சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Nov 2014

இங்கு பஞ்சர் போடப்படும்!




கிராமங்களில், ஆடு சுவரில் முட்டிக்கொண்டு ஒரு மார்க்கமாக நின்றுகொண்டிருக்கும். அதேபோல், 'வேலி முட்டிஎன்ற டானிக்கைக் குடித்துவிட்டு வேலியையோ, சுவரையோ முட்டிக் கொண்டு விசித்திரமான போஸில் குடிமகன்கள் நிற்பார்கள். இவற்றையெல்லாம் காணக் கொடுத்து வைக்காத நகரத்து மக்கள், எகனைமொகனையாக பார்க் செய்யப்பட்டு இருக்கும் கார்களைப் பார்த்து, மனதைத் தேற்றிக்கொள்ளலாம்.

தற்போது, பலருக்கு ஒரு குன்ஸாக கார் ஓட்டத் தெரிந்துவிடுகிறது. ஆனால், பார்க்கிங் செய்ய சுத்தமாகத் தெரியாது. பார்க்கிங் செய்ய டிரைவிங் நேர்த்தி வேண்டும். பார்க்கிங் செய்யத் தெரியாமல் பலர் ஏன் சொதப்புகிறார்கள் என்றால், பெரும்பாலும் இவர்களுக்கு பார்க்கிங் செய்தே பழக்கம் இல்லை. பல இடங்களில் வேலட் பார்க்கிங்; பல இடங்களில் பார்க்கிங் இல்லை. எப்படி பார்க்கிங் செய்து பழகுவது? கிடைத்த இடத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டு காரை நிறுத்துவதற்குப் பெயர், பார்க்கிங் அல்ல.

முதன்முதலில் கார் ஓட்டக் கற்றுக் கொண்டு, ஓட்ட ஆரம்பிப்பவர்கள் மற்ற கார்களையோ, சுவரையோ இடித்து டொக்கு வாங்குவதைவிட, பார்க்கிங் செய்யும்போது காரின் முகறையைப் பெயர்ப்பதுதான் வழக்கம். சிலருக்கு பார்க்கிங் என்றாலே டென்ஷன், அலர்ஜி, நடுக்கம் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து. மூளையைச் சொறிந்துவிட்டு குத்து டான்ஸ் போடும். அப்படிப்பட்டவர்களை மால் பார்க்கிங்கில், சினிமா தியேட்டர் பார்க்கிங்கில் பார்த்திருக்கலாம். ரிவர்ஸ் கியரைப் போட்டுவிட்டு, அது பாட்டுக்கு 'நக்ச்ஷிக்கோ நக்ச்ஷிக்கோ நக்ச்ஷிக்கோஎன கத்திக்கொண்டு இருக்க... சம்பந்தப்பட்ட நபர், டிரைவர் சீட்டில் கால்கள் நடுங்க அமர்ந்துகொண்டு ஒன்றுமே செய்யாமல், ஸ்டீயரிங்கைப் பற்றியபடி தேவாங்குபோல அமர்ந்திருப்பதைக் காணலாம்.

பார்க்கிங்கை வைத்து பல காமெடி கூத்துக்கள் நம் ஊரில்தான் நடக்கும். பைக்கூட நுழைய முடியாத தெருவாக இருக்கும்; அந்தத் தெருவில் இருக்கும் அனைத்து வீடுகளின் முன்பும் 'டு நாட் பார்க் இன் ஃப்ரன்ட் ஆஃப் தி கேட்என போர்டு மாட்டியிருக்கும்.


தொழிலதிபர்கள் முதல் தமிழக முதலமைச்சர் வரை வைத்தியம் பார்த்துக்கொள்ளும் சென்னையின் மிகப் பிரசித்தமான அந்த மருத்துவமனைக்கு என, பிரத்யேக பார்க்கிங் கிடையாது. மருத்துவமனைக்கு வெளியே ரோட்டின் ஓரம் இருக்கும் கார்ப்பரேஷன் பார்க்கிங்தான். அதிலும் பாதி பார்க்கிங்கை அந்த நிறுவனத்தின் நர்ஸிங் கல்லூரிப் பேருந்துகளும் ஆம்புலன்ஸுகளுமே ஆக்கிரமித்துக்கொள்ளும். வேலட் பார்க்கிங் என போர்டு வைத்து இருப்பார்கள். ஆளே இருக்க மாட்டார்கள். அப்படியே அங்கே ஆள் இருந்தாலும் அவருக்கும் நிறுத்த இடம் வேண்டும் அல்லவா? அவரால் மெரீனா பீச்சில்தான் கொண்டுபோய் நிறுத்த முடியும்.

பார்க்கிங்குக்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை பணத்தை வாங்கிக் கொண்டு, 'பார்க்கிங் அட் ஓனர்ஸ் ரிஸ்க்என கொட்டை எழுத்தில் எழுதி நக்கலடிப்பார்கள். ஓர் அலுவலகத்துக்கு காரில் செல்கையில், கேட்டினுள் காரின் பாதி நுழைந்ததுமே பேன்ட் அவிழ்ந்து விழுவதுகூடக் கவனிக்காமல், பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் போல புயலெனப் பறந்துவருவார் செக்யூரிட்டி. நாம் ஏதோ படு கேவலமான காரியம் செய்து விட்டதைப்போல, காறி உமிழ்ந்துவிட்டு படு அலட்சியமாகத் திட்டுவார். 'வெளிய போங்கஎன அதட்டலாகச் சொல்வார். எப்படி வந்தது இவருக்கு இவ்வளவு அதிகாரம் என வியப்பாக இருக்கும். பார்க்கிங் இடத்தைப் பாதுகாக்கிறார் அல்லவா? அதனால் கிடைத்த அதிகாரம்.

அபார்ட்மென்டில் சிலர் எதை வேண்டுமானாலும் தாரை வார்த்துக் கொடுத்துவிடுவார்கள். ஆனால், காரே இல்லை என்றாலும் அவர்களுடைய  பார்க்கிங் ஸ்பேஸை மட்டும் விட்டுத் தரமாட்டார்கள். ஒரு நிமிடம்கூட அடுத்தவர் கார் நிற்க அங்கே அனுமதிக்க மறுப்பார்கள்.

மல்டிப்ளெக்ஸ் மாலுக்கு சினிமா பார்க்கச் சென்றால், உங்களின் டிக்கட் ரேட்டைவிட பார்க்கிங் ரேட் அதிகமாக இருக்கும். ஒரு புது மாலுக்குச் சென்றிருந்தேன். தரைத்தளம் மட்டுமின்றி, எட்டு மாடி பார்க்கிங் வசதி உள்ள மால். எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்தது. ஷாப்பிங்கை முடித்துக்கொண்டு வெளியேறலாம் என காரை எடுத்தால்... நம்புங்கள், மெயின் ரோட்டை அடைய ஒன்றரை மணி நேரம் ஆனது. ஒன்றரை மணி நேரமும் மாலுக்குள்ளேயே ஆமை போல நகர்ந்து கொண்டேயிருந்தன கார்கள்.

என்னதான் உயிர் போகும் அவசரம் என்றாலும் வெளியேற முடியாத வண்ணம் ஜாங்கிரி போல பலரும் சிக்கிக்கொண்டனர். ஏன் இப்படி ஆனது? எப்போது இது சரியாகும் என்று விளக்கிச் சொல்லக்கூட ஆள் இல்லை. என்ன எழவு எனத் தெரியாமலேயே அனைவரும் எரிச்சலோடு அமர்ந்திருந்தனர். காருக்குள் அசதியில், பசி மயக்கத்தில் குழந்தைகள் தூங்கிவிட்டனர். வளைந்து நெளிந்து குகைக்குள் இருந்து வெளிவருவது போல, ஒருவழியாக வெளியேவந்து பார்த்தால், மாலில் இருந்து வெளியேறும் வாகனங்களை, மெயின் ரோட்டில் சடாரென குறுகலான ரோட்டின் மூலம் இணைத்திருந்ததால் டிராஃபிக் ஜாம் ஆகி இருந்தது. அந்த மெயின் ரோடே சின்ன ரோடுதான்


திடீரென அங்கே ஒரு மால் முளைத்து, இவ்வளவு கார்கள் படையெடுக்கும் என அந்த மெயின் ரோடு கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்காது. ஆனால், இந்த மாலுக்கு பெர்மிஷன் கொடுத்தவர்களுக்கு மிக நன்றாகத் தெரிந்திருக்கும்.

இவ்வளவு களேபரத்துக்கு இடையிலும் செக்போஸ்ட் வைத்து, மால் ஆட்கள் பார்க்கிங் கட்டணம் வசூலித்துக்கொண்டு இருந்தனர். காரை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கிக் கத்தினேன். 'ரெண்டு மணி நேரம் என்னை மாலுக்குள் சிறை வைத்துவிட்டீர்கள். நீங்கள்தான் நஷ்ட ஈடு தர வேண்டும். அதை விட்டுவிட்டு பார்க்கிங் சார்ஜ் வாங்கி இன்னும் தாமதப்படுத்துகிறீர்கள்என்று சண்டை போட்டதும் செக்போஸ்ட் ஓப்பன் ஆனது.

தமிழில் பூங்கா, ஆங்கிலத்தில் பார்க். நம் ஆட்கள் பார்க் என்று இருப்பதால், அதை பார்க்கிங் செய்யும் இடம் என நினைத்துக்கொண்டு, அதைச் சுற்றிலும் பார்க்கிங் செய்து விடுவார்கள். அரசாங்கமும் அவ்வாறே கருதிக்கொண்டு, பார்க்கைச் சுற்றிலும் பார்க்கிங் டோக்கனுடன் ஆட்களை நிப்பாட்டிவிடும்.
ஏதேனும் எக்ஸிபிஷன், கிரிக்கெட் என நடந்தால், பார்க்கிங் மேனேஜ்மென்டைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க வேண்டியதுதான். ஒரு சைன் போர்டும் இருக்காது. கும்மிருட்டில் தடவிக்கொண்டு போவதுபோல, மனம் போன போக்கில் போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். ஒரு உதவியும் ஏற்பாடு செய்திருக்க மாட்டார்கள். எங்கேனும் தெய்வாதீனமாக இடம் கிடைத்து பார்க்கிங் செய்த அடுத்த கணமே, டோக்கனுடன் அங்கே ஒருவர் பிரசன்னமாவது மட்டுமே இந்தியனின் பார்க்கிங் மேனேஜ்மென்ட் கான்செப்ட்.

தன் பங்குக்கு தானும் கொஞ்சம் காமெடி செய்யலாம் என முடிவெடுத்தது, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா. ஊரெல்லாம் பார்க்கிங்குத்தானே கட்டணம் வசூலிக்கிறார்கள்? 'இங்கே மட்டும் பார்க் பண்ணு, பண்ணாமப் போ. உள்ளே வந்து அஞ்சு நிமிஷத்துக்குள்ள வெளியே போகலைன்னா, 67 ரூபா சார்ஜ். அதுவும் 10 நிமிடங்களுக்குள் வெளியேறினால்தான். இல்லைன்னா இன்னும் அதிகம். அவ்வளோ பெரிய ஏர்போர்ட்டில் நுழைந்து இறக்கிவிட்டோ, ஏற்றிக்கொண்டோ வெளியேற ஐந்து நிமிடங்கள் போதுமா? இதில் உச்சபட்ச காமெடி என்னவென்றால், உள்ளே கார்களுக்கான ஸ்பீடு லிமிட் மணிக்கு வெறும் 10 கிமீ வேகம்தான். இதனால், ஏர்போர்ட்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கில் கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சாலை, தேவையில்லாமல் ஜாம் ஆகிறது. ஏர்போர்ட்டுக்கு உள்ளேயும் கால் டாக்ஸி டிரைவர்கள் ஐந்து நிமிடங்களுக்குள் வெளியேற வேண்டும் என்று பதட்டத்துடன் நடுநடுங்கியபடி ஓட்டுகின்றனர்.

ரயில் நிலையங்களை எடுத்துக்கொண்டால் பெங்களூர், ஹைதராபாத் எல்லாம் நல்ல பார்க்கிங் வசதிகளோடும், கார்கள் வந்துசெல்ல ஏதுவாகவும் இருக்கும். நம் ஊர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், காரை உள்ளே நுழைப்பதே பெரும்பாடு. யாரையேனும் பிக்-அப் செய்ய வந்திருந்தால், அவரை பிக்-அப் செய்து காருக்குள் அடைத்து வெளியேறுவதற்குள், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி உங்களுடைய நுரையீரல் வாய் வழியே வெளியே வந்துவிடும்.

தமிழ்நாட்டில், மக்களும் அரசாங்கத்துக்கும் நிறுவனங்களுக்கும் போட்டியாக பார்க்கிங் விஷயத்தில் எகிறி அடிக்கிறார்கள். கார் வைத்திருக்கும் 60 சதவிகிதம் ஆட்களுக்கு, வீட்டில் பார்க்கிங் இடம் இருக்காது. தங்கள் தெருவில் இருமருங்கிலும் கார்களை வரிசையாக பார்க்கிங் செய்துவைத்திருப்பார்கள். சிலருக்கு வீட்டினுள் பார்க்கிங் இடம் இருந்தாலும், வெளியேதான் விடுவார்கள். இல்லை என்றால், வேறு யாரேனும் அந்த இடத்தில் அவர்கள் காரை பார்க் செய்துவிடுவார்கள் என்ற தமிழருக்கே உரித்தான 'லேட்ரல் திங்கிங்காரணம்.

கோடிகள் சர்வசாதாரணமாகப் புழங்கும் புகழ் பெற்ற திநகர் போன்ற இடத்திலேயே, அரசாங்கத்தால் இன்னும் ஒரு பார்க்கிங் ஏரியாவை உருவாக்க முடியவில்லை. மொத்தத் தமிழகத்துக்கும் பார்க்கிங் வசதியை தமிழக அரசு எப்போது நிர்மாணித்துத் தரும் என்று யோசித்தால், மூளை - ஆயில் தீர்ந்த இன்ஜின்போல சூடாகிறது. கொள்கை அளவில், தியரட்டிக்கலாகக்கூட அரசிடம் இதற்கென ஒரு ஐடியா இருப்பதுபோலத் தெரியவில்லை. இப்படியே போனால், டாஸ்மாக்கைவிட அதிக வருமானம் ஈட்டித் தரும் தொழிலாகிவிடும், டிராஃபிக் போலீஸ் தொழில்.

ஆம், நோ பார்க்கிங்கில் ஃபைன் போடுவது மூலம் கோடிக்கணக்கில் பணத்தை அள்ள முடியும். கார்கள் தினமும் பெருகிக்கொண்டே உள்ளன. கடமைக்கு ஆங்காங்கே ரோட்டின் ஓரம் சில இடங்களில் மட்டும் பார்க்கிங் போர்டு வைப்பதன் மூலம் தன் கடமை முடிந்துவிட்டதாக அரசு நினைக்கிறது. 'நோ பார்க்கிங்போர்டுகள்தான் எங்கு நோக்கினும் தெரிகிறது.

தி.நகரில் ஒரு டயக்னாஸ்டிக் சென்டர் உள்ளது. என் அம்மாவுக்கு ரத்தப் பரிசோதனைக்காக அந்த டயக்னாஸ்டிக் சென்டரின் எதிரில் ரோட்டின் ஓரமாக காரை பார்க் செய்தேன். அது 'நோ பார்க்கிங்என்பது எனக்குத் தெரியும். அந்த சென்டரில் கார் பார்க்கிங் வசதி இல்லை. அரசும் அந்த இடத்தைச் சுற்றி எங்கும் பார்க்கிங் வசதி செய்து கொடுத்திருக்கவில்லை. வேலை முடிந்து திரும்ப வந்து பார்த்தால், வீலில் லாக் போட்டிருந்தார்கள். அரை மணி நேரக் காத்திருத்தலுக்குப் பின்பு வந்து, லாக்கை அவிழ்த்து 100 ரூபாய் ஃபைன் போட்டனர். கட்டிவிட்டுக் கிளம்பினேன். அந்த மாதத்திலேயே அடுத்தடுத்து அதே இடத்துக்குச் செல்ல வேண்டி வந்தது. அதேபோல காரை அங்கேயே பார்க்கிங் செய்து, அவர்களும் லாக் போட்டு, ஃபைன் கட்டி, அதே கதையே தொடர்ந்தது. மூன்றாவது முறை சார்ஜன்ட் என்னை அடையாளம் கண்டுகொண்டார்.


''ஏன் சார்? அதான் லாக் போடறோமே, திரும்பத் திரும்ப இங்கயே ஏன் நிறுத்தறீங்க?''
''பக்கத்துல ரெண்டு கிலோ மீட்டர் வரைக்கும் பார்க்கிங் செய்ய இடம் இல்லை. அதுவும் இல்லாம இப்ப எல்லாம் மல்ட்டி ப்ளக்ஸ்ல நிறுத்தினாலும் 100 ரூபாய் ஆயிடுது. இங்க லாக் வேற போட்டு ரொம்ப பாதுகாப்பா காரைப் பார்த்துக்கறீங்க. அதான் சந்தோஷமா 100 ரூபாய் பார்க்கிங் சார்ஜ் கொடுத்துடலாம்னு.... வேற வழியும் இல்லை சார்...'' என்றேன்.


தொப்பியைக் கழற்றி தலைக்குக் காற்று வருவதுபோல விசிறிக்கொள்ள ஆரம்பித்தார்.


No comments:

Post a Comment