சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Nov 2014

இணைய புகழ் சூறாவளியில் சிக்கிய வாலிபர்!



இணைய புகழ் பெற்றவர்களின் பட்டியலில் அலெக்ஸ் பிரம் டார்கெட் சமீபத்தில் சேர்ந்திருக்கிறார். யார் இந்த அலெக்ஸ் ? அவர் ஏன் பிரபலமானார் ? இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரியாமல் இணையம் விழிக்கிறது. இருந்தும் அந்த வாலிபரை கொண்டாடி மேலும் பிரபலமாக்கி வருகிறது.
ஒரு சில நாட்களில் அலெக்சின் ட்விட்டர் கணக்கில் 5 லட்சம் பாலோயர்கள் சேர்ந்திருக்கின்றனர். இணையம் முழுவதும், அவரது புகைப்படம் சுற்றில் விடப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படங்களில் எல்லாம் அவர் விதவிதமாக பாராட்டப்படுகிறார். அவருக்காக ட்விட்டரில் ஒரு பிரத்யேக ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. வேறென்ன , அலெக்ஸ் பிரம் டார்கெட் (#AlexFromTarget ) தான்!

அலெக்ஸ் பெயரிலான படங்கள் சகட்டுமேனிக்கு ரிட்வீட் செய்யப்பட்டு வருகின்றன். குறும்பதிவு சேவையான ட்விட்டரில் மட்டும் அல்ல இணையத்திலும் இப்போது ட்ரெண்டிங்கில் இருப்பது நம்ம அலெக்ஸ் பிரம் டார்கெட் தான்.- அறிமுகம் இல்லாத பலரும் அவரை கொண்டாடுவதால் நாமும் நம்ம அலெக்ஸ் என்போம்!

அலெக்ஸ் ஏன் பிரபலமனார் ? என்ற கேள்வி தவிர்க்க இயலாமல் மனதில் எழலாம். ஆனால் ஒருவருக்கும் இந்த கேள்விக்கு பதில் தெரியாது என்பதுதான் விநோதம். இந்த புகழின் மையமான் அலெக்சிற்கும் பதில் தெரியாது என்பதுதான் இன்னும் விநோதம். இது எதிர்பாராமல் உண்டாகும் இணையப்புகழின் தன்மை. அது எங்கு எப்போது எவரை புகழ் ஏணியில் ஏற்றிவிடும் என்பது யாருக்கும் தெரியாது.
எதிர்பாரா இணையப்புகழ் தானாக கருக்கொள்கிறது. அதுவாக மையம் கொள்கிறது.பின்னர் சூறாவளியாக வீசத்துவங்குகிறது. இத்தகைய புகழ் சூறாவளியில்தான் அலெக்ஸ் சிக்கியிருக்கிறார். நல்லவேளையாக அவர் அடித்துச்செல்லப்படவில்லை. அலெக்ஸ் ஏன் புகழ் பெற்றார் என்பது புரியாத புதிர் என்றாலும் அவர் எப்படி புகழ் பெற்றார் என்பதை இணையம் குறித்து வைத்திருக்கிறது.
அமெரிக்காவின் சராசரி இளைஞர்களில் அலெக்சும் ஒருவர். அந்நாட்டில் உள்ள டார்கெட் சூப்பர் மார்கெட்டில் வேலை பார்க்கிறார். நம்மூரில் மொபைல் ஷோரூமில் டிஷர்ட் அணிந்த இளைஞர்கள் பவ்யமாக வாடிக்கையாளர்களுக்கு போனை எடுத்து காட்டிவிட்டு கையை கட்டுக்கொண்டு நிற்கும் காட்சியை கற்பனை செய்து பாருங்கள். அலெக்சும் டார்கெட்டில் அப்படிதான் பொறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தார். என்ன அவர் செல்போனை காண்பிப்பதற்கு பதிலாக பில் போடும் இடத்தில் பொருட்களின் பார்கோடை ஸ்கேன் செய்து கொண்டிருப்பார்.

இப்படி அவர் பொருட்களை ஸ்கேன் செய்வதைதான் வாடிக்கையாளர் ஒருவர் தற்செயலாக புகைப்படம் எடுத்திருக்கிறார். அந்த புகைப்படம்தான் டிவிட்டர் பயனாளி ஒருவரால் பகிர்ந்து கொள்ளப்பட்டது. புகைப்படத்தை எடுத்தவரும் பகிர்ந்து கொண்டவரும் ஒருவரா?: என்பது தெரியவில்லை. அந்த புகைப்படம்  @auscalum எனும் ட்விட்டர் கணக்கில், அலெக்ஸ்  எனும் தலைப்பில் , யோ எனும் விநோதமான அடைமொழியுடன் வெளியானது. ( அதாவது 'யோ' எனும் ஆங்கில எழுத்துக்கு அருகே 10 எழுத்து இடம் பெற்றிருந்தது. (YOOOOOOOOOOO) .

இப்படி ட்விட்டரில் தினமும் என்ன, ஒவ்வொரு மணிக்கும் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இவை அதிகபட்சம் பாலோயர்களால் பார்க்கப்படும், ரசிக்கப்படும் , இல்லை என்றால் ரிட்விட் செய்யப்படும். கொஞ்சம் பரவும். அவ்வளவுதான்.

ஆனால் அலெக்ஸ் புகைப்படம் நவம்பர் 2 ல் வெளியான பிறகு 24 மணிநேரத்தில் அந்த மாயம் நிகழ்ந்தது. அந்த புகைப்படம் 1,000 முறைக்கு மேல் ரிட்வீட் செய்யப்பட்டு  ,2,000 முறைக்கு மேல் பிடித்தமானது என குறிப்பிடப்பட்டது. அது மட்டுமா? அலெக்சிற்காக அலெக்ஸ் பிரம் டார்கெட் (#AlexFromTarget) எனும் ஹாஷ்டேகும் உருவாக்கப்பட்டது.

ஹாஷ்டேக் என்பதே குறிப்பிட்ட தலைப்பின் கீழ் குறும்பதிவுகளை பகிர்ந்து கொள்வதற்கானதுதானே. அலெக்ஸ் பிரியர்களும் (இதற்குள் முன் பின் தெரியாத பலர் அலெக்ஸ் பிரியர்களாகி இருந்தனர்). இந்த அலெக்ஸ்ட் புகைப்படத்தை தங்கள் கருத்துடன் இந்த ஹாஷ்டேக்கை குறிப்பிட்டு வெளியிட்டனர். விளைவு இந்த ஹாஷ்டேக் ட்விட்டரில் பிரபலமாகி கவனத்தை இழுத்து ,யார் இந்த அலெக்ஸ் என கேட்க வைத்தது.

கூகுள் கணக்குப்படி 24 மணிநேரத்தில் இந்த ஹாஷ்டேக் 2,00,000 முறை தேடப்பட்டது. ஆனால் ஒன்று , அலெக்ஸ் கொஞ்சம் அழகான பையன். சாதாரண டி ஷர்ட்டில் பார்க்க ஸ்மார்ட்டகவே இருந்தார். அதிலும் கடமையே கண்ணாக இருந்த தோற்றம் அவருக்கு ஒரு வசீகரத்தை கொடுத்தது. அழகாக இருக்கும் இளம்பெண்கள் மட்டும்தான் கவனத்தை ஈர்ப்பார்களா? என்ன ,அழகான பையனும்தான் கவனத்தை ஈர்ப்பார்கள். அலெக்ஸ் விஷயத்தில் இதுதான் நடந்தது.

ட்விட்டர் மற்றும் இணையத்தில் புழங்கிய இளம்பெண்கள் பலர் அலெக்ஸ் புகைப்படத்தை ஆர்வர்த்துடன் தங்கள் வட்டத்தில் உலாவவிட்டனர். இதனிடையே இணைய வழக்கப்படி , இந்த மூல புகைப்படம் சின்ன மாற்றங்கள் மற்றும் சேர்க்கையுடம் மறு உலாவுக்கு விடப்பட்டன. கொஞ்சம் கேலி, கொஞ்சம் படைப்பாற்றல் ஆகியவற்றோடு இந்த புகைப்படங்கள் உருவாக்கப்பட்டன். உதாரணத்திற்கு , கிறிஸ் லில்லி (@ChrisLilley ) என்பவர் அலெக்சுடன் தன்னை செல்ஃபீ புகைப்படம் எடுத்து ஒட்ட வைத்து , என் பொருளை ஸ்கேன் செய்ததற்கும், செல்ஃபி வாய்ப்புக்கும் நன்றி என தெரிவித்திருந்தார்.

கிலின்ஸ்கி (@GilinskysHighAf ) என்பவர் வேறு யாரும் எனக்காக ஸ்கேன் செய்யாதபோது அவர் என் பொருளை ஸ்கேன் செய்தார் , என குறிப்பிட்டு கூடவே சிரிக்காமல் இருக்க முடியவில்லை என்றும் லேசாக கிண்டலும் செய்திருந்தார்.

இன்னொருவர் அவர் எனது மளிகை சாமானை மிச்சம் செய்தார் என குறிப்பிட்டிருந்தார். @LukeSiperly என்பவர் அலெக்சிற்காக சிவப்பு அணியுங்கள் என்று கூறியிருந்தார்வேறு சிலர் தீவிரமாக உற்று நோக்கும் புகைப்படத்தை போட்டு, வேறு ஒன்றும் இல்லை; அலெக்ஸ் ஸ்கேன் செய்வதை பார்ப்பதாக கூறியிருந்தார்.

ஒரு புகைப்படத்தில் டார்கெட் சூப்பர்மார்கெட் மூடப்பட்டிருக்கும் காட்சிக்கு கீழே, அலெக்ஸ் ஸ்கேன் செய்யாதபோது என குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னொரு படத்திலோ டார்கெட்டில் திருவிழா போல கூட்டம் அலைமோதும் காட்சி தொகுப்பிற்கு கீழ், அலெக்ஸ் தனது ஷிப்டை துவங்கும்போது என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒருவர் கர்மசிரத்தையாக அலெக்ஸ் பயன்படுத்திய வாட்ச், டிஷர்ட் , ஷூ போன்ற பொருட்களை எல்லாம் தனியே பட்டியலிட்டு அவற்றின் மலிவு விலையை குறிப்பிட்டு , அலெக்சின் தோற்றத்தை நீங்களும் பெறுங்கள் என கூறியிருந்தார். எல்லாவற்றிலும் ஒரு குறும்பு, ஒரு கேலி, ஒரு கொண்டாட்டம் இருந்தது. அவற்றின் மையத்தில் அலெக்ஸ் இருந்தார். இந்த குறும்பும், கேலியும் பலரை தங்கள் பங்கிற்கு சிறிய சேர்க்கையோடு அலெக்ஸ் படத்தை பகிர்ந்து கொள்ள வைததது. மறக்காமல் அலெக்சிற்கான ஹாஷ்டேகையும் சேர்த்துக்கொண்டனர்

ஆக திடீரென பார்த்தால் இணையத்தில் எல்லா இடங்களிலும் அலெக்ஸ்தான். இதனிடையே அலெக்சிற்காக என்று வலைப்பதிவுகள், வைன் வீடியோக்கள் ஆகியவறையும்  உருவாக்கப்பட்டன. அலெக்ஸ் போலவே போலி ட்விட்டர் பக்கங்களும் தலைகாட்டின. இவ்வளவு நடக்கும்போது மீடியா சும்மா இருக்குமா? அலெக்ஸ் காரணம் இல்லாமல் பிரபலான நிகழ்வு பற்றி செய்தி வெளியிட்டு பரபரப்பை கூட்டின.

அலெக்ஸ் புகழ் பரவுவதை பார்த்த டார்கெட் நிறுவனமும் தன் பங்கிற்கு அலெக்ஸ்-டார்கெட் என பெருமையாக குறிப்பிட்டு அலெக்சை தாங்களும் நேசிப்பதாக தெரிவித்து கொஞ்சம் விளம்பரம் தேடிக்கொண்டது. இத்தனைக்கும் அலெக்ஸ் பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. அவர் டெக்சாசில் உள்ள டார்கெட்டில் பணியாற்றுவது தவிர வேறு விவரங்கள் இல்லை. அலெக்ஸ் என்பது அவரது பெயர் தானா என்ற உறுதியும் இல்லை. ஆனால் அலெக்ஸ் இணையம் முழுவதும் பேசப்பட்டார்.
இந்த புகழ் சூறாவளியின் மையத்தில் இருந்த அலெக்ஸ், மக்கள் பார்வைக்கு வரவில்லை.ஆனால் தனது ட்விட்டர் (@acl163) பக்கத்தில் இருந்து இந்த திடீர் புகழ் குறித்து வியந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் தான் பிரபலமாகி விட்டேனா என்றும் கேட்டிருந்தார். இதனிடையே அவரது பாலோயர் எண்ணிக்கையும் எகிறியது. பல்லாயிரம், லட்சம் என் அதிகரித்தது. ( இப்போது 5 லட்சத்தை கடந்திருக்கிறது).  எப்படி? எப்படி? ஏன்? ஏன்? இந்த கேளவிகளை கேட்டபடி இணைய வல்லுனர்கள் இந்த நிகழ்வை அலசிக்கொண்டிருக்கின்றனர்.

அலெக்ஸ் நிகழ்வின் தொடர்ச்சியாக ஒரு சிலர்செல்போன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவரின் புகைப்படத்தையும், ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தை வேலை பார்க்கும் இளைஞரின் புகைப்படத்தை வெளியிட்டு, அவர்கள் பெயரில் a#kieranfromtmobile , #stevefromstarbucks , #tbofromthegroovysmoothie ஆகிய ஹாஷ்டேக் மூலம் அடுத்த அலெக்சை உருவாக்க முயன்று கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் அலெக்ஸ் அளவிற்கு புகழ் பெறுவார்களா? என்பது கேள்விக்குறிதான். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், பணியிடத்தில் இருக்கும் சாதாரண வாலிபர்களை மக்கள் கவனத்திற்கு உரியவர்களாக முன்னிறுத்துவதுதான். பொறுப்பாக வேலை செய்யும் வாலிபர்களின் புகைப்படத்தை பல்லாயிரக்கணக்கானோர் பகிர்ந்து கொள்வது சாமான்யர்களுக்கும் ,வேலைக்கும் கிடைக்கும் மரியாதைதானே..?

ஒரு வேளை இந்த உணர்வும் அலெக்ஸ் பிரபலமான நிகழ்வுக்கு ஒரு காரணமோ?!



No comments:

Post a Comment