‘‘அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும்...’’ கிராமங்களில் புழங்கும் இந்த சொலவடையே திண்ணைகளின் முக்கியத்துவத்தை சொல்கிறது. ஆனால், இன்று அண்ணன்களுடன் சேர்ந்து திண்ணைகளே காலியாகி விட்டது என்பதுதான் ஒரு வரலாற்று சோகம்.
ஓலைக்குடிசையின் ஒட்டுத்திண்ணை தொடங்கி, ஓங்கி உயர்ந்த மச்சுவீட்டின் வரவேற்பு திண்ணை வரை அன்றைய மக்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நீக்கமற நிறைந்திருந்தன திண்ணைகள். இன்று திண்ணைகள் இருக்கும் இடத்தில் வண்டிகளும், வாடகைக்கு கடைகளும் இருக்கின்றன.
திண்ணையில் தொடங்கிய பள்ளிக்கூடம்
‘பள பள’ பள்ளிக்கூடங்கள், ‘கலர்புல்’ கல்லூரிகள் பல இன்று கணக்கில்லாமல் பெருகியுள்ளது. குளுகுளு வகுப்பறைகளிலும், குஷன்பஞ்சு இருக்கைகளிலும் வசதியாக உட்கார்ந்து அசதி இல்லாமல் படிக்கின்றனர் இன்றைய மாணவர்கள். ஆனால், அந்தக் காலங்களில் அப்படிப்பட்ட வகுப்பறைகள் இல்லை. இருந்தது எல்லாம் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் மட்டும்தான். பாதக்கிண்ணம் காப்பு பிடிக்க சம்மணம் போட்டு உட்கார்ந்துதான் குழந்தைகள் பயில வேண்டும். மேசையும் இல்லை, நாற்காலியும் இல்லை. திண்ணைதான் அன்றைய மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் இடமாக இருந்தது.
திண்ணைகள் பல விதம்
அன்று எல்லா வீடுகளிலும் திண்ணைகள் இருந்தன. வெளித்திண்ணை, உள் திண்ணை, வாசல் திண்ணை, சுற்றுத்திண்ணை, உயரத்திண்ணை, அகலத்திண்னை, திண்டுத்திண்ணை,கல் திண்ணை, புறக்கடைத்திண்ணை என்று பல திண்ணைகள் வீட்டில் இருந்தன. எல்லா நேரமும் எல்லாத் திண்ணைகளும் ஏதோ ஒரு சேதியை சொல்லிகொண்டுதான் இருந்தன. அதில் அமர்ந்துதான் பாட்டிகள், பேரன் பேத்திகளுக்கு கதைகள் சொன்னார்கள். இளசுகள் பல்லாங்குழி விளையாடினார்கள், பரமபதம் ஆடினார்கள், அப்பாக்கள் அரசியல் பேசினார்கள், புறக்கடை திண்ணையில் அமர்ந்து புது மணத்தம்பதியர் நிலாவை ரசித்தார்கள். எதிர் திண்ணைகளில் காதல் வளர்ந்தது.
வாசல் திண்ணையில் வழிப்போக்கர்கள் படுத்து இளைப்பாறினார்கள். சித்திரை பௌர்ணமியில் நிலாச்சோறும், கூடிக் குதூகலித்து கூட்டஞ்சோறு சாப்பிட்டு மகிழ்ந்ததும் திண்ணைகளில்தான். பூப்படைந்த பெண்ணுக்கு தாய்மாமன் பச்சை குடில் கட்டி கொடுத்ததும் இந்த திண்ணையில்தான். அது மட்டுமா? வாதி, பிரதிவாதிகள் குழுமி நிற்க உயரத்திண்ணையில் உட்கார்ந்து ஊர் நாட்டாமை மாற்றாத தீர்ப்புக்களை சொன்னதும், பஜனைகள், பக்தி பாடல்கள், கதாகாலஷேபங்கள், கச்சேரிகள் என்று விசேஷ நாட்களின் கலை மேடைகளாக திகழ்ந்ததும் இந்த திண்ணைகள்தான். பாட்டனும், முப்பாட்டனும் பள்ளிகொண்ட திருபாற்கடல் அந்த சாய்மானத் திண்ணைகள்தான். நாட்டு வைத்தியர்களின் மருத்துவமனையும், மருந்துக்கடையும் அவர் வீட்டு திண்ணைகளில்தான்.
சாமியார் திண்ணை திண்ணை சாமியார்கள் அகலத்திண்ணையில் அமர்ந்து தன்னை தேடிவரும் நபர்களுக்கு அருள்வாக்கு சொல்லி விபூதி வீசுவதற்கும், மனப்பிறழ் பெண்களுக்கு வேப்பிலை அடித்து பேய் ஓட்டுவதற்கும் இந்த திண்னைகள்தான் களம். வளையல், ஜவுளி, சோப்பு, சீப்பு, கண்ணாடி என்று பலவித பொருட்களை கூவிக் கூவி விற்றுவரும் தலைச்சுமை வியாபாரிகள், சுமையை இறக்கி வைத்து திடீர் கடை விரிப்பதும் திண்ணைகளில்தான்.
வயல் அறுவடை மூட்டைகளை வண்டிகளில் ஏற்றி வீடு கொண்டுவரும் விவசாயிகள் அந்த மூட்டைகளை அடுக்கிவைப்பது வீட்டுக்குள் இருக்கும் உள்திண்ணைகளில்தான்.
திருமணம் என்றாலும் சரி, துக்க நிகழ்வு என்றாலும் சரி மாத்துதுணி விரிக்கப்பட்ட சுற்றுத்திண்ணைகளில் நிறைந்திருக்கும் ஊர்க்கூட்டம். இப்படியாக, நமது ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு அங்கமாக இருந்த இந்த திண்ணைகள் இன்று நவீன நாகரிகம், வாஸ்து என்ற பலவேறு காரணங்களால் காணாமல் போய்விட்டன. வெளித்திண்ணைகளின் இடத்தை பிளாஸ்டிக் சேர்களும், உள் திண்ணைகளின் இடத்தை ஷோபா செட்களும் பிடித்து விட்டன. சாணம் மணக்கும் ஏழை வீட்டுத் திண்ணை தொடங்கி, கடப்பா கல் பதித்த கனவான் வீட்டு திண்னை வரை, கல்வி, விளையாட்டு, ஆடல், பாடல், பக்தி, இசை, கதை, காதல், காமம், மகிழ்வு, சோகம், முதுமை என்று நமது கலாச்சாரங்களை சொல்ல ஆயிரமாயிரம் விஷயங்கள் உண்டு திண்ணைகளிடம். ஆனால், அந்த திண்ணைகள் இல்லை இன்று நம்மிடம். இருந்தாலும் திண்ணைகளைப் போற்றுவோம்... திண்ணைகளைப் போற்றுவோம்...! |
உங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.
3 Nov 2014
பழமையைப் பேசும் திண்ணைப் புராணம்!
Labels:
உலகம்,
கட்டுரை,
கவிதை,
செய்திகள்,
நிகழ்வுகள்,
பிரபலங்கள்,
வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment