சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Mar 2015

வலியவன் - படம் எப்படி?

ரு சாதாரண மனுஷன் நினைச்சா அசாதாரண மனுஷனா மாற முடியும், இதுதான் 'வலியவன்'! 
ஒரு பிரபல மால் ஒன்றில் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவா இருக்கிறார் ஜெய். சப்வே ஒன்றில் வைத்து ஆண்ட்ரியா ‘ஐ லவ் யூ சொல்றாங்க’ அப்பறம் ஜெய் ஆண்ட்ரியாவைத் தேடி அலையோ அலைனு அலையிறார். ஒரு வழியா தேடிப் பிடிச்சு லவ்வச் சொன்னா , ஆண்ட்ரியா 'எனக்காக நீ ஒண்ணு செய்யணும்’னு செக் வைக்கிறாங்க...'அது என்ன...? அந்த டெஸ்ட்டை கரெக்டா முடிச்சாரா நம்ம ஜெய்ங்கிறதுதான் மிச்ச கதை! 

என்னமோ தெரியலை... என்ன மாயமோ புரியலை, ஏன் பாஸ் இததான் 90கள்லயே அடிச்சுத் துவைச்சு சொல்லிட்டாங்களேன்னு சொல்லத் தோணுது. முதல் பாதியை அப்படியே விட்டுட்டு இண்டர்வெல்ல படம் பார்த்தாலும் கதை புரியும். அந்த அளவுக்கு முதல் பாதி தேமேனு சும்மாவே போகுது. 
சரி இரண்டாவது பாதியாவது மிராக்கிளா இருக்குமானு பார்த்தா 'கடைசி முக்கால் மணி நேரம்தான் நாங்க கதை சொல்வோம் அக்காங்!' என்று சொல்கிறார்கள். அந்த அளவுக்கு திரைக்கதை ஓட்டம் ரொம்பவே தொங்குது. 
சிக்ஸ் பேக்லாம் வெச்சு ஜெய் அடுத்த ஸ்டெப் எடுத்து வெச்சுருக்காரு, ஆனாலும் இந்த கண்ணு வேர்க்குது பாணியிலதான் டயலாக் பேசுறத மட்டும் மாத்தவே மாட்டேங்கறாரு. இது வரைக்கும் பார்த்த ஆண்ட்ரியா வேற இந்த படத்துல ஆண்ட்ரியா வேற. இப்படி ஒரு கேர்ள் ஃப்ரண்ட் இருந்தா எப்படி இருக்கும்னு பசங்களை லைட்டா ஏங்க விடுறாங்க. ஆனாலும் கொஞ்சம் ஹெவி கேரக்டர்தான். சில இடங்கள்ல அப்பட்டமா தெரியுது ஆண்ட்ரியா நடிக்கிறது.
வில்லன் ஆரன் சௌத்ரி கடைசி அரை மணி நேரம் காட்சியில வர்றதுனாலயே நோ கமெண்ட்ஸ் மொமெண்ட்டோட போயிடறாரு. அழகம் பெருமாள், அனுபமா குமார் , பாலசரவணன் எல்லாரும் அவங்கவங்க வேலையைச் சரியா செஞ்சுருக்காங்க.

முதல் பாதியில இன்னும் கொஞ்சம் இண்ட்ரஸ்டிங் சீன்களை வெச்சிருக்கலாம். சீன்களும் செம நீளம். திரும்ப திரும்ப பேசுற நீ பாணியில இருக்கு, எடிட்டிங் கொஞ்சம் இல்ல ரொம்பவே தொய்வு.

’ஆஹா காதல்’ , ’காதல் நல்லவனா’ பாடல்கள் டி.இமான் ஸ்பெஷல், மற்ற பாடல்கள் கடந்து போகுது. ஆக்ஷன் காட்சிகள்ல இமான் கச்சிதம் . ஸ்டன் சிவாவோட சண்டை காட்சிகளும் ஹீரோ ஜெய்ய புதுசாவே காமிச்சுருக்கு. ஆனாலும் மாஸ் ஹீரோன்னாலே இந்த சிக்ஸ் பேக் காமிச்சாதான் அவரோட வாழ்க்கையே முழுமையாகுமான்னு கேட்க தோணுது? எத்தனை வருஷத்துக்கு ,ஹூம்...

சரி படம் பார்க்கலாமா? ஆண்ட்ரியாவை உங்களுக்குப் பிடிக்கும்னா அதுக்காகவே நிச்சயம் பார்க்கலாம்!


நியூசிலாந்தை 'அண்டர்ஆர்ம்' பந்துவீசி ஏமாற்றி ஜெயித்த ஆஸ்திரேலியா! (வீடியோ)

கிரிக்கெட் விளையாட்டை பொறுத்த வரை, இந்தியா-பாகிஸ்தான் மட்டும்தான் பரம விரோதிகள் இல்லை. நடப்பு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மோதவுள்ள ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் கூட ஒருவிதத்தில் பரம எதிரிகள்தான். பக்கத்து நாடுகளான இந்த இரு அணிகளும் எப்போதும் முறைத்து கொண்டுதான் திரியும். நியூசிலாந்துகாரர்கள் பெரியதாக எந்த சர்ச்சையிலும் சிக்கியது இல்லை. உண்மையிலேயே ஜென்டிலாக கிரிக்கெட் விளையாடுபவர்கள். ஆனால் ஆஸ்திரேலியர்கள் அப்படியில்லை. வெற்றிக்காக எந்த எல்லையை நோக்கியும் செல்வார்கள். இதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்ல முடியும் .

                 
                      
கடந்த 1981 ஆம் ஆண்டு, இந்த இரு அணிகளுக்கும் இடையே உலக சீரிஸ் தொடர் நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் ஒன்றில் வெற்றி பெற்றிருந்தன. மூன்றாவது போட்டி இதே மெல்பர்ன் மைதானத்தில்தான் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி 236 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இலக்கை விரட்டி சென்ற நியூசிலாந்து அணிக்கு கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. சிக்ஸ் அடித்தால் போட்டி 'டை' ஆகிவிடும் என்ற நிலை. கடைசி பந்தை நியூசிலாந்து வீரர் மெக்கன்னே எதிர்கொண்டார். 

அப்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த கிரேக் சேப்பல், பந்துவீசிய தனது சகோதரர் டிரிவர் சேப்பலிடம் பந்தை அண்டர்ஆர்மாக வீச அறிவுரை கூறினார். அந்த காலக்கட்டத்தில் அண்டர்ஆர்ம் பந்துவீச்சும் நடைமுறையில் இருந்தது. கடைசி பந்து அண்டர்ஆர்மில் உருட்டி வீசப்பட்டதால், மெக்கன்னேவால் ரன் எடுக்க முடியவில்லை.இதன் காரணமாக இந்த  போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. கிரேக் சேப்பலின் இந்த முடிவுக்கு உலகம் முழுக்க கடும் கண்டனம் எழுந்தது. 


அப்போதைய நியூசிலாந்து பிரதமர் ராபர்ட் மால்டூன் இதனை வெட்கக்கேடான செயல் என்றார். அப்படி ஏமாற்றி ஜெயித்த கிரேக் சேப்பல்தான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தினார். இப்படிதான் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் பரம விரோதிகளாக மாறின.


பஞ்சரே ஆகாத ரைனோ டயர் பற்றித் தெரியுமா?

ன்னதான் ட்யூப்லெஸ் டயர்கள் வந்தாலும், வாகன ஓட்டிகளுக்குப் பெரிய தலைவலி பஞ்சர் பிரச்னைதான். ட்யூப்லெஸ் டயர்களில் பெரிய ப்ளஸ் - பஞ்சர் ஆனாலும், 100 கி.மீ வரை காற்றடித்துவிட்டு ஓட்டலாம். அதையும் மீறி சில டயர்கள் வெடித்துவிடும் அபாயமும் நடக்கிறது. 

பஞ்சரே ஆகாத, அப்படியே ஆனாலும் காற்றே இறங்காத டயர்கள் வந்தால் எப்படி இருக்கும்?

அப்படி ஒரு டெக்னாலஜி, ரைனோ டயர் என்னும் பெயரில் வந்திருக்கிறது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இந்த ரைனோ டயர்கள் ரொம்ப பிரபலம். ரைனோப்ளெக்ஸ் எனப்படும் பாலிமர் சேர்மம் கொண்ட ஜெல், டயர்களின் உள்பக்கம் அப்ளை செய்யப்படுகிறது. 


இது கூர்மையான ஆணி போன்ற பொருட்கள் இறங்கினால் ஏற்படும் ஓட்டைகளை, கிழிசல்களை உடனேயே தானாகவே அடைத்துவிடும் தன்மை கொண்டவை. 

248 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் இந்த ஜெல் ஸ்ப்ரே செய்யப்படுவதால், வாகனம் ஓட ஓட, இது டயரின் ஒரு அங்கமாகவே மாறி, உள்ளே இருக்கும் காற்று வெளியே போகாதவண்ணம் காக்கிறது.
உலகமெங்கும் காடு, மலை, பாலைவனங்களில் நடக்கும் கொடூர ரேஸான டக்கார் ரேலியில் கலந்துகொள் பவர்களுக்குப் பெரிதும் உதவுவது இந்த ரைனோ டயர்கள்தான். மேலும் பைக், கார், ட்ரக் போன்ற எந்த வாக னங்களுக்கும் எப்படிப்பட்ட டயருக்கும் இந்த ரைனோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.

பழைய டயர்களிலும் இதைப் பயன்படுத்தினாலும், ஹேண்ட்லிங், மைலேஜ், ரோடு கிரிப் போன்ற எந்தப் பிரச்னைகளுக்கும் பங்கம் வராது என்கிறார்கள் ரைனோ தொழில்நுட்ப வல்லுநர்கள். ஹோண்டா, யமஹா போன்ற பைக்குளில் இப்போது ரைனோ டயர்கள்தான் ஃபயர் கிளப்புகின்றன.


இணைய பயன்பாட்டின் சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்!

ந்த காலத்துல சாப்பாடு தண்ணி இல்லாமகூட வாழ்ந்துட்டு போகலாம். ஆனா, இண்டர்நெட், கூகுள் இல்லாத ஒரு வாழ்க்கையை நெனச்சுக்கூட பார்க்க முடியாது. அந்த வகையில இண்டர்நெட்டை உபயோகிப்பதில் இருக்கும் சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்களை பார்த்து, ட்ரை செய்து என்ஜாய் பண்ணுங்களேன்...

1. கண்ட்ரோல் + ஷிஃப்ட் + T யை அழுத்தினால் கடைசியாக நீங்கள் க்ளோஸ் செய்த டேப் ஓபன் ஆகும். நீங்கள் மேக் சிஸ்டம் யூஸ் செய்யும் பட்சத்தில், கமெண்ட் + ஷிஃப்ட் + T யை அழுத்தவும். இது க்ரோம் மற்றும் ஃபயர் ஃபாக்ஸ்சில் மட்டும் செயல்படும்.


2. 'S' பட்டனை அழுத்திக்கொண்டே, உங்களுக்கு விருப்பமான புகைப் படத்தின் மீது, உதாரணத்திற்கு 'S' பட்டனை அழுத்திக்கொண்டே ஒரு குழந்தை படத்தின் மேல் கர்சரை வைத்து, மவுஸின் வலது பக்க பட்டனை அழுத்தினால், உடனடியாக பலதரப்பட்ட குழந்தைகளின் படங்கள் வரிசைகட்டி நிற்கும்.

அல்லது விரும்பிய படத்தின் மீது கரர்ஸரை வைத்து அப்படியே அந்த படத்தை நகர்த்தி சர்ச் டேப்பில் இழுத்துப் போட்டால் அதே போன்ற படங்கள் வந்து நிற்கும்.

3. daskeyboard.com  எனும் வலைத்தளத்துக்கு போய், ஹோம் பேஜின் அடியில் இருக்கும் கனெக்ட் கேட்டகிரியில் destroy this site என்பதை க்ளிக் செய்து அந்த வளைத்தளத்தை சுட்டு பொசுக்கலாம்.

4.  google in 1998 என சர்ச் பாரில் டைப் செய்தால், காலச் சக்கரத்தில் பின்னோக்கி போனதுபோல, ரெட்ரோ டைப் கூகுள் சர்ச் ஓபன் ஆகும்.

5. data:text/html,%20<html%20contenteditable><Title>Notepad</Title> என்ற லிங்க்கை க்ளிக் செய்தால் பிரவுஸரையே நோட் பேடாக யூஸ் செய்ய முடியும்.

6. இதே விஷயத்தை  இரவு நேரத்தில் அல்லது வெளிச்சம் இல்லாத சமயத்துல பண்ணனும்னா இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.

data:text/html;charset=utf-8,%20<title>Notepad%20(Nightmode)</title><body%20contenteditable%20style="font-family:%20DejaVu;font-weight:bold;background:#1E1E1E;color:#FFFFFF;font-size:1rem;line-height:1.4;max-width:80rem;margin:0%20auto;padding:2rem;"%20spellcheck="false">
7. “do a barrel roll” என கூகுள் சர்ச் பாரில் டைப் செய்து நடக்கும் மேஜிக்கை பாருங்கள்.

8. “Atari Breakout” என கூகுள் இமேஜ் பாரில் டைப் செய்து, கிளாசிக் விளயாட்டை விளையாடி மலரும் நினைவுகளில் மூழ்கலாம்.

9. யு ஆர் எல் பாரில் எந்த ஒரு வார்த்தையும் டைப் செய்து கூடவே கன்ட்ரோல் + எண்டர் பட்டனை அழுத்தினால் அந்த வார்த்தைக்கு பொருத்தமான வலைத் தளங்கள் வரிசை கட்டும். அதாவது டாட் காம் என டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.


10. ஒரு லிங்க்கை புது டேபில் ஓபன் செய்ய, கண்ட்ரோல் கீயை பிரஸ் செய்துகொண்டே அந்த லிங்கை க்ளிக் செய்தால் அது புது டேபில் ஓபன் ஆகும்.

மேக் சிஸ்டம் யூஸ் செய்பவர்கள் ஆப்பிள் அல்லது கமெண்ட் கீயை பிரஸ் செய்து லிங்க்கை க்ளிக் செய்தால் புதுடேபில் ஓபன் ஆகும்.


வங்கிகளுக்கு தொடர் விடுமுறை... இஎம்ஐ செலுத்துபவர்கள் தவிப்பு!

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருவதால் கடன் தவணையை செலுத்துபவர்கள் தவிப்பில் உள்ளனர். ம்ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது.
 
மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1ஆம் தேதிகளில் ஆண்டு கணக்கு முடிப்புக்காக வங்கிகள் செயல்படாது.

ஏப்ரல் 2ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் அன்றைய தினமும் வங்கிகளுக்கு விடுமுறை. அடுத்து ஏப்ரல் 3ஆம் தேதி புனித வெள்ளியன்று வங்கிகளுக்கு விடுமுறை. அடுத்து வரும் சனிக்கிழமை அரைநாள் மட்டுமே வங்கிகள் செயல்படும். அடுத்து ஞாயிறு விடுமுறையாகும்.


இதனால் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்படும் என தெரிகிறது. வங்கிகளில் வீட்டுக்கடன் மற்றும் பெர்சனல் லோன் வாங்கியவர்கள், அந்த கடனை திருப்பி செலுத்தும் தவணை தேதிகளாக பெரும்பாலான வங்கிகளில் 1, 4, 7 ஆகிய தேதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு மாதத்தின் கடைசி நாளில் சம்பளம் வங்கிகளில் செலுத்தப்படுகிறது. தனியார் நிறுவனங்களிலும் 1 முதல் 5 வரை அந்தந்த நிறுவனங்களுக்கு தகுந்தவாறு ஊதியம் கிரெடிட் செய்யப்படுகிறது.  பெரும்பாலோனார் இந்த சம்பளத்தை கொண்டே தங்களது கடன் தவணைக்கான பணத்தை இஎம்ஐ எடுக்கப்படும் வங்கி கணக்கில் செலுத்துகின்றனர் அல்லது சம்பளம் கிரெடிட் ஆகும் வங்கி கணக்கில் இஎம்ஐ தொகை எடுக்கப்படுகிறது. இந்நிலையில்  தொடர் விடுமுறை காரணமாக சம்பளம் வழக்கமான தேதியில் கிடைப்பது தாமதம் ஆகும் என்பதால், உரிய தேதியில், குறிப்பாக 4 ஆம் தேதி இஎம்ஐ உள்ளவர்கள் தவிக்கின்றனர். ஏனெனில் அன்றைய தினம் வங்கி செயல்படும் ( சனிக்கிழமை) என்பதால் இஎம்ஐ வந்துவிடும்.  இதனால் வங்கிகளின் தொடர் விடுமுறை குறித்த தகவலை முன்கூட்டியே அறிந்திராதவர்கள் கடைசி நேரத்தில் கையை பிசைந்துகொண்டிருக்கின்றனர்.  

மேலும், தொடர்விடுமுறை காரணமாக ஏடிஎம்-கள் செயல்படாத நிலை ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிகளை சந்திக்க நேரிடும். அவசரத்துக்கு பணம் தேவை உள்ளவர்கள் முன்னதாகவே ஏடிஎம் சென்று தேவையான பணத்தை எடுத்துக் கொள்வது நல்லது.

இதற்கு மாற்று ஏற்பாடு செய்யுமாறு ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசை தொழில் கூட்டமைப்பான அசோசேம் வலியுறுத்தியுள்ளது. தொடர் விடுமுறையால் வாடிக்கையாளர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாவார்கள் என்றும் அது சுட்டிக் காட்டியுள்ளது.

இத்தகைய தொடர் விடுமுறை பங்குச் சந்தையில் பண பரிவர்த்தனையை பாதிக்கும் என்றும், ஏற்றுமதி, இறக்குமதி, சம்பள பட்டுவாடா உள்ளிட்டவை பாதிப்புக்குள்ளாகும் என்றும் அசோசேம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி தலையிட்டு வங்கிகளுக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு வலியுறுத்தியுள்ளதாக அசோசேம் கூறியுள்ளது.

வங்கிகளில் பெரும்பாலானவை பொதுத்துறை வங்கிகள் என்பதால் இதில் நிதித்துறை தலையிட்டு வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு தீர்வு காணலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

தொழில்துறையின் பல்வேறு பிரிவுகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், இதற்குத் தீர்வு காண வேண்டியது அவசியம் என்று அசோசேம் செயலர் டி.எஸ்.ரவாத் வலியுறுத்தியுள்ளார்.
 
பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்

இதனிடையே வரும் திங்கட்கிழமை முதல் 6 நாட்கள் வங்கிகள் செயல்படுவது குறித்து வெளியான தகவல்களுக்கு நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, 30ம் தேதி திங்கட்கிழமையும், 31ம் தேதி செவ்வாய்க்கிழமையும் வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 
ஏப்ரல் 1ஆம் தேதி ஆண்டு கணக்கு முடிவு, 2 மற்றும் 3ம் தேதி மஹாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி ஆகிய நாட்களில் வங்கிகள் செயல்படாது என்றும், 4ம் தேதி சனிக்கிழமை வங்கிகளில் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சனிக்கிழமை அரசு கருவூலத்துக்கு விடுமுறை என்ற நிலையில், அரசு ஊழியர் ஊதியம் 6ஆம் தேதிக்கு தள்ளிப் போக நேர்ந்தால், அதற்கு வங்கிகள் பொறுப்பாகாது என்றும் பாரத ஸ்டேட் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.


நடுவானில் இந்திய விமானத்தை கடத்த முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் ?

டெல்லியிலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தை நடுவானில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று சமீபத்தில், டெல்லியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றது. நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவர், திடீரென தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகக்  கூறினார்.

இதையடுத்து அந்தப்  பயணிக்கு விமானப் பணிப்பெண்கள் அவசர உதவிகள் செய்தனர். அப்போது பயணிகளில் 5 பேர் எழுந்து வந்தனர். தங்களை மருத்துவர்கள் என்று கூறிக்கொண்ட அவர்கள், உடல்நலக் குறைவு என்று கூறப்பட்ட பயணியைச்  சோதித்தனர்.


பிறகு அவர்கள் 5 பேரும் விமான கேப்டனை வரச் சொல்லுங்கள் அல்லது கேப்டன் அறைக்குள் அனுமதியுங்கள் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் அவர்கள் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த விமானப் பணிப்பெண்கள், 5 பேரையும் விமானி அறைக்குள் செல்ல அனுமதிக்க மறுத்து விட்டனர்.

இதற்கிடையே மருத்துவர்கள் என்று கூறிய  5 பேரும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பயணிக்கு கேப்டன் அறைக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பிடிவாதமாகக்  கூறியபடியே  இருந்தனர். ஆனால் கேப்டன் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

விமானம் லண்டன் சென்று சேர்ந்ததும் 5 பேரும் அவசரம் அவசரமாக வெளியேறி சென்று விட்டனர். அவர்களது நடவடிக்கைகளால் சந்தேகம் அடைந்த விமானப் பணிப்பெண்கள் இதுபற்றி, உடனடியாக  விமான நிறுவனத்திடம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த  5 பேர்கள் பற்றி ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை  செய்தது. அப்போது அவர்கள் 5 பேரும் பாகிஸ்தானைச்  சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது. அவர்கள் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டபோது அவை போலி என்று தெரிய வந்தது.

அதுபோல உடல் நலக்குறைவு என்று கூறிய பயணிக்கு உண்மையிலேயே உடல் நலக்குறைவுஏற்படவில்லை என்றும், அவர் விமானப் பணிப் பெண்களை ஏமாற்ற நடித்து இருப்பதும் தெரிந்தது. அவரும் போலி தொடர்பு எண் கொடுத்திருந்தார். எனவே அவர்கள் 6 பேரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


இதனால் ஏர் இந்தியா விமானத்தை நடுவானில் கடத்திச்  சென்று நாசவேலையில் ஈடுபட அவர்கள் 6 பேரும் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. யாரும் சந்தேகப்படாதபடி  செயல்பட்டு தீவிரவாதிகள் விமானத்தை கடத்தி நாசகார செயலில் ஈடுபட  முயன்று இருப்பதாகக்  கூறப்படுகிறது.

இந்தச்  சம்பவத்தைத்  தொடர்ந்து அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மத்திய விமான போக்கு வரத்து துறை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பயணிகள் யாரையும் கேப்டன் அறைக்குள் அனுமதித்து விடாதீர்கள். விதிகளை முழுமையாக கடைபிடியுங்கள். விழிப்போடு  இருங்கள் என்று  வலியுறுத்தப் பட்டுள்ளது.

கடனில் மின்வாரியம் : பாலபாரதி வெளியிட்ட அதிர்ச்சி தகவலும் அமைச்சர் பதிலும்!

சொந்த மின் உற்பத்தியை அதிகரிக்காமல் தனியாரி டமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியதால் தான் தமிழ்நாடு மின்வாரியத்தின் கடன் ரூ.70ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற குழுத்தலைவர் கே.பாலபாரதி சட்டமன்றத்தில் பேசினார்.

பேரவையில் நேற்று நடந்த தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பாலபாரதி எம்.எல்.ஏ, “ மின்சாரத் தை பொறுத்தவரை நீண்டகாலம், இடைக்காலம் என்று அனைத் தையும் சேர்த்துதான் தனியாரிடமிருநது கொள்முதல் செய்வதாக அரசு கூறுகிறது. இந்த ஆட்சியில் எவ்வளவு மின்சாரம் கூடுதலா க உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்கள் பட்ஜெட்டில் இல்லை


மின்வாரியத்தின் மொத்த கடன் ரூ.74ஆயிரத்தி 113 கோடியாக உள்ளது. தோட்டத்தில் பாதி கிணறுபோன்று அரசின் மொத்த கடனில் சரிபாதியாக இது உள்ளது. உள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் போதுமான மின்சாரத்தை அரசே உற்பத்தி செய்யாமல் தனியாரிடமிருந்து மின்சாரத்தை  கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்வதுதான் என்று குற்றஞ்சாட்டிப் பேசினார்.

இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், “அதிமுக ஆட்சிக்காலத்தில் பவானி கட் டளை மின்திட்டம் பிரிவு 1ன் மூலமாக 30 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. பெரியார் மின்நிலையம் யூனிட் ஒன்றில் 35 மெகாவாட் மின்சாரத்தை தரம் உயர்த்தி 42 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் கூடுதலாக 7 மெகாவாட் கிடைத்துள்ளது. வைகை அணை நீர்மின்சத்தி திட்டத்தின் மூலம் 2.5 மெகாவாட். ஆக  2011-12 ல் மொத்தம் 139 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 

2012-13ல் சிம்மாதிரி யூனிட் 3ல் இருந்து 95 மெகாவாட், வல்லூரில் என்.டி.பி.சியுடன் கூட்டு ஒப்பந்தம் மூலமாக 69 மெகாவாட், பெரியார் மின் உற்பத்தி நிலையத்தில் 35 மெகாவாட்  42 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டதால் 7 மெகாவாட், பவானி கட்டளை தடுப்பணை யூனிட் 2ல்  இருந்து 9 மெகாவாட் . ஆக மொத்தமாக 2012-13ல் 466.5 மெகாவாட் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 

2013-14ல் தமிழ்நாடு மின்சாரவாரியமும்  தேசிய அனல் மின்கழகமும் இணைந்து வல்லூரில் யூனிட் 2 ன் மூலம் 450 மெகாவாட், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் இருந்து 600 மெகாவாட். வடசென்னை அனல் மின்நிலையத்தில் இருந்து 600 மெகாவாட், பி. ஆர் எனர்ஜி மூலமாக 7 மெகாவாட். பவானி கட்டளை தடுப்பணை 3 இல் இருந்து 30 மெகாவாட். ஆக மொத்தம் 2013-14ல்  1582 மெகாவாட் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது.

2014-15ல் தேசிய அனல் மின் கழகம் நிலை 2ல் இருந்து 600 மெகாவாட்,  மத்திய அரசிமிருந்து கிடைத்தது 562 மெகாவாட். ஆக இந்தாண்டு 1162 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் தொகுப் பில் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 3354.5 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு மின் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. 

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் அமராவதி சிறு மின்திட்டத்தில் இருந்து 4 மெகாவாட், பவானி கட்டளை கால்வாய் திட்டத்தில் இருந்து 30மெகாவாட், பெரியார் வைகை மின்திட்டத்தில் இருந்து 4மெகவாட், வழுதூர் எரிவாயு உற்பத்தி நிலையத்தில் இருந்து 92.52 மெகாவாட், கைகா மத்திய அரசு அணு மின் நிலையத்தில் இருந்து மாநிலத்தின் பங்கு 36 மெகாவாட்,  பயனீர் என்ற சுயேட்சையான தனியார் நிறுவனத்திடமிருந்து மொத்தமாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கிடைத்தது  உள்பட மொத்தம் 206.2 மெகாவாட் தான் உற்பத்தி செய்யப்பட்டது. 

திமுகதான் தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்க ஒப்பந்தம் போட்டது. கூடுதலாக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவாக நீங்கள் கூறும் அந்த  நான்கு தனியார் மின் நிலையங்களிடம் கொள்முதல் ஒப்பந்தம் போட்டதே திமுக ஆட்சிதான். திமுக ஆட்சியில் 110மில்லியன் யூனிட் மின்சாரத்தை ஒரு  யூனிட் 20 ரூபாய் என்ற விலையில் 2200 கோடி கொடுத்து தனியாரிடமிருந்து வாங்கியுள்ளனர். சராசரியாக ரூ.15.50 காசு கொடுத்து வாங்கியுள்ளார்கள். திமுக ஆட்சியல் வாங்கிய மின்சாரத்தில் சரிபாதிதான் அதிமுக  ஆட்சியில் வாங்கப்பட்டுள்ளது. கொள்முதல் விலை15 ருபாயில் மத்திய அரசுக்கு மூல உற்பத்தி பொருள் என்ற வகையில் 11 ருபாய் 50காசு சென்று விடுகிறது.


அதாவது எரிவாயு  அல்லது டீசல் என்றால் ஐஓசி அல்லது பிபிசிஎல் போன்ற பொதுத்துறை எண்ணை நிறுவனங்களிடமிருந்துதான் உற்பத்திப்பொருள் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே தனியார் நிர் ணயித்துள்ள விலையில் 80விழுக்காடு தொகை மத்திய அரசுக்குதான் செல்கிறது. ஒரு யூனிட்டுக்கு தனியார் மின் நிறுவனங்களுக்கு கிடைக்கும் தொகையோ ரூ.1.50 பைசாதான்.  மாநில அரசு மின்உற்பத்தி யில் துண்டுவிழுந்தால் தான் தேவைப்பட்டால் சில மணிநேரங்களுக்கு மட்டும் அவசரத் தேவைக்காக தனியாரிடமிருந்து ரூ.5.50 பைசா என்ற வகையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. 

தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டபடி கொள்முதல் செய்தாலும் ரூ.1.50 காசு கொடுக்க வேண்டும்., கொள்முதல் செய்யாவிட்டாலும் கொடுத் தாக வேண்டும்.  அது ஏற்கனவே  நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாகும். ஒப்பந்தம் போட்டது திமுக, வாங்கியது அவர்கள். பற்றாக்குறை ஏற்பட்டால் தான் அதிமுக அரசு தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்குகிறது. இது எல்லா மாநிலங்களும் செய்வது தான். அதிமுக அரசை பொறுத்தவரை மின்உற்பத்தியை அதிகரித்து வருகிறது. தேவைப்பட்டால் தான் தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி வருகிறது" என்றார்.


பணம் கொடுத்தால் வேலை... வலை வீசும் மோசடிக் கும்பல்!

வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி விதம்விதமாக ஏமாற்றும் நிகழ்ச்சிகள் தினமும் நடக்கின்றன. இதுமாதிரியான ஒரு மோசடிக் கும்பலிடம் சிக்கி, தப்பித்து வந்திருக்கிறார் சூரியகுமார். இந்த மோசடி கும்பலிடம் சிக்கிய சம்பவத்தை நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
வேலைவாய்ப்பு விளம்பரங்கள்!
“படித்து முடித்துவிட்டு, வேலை கிடைக்காத காரணத்தினால் நம்பிக்கை இழந்திருந்த எனக்கு, கடந்த அக்டோபர் மாதத்தில் வேலைவாய்ப்புக் கான அந்த விளம்பரம் என் கண்ணில்பட்டது.  நம்பகத்தன்மையான வேலைவாய்ப்பு வலைதளத்தில் விளம்பரம் வந்திருந்ததால், அதில் குறிப்பிட்டிருந்த நபரைத் தொடர்பு கொண்டேன். அவர் ஒரு பிரபல தொழிற்சாலையில் மனிதவள மேலாளர் என்று தன்னை சொல்லிக் கொண்டார். எனக்கு வேலை கிடைக்க உதவுவதாகவும், வேலை கிடைத்தப்பின் நான் அவருக்கு 2 லட்சம் ருபாய்த் தரும்படியும் கேட்டார். கடந்த ஆறு மாதங்களாக வேலை தேடி மிகவும் அவதிப் பட்டதால், பணம் கொடுத்து வேலை வாங்குவதில் விருப்பம் இல்லாதபோதும் வேறு வழி இல்லாததால் ஒப்புக்கொண்டேன்.
இரண்டு லட்சம் பணம்!
அவர் சொன்ன பெயரில் நிஜமாகவே ஒரு பெரிய நிறுவனம் இருந்தது. அந்த நிறுவனத்தின் மின்னஞ்சல் போலவே, ஒரு மின்னஞ்சலில் இருந்து என்னைத் தொடர்புகொண்டனர். தொலைபேசி மூலம் இன்டர்வியூ நடத்தப்பட்டது. அந்த இன்டர்வியூவிலேயே துறை சார்ந்த கேள்விகளை கேட்டு  என்னைத் திக்குமுக்காட வைத்தார்கள்.  
சில நாள் கழித்து, நான் அந்த இன்டர்வியூவில் தேர்ச்சியும் பெற்றதாகச் சொன்னார்கள். ஆனால், நேரில் பார்க்காமல் வேலைக்கான அப்பாயின் மென்ட் ஆர்டரை தரமுடியாது என்பதால் என்னை டெல்லிக்கு அழைத்தனர். டெல்லியில் அப்பாயின்மென்ட் ஆர்டர் வாங்கியவுடன் பேசியபடி பணத்தைத் தரவேண்டும் என்று கேட்டனர்.
கடைசி நேரத்தில்..!
டெல்லியில் அந்த நிறுவனத்தின் வாசலில் ஒரு பெண் என்னைச் சந்தித்தார். நிறுவனத்துக்குள் என்னை வரச் சொல்லாமல், வெளியில் சந்தித்ததால் எனக்குச் சந்தேகம் வந்தது. அவரைச் சந்தித்த சிறிது நேரத்தில் அவர்கள் வழங்குவதாகச் சொல்லியிருந்த அப்பாயின்மென்ட் ஆர்டர் என் மின்னஞ்சலுக்கு வந்தது. பேசியபடி பணத்தைத் தர டெல்லியிலுள்ள ஒரு இடத்துக்கு  வரும்படி அழைத்தனர். என் சந்தேகம் வலுவடைந்ததால், முதல் வேலையாக  செல்போனை அணைத்து விட்டு சென்னைக்குத் திரும்பிவிட்டேன்.
சிக்கியவர்கள் பலர்!
ஒரு மாதத்துக்குப் பிறகு ஃபேஸ்புக் மூலம் கிடைத்த தகவலின்படி, அந்த மோசடிக் கும்பல் 12 பட்டதாரிகளை ஏமாற்றியுள்ளதாகச் செய்தி கிடைத்தது. டெல்லியில் என்னைச் சந்தித்த பெண்ணின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, அந்த மோசடிக் கும்பலைப் பற்றி எழுதியிருந்தேன். அதைப் பார்த்த ஒரு நண்பர் சமீபத்தில் என்னைத் தொடர்புகொண்டார். அவரும், அவரது நண்பர்கள் ஐந்து பேரும் அதே மோசடிக் கும்பலிடம் வேறு ஒரு நிறுவனத்தின் பெயரில் ரூ.12.5 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார்கள். அதே மோசடிக் கும்பல் தொடர்ந்து இதேபோன்ற நூதன மோசடி வேலைகளில் ஈடுபட்டு வேலை தேடும் பட்டதாரி களின் வாழ்கையில் விளையாடி வருகின்றனர். வேலை தேடும் பட்டதாரி இளைஞர்கள், இதுமாதிரியான மோசடிக் கும்பலிடம் சிக்காமல் உஷாராக இருக்க வேண்டும். இந்த மாதிரியான மோசடிக் கும்பலிடம் இருந்து பட்டதாரிகளைக் காக்க அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிற கோரிக்கையுடன் முடித்தார் சூரியகுமார்.
இளைஞர்கள் கவனிக்க!
இதுபோன்ற நூதனமான வேலை மோசடியில் சிக்காமல் இருக்க எந்தெந்த விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று சென்னையிலுள்ள மனிதவள மறுமலர்ச்சி மையத்தின் இயக்குநர் மற்றும் மனிதவள ஆலோசகர் கே.ஜாபர் அலியிடம் பேசினோம்.
“ஒரு இளைஞன் பணம் கொடுத்து வேலை வாங்க முடிவெடுத்துவிட்டால், அவன் ஏமாறத் தயாராகிவிட்டான் என்று அர்த்தம். தனது திறமையை, அறிவைக் கொண்டுதான் வேலையைத் தனதாக்க வேண்டுமே தவிர, எந்தவொரு சூழ்நிலையிலும் இதுபோன்ற காரியங்களில் இளைஞர்கள் இறங்கவே கூடாது.
இன்றைய இளைஞர்கள்  பலவிதமான நூதன வேலை மோசடிகளைக் கவனிக்க வேண்டும்.
ஏமாற்றும் விதம்!
1. இல்லாத நிறுவனம், அங்கு வேலை செய்யாதவர்கள், அந்த நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி.
2. இருக்கும் நிறுவனம், அங்கு வேலை செய்பவர்கள், இல்லாத வேலையை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி.
3. இருக்கும் நிறுவனம், அங்கு வேலை செய்பவர்கள் இருக்கும் வேலையை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி. ஆனால், இவர்கள் பலே கில்லாடிகளாக இருப்பார்கள். அவர்கள் சொன்னபடி வேலையையும் வாங்கித் தருவார்கள். ஆனால், அந்த வேலையானது ஓரிரு மாதங்கள்கூட இருக்காது அல்லது அங்கு ஓரிரு மாதங்கள்கூட ஒருவரால் தாக்கு பிடிக்க முடியாது.
4. பணம் வாங்கிப் பயிற்சி தந்துவிட்டு, அதன்பிறகு வேலை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி.
5. புதிய நிறுவனங்களை ஆரம்பிப்பவர் கள் வேலை கொடுப்பதாகத் தரும் வாக்குறுதி. இவர்கள், “நாங்கள் புதிதாக நிறுவனம் ஆரம்பித்திருக்கிறோம். எங்களால் குறிப்பிட்ட தொகையை மட்டுமே முதலீடு செய்ய முடிந்தது. மீதித் தொகையை இந்த நிறுவனத்தில் வேலை செய்யத் தயாராக இருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளலாம். நிச்சயமாக வேலை நிரந்தரமாகும்” என்பார்கள். இவர்களின் ஒரேநோக்கம் பணமாக மட்டுமே இருக்கும்.
முதலில், எந்தவொரு நிறுவனமும் ஆட்களை நேரில் பார்க்காமல் தொலைபேசி இன்டர்வியூ எடுத்து பணியாளர்களைத் தேர்வு செய்ய மாட்டார்கள். அதுபோல, வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்கிறவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் மையம் அமைத்து அங்குதான் தேர்வு செய்வார் களே தவிர, பொது இடங்களுக்கு மாணவர்களை வரவைத்து இன்டர்வியூ நடத்த மாட்டார்கள். இதை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் மற்றும் எம்பிஏ முடிக்கும் மாணவர்களில் 15% பேர் மட்டுமே உடனடியாக வேலை செய்வதற்குத் தகுதியானவர் களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கல்லூரிக்குள் நடத்தும் கேம்பஸ் இன்டர்வியூக்களில் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். மீதி இருக்கும் வேலையில்லா பட்டதாரிகளுக்குத்தான் ஏமாற்று நிறுவனங்கள் வலைவிரிக்கின்றன.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் வேலை!
வேலைக்காகப் பணத்தைக் கொடுத்து ஏமாற்றத்தைச் சந்திப்பவர்களில் பெரும்பாலும் சமூகத்தினால் உண்டாகும் மன அழுத்தத்தால், ஏதேனும் ஒருவேலை கிடைத்தால் போதும் என்று நினைத்து, சிக்கலில் சிக்கிக் கொண்டவர்களாகவே  இருப்பார்கள். இன்றைய இளைஞர்கள் செய்யும் பெரிய தவறு, பணம் கொடுத்தாவது பெரிய நிறுவனத்தில் அதிகச் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும் என்று முனைவதுதான். இன்றைய நிலையில் தரமான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இவர்களுக்குப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இதுபோன்ற நிறுவனங்கள் தன்னைத் தேடிவரும் திறமையாளனை தவறவிடுவதே கிடையாது. அதே சமயம், தானாகத் தேடிப் போய்த் திறமையாளர் களை அழைத்து வருவதும் கிடையாது. அதனால், அதிக சம்பளம், பிரபலமான நிறுவனம் என்று மட்டும் வேலை தேடாமல் ஆரம்பத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் சேர்ந்து அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு சில ஆண்டு களுக்குப் பிறகு அதிக சம்பளத்துக்காக வேலையை மாற்றிக்கொள்வதே புத்திசாலித்தனம்.

இதை விடுத்து பணத்தைக் கொடுத்து வேலைக்குச் சேர முயற்சித்தால், வேலையில்லா பட்டதாரியாகவே நிற்கவேண்டும். தவிர, பணத்தைத் தந்து வேலை வாங்கும் பணியாளரிடம் சுயமதிப்பு என்பதும், தன்னம்பிக்கை என்பதும் இல்லாமல் போய்விடும். இந்த நிலையானது தொடரும்பட்சத்தில் வேலையிலாகட்டும், பொது வாழ்க்கையில் ஆகட்டும், வெற்றியைத் தனதாக்கிக் கொள்ளவே முடியாது” என்றார்.
மோசடி நிறுவனங்கள் தீவிரமாக வலைவிரித்து அலையும் இந்தக் காலத்தில் எச்சரிக்கை அவசியம் இளைஞர்களே!
விசாரித்த பிறகு களமிறங்குங்கள்!
வேலை வாங்கித் தருவதாக சொல்லும் மோசடி நிறுவனங்கள் பற்றி சைபர் கிரைம் வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘இன்றைய நிலையில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களைக் குறிவைத்து பெரும்பாலான ஏமாற்று நிறுவனங்கள் முளைத்து வருகின்றன.இதைக் களைவதற்கான நடவடிக்கைகளை சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து எடுத்துவருகிறது. இதுமாதிரியான மோசடி நிறுவனங்களிடம் சிக்காமல், இன்றைய இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேலை கிடைக்கவில்லை என்பதற்காக பணம் கொடுத்து வேலைக்குச் செல்லலாம் என்கிற மனநிலைக்கு வரவேண்டாம்.

இன்றைய நிலையில் பேருந்துகள், ரயில் வண்டிகள் எனப் பல இடங்களில் வேலைக்கான விளம்பரங்களைப் பார்க்கிறோம். இதைப் பார்த்ததும் நாம் நம்பிவிடுகிறோமா என்ன? அதுபோல, நம்பகத்தன்மையான வலைதளங்கள், நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் வேலைக்கான விளம்பரங்களைப் பார்த்தாலும் அதுகுறித்து முழுமையாக விசாரித்து, அதில் உண்மைத்தன்மை இருக்கும்போது அதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. வேலைகான வாய்ப்புகளை அந்தந்த நிறுவனங்களின் வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்களா என்பதையும் பார்ப்பது அவசியமாகும். மேலும், வேலை மோசடி குறித்த புகார்களுக்கு சென்னை எழும்பூரிலுள்ள மத்திய க்ரைம் குற்றப்பிரிவு கிளையை அணுகலாம்” என்றனர்.

பதவி உயர்வுக்குப் பிறகு... உங்களைப் பட்டை தீட்டும் 10 பாடங்கள்!

ரு நிறுவனத்தில் மிக முக்கியமான பதவி வகிக்கும் ஒருவர் அந்த வேலையைவிட்டுச் சென்றுவிட்டால், அவரது இடத்துக்கு மற்றொரு சரியான நபரை நிறுவனம் தேர்ந்தெடுக்கும். ஒன்று, நிறுவனத்திலிருந்தே ஒருவரை பதவி உயர்வு அளித்து அந்தப் பதவிக்குத் தேர்வு செய்யலாம்; அல்லது தகுதிகளை ஆராய்ந்து வெளியிலிருந்து நேரடியாக ஒருவரை அந்தப் பதவியில் நியமிக்கலாம். அப்படியொரு  சூழலில் உங்களுக்கு அந்தப் பதவி கிடைக்கிறது எனில், உங்களை அந்தப் பதவியில் கச்சிதமாகப் பொருத்திக்கொள்ள சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொண்டாக வேண்டும். அவற்றில் முக்கியமான 10 பாடங்கள் இதோ...
1. நிலைமையைப் புரிந்து கொள்ளுங்கள்!

உங்களிடம் தரப்பட்டுள்ள டிபார்ட்மென்ட் எப்படி இதுவரை செயல்பட்டு வந்துள்ளது; அதன் செயல்பாடுகள் கடந்த ஆறு மாதங்களில் எப்படி இருந்துள்ளது; அவை சிறப்பான செயல்பாடாக இருந்துள்ளதா அல்லது அதன் இலக்கு அடையப்படாமல் உள்ளதா என்பதைக் கவனியுங்கள்.
 தற்போது அந்தப் பிரிவு உள்ள நிலையில் இருந்து அதனை மீட்க வேண்டுமா, அல்லது தற்போது உள்ள நிலையில் இருந்து மேம்படுத்தபட வேண்டுமா என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள்.
2 . திட்டமிடுங்கள்!
உங்களுக்குத் தரப்பட்ட வேலை என்ன, நீங்கள் ஏற்கெனவே செய்த வேலையிலிருந்து இது எவ்வாறு வேறுபட்டுள்ளது, முன்பு இருந்ததைவிட இப்போது என்னவிதமான பொறுப்பு கள் அதிகரித்துள்ளன என்பதையெல்லாம் பட்டியலிடுங்கள்.
 அடுத்தடுத்துச் செய்யவேண்டியவை என்னென்ன என்று வரிசைப்படுத்துங்கள். அதனைச் சரியாகத் திட்டமிட்டுச் செய்யுங்கள். அப்படிச் செய்யும்போது உங்கள் இலக்குகளைக் குறுகிய கால இலக்குகளாக நிர்ணயித்து, அதற்கேற்ப திட்டமிட்டுச் செயல்களை நடை முறைப்படுத்த வேண்டும்.
3 . உங்களை நிரூபிக்கத் தவறாதீர்கள்!
புதிதாக வழங்கப்பட்ட பதவியில் ஏற்கெனவே இருந்தவர் நன்றாகச் செயல்படவில்லை என்றால், நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டு உங்கள் திறமையை நிரூபித்துவிடலாம். ஆனால், அவர் செய்திருந்தால், அதனை அப்படியே நீங்கள் தொடர்வதை சில நேரங்களில் நிர்வாகம் விரும்பாது. அதற்கு நீங்கள் உங்களது திறமையை நிரூபிக்கும்படியான, நிர்வாகத்துக்குப் பலனளிக்கக்கூடிய ஒரு மாற்றத்தை  ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே உள்ளதிலிருந்து புதுமையானதாக இருக்க வேண்டும். இப்படி உங்களை நிரூபிக்கத் தவறுகிறபோது, அவர் செய்ததைதானே இவரும் செய்கிறார் என்ற எண்ணம் நிர்வாகத்துக்குத் தோன்றிவிடும்.
4 . இலக்குகளை நிர்ணயுங்கள்!
உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வேலையில் என்னமாதிரியான சிரமங்கள் உள்ளன என்பதைப் பொறுத்து, அதற்கான இலக்குகளை உருவாக்குங்கள். அதனை அடையும் திட்டத்தை உங்களுக்கு அளிக்கப் பட்டுள்ள குழுவுக்கு விளக்குங்கள். அவர்கள் அதில் எந்த அளவுக்கு நம்பிக்கையாக உள்ளார்கள் என்பதைப் பார்த்து அவர்களை ஊக்குவியுங்கள். அவர்களைக் குறிப்பிட்ட நாட்களுக்குள் உங்களது இலக்கை நோக்கி திருப்ப வேண்டும் என்பதைக்கூட ஒரு இலக்காகக் கொண்டு செயல்படுங்கள்.
5 . குழுக்களைச் சமாளியுங்கள்!
உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வேலையைச் செய்ய உங்களிடம் ஒரு குழு அளிக்கப்பட்டிருக்கும். அந்தக் குழுவில் உள்ளவர்கள் ஏற்கெனவே உள்ள தலைமையின் கீழ் வேலை செய்திருப்பார்கள். அவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சில சமயங்களில் நாம் கவனித்து இருப்போம்; கிரிக்கெட்டில் ஒரு கேப்டன் பதவி விலகி, புதிய கேப்டன் நியமிக்கப்பட்டதும் அந்த அணியில் செயல்பாடு சற்று குறைந்து காணப்படும். அதற்குக் காரணம், குழுவில் உள்ள சிலரது மனநிலையே. இதேபோல், புதிதாக உங்கள் தலைமையில் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களை அதற்கேற்றவாறு சமாளியுங்கள்.
6 . அமைப்புகளைக் கவனியுங்கள்!

வேலை அமைப்பு எப்படி உள்ளது என்பதைப் பாருங்கள். அது சரியாக அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட்டுள் ளதா, இல்லையெனில் யாருக்கு என்ன வேலை, அதனைச் செய்ய அவர்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள், செயல்பாடுகள் என்னென்ன என்பதைத் தெளிவாக விளக்குங்கள். அவர்களுக்கான வேலைகளை ஒழுங்கு படுத்துங்கள். இதனைச் சரியாகச் செய்தாலே இலக்குகளை எளிதாக அடைவார்கள்.
7. மதிப்பீடு அவசியம்!
இதுவரை நடத்துவந்த வேலை யின் அளவு, அது முடிக்க எடுக்கப்பட்ட காலம், அப்போது குழுவின் செயல்திறன் ஆகிவற்றைக் கணக்கில்கொண்டு அதனைவிடச் சிறப்பாகச் செயல்படுங்கள். அப்போது ஓரிரு மாதங்களில் ஏற்கெனவே உள்ள மதிப்புகளோடு, உங்கள் திறனை மதிப்பீடு செய்துபாருங் கள். அது கட்டாயம் வளர்ச்சியில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், உங்களது வேலை சரியாக உள்ளது என்பதை நீங்கள் அறியலாம்.
8 . அப்டேட் ஆகுங்கள்!
முன்பு நீங்கள் இருந்த வேலையோ அல்லது பதவியோ தற்போது உள்ளதிலிருந்து கீழ் நிலையே. அந்த நிலையில் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஏனெனில், உங்களுக்கு உயர்பதவியில் இருப்பவர் அதனைச் சரிசெய்துகொள்வார் என்ற ரிஸ்க் இல்லா சூழலில் இருந்திருப்பீர்கள். ஆனால், தற்போது உங்களுக்குக் கீழ் உள்ளவர்களின் தவறைத் திருத்தும் சூழல் உங்களுக்கு இருக்கும் என்பதால், அதற்கேற்ப நீங்கள் அப்டேட் ஆக வேண்டியதும் அவசியம்.
9 . கலாசாரத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!
மேலாண்மைப் பாடங்களில் ஆர்கனைசேஷனல் கல்ச்சர் என்ற ஒரு பிரிவு உண்டு. அதாவது, ஒவ்வொரு நிர்வாகமும் ஒரு கலாசார அடிப்படையில் செயல்படும். அப்படிப் பார்க்கும்போது, உங்கள் நிர்வாகம் எந்தமாதிரியான கலாசாரத்தைப் பின்பற்றுகிறது என்று பாருங்கள். நீங்கள் ஏற்கெனவே பணிபுரிந்த நிறுவனத்தோடு இதனை ஒப்பிட்டுப் பார்த்து அதற்கேற்றவாறு உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் அதே நிறுவனத்தில்தான் இருந்தீர்கள் என்றாலும்கூட உங்களது முந்தைய நிலைக்கும், பதவி உயர்வு அடைந்துள்ள நிலைக்கும்கூட கலாசார மாறுபாடு இருக்கும். அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.
10 . அனுபவத்தைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்!
உங்களுக்கு முன்பிலிருந்தே அந்த நிறுவனத்தில் வேலையில் இருந்த ஒருவரிடமோ அல்லது அந்த நிறுவனத்தில் உயர்பதவி களில் உள்ளவரிடமோ அந்த நிறுவனத்தின் தன்மை என்ன, உங்களது பிரிவு  வேறு எந்தெந்த பிரிவுகளோடு தொடர்பில் இருக்க வேண்டும்; இதன் வாடிக்கையாளர்கள் யார்; இந்த நிறுவனம் மக்கள் மத்தியில் என்ன நிலையில் உள்ளது; உங்கள் பிரிவின் வேலை, நிறுவனத்தில் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதையெல்லாம் கேட்டு தெரிந்துகொள்வது அவசியம். நிறுவனத்தின் தன்மை செயல்பாடுகளுக்கு ஏற்ப உங்கள் வேலையில் உங்கள் ஆளுமையைக் காட்டுங்கள். அவர்களது அனுபவங்கள் நீங்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்பதை உங்களுக்கு உணர்த்தும்.

கல்விக் கடன் வசூலிக்கப் புதிய திட்டம்!


இந்தியாவில் கடந்த டிசம்பர் 31 வரை வழங்கப்பட்டுள்ள கல்விக் கடன் சுமார் ரூ.70,000 கோடி. இதனை வசூலிக்க, கல்விக் கடன் குறித்த விவரங்களை கேம்பஸ் பிளேஸ்மென்ட் தகவலுடன் இணைத்தால், கடனை திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதம் அதிகரிக்கும் என அரசாங்கம் யோசித்து வருகிறது. கேம்பஸ் இன்டர்வியூவில் வேலைக்குச் செல்லும் சூழல் உள்ளதால், கல்விக் கடன் வாராக்கடனாக மாறுவது குறையும் என எதிர்பார்க்கிறது அரசாங்கம்.


27 Mar 2015

இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை!

தேர்தலில் லஞ்சம், ஊழலை தடுக்க பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேர்தல் முறைகேடுகளை முதலில் ஒழித்தாலே இந்தியா வல்லரசாகிவிடும் என்றும் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் 100 சதவிகிதம் பிழையில்லாமல் இருப்பதற்காக, வாக்காளர்களின் ஆதார் எண், தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள், இ-மெயில் முகவரி ஆகியவைகளை வாக்காளர்களின் அடையாள விவரங்களுடன் சேர்க்கும் திட்டத்தை நேற்று முதல் செயல்படுத்தி வருவதாகவும், அதற்காக தமிழகத்தில் வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி அதிகாரிகள் வாக்காளர்களின் முழு விவரங்களை சேகரிக்கிறார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். இது மிகவும் வரவேற்கத்தக்க சிறப்பான திட்டமாகும்.


இதனால் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ள போலி வாக்காளர்கள் அடியோடு நீக்கப்படுவார்கள் என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தேர்தல் முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்று முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தான் ஓய்வு பெற்ற பிறகு தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக ஏற்கனவே பணியாற்றியவரும், வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியவில்லை என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டபடி லஞ்சம் வாங்குவது குற்றம், அதை கொடுப்பதும் குற்றம். ஆனால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பணம் கொடுத்து வாக்காளர்களிடம் வாக்குகளை பெறும் போக்கு தமிழத்தில் புற்றுநோயை போல பரவியுள்ளது.

வாக்களிக்க பணம் பெறுவது மக்களின் அடிப்படை உரிமை என்பதை போன்ற மனநிலையை தமிழக மக்களிடம் உருவாக்கிவிட்டார்கள். ஆளும் கட்சியினர் அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற அனைத்து அலுவலர்களையும் மற்றும் காவல் துறையையும் கையிலே வைத்துக் கொண்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவசமாக பரிசு பொருட்கள் வழங்குதல், தேர்தலில் அதிக செலவு செய்தல், வாக்களர்களை தங்களுக்கு வாக்களிக்க கட்டாயப்படுத்துதல், அராஜகம் மற்றும் வன்முறையில் ஈடுபடுதல் என தங்களுக்கு சாதகமான நிலையை தேர்தல் நடைபெறும் போது உருவாக்கி கொள்கிறார்கள்.

மேலும் இடைத்தேர்தல் என்றால் இச்செயல்கள் பலமடங்கு அதிகரிக்கும். எனவே இதுபோன்ற முறைகேடுகளை தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வீடு வீடாக செல்லும் வாக்குச்சாவடி அதிகாரிகள் பொது மக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.


சிங்கப்பூரை ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைபெற வைத்து சுமார் முப்பது ஆண்டுகாலம் பிரதமராக இருந்து தற்போது மறைந்த திரு.லீ குவான் யூ அவர்கள் லஞ்சம், ஊழல், தேர்தல் முறைகேடு என எதுவும் இல்லாமல் தொடர்ந்து ஆட்சியில் இருந்து, சிங்கப்பூர் தேசத்தை உருவாக்கி அந்நாட்டு மக்களால் தேசத்தந்தை எனப் போற்றப்பட்டவர். சிங்கப்பூரில் லஞ்சம், ஊழல் தலையெடுத்தால் நான் மீண்டும் வருவேன் என சொல்லி மறைந்துள்ளார்.

நேர்மையான மக்கள் தலைவராக இருந்ததால்தான் சிங்கப்பூர் உலகமே வியக்கும் நாடாக மாறியுள்ளது. அதுபோல் இந்தியாவும் மாறவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு இந்தியனின் கனவாக உள்ளது. இந்தியா வல்லரசாக வேண்டுமானால் தேர்தல் முறைகேடுகளை முதலில் ஒழித்தாலே வல்லரசாகிவிடும்" எனக் கூறியுள்ளார்.


“பெரிய ஹீரோக்களோடு நடிக்க நேரமில்லை!”

‘மேகா’, ‘டார்லிங்’, ‘எனக்குள் ஒருவன்’ படங்களைத் தொடர்ந்து செம பிஸி சிருஷ்டி டாங்கே. இந்த நேரத்தில் சிருஷ்டியின் கிளுகிளுப்பான ஸ்டில்களுடன் ‘ஒரு நொடியில்’ என்ற பட ஸ்டில்களும் வெளியாகியுள்ளன. சிருஷ்டியிடம் கொஞ்சம் பேச்சு!
‘‘ நடிச்சா, ஹீரோயின்தானா?”

“அறிமுகமாகும்போது கெஸ்ட் ரோல் பண்றது நல்லதுதான். அப்போதான் ஹீரோயினா நடிக்கும்போது தயக்கம் இருக்காது. என்னுடைய முதல் படம் மிஷ்கின் சாரோட ‘யுத்தம் செய்’. அந்தப் படத்துல நடிக்கும்போது சினிமாவில் நடிச்சா போதும்கிற மனநிலையில் இருந்தேன். இப்போதான் சினிமா தெளிவா புரியுது. ‘அச்சமின்றி’, ‘கத்துக்குட்டி’, ‘வருஷநாடு’, மா.கா.பா ஆனந்த் ஹீரோவா நடிக்கிற ஒரு படம், தவிர, தெலுங்கில் ஒரு படம்னு தொடந்து நல்ல வாய்ப்புகள். அடுத்தடுத்து இந்த அழகான ராட்சஸியை ரசிச்சுக்கிட்டே இருக்கலாம்.”
‘‘ ‘ஒரு நொடியில்’ படத்துல...” (கேள்வியை முடிக்கும் முன்பே...)
‘‘அதைப்பத்தி எனக்கு எதுவும் தெரியாது. பேசவும் விரும்பலை. ஆறு வருஷம் முன்னாடி நடிச்ச படம். இப்போ ஏன் தூசு தட்டியிருக் காங்கனு தெரியலை. இது எல்லா நடிகைக்கும் நடக்கிற விஷயம்தானே? இது என் வளர்ச்சி பிடிக்காம யாரோ பண்ற வேலையும் கிடையாது. இதனால எனக்கு கிடைக்கிற நல்ல வாய்ப்புகள் கிடைக்காமலும் போகாது.”
‘‘பெரிய ஹீரோக் களோட நடிக்கணும்னு சொல்லி யிருந்தீங்க. அதுக்கான முயற்சிகளை ஆரம்பிச்சாச்சா?”
“எங்கே... நேரமே இல்லை. இதுவரை கமிட் ஆகியிருக்கிற படங்களையே எப்போடா முடிச்சுக் கொடுக்கிற துனு இருக்கு. அதுக்காக எந்த வாய்ப்பையும் மிஸ் பண்ணிட மாட்டேன். எனக்கு அஜித் சாருடன் ஒரு படத்துலயாவது நடிச்சுடணும். மத்தபடி எது எது எப்பப்போ நடக்கணுமோ... அப்போ நடக்கும். அவ்ளோதான்.”
‘‘ 2015 உங்க கேரியர்லேயே ரொம்ப ஸ்பெஷல்தானே?”
‘‘கண்டிப்பா. ‘டார்லிங்’, ‘எனக்குள் ஒருவன்’ ரெண்டு படம் ரிலீஸ் ஆகிடுச்சு. நாலு தமிழ் படத்துல நடிச்சு முடிச்சிட்டேன். ரெண்டு படத்துல நடிச்சுட்டு இருக்கேன். என்னுடைய கடின முயற்சியினால மட்டுமில்ல, தமிழ் ரசிகர்களோட ஆதரவினால கிடைச்ச பரிசு இது. இத்தனை பேர் என்னை ரசிக்கிறாங்களானு எனக்கே ஆச்சரியமா இருக்கு.”
‘‘கன்னக்குழி அழகினு பல பேர் சொல்லியிருப்பாங்க. பிரபலங்கள் யாராவது கமென்ட் கொடுத்தாங்களா?”

‘‘ ‘டார்லிங்’ படத்துல நடிக்கும்போது காமெடி நடிகர் கருணாஸ் சார் ‘இப்போ இருக்கிற தமிழ் சினிமா நடிகைகள்ல கன்னத்துல குழி விழுற நடிகை நீங்கதான். நல்லா வருவீங்க’னு சொன்னார்.’’  
‘‘இதுவரை யாருமே ஐ லவ் யூ சொன்னதில்லையாமே? நம்பலாமா?”
‘‘உங்க மேல சத்தியமா இல்லைங்க. எல்லோரும் இந்தக் கேள்வியை மறக்காம கேட்கிறீங்க. என்னைப் பார்த்தா பாவமா இல்லையா உங்களுக்கு?’’


இதுதான் கடைசி உலகக்கோப்பை போட்டியா? - தோனி பதில்

எனக்கு இப்போது 33 வயதுதான் ஆகிறது. அந்தப் போட்டித் தொடர் முடிந்த பிறகு  2019 உலகக்கோப்பை போட்டி குறித்து யோசிக்கலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

உல கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியாவும்-ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் இந்தியா தோல்வி அடைந்தது.


இதன் பிறகு இந்திய அணியின் கேப்டன் தோனி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஆஸ்திரேலியா 350 ரன்கள் வரை எடுக்கும் சூழ்நிலை இருந்தது. ஆனால், நாங்கள் அதை கட்டுப்படுத்தினோம். 300 ரன்களுக்கும் மேலான இலக்கை துரத்துவது என்பது கடினமானதுதான்.

உலகக் கோப்பையில் எங்கள் அணியின் ஆட்டம் திருப்தி அளிக்கக் கூடியதாக இருந்தது. உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கும்போது, இந்த அணியின் மீது பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

ரஹானே இந்தத் தொடரில் முன்னேற்றம் அடைந்த ஒரு வீரர் என்று நிச்சயம் கூற வேண்டும். டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் என்று அவர் நல்ல மேம்பாடு அடைந்துள்ளார்.

ரசிகர்களுக்கு நான் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். இந்தியாவிலிருந்தும், ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலிருந்தும் போட்டிகளுக்கு நேரில் வந்து ஆதரவு அளித்துள்ளனர். எங்களுடன் பயணித்த ரசிகர்களுக்கு நன்றி. ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும்” என்றார். 

‘இதுதான் உங்களது கடைசி உலகக்கோப்பையா?’ என்று கேட்டதற்கு, ''எனக்கு இப்போது 33 வயதுதான் ஆகிறது. நல்ல உடல்தகுதியுடன் இருப்பதோடு, நன்றாக விளையாடியும் வருகிறேன்.


அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளது. அந்தப் போட்டித் தொடர் முடிந்த பிறகு  2019 உலகக்கோப்பை போட்டி குறித்து யோசிக்கலாம். இப்போதைக்கு எதுவும் கூற முடியாது'' என்றார்.

நீங்களும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகலாம்! வழிகாட்டுகிறார் நட்ராஜ் ஐ.பி.எஸ்.

மிழக காவல் துறையில் அடுத்த தலைமுறை தயாராகிக் கொண்டிருக்கிறது!
1,078 சப்-இன்ஸ்பெக்டர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வந்ததும் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்காகத் தயாராகிக்கொண்டிருக்கும் வருங்கால சப்இன்ஸ்பெக்டர்களுக்கு ஆலோசனை சொல்கிறார் தமிழக முன்னாள் போலீஸ் டி.ஜி.பியும், டி.என்.பி.எஸ்.சி முன்னாள் தலை​வருமான நட்ராஜ்.
''எழுத்துத் தேர்வு, மொத்த மதிப்பெண்களில், குறைந்தபட்ச கட்ஆஃப் 35 சதவிகிதம் என்று நிர்ணயிக்கப்​பட்டுள்ளது. அதாவது, 35 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களில் இருந்து  இடஒதுக்கீடு அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுவர். அதன் பிறகு, உடற்கூறு அளத்தல், உடல்தகுதி தேர்வு, உடல்திறன் போட்டிகள் ஆகியவற்றுக்கு அழைக்கப்படுவார்கள். உடல்திறன் தேர்வுகள் முடிந்த பிறகு 1:2 எண்ணிக்கையில் நேர்காணல் உண்டு.

பொதுப் பிரிவில் எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 70 மார்க். உடல்திறன் போட்டிக்கு 15 மார்க். ஸ்பெஷல் மார்க் 5 (என்.சி.சி 2, என்.எஸ்.எஸ் 1, ஸ்போர்ட்ஸ் 2 ), நேர்காணலுக்கு 10 என்று மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. காவல் துறை ஒதுக்கீட்டில் எழுத்துத் தேர்வுக்கு 85 மார்க். ஸ்பெஷல் மார்க் 5 (தேசிய அளவில் காவல் துறையினருக்கான பணித்திறன் போட்டிகளில் தங்கப் பதக்கம் 5 மார்க், வெள்ளிப் பதக்கம் 3 மார்க், வெண்கலப் பதக்கம் 2 மார்க்), நேர்காணலில் 10 மதிப்பெண் என்று மொத்தம் 100 மார்க். எனவே, எழுத்துத் தேர்வில் கூடுதல்  மதிப்பெண் எடுத்தால்தான் அடுத்தகட்டத் தேர்வுக்குச் செல்ல முடியும். அதேநேரத்தில் எழுத்துத் தேர்வில் அதிக மார்க் எடுத்திருந்தால் உடல்திறன் தேர்விலும் நேர்காணலிலும் மார்க் குறைந்தாலும் சரிக்கட்ட முடியும். எனவே, முதலில் நடைபெறும் எழுத்துத் தேர்வு மிகவும் முக்கியமானது' என்று சொன்னவர், ''தேர்வு பாடத்திட்டம் பட்டப்படிப்பு தரத்தில் இருக்கும் என்றாலும் ப்ளஸ் டூ தரத்தில்தான் தேர்வுக்கான பாடத்திட்டத்தை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்​வாணையம் கொடுத்​துள்ளது. எனவே, ப்ளஸ் டூ தரத்​தில் படித்தால் போதும். தேர்வுக்குக் கொடுக்​கப்பட்டுள்ள பாடத்​திட்​டங்களை பள்ளிப் பாடப் புத்தகங்களில் இருந்து தலைப்பு வாரியாக குறிப்பு எடுத்துப் படிக்க வேண்டும். உதாரணமாக அறிவியல் பாடத்திட்டம், 'அறிவியல் விதிகள், அறிவியல் கருவிகள், புதுப்புனைவுகளும் கண்டு​பிடிப்புகளும், விஞ்​ஞானிகளின் பங்களிப்பு, மனித உடற்செயலியல், நோய்கள், நோய்களுக்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள், உணவும் சமச்சீரான உணவும், மனித மரபியல், விலங்குகள் மற்றும் பறவைகள், சுற்றுச்சூழலும் வாழிடமும், தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள்  காரங்கள், உப்புகள், இயக்கம்  நியூட்டனின் இயக்க விதிகள், பருப்பொருள் மற்றும் மின்னியலின் இயல்புகள், தேசிய ஆராய்ச்சி நிலையங்கள்’ என்ற தலைப்பில் பாடத்திட்டம் தரப்பட்டுள்ளது. அந்தத் தலைப்புகளில் உள்ளவற்றை கருத்தூன்றி படித்தால் போதுமானது.  
காவல் துறை ஒதுக்கீட்டில் தேர்வு எழுதுகிறவர்களுக்குப் பொது அறிவு வினாத்​தாளும் உண்டு. பொதுப்பிரிவில் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதே பாடத்திட்டம்தான் காவல் துறை ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு எழுதுவோருக்கும் தரப்பட்டுள்ளது. கூடுதலாக அவர்கள், காவல் நிலைய ஆணைகள், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சிய சட்டம், போலீஸ் நிர்வாகம் ஆகியவற்றைப் படிக்க வேண்டும்.
அன்​றாடம், காவல் நிலையங்களில் செயல்​முறைகளில் இருக்கும் காவல் நிலை ஆணைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, காவல் நிலை ஆணை 151 என்பது என்ன சொல்கிறது என்றால், 'காவல் துறையினர் சித்ரவதை செய்ததாக அல்லது மரணம் விளைவித்ததாக அல்லது கொடுங்காயம் ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகளின் பேரில் நடைமுறை’ என்பதை விவரிக்கிறது. சட்டப் பாடங்களில் காவல் துறை சார்ந்த விஷயங்கள் தெரிந்திருந்தால் போதுமானது.  
மேலும், சப்இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு என்று வந்துள்ள நோட்ஸ்களில் முந்தைய தேர்வுகளின் வினா  விடைகளைக் கொடுத்திருப்பார்கள். வினாக்களின் அமைப்பு, எந்தெந்த பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, கேள்விகள் எப்படி கேட்கப்படுகின்றன என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள இது உதவும். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால்தான் அடுத்தகட்டத்துக்குப் போக முடியும். சிலருக்கு உயரம், மார்பளவு விரிவு செய்தல் போன்றவற்றில் சிறிய அளவில் குறைபாடு இருந்தால் முறையான உடற்பயிற்சி மூலம் அதைச் சரிசெய்து விடலாம். எனவே, அதைப் பற்றி இப்போது கவலைப்படாமல் எழுத்துத் தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஹால் டிக்கெட் வந்த பிறகு முதல் நாளே தேர்வு மையத்தைப் பார்த்து பதற்றம் இல்லாமல் மறுநாள் தேர்வு எழுதச் செல்லுங்கள். தேர்வுக் கண்காணிப்பாளர் சொன்னவுடன் கேள்வித்தாளை பிரித்துப் பார்க்க வேண்டும். தேர்வு எழுதுவோருக்குத் தரப்பட்டுள்ள குறிப்புகளைப் படித்துப் பார்க்க வேண்டும். முதலில், தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதிவிட வேண்டும். இரண்டாவதாக, முடிந்தவரை எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். மூன்றாவதாக, முதல் இரண்டு விதிகளையும் நிச்சயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த மூன்று விதிகளையும் கடைப்பிடித்தால் தேர்வில் வெற்றி பெறலாம். நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். வாழ்த்துகள்!'' என்று சொல்லி முடித்தார்.

'இதைப் படிங்க... பாஸ் பண்ணுங்க!’

சப்இன்ஸ்பெக்டர் தேர்வு பட்டப்படிப்பு  தரத்திலானது என்றாலும் தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான அறிவியல், சமூக அறிவியல், கணிதம், தமிழ் ஆகிய எல்லா பாடப்புத்தகங்களையும் ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூவில் வரலாறு, பொருளியல், வணிகவியல், அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களையும் நன்கு படித்தால் போதுமானது. ஆனால், எல்லா பாடங்களையும் படிக்க வேண்டும். இதுவரை நடைபெற்ற எல்லா தேர்வுகளிலும் தமிழக வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, சங்க காலம், தமிழ் அறிஞர்கள், புலவர்கள், கவிஞர்கள், தலைவர்கள் தொடர்பான கேள்விகள் அதிக அளவில் கேட்கப்பட்டுள்ளன. எனவே, தமிழ் பாடநூலின் ஆசிரியர் குறிப்புப் பகுதிகளை நன்கு படிக்க வேண்டும். உளவியல் பகுதியில் 30 மதிபெண் தரப்பட்டுள்ளன. கணிதம் மற்றும் அறிவுக்கூர்மை கேள்விகளுடன் மனிதனின் இயல்பான நடைமுறை அறிவை சோதிக்கும் வகையிலும் உளவியல் வளத்தை சோதிக்கும் வகையிலும் கேள்விகள் இருக்கும். பொதுப்பிரிவினருக்கு, பொது அறிவுப் பகுதிக்கு 40 மதிப்பெண்; உளவியல் அறிவுக்கூர்மைக்கு 30 மதிப்பெண். மொத்த கேள்விகள் 140. ஒரு கேள்விக்கு அரை மதிப்பெண் வீதம் மொத்த மதிப்பெண் 70. தேர்வுக் காலம் 2.30 மணி நேரம்.
காவல் துறை ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு பொது அறிவு 15 மதிப்பெண். இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், காவல் நிலை ஆணைகள் மற்றும் காவல் நிர்வாகம் ஆகியவற்றுக்கு 70 மதிப்பெண். ஆக மொத்தம் 170 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் அரை மதிப்பெண் வீதம் 85 மதிப்பெண். தேர்வுக் காலம்: 3 மணி நேரம்.


கோச்சடையானுக்கு கடன் தந்த ஆட் பியூரா நிறுவனத்துக்கு லதா ரஜினி நோட்டீஸ்!

தன் மீது வீண் பழி சுமத்தியதாக கோச்சடையான் படத்துக்கு கடன் வழங்கிய 'ஆட் பியூரா' நிறுவனத்துக்கு லதா ரஜினிகாந்த் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கோச்சடையான் படத்துக்காக பெற்ற பணத்தை திரும்ப செலுத்தவில்லை என லதா ரஜினிகாந்த் மீது ஆட் பியூரா நிறுவனத்தினர் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தனர்.
 

இது குறித்து  அறிக்கை வெளியிட்டுள்ள லதா ரஜினிகாந்த், "ஆட் பியூராவைச் சேர்ந்தவர்கள் தங்கள் குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும். வீண் பழி சுமத்தி தஎனக்கு அவப்பெயர் தேடித் தருவதால் மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன். எனது பெயரை ஆட் பியூரா கெடுக்கிறது.

கோச்சடையான் படத்திற்காக மீடியா ஒன் நிறுவனத்திற்கு ஆட் பியூரா ரூ.10 கோடி கடன் அளித்தது. ஆனால் அப்போதே ரூ.1.2 கோடி கழித்துக் கொண்டுதான் தந்தது. தொடர்ந்து, ரூ.20 கோடி கடன் கொடுப்பார்கள் என்ற உத்தரவாதத்தில் ரூ.2.4 கோடி ஆட் பியூராவுக்கு திரும்ப செலுத்தப்பட்டுவிட்டது. ஆனால் அவர்கள் அந்தக் கடனை கொடுக்கவில்லை. மேலும் முதலில் வாங்கிய கடனில் ரூ.5.6 கோடி திரும்ப செலுத்துப்பட்டுவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, லதா ரஜினிகாந்த்துக்கு பதில் அளித்து ஆட் பியூராவைச் சேர்ந்த அபிர்சந்த் நஹார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லதா ரஜினிகாந்த் வாங்கிய ரூ.10 கோடி பணத்தை திரும்பச் செலுத்துவதாக ஆட் பியூரா நிறுவனத்துக்கு உத்தரவாதக் கடிதம் அளித்துள்ளார். செய்து கொண்ட ஒப்பந்தத்தில் மேற்கொண்டு ரூ.20 கோடி தருவது பற்றி எங்கும் நாங்கள் குறிப்பிடவில்லை.

அதே போல படத்தின் தமிழ்நாடு உரிமை ஈராஸ் நிறுவனத்துக்கு எங்களுக்குத் தெரியாமல் விற்கப்பட்டது. வாங்கிய ரூ.10 கோடியில், நவம்பர் 2014 வரை ரூ.4.7 கோடி மட்டுமே தரப்பட்டுள்ளது. வட்டியுடன் சேர்த்து  ரூ.6.84 கோடி இன்னும் நிலுவையில் உள்ளது. பணத்தை திரும்பத் தராமல் லதா ரஜினிகாந்த் பொய்களைப் பரப்புகிறார்.

முன்னதாக இது குறித்து லதா ரஜினிகாந்த் பெங்களூரு மற்றும் சென்னை என இரண்டு நீதிமன்றங்களிலும் தொடர்ந்த வழக்குகளில் அவருக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எங்களிடம் அவருக்கு எதிரான ஆவணங்கள் உள்ளன. கூடிய விரைவில் லதா ரஜினிகாந்த பொய் சொல்லிவருவது அனைவருக்கும் தெரியும்" என்று கூறப்பட்டுள்ளது.