திருப்பூர் சாலையில் வித்தியாசமாகத் திரிந்த ஒரு பைக்கை, விரட்டிப் பிடித்தேன். இது யெஸ்டியா, அவென்ஜரா, ஹார்லியா எனக் குழப்பும் விதத்தில் இருந்தது அந்த பைக்.
''சொன்னா நம்பமாட்டீங்க... இது யமஹா என்னோட பழைய RX135
பைக்!'' என்றார் வினித். ''கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் பி.சி.ஏ படிக்கிறேன். பைக் என்றாலே உயிர். என்னிடம் இருக்கும் பைக், இந்த உலகத்தில் யாரிடமும் இருக்கக் கூடாது என்பது என் கனவு.
நான் டர்ட் ட்ராக் ராலிகளில் கலந்து கொள்பவன். ட்ராக்கில் ஓட்டுவதற்காகவே, இந்த யமஹா RX135 பைக்கை வாங்கினேன். ஒருமுறை டிராக்கில் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டது. அதில் இருந்து டிராக்கில் ஓட்டுவதை விட்டுவிட்டேன். அப்போதுதான் இந்த பைக்கை ஆல்ட்டர் செய்தால் என்ன என்று தோன்றியது. ஏற்கெனவே வித்தியாசமான பைக் நம்மிடம் இருக்க வேண்டும் என்ற கனவும் இணைந்துகொள்ள... புதுமையாக வடிவமைக்கத் திட்டமிட்டேன்.
தற்போது நீங்கள் பார்க்கும் இந்த வடிவத்தை நானேதான் டிஸைன் செய்தேன். இதை வரைந்து முடிக்கவே சுமார் ஒரு மாதம் ஆனது. பின்பு எனது மெக்கானிக் நண்பரிடம் எனது டிஸைன் வடிவத்தைக் காட்டினேன். அவருக்கும் இந்த வடிவம் பிடித்துப்போக, ஆர்வமாகக் களமிறங்கினோம். இதற்காக நாங்கள் அலைந்த அலைச்சல் இருக்கிறதே... அதுதான் இந்த பைக்கை மிகவும் நேசிக்கவைக்கிறது.
பஜாஜ் அவென்ஜரின் பழைய பெட்ரோல் டேங்க்; ரிம், டயர் யெஸ்டி பைக்; ஃபோர்க்ஸ், மட்கார்டு, டெயில் லைட், இன்டிகேட்டர், சைலன்ஸர் ஆகியவை ராயல் என்ஃபீல்டின் புல்லட்; மற்ற பல பாகங்களை நாங்களே செய்தோம். இப்படி எல்லாம் கலந்த காக்டெய்ல் என் பைக். எல்லாமே பழசு. அதனால், எவ்வளவு செலவானது என்று நான் கணக்கிடவில்லை. ஆனால், 1,000 ரூபாய் ஹெட்லைட் வாங்க, 3,000 ரூபாய் செலவழித்து பெங்களூரு போய்வந்தேன். எனக்கு அதுதான் செலவுபோலத் தோன்றுகிறது!'' என்று சிரிக்கிறார் வினித்.
No comments:
Post a Comment