நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறோம் என்று கணக்கு வைத்துள்ளோம், நமது அன்றாட தேவைகளுக்கு எவ்வளவு செலவு செய்கிறோம் என்று கணக்கு வைத்துள்ளோம்.
ஆனால். நாம் கணக்கு இல்லாமல் செலவழிக்கும் ஒரு விஷயம் நேரம் மட்டும் தான். ஒரு நாளைக்கு நான் பார்க்கும் வேலைக்கு 24 மணி நேரம் போதவில்லை என நேரத்தை குற்றம் சொல்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறோம்.
நமக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் கையில் இருக்கிறது. இதில் நாம் என்ன செய்கிறோம்? நமக்கு மீதமிருக்கும் நேரம் என்ன? தேவையில்லாமல் நாம் எவ்வளவு நேரத்தை செலவழிக்கிறோம்? அதனை எப்படி சரியாக செலவழிப்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் இதோ...
24 மணி நேரம் கணக்கு என்ன?
இந்த 24 மணி நேரத்தில் 7 மணி நேரத்தை கழித்து விடுங்கள் ஒரு நாளைக்கு கட்டாயம் ஒரு சராசரி மனிதன் என்பவன் 7 மணி நேரம் தூங்க வேண்டும் இல்லை என்றால் அவனால் சரியாக வேலை செய்ய முடியாது என்கிறது ஆய்வு, ஒரு நாளைக்கு பணிபுரிபவரோ அல்லது கல்லூரிக்கு செல்பவர்களோ எட்டு மணி நேரத்தை வேலைக்கோ அல்லது படிக்கவோ செலவழிக்கிறார்கள்.
இதில் உங்கள் மதிய உணவு இடைவேளை சேர்ந்து விடுகிறது. காலை மற்றும் இரவு உணவுக்காக 1 மணி நேரத்தை ஒதுக்கினால் 16 மணி நேரம் முடிந்துவிடும். மீதமிருக்கும் எட்டு மணிநேரத்தில் உங்கள் பயணம் உங்கள் நாளில் இரண்டு மணி நேரத்தை செலவழிக்கிறீர்கள்.
அதனால் உங்களிடம் மீதம் ஆறு மணி நேரம் தான் இதில் உங்கள் நண்பர்கள் உறவினர்களுடன் நேரத்தை செலவழிப்பது, ஷாப்பிங் ஆகியவற்றுக்கு 2 மணி நேரம் என்று வைத்து கொண்டால் உங்களது ஒரு நாளில் 4 மணி நேரம் மீதமிருக்கிறது. இதனை நீங்கள் என்ன செய்கிறீர்கள். 4 மணி நேரம் உங்களது ஒரு நாளில் எவ்வளவு முக்கியமானது அதை யார் எடுத்து கொள்கிறார்கள்? இல்லை எனில் நீங்களே அவசியமில்லாத காரியங்களில் நேரத்தை செலவிடுகிறீர்கள். ஆனாலும் ஏன் நீங்கள் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதவில்லை என குற்றம் சாட்டுகிறீர்கள் என்று பாருங்கள்.
என்ன ஆனது 4 மணி நேரம்?
சமூக வலை தளங்களில் லாக் இன் செய்து பார்த்துவிட்டு சென்று விடுவேன் என்று ஆரம்பித்து நண்பரின் தேவையற்ற கலந்துரையாடலில் 1 மணி நேரம் செலவழிந்திருக்கலாம்.
ஒரு 10 நிமிடத்தில் வாங்கக்கூடிய பொருளை வாங்க பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதில் பல பொருட்களை பார்வையிட்டு அதில் ஒரு ஒரு மணி நேரம் செலவாகி இருக்கலாம்.
செல்போன், வாட்ஸ் அப்,எஸ்.எம்.எஸ் போன்ற செயல்களில் உங்களது அரை மணி நேரம் செலவழிந்திருக்கலாம்.
இது தான் மிகவும் முக்கியமானது, இந்த ஒன்றரை மணி நேரம் உங்கள் அலுவலக வேலைகளில் இடையே நீங்கள் எடுத்த ஓய்வு அதனால் மாலை 5 மணிக்கு கிளம்ப வேண்டிய நீங்கள் மாலை 6:30 மணிக்கு கிளம்பி இருப்பீர்கள். உங்களது ஒன்றரை மணி நேரத்தை இடையிடையே உள்ள செயல்களுக்கு வீணடித்து மொத்தமாக 4 மணி நேரம் வீணாகி இருக்கும்.
இதற்கு யாரையும் காரணம் கூற முடியாது. இதற்கு ஒரே காரணம் நீங்கள் மட்டும் தான்.
எப்படி சமாளிப்பது:
1.உங்கள் வேலை நேரமான 8 மணி நேரத்தில் தேவையில்லாமல் நீங்கள் செலவு செய்யும் நேரத்தில் அடுத்த நாளுக்கு ஆயத்தமாகுங்கள்.அது அடுத்த நாள் வேலையில் புத்துணர்ச்சியை தரும்.
2.உங்கள் சமூக வலைதளம் உங்களை ஆக்கிரமிக்கும் 1 மணி நேரத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள்.அருகில் இருபவருடன் ஆன்லைனில் சாட் செய்யாமல் நேரில் சந்தியுங்கள். அப்போது உங்கள் மனநிலையும் அமைதியாகும். அதிக நேரம் கணினி திரையில் கண் விழித்து உட்கார வேண்டிய அவசியம் இருக்காது. லைக்குகள், கமெண்ட்டுகள் எத்தனை என்று எண்ணாமல் உங்கள் வேலையை துவங்க பாருங்கள்.
3.உங்களுக்கு நேரம் மிச்சமிருக்கிறது என்ன செய்யலாம் என்றால் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள தயாராகுங்கள். ஒரு மொழியை கற்றுக்கொள்ளுங்கள் அல்லது ஒரு கட்டுரையை எழுதுங்கள். ஒருவேளை உங்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் நாட்டம் இல்லை என்றால் உங்களது எதிர்காலத்தையோ அல்லது குறைந்தபட்சம் அடுத்த 24 மணி நேரத்தையாவது திட்டமிடுங்கள்.
4. ரிலாக்ஸ் நேரம் என நீங்கள் செலவு செய்வது உங்களை சோர்வடைய செய்யும் விஷயமாக இருக்க கூடாது. பீச்சுக்கு சென்றேன் ஒரே டயர்டாக உள்ளது. ஷாப்பிங் சென்றதால் கால் வலிக்கிறது என்று கூறாமல் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ரிலாக்ஸ் விஷயங்களை தேடுங்கள்.
5.வார இறுதியில் வெள்ளிக்கிழமை சினிமாக்களும், மால்களும் போனஸ் டைம் எடுத்து நேரத்தை வீணாக்குகின்றன. அப்படியென்றால் நம்மால் இதனை சமாளிக்க முடியாதா? என்றால் முடியும் ஆனால் அதனை யாரும் சொல்லி செய்துவிட முடியாது அல்லது பயிற்சி வகுப்புகளுக்கு சென்று கற்றுக்கொள்ள முடியாது. உங்களுக்குள் உள்ள சுய கட்டுப்பாட்டால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.
உங்கள் நேரம் அதிக மதிப்புமிக்கது அதனை சரியாக பயன்படுத்துங்கள் 24 மணி நேரம் உங்களுக்கு போதவில்லை என்று நீங்கள் கூற தயாரானால் உங்களது ஒரு மணி நேரத்தை கூட உங்களால் சிறப்பாக செயல்படுத்த முடியாது. 24 மணி நேரம் பெரியது, அதனைச் சரியாக பயன்படுத்தி பயன்பெறுங்கள்
No comments:
Post a Comment