சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Nov 2014

மறுப்பிறவி எடுக்குமா மழை நீர் சேகரிப்பு திட்டம்?



டகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யும். இந்த காலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கடலோர ஆந்திரம் ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்யும்.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை சராசரி மழை அளவை விட அதிகமாகவும், 2009 முதல் 2011 ஆம் ஆண்டு வரை சராசரி மழையும் பதிவாகின. 2012ல் 16 சதவீதம் மழை பற்றாக்குறை ஏற்பட்டது. தமிழகத்தில் ஓராண்டு பெய்யும் மழை அளவில் 48 சதவீதம் வடகிழக்கு பருவமழைக் காலத்திலேயே கிடைக்கிறது.

தமிழகத்தில் சராசரியாக ஆண்டுக்கு 998 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகும். ஆனால் பருவமழை பொய்த்ததால் மழையின் அளவு குறைந்து 10 முதல் 60 அடி வரையில் கிடைத்து வந்த நிலத்தடி நீர் தற்போது 100 முதல் 500 அடிக்கு கீழே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. வறட்சியான மாவட்டங்களில் ஆயிரம் அடிக்கு கீழே தான் நிலத்தடி நீர் கிடைக்கிறது. சேலம், ஈரோடு, தஞ்சாவூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்ட அளவு அதிர்ச்சி தரும்படி உள்ளது. 



இதற்கு பருவமழை பொய்த்தது ஒரு காரணம் என்றால் ஆண்டுதோறும் பெருகி வரும் மக்கள் தொகையும் மற்றொரு முக்கிய காரணம். மக்கள் தேவைக்காகவும், தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காகவும் ராட்சத இயந்திரங்கள் மூலம் நிலத்தடி நீர் அதிகளவு உறிஞ்சப்படுகிறது. இதனால் தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சுகாதாரமான குடிநீரும் கிடைப்பதில்லை. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேவை அதிகரிப்பதால் அதன் விலையும் தாறுமாறாக விற்கப்படுகிறது. 

நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க தமிழக அரசு, கடந்த 2003 ஆம் ஆண்டு மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வீடுகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனை, தொழிற்சாலைகள், தனியார், அரசு கட்டடங்கள் ஆகியவற்றில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. பரப்பளவு ஆயிரம் சதுரஅடிக்கு மேல் உள்ள கட்டடங்களில் இத்திட்டத்தைக் கட்டாயம் செயல்படுத்த அரசு உத்தரவிட்டது. இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மழை நீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தாத கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படடது. புதிய கட்டடங்களுக்கான வரைபடத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம் இல்லையெனில் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால், மழை நீர் சேகரிப்பு திட்டம் அனைத்து கட்டடங்களிலும் செயல்படுத்தப்பட்டன. நிலத்தடி நீர் உயர்வதற்கான இத்திட்டம் நல்ல பயனளிக்கும் ஒன்றாக திகழ்ந்தது. அரசியல் சூழலில் காலப்போக்கில் இந்த திட்டத்தை அரசு கண்டுக்கொள்ளவில்லை. அரசின் கவனம் குறைந்ததால்  75 சதவீத அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டம் பராமரிக்கப்படாமல் செயலிழந்தது. மழை நீர் சேகரிப்பு திட்டத்துக்கான குழாய்கள் உடைந்து வெறுமனே காட்சிப் பொருளாக அவை மாறிப்போயின. இதன் காரணமாக மழை நீர் வீணாகி கடலில் கலக்கிறது. எனவே, மழை நீரை சேமிக்க மீண்டும் மழை நீர் திட்டத்துக்கு அரசு மறுபிறவி கொடுக்க முன்வர வேண்டும். 

சென்னை மாநகராட்சியில் 33 கி.மீட்டர் பரப்பளவில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மழை நீர் தேங்குவதை தவிர்க்க 1996 ஆம் ஆண்டு முதல் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2001ஆம்  ஆண்டு முதல் மழை நீர் சேகரிக்கும் திட்டத்தை அனைத்து மாநகராட்சிக்கு கட்டடம், பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலக கட்டடங்கள் சமுதாய கூடங்கள், துணை மின் நிலையங்கள், பாலங்கள், பூங்காக்கள், மேம்பாலம் உள்பட 1,344 இடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது. ஆனால் மாநகராட்சி அலுவலகம் செயல்படும்  ரிப்பன் மாளிகையில் கூட மழை நீர் சேகரிப்பு திட்ட குழாய்கள் உடைந்து காணப்படுகிறது. இந்த லட்சணத்தில்தான் சென்னையில் மழை நீர் சேகரிப்பு திட்டம் இருக்கிறது.

மழை நீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரம். சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில் 40 சதவீதம் நிலத்தின் மேல்பகுதியில் ஒடி கடலில் கலப்பதாகவும், 35 சதவீதம் வெயிலில் ஆவியாகுவதாகவும், 15 சதவீதம் மட்டுமே பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10 சதவீதம் மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. பெருநகரங்களில் வீடுகள், கட்டடங்கள் அருகருகே கட்டப்படுவதாலும், திறந்த மணல் பகுதிகளை சிமெண்ட் தளங்கள் அமைத்தும், தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால் மழை நீரில் 5 சதவீதம் கூட நிலத்தால் உறிஞ்சப்படுவதில்லை. மழை நீர் சேகரிப்பு திட்டத்தால் மட்டுமே கூடுதல் சதவீதம் நீரை பயன்படுத்த முடியும். 

இந்த நிலையில் மழை நீர் சேகரிப்பு திட்டத்திற்கு மறுவாழ்வு தரவேண்டிய அவசர சூழல் இன்று தவிர்க்க இயலாமல் உருவாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக முன்பு இத்திட்டத்தை துவங்கிய இயக்கமே, தற்போதும் ஆளும் பொறுப்பில் உள்ளதால் இதை முன்னெடுப்பது என்பதும் வெற்றிகரமானதாக ஆக்குவதும் ஆளும் அரசின் கையில் உள்ளது. 


No comments:

Post a Comment