புதிதாக வாங்கிய காரில் கீறல் விழுந்தாலே சிலர் துடிதுடித்துப் போவார்கள். கார் வாங்கிய இரண்டே நாளில் காணாமல் போனால்?
சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின் டாடா இண்டிகா டீசல் கார், டெலிவரி எடுத்த இரண்டாவது நாளே காணாமல் போய்விட்டது. காணாமல் போய் ஒரு மாதத்துக்கு மேலாகியும் கார் கிடைக்கவில்லை.
''சாலிகிராமத்தில் தனலட்சுமி டிராவல்ஸ்னு ஒரு கம்பெனி வெச்சிருக்கேன். டாடா இண்டிகா டீசல் காரை, செப்டம்பர் மாசம் அம்பத்தூரில் டெலிவரி எடுத்தேன். பூஜை போட்ட அடுத்த நிமிஷமே முதல் சவாரி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு. 'சகுனம் சூப்பரா இருக்கே’னு சந்தோஷமா என் டிரைவர் அருணாச்சலத்தை அனுப்பினேன். இவர், எங்கிட்ட நாலு வருஷமா வேலை செய்றார்.
'அண்ணே, காஞ்சிபுரம் ட்ரிப் முடிச்சிட்டேன். வண்டியை வீட்டுக்கு எடுத்துட்டுப் போகட்டுமா?’னு போன் பண்ணவர், திரும்பவும் காலையில போன் பண்ணினார். 'அண்ணே, வண்டியைக் காணோம்ணே’னு அவர் சொன்னதும் எனக்கு பக்குனு தூக்கி வாரிப்போட்டுச்சு. 'என்னப்பா சொல்றே... புது வண்டிப்பா... முதல் சவாரிதாம்ப்பா முடிஞ்சிருக்கு.
200 கிலோ மீட்டர்கூட முழுசா ஓடலையே?’ன்னு சத்தம் போட்டேன். பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட விசாரிச்சப்போ, 'சார், நைட் ரெண்டு மணிக்கெல்லாம் உங்க காரைப் பார்த்தேனே!’னு ஒருத்தர் சொன்னார். 'மூணு மணி இருக்கும் சார்... உங்க கார் மூவ் ஆகிட்டிருந்துச்சு. சரி; நீங்கதான் எடுக்கிறீங்களோனு நினைச்சேன்’னு இன்னொருத்தர் சொன்னார்.
உடனே போலீஸ் ஸ்டேஷன்ல போய் சொன்னேன். 'கம்ப்ளெய்ன்ட் எழுதிக் குடுப்பா’னு சொன்னாங்க. ரைட்டர் அம்மாகிட்ட, நடந்த எல்லாத்தையும் எழுதிக் கொடுத்தேன். 'ஏம்ப்பா, வண்டி வாங்கினா ஒழுங்கா வெச்சுக்கத் தெரியாதா?’னு சத்தம் போட்டு, 'நாங்களும் முடிஞ்சவரைக்கும் தேடுறோம்; நீங்களும் தேடுங்க’னு சொல்லி திமிஸி கொடுத்து அனுப்பிச்சிட்டாங்க. நான் என் நண்பர்கள், டிரைவர்கள் எல்லாம் மூணு டீமா பிரிஞ்சு காரைத் தேட ஆரம்பிச்சோம். ராணிப்பேட்டை, வேலூர், வாலாஜா டோல்னு ஒரு டீம்; சித்தூர், குண்டூர், வாராங்கல்னு ஆந்திரா பக்கம் ஒரு டீம்; பெங்களூர் பக்கம் ஒரு டீம்னு நாங்க தேடாத இடம் இல்லை.
'இது வரைக்கும் மூணு காருக்கும் டீசலுக்கும் மட்டுமே ஆயிரக்கணக்குல செலவழிச்சுட்டேன். கொஞ்சம் கண்டுபிடிச்சுக் குடுத்தீங்கன்னா நல்லாருக்கும்’னு அஞ்சு நாள் கழிச்சு, திரும்பவும் போலீஸ் ஸ்டேஷன் போனேன். 'தம்பி, நாங்களும் தேடிக்கிட்டுத்தான்பா இருக்கோம். கிடைச்சா சொல்றோம். வேணும்னா, எங்க பி.சியைக் கூப்பிட்டுப் போய் நீங்களே தேடுங்க’னு சொன்னாங்க. ஏற்கெனவே எங்க டீமுக்கே சாப்பாடு, டீசல், டோல்னு ஆயிரக்கணக்குல செலவழிச்சுட்டிருக்கேன். இதுல போலீஸ்னா அவங்களுக்கும் சேர்த்து செலவழிக்கணுமேன்னு, 'பரவாயில்ல சார், நீங்க கிடைக்கும்போது சொல்லுங்க!’னு வந்துட்டேன்.
திரும்பத் திரும்ப ஸ்டேஷன் போகவும் அசிங்கமா இருக்கு. 'வேணும்னா
100 நாள் கழிச்சு லெட்டர் தர்றோம்... இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் பண்ணிக்கோ’னு சொல்றாங்க ஸ்டேஷன்ல. இன்ஷூரன்ஸ் தொகைன்னா, கண்டிப்பா முழுத் தொகையும் வராது. அப்படியே க்ளெய்ம் கெடைச்சாலும், போலீஸ் ஸ்டேஷன்ல லெட்டர் எப்போ தர்றது, எனக்கு எப்போ க்ளெய்ம் கிடைக்கிறது? இதுல இன்னொரு கொடுமை, இல்லாத காருக்காக பேங்க்ல லோன் வாங்கின தவணையையும் கட்டிக்கிட்டிருக்கேன்.
எப்படிப் பார்த்தாலும் செம நஷ்டம். என்ன பண்றதுனே தெரியலை சார். என் கார் தொலைஞ்சுபோய் இன்னையோட ரெண்டு மாசமாச்சு. என் கார் எப்படி இருக்கோ, என்ன ஆச்சோ? இன்னும் ரிப்பன்கூட கட் பண்ணலை சார். என் நிலைமை யாருக்கும் வர வேண்டாம்; தயவுசெஞ்சு எல்லோரும் உங்க காரைப் பத்திரமா பார்த்துக்குங்க!'' என்று ரொம்பவும் நொந்து போய்ச் சொன்னார் பன்னீர் செல்வம்.
கார் மறக்காமல் லாக் செய்யப்பட்டிருந்தது; ஸ்டீயரிங் வீலும் லாக் ஆகியிருந்தது என்று டிரைவர் ஸ்டேட்மென்ட் கொடுத்திருந்தாலும், இவற்றையும் மீறி கார் எப்படி திருடு போயிருக்கும்? தொலைந்துபோன இண்டிகா காரைத் தேடும் பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பேசினோம்.
''கார் திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு வழிமுறை வைத்திருக்கிறார்கள். முதலாவது, கார் கண்ணாடியைச் சேதப்படுத்தி உள்ளே சென்று, இன்ஜினை ஆன் செய்வது; இரண்டாவது, கார் கதவின் கைப்பிடிகளை உடைத்துவிட்டு, உள்ளே இருக்கும் ஸ்க்ரூவை லேசாகத் தட்டினால் கதவு திறந்துவிடுவதாக, சென்ற முறை எங்களிடம் மாட்டிய திருடன் ஒருவன் சொன்னான். இன்னொரு சிறந்த வழி, கை நிறைய டூப்ளிகேட் சாவிகளை வைத்து, எது செட் ஆகிறதோ அதை வைத்தும் திருடுகிறார்கள்.
முக்கியமாக, டெக்னாலஜியை அதிகமாகப் பயன்படுத்தித்தான் காரைத் திருடுகிறார்கள். ஏனென்றால், கீலெஸ் என்ட்ரி கொண்ட கார்களும் இப்போது திருடு போவது அதிகரித்திருக்கிறது. இப்படி திருடிய கார்களை வைத்து செம்மரக் கட்டைகளைக் கடத்துகிறார்கள். போலீஸில் பிடிபட்டாலும் கவலை இல்லை; காரை விட்டு விட்டு ஓடிவிடலாம். எனவே, கார் தொலைந்ததும் கம்ப்ளெய்ன்ட் செய்ய மறக்காதீர்கள். முக்கியமாக, இன்ஜின் இம்மொபைலைஸர்கள் கொண்ட காரையோ அல்லது ஜிபிஎஸ் பொருத்திய கார்களையோ வாங்கினால், கார் திருட்டைக் கண்டுபிடிக்க பேருதவியாக இருக்கும்!'' என்றார் இன்ஸ்பெக்டர்.
No comments:
Post a Comment