவது இல்லை.1976-ல் காங்கோ நாட்டில் முதன்முதலில் கண்டறியப்பட்டது முதல் இப்போது வரை, ஆப்பிரிக்க நாடுகளை 20 முறை எபோலா தாக்கியிருக்கிறது. 20 முறையும் சேர்த்து பலியானவர்கள் ஏறக்குறைய 300 பேர். ஆனால், இப்போதைய தாக்குதலில் சாவு எண்ணிக்கை 5000- நெருங்கிவிட்டது. இதற்கு முந்தைய நோய்த் தாக்குதல் நிகழ்ந்த ஊர்கள் எல்லாம் கிராமங்கள் அல்லது மிகச் சிறிய நகரங்கள். மேலும் அப்போது இந்த அளவுக்கு போக்குவரத்து வசதிகள் பெருகவில்லை. இதனால் ஓர் ஊரில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு, அந்த ஊருடன் அது நின்றுவிட்டது. ஆனால், இப்போதோ யூகிப்பதைக் காட்டிலும் அதிவேகமாகப் பரவுகிறது.

2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கினியாவில் தனது மரண ஆட்டத்தைத் தொடங்கியது எபோலா. கடந்த அக்டோபர் 15-ம் தேதி உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவல்களின்படி, இதுவரை 9,216 பேரை எபோலா தாக்கியிருக்கிறது. அதில் 4,555 பேர் இறந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மிகவும் குறைந்த மதிப்பீடு என்பது பலரது கருத்து. ஏனெனில், உள்ளடங்கிய கிராமங்களைக்கொண்ட ஆப்பிரிக்க நாடுகளில் மரண எண்ணிக்கை முழுமையாக ரிப்போர்ட் செய்யப்படுவது இல்லை. இதே நிலை நீடித்தால் டிசம்பர் மாதத்தில் இருந்து, வாரத்துக்கு 10 ஆயிரம் பேரை எபோலா தாக்கும் என்றும், அவர்களில் 70 சதவிகிதம் பேருக்கு மரணம் நிச்சயம் என்றும் அதிரவைக்கிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை. டிசம்பர் மாதம் என்பது அதிக தூரம் இல்லை. நடுவில் இருப்பது ஒரு மாதம் மட்டும்தான். இந்த ஒரு மாதத்தில் அதிசயங்கள் நிகழாவிட்டால், வரப்போகும் புத்தாண்டு நிச்சயம் தித்திப்பாக இருக்காது!  

அக்டோபர் ஆரம்பத்தில் ஸ்பெயின் நாட்டில் நர்ஸ் ஒருவருக்கு எபோலா இருப்பது உறுதியானது. இப்போது ஸ்பெயினில் மூவருக்கு எபோலா. அமெரிக்காவில் ஏழு பேர்; ஜெர்மனியில் மூன்று பேர்; நார்வே, பிரான்ஸ், செனகல், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஒருவர் என இப்போது எபோலா சர்வதேச நோய்.
'எபோலாவைக் கட்டுப்படுத்துவதில் நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம்!’ என உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது. எபோலா தாக்கிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவர்களையும் இந்த நோய் தாக்குகிறது. அக்டோபர் 12-ம் தேதி நிலவரப்படி, 427 சுகாதாரப் பணியாளர்களை எபோலா தாக்கியுள்ளது. அதில் 236 பேர் மரணம் அடைந்துவிட்டனர். இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் மத்தியில் பெரும் அச்சம் எழுந்துள்ளது.  

எபோலா என்பது, மருத்துவப் பிரச்னை மட்டும் அல்ல; பொருளாதாரப் பிரச்னையும்கூட. எபோலா தாக்கிய ஒருவரால் வேலைபார்க்க முடியாது. எனில், அந்தக் குடும்பத்துக்கு வருமானம் இல்லை. ஒரு நிறுவனத்தின் ஊழியருக்கு எபோலா இருப்பது தெரிந்தால், அங்கு பணிபுரியும் மற்றவர்களும் வேலைக்கு வர அஞ்சுகின்றனர். பேருந்து, ரயில் மற்றும் விமானங்களில் பயணிக்கப் பயந்து, மக்கள் வீட்டுக்குள்ளேயே  முடங்கியுள்ளனர்.

பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. பல பகுதிகளில் விவசாயம் நடைபெறவில்லை. விவசாய நிலங்கள் கைவிடப்பட்டுள்ளன. காரணம், வயல்களுக்குப் பாயும் தண்ணீரின் வழியே எபோலா வைரஸ் பரவுவதாகக் கிளம்பிய வதந்தி. இவற்றின் விளைவாக, உணவுப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. ஏற்கெனவே வறுமையில் வாடும் இந்த நாடுகள், இந்தப் பிரச்னையால் மேலும் நெருக்கடியைச் சந்திக்கின்றன. மக்களின் அன்றாட வாழ்க்கை பதற்றமும் பீதியும் நிறைந்ததாக மாறியிருக்கிறது.

எபோலாவை எதிர்கொள்ளும் பொருளாதார வலிமையும் இந்த நாடுகளுக்கு இல்லை. ஸ்பெயின், தன் நாட்டில் எபோலா பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சராசரியாக 3,000 டாலர் செலவழிக்கிறது. ஆனால், சியரா லியோனில் எபோலா பாதிக்கப்பட்ட ஒருவருக்கு செலவிடப்படும் தொகை வெறும் 300 டாலர்தான். 'எபோலா நோயைக் கட்டுப்படுத்தும் மருத்துவப் பணிகளுக்கு, குறைந்தது 61 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்திருப்பது வெறும் 61 லட்சம் ரூபாய் மட்டுமேஎன்கிறது .நா. 120 கோடி ரூபாய்க்கும் அதிகமான உதவிகளை உலக நாடுகள் அறிவித்திருந்தாலும், அவை எதுவும் இன்னும் சென்று சேரவில்லை. எபோலா தாக்குதல் தீவிரமாக உள்ள மூன்று நாடுகளிலும் மருத்துவ வசதிகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன. கினியாவில் ஒரு லட்சம் பேருக்கு 10 மருத்துவர்கள்தான் இருக்கிறார்கள். சியரா லியோனில் 'எபோலா கிளினிக்என்ற பெயரில் பிரத்யேக மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. இதுபோன்ற சிறப்பு மருத்துவமனைகளின் தேவை அதிகமாக இருக்கிறது.

கிராமங்களில் எபோலா குறித்த முழுமையான விழிப்பு உணர்வு இன்னும் சென்று சேரவில்லை. காய்ச்சல், உடல் அசதி, தொண்டை வலி, வயிற்றுப்போக்கு ஆகிய எபோலா அறிகுறிகளை   மக்கள்  சாதாரணமாகக் கருதுகின்றனர். உடல் துவாரங்களில் ரத்தம் கசிந்து மரணத்தைத் தழுவும்போதுதான், அதன் தீவிரம் உணர்கிறார்கள். அதற்குள் அவரிடம் இருந்து பலருக்கு எபோலா பரவிவிடும். முக்கியமாக எபோலா தாக்கப்பட்டு இறந்தவரின் உடலில், மிகவும் வீரியமான வைரஸ்கள் இருக்கும். மரணச் சடங்குகளில் இறந்தவரின் உடலைத் தொட்டுப் புழங்கினால், மிக சுலபமாக எபோலா தாக்கும். சியரா லியோன், லைபீரியா, கினியா போன்ற நாடுகளில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் கட்டித் தழுவுவதும், முத்தமிடுவதும் அவர்களின் சம்பிரதாயங்கள். மரண வீட்டின் கூட்டத்தில் எபோலாவால் தாக்கப்பட்ட இருவர் இருந்தால், அவர்களைக் கட்டிப்பிடிப்பதன் வழியே ஏராளமானோருக்கு அந்த வைரஸ் பரவிவிடும். இறந்தவரின் உடலைத் தொட்டுப் புழங்கி மேலும் பலரைத் தொடும்போதும் எபோலா பரவும். தற்போது பெரும்பாலோரை எபோலா தாக்குவது இத்தகைய சம்பிரதாயங்கள் மூலமாகத்தான்.

                               


''எபோலாவைக் கட்டுப்படுத்த குறுக்கு வழிகள் எதுவும் இல்லை. மருந்து கண்டுபிடிப்பது ஒன்றுதான் ஒரே வழி'' என்கிறார், லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் பயட். 1976-ம் ஆண்டு காங்கோ நாட்டில் முதன்முதலில் எபோலாவைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் குழுவில் இவரும் ஒருவர்.
இவர் சொல்லும் இன்னொரு கருத்து முக்கியமானது... ''எபோலா தடுப்புப் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் பாதுகாப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் சுகாதாரப் பணியாளர்கள் கையுறைகள்கூட அணிவது இல்லை. இந்தியாவில் எபோலா தாக்குதல் நிகழ்ந்தால், அதன் பாதிப்பு மோசமாக இருக்கும்'' என எச்சரிக்கிறார். இதை இந்தியா கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். 'க்ளீன் இந்தியாஎன மத்திய அரசு தொடங்கியுள்ள தூய்மைப் பிரசாரத்துக்கு இது பொருத்தமான நேரம். எபோலா வைரஸ் உள்ளே நுழைந்துவிடாமல் பல மடங்கு எச்சரிக்கையுடன் கண்காணிப்பது ஒரு பக்கம் என்றால், உள்நாட்டு சுகாதாரத்தின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும். இரண்டையும் ஒரே சமயத்தில் தீவிரமாக மேற்கொள்வது ஒன்றுதான், இப்போது நமக்கு முன் எஞ்சியிருக்கும் ஒரே வழி!
எபோலாவுக்கு மருந்து?
எபோலாவுக்கு மருந்து கண்டறியும் முயற்சிகள், உலகம் எங்கும் நடைபெற்று வருகின்றன. புகழ்பெற்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனமான Glaxosmithkline  உள்பட பல நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன. எபோலா தாக்குதலுக்கு உள்ளாகி மீண்டு வந்தவர்களின் ரத்தத்தில் இருந்து  serum- பிரித்து எடுத்து, அதில் இருந்து எதிர்ப்பு மருந்துத் தயாரிக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. ஆனால், எபோலா என்பது ஒரு வைரஸ் என்பதால் மருந்து கண்டறிவது அத்தனை சுலபம் அல்ல. விலங்குகள் மற்றும் மனிதர்கள் மீது சோதனை நடத்தி, பக்கவிளைவுகளை ஆய்வுசெய்து... என, அதற்கு சில ஆண்டுகள் ஆகலாம். இப்போதைக்கு நாம் அனைவரும் பின்பற்றவேண்டிய சில முக்கியமான அம்சங்கள் பற்றி சொல்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் .சோமசுந்தரம்...

என்ன செய்ய வேண்டும்?

எபோலாவுக்கு எனப் பிரத்யேக அறிகுறிகள் இல்லை. கடும் காய்ச்சல், தலைவலி, உடல் அசதி, வாந்தி, தொண்டை வலி, வயிற்றுப்போக்கு எல்லாம் ஒன்று மாற்றி ஒன்று வந்துகொண்டே இருக்கிறது எனில், உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

 இத்தகைய அறிகுறிகளுடன் ஒருவர் இறந்தால் புதைக்கக் கூடாது; எரிக்க வேண்டும்.

 பொதுக் கழிப்பிடங்களுக்கு மிகவும் பாதுகாப்பான காலணிகளை அணிந்து சென்று வர வேண்டும்.
 ஒரு நாளில், பல முறை சோப் உபயோகித்து கைகளைக் கழுவ வேண்டும்.

 உணவுப்பொருட்களை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும். குறிப்பாக, அசைவ உணவுகள். முடிந்தவரை வீட்டிலேயே சமைத்து உண்ண வேண்டும்.

என்ன செய்யக் கூடாது?
எபோலா பாதிக்கப்பட்டவரையோ அல்லது எபோலா பாதிப்பால் இறந்தவரையோ தொடக் கூடாது; அவர்களின் ஆடைகளைக்கூடத் தொடக் கூடாது.

 எபோலா அறிகுறிகள் உள்ளவரின் எச்சில், சளி, ரத்தம், சிறுநீர் போன்றவற்றைத் தொடக் கூடாது. அவர்களுடன் உடலுறவும் வைத்துக்கொள்ளக் கூடாது.

 ரத்தம், எச்சில், சளி, வியர்வை, சிறுநீர், விந்தணு போன்ற உடல் திரவங்கள் மூலம்தான் ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு எபோலா பரவுகிறது. எனவே, புதிய நபர்களைக் கட்டித் தழுவுவது, முத்தமிடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

சுகாதாரமற்றப் பகுதிகளில் இருந்து விலகியிருக்க வேண்டும்.

எபோலாவின் விலை 90 லட்சம்!
எல்லாவற்றிலும் ஆதாயம் பார்ப்பவர்கள் எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். www.ebola.com என்ற இணையதள முகவரி, லாஸ்வேகாஸில் வசிக்கும் ஜான் ஷூல்ட்ஸ் என்பவருக்குச் சொந்தமானது. அதை இப்போது 90 லட்ச ரூபாய்க்கு விற்க விரும்புவதாக அறிவித்திருக்கிறார். ''நான் இதை 2008-ம் ஆண்டு எட்டு லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன். இப்போது 90 லட்சம் என்பது மிகவும் குறைவான விலை'' என்கிறார் ஷூல்ட்ஸ். www.ebola.comமட்டுமல்ல, birdflu.com, H1N1.com, chikungunya.com போன்றவையும் இவருடையதுதான். நோய்களின் பெயரில் இணையதள முகவரியை ஆரம்பித்து அல்லது வாங்கி அதை நல்ல விலைக்கு விற்பது இவருடைய தொழில். 'நோய் இணையதள வியாபாரிஎன இவரை அழைக்கிறது 'வாஷிங்டன் போஸ்ட்’. நோய்கள் மட்டுமல்ல, terror.com, potassiumiodide.com, fukushima.com போன்றவையும் இவருடையதே!

வழிகாட்டும் நைஜீரியா!


எபோலா தீவிரமாகப் பரவத் தொடங்கிய நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. அந்த நாடு, தன் நாட்டுப் பள்ளிகள் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சோப் உபயோகித்து கைகளைக் கழுவ பயிற்றுவித்தது. எபோலா விழிப்பு உணர்வு குறித்து தீவிரப் பிரசாரம் செய்தது. விமான நிலையங்களில் உள்ளே நுழைபவர்களுக்குக் காய்ச்சல் இருக்கிறதா எனச் சோதிக்கப்பட்டது. இப்படிப் பல முனைகளில் இருந்தும் தீவிரமாகச் செயல்பட்டு, தன் நாட்டில் எபோலா பரவும் வேகத்தைத் தடுத்து நிறுத்தி உள்ளது நைஜீரியா.


No comments:

Post a Comment